- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
03.09.039 அன்று கிட்லரின் கொடுமையைத் தாங்காத மேற்கு நாடுகளில் ஒன்றான
பிரித்தானியா, ஜேர்மனியுடன் போர் தொடுக்கும் தங்கள் (இரண்டாம் உலக) யுத்தப் பிரகடனத்தை அறிவித்தது. தற்போது இதையிட்டுப் பல கருத்தரங்குகள்
பிரித்தானிய வானொலிகளில் நடத்தப் படுகின்றன. இனியொரு உலக மகாபோர் வரக்
கூடாது என்று கருத்தரங்கில பங்கு பற்றும் பலரும் சொல்கிறார்கள். ஆனால்
இன்று அவர்களின் படைகள் ஈராக்கிலும் ஆப்கானஸ்தானிலும் கடும்போர்
செய்கின்றன.. ஆயிரக்கணக்கான அப்பாவி; மக்கள் மேற்கு நாடுகளின் அதி உயர்ந்த
ஆயுதங்களால் நாளாந்தம் அழிக்கப் படுகிறார்கள். இரண்டாவது உலக யுத்தத்தில்
ஒட்டுமொத்தமாக இறந்தவர்கள் 50 கோடி மக்கள் என்று சொல்லப் படுகிறது. இந்தத்
தொகையில் பெரும்பாலனவர்கள் யுத்தத்தில் ஒரு நாளும் ஈடுபடாத பொது
மக்களாகும்.
ஜேர்மன் மக்கள் அமெரிக்க, பிரித்தானிய, இரஷ்யப்படைகளால் படுமோசமாக அழிக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான வருட
சரித்திரத்தை வைத்திருந்த பாரம்பரிய ஜேர்மனிய, ஜப்பானிய நகரங்கள்
இரவோடிவாக அழித்தொழிக்கப்பட்டன. ஜப்பானை வெற்றி கொள்ள ஹிரோஷிமா நகரில்
அணுகுண்டைப்போட்டு ஆயிரக்கணக்கான ஜப்பானியரை அமெரிக்கா அழித்தது.
இப்படியான சரித்திரம் இனியும் நடக்கக்கூடாது என்று சொல்லிக்கொணடே இன்று
மேற்கத்திய வல்லரசுகள் உலகில் பல பாகங்களிலும் ஏதோ ஒரு வழியில் யாரோ
ஒருத்தரின் நாட்டில்; ஒருபோரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சமாதானம்
பற்றிய பேச்சுக்கள் கலந்துரையாடல்கள், விருந்துகளுடன் என்பதுடன் பல
இடங்களில் முடிவு பெறுகின்றன. சமாதானம் பேசும் நாடுகள் தாங்கள்
ஆயுதம்விற்கும் நாடுகளுக்கு தாங்கள் உற்பத்தி செய்யம் பயங்கர ஆயுதங்களால்
எத்தனை உயிர்கள் அழிவது என்ற கவலை கடையாது.
போர்கள் தொடர்ந்து
கொண்டே இருக்கின்றன. அடக்குப்பட்ட மக்கள் ஆயதங்களைத் தூக்கிக் கொண்டே
இருப்பார்கள் அந்த விடுதலைப் போராட்டஙகள் வழி தவறிப் போனால் இலங்கையிற்
தமிழினம் அழிவதுபோல் பல இடங்களிலும் தொடர்ந்து அழிவுகள் நடக்கும்.
ஓரு
குறிப்பிட்ட காலத்தில் இலங்கைத் தமிழரின் வாழ்க்கையில் நடந்த அரசியல , பொருளாதார மாற்றங்கள் தற்போதைய சரித்திரத்தில் எந்த இன மக்களுக்கும்
நடந்தது கிடையாது. அறிவு பூர்வமற்று உணர்ச்சி பூர்வமான போர்த்
தந்திரங்களால் இன்று இலங்கை போன்ற பல நாடுகளில் புதை குழிகளும் விதவைகளும்
மிகப் பெரிய அளவில் பெருகிக் கொண்nருக்கிறார்கள்.
இலங்கையின்
தமிழர் விடுதலைப் போர்(??) முப்பது வருடங்களாக நடந்து, இவ்வருடம் வைகாசி
மாதம் 18ம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுகிறது.
இந்த முடிவுக்குப் பரிசாகப் பலியான இலங்கையின் உயிர்கள் பற்றி இன்று பல
விவாதங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் நடக்கின்றன. இவ்விவாதங்கள் பலதும், தமிழ்ப் பகுதிகளில் இன்னொரு யுத்தத்தை எப்படித் தொடங்கலாம் என்பதற்கு
அடிகோல் போடும் தர்க்க வாதங்களாக இருப்பாதாகவும் படுகிறது. இவை, இலங்கையில் அப்பாவி மக்களைப் பலிகொடுத்து ஆதாயம் தேடும் சூத்திரங்களில்
ஒன்றாகத்தான் கணிக்கப் படவேண்டும். ஏனென்றால் இதுவரையும் , தமிழர்
போராட்டத்தைச் சொல்லிக்கொண்டு பணம் படைத்தவர்களின் நிலை சட்டென்ற ஒரு
திருப்பத்தைக் கண்டதால் அவர்கள் மத்தியில் பல குழப்பங்களும் இலங்கையில்
தமிழர்களை ஊக்குவித்து எப்படி ஒரு போராட்டத்தைத் தொடங்கலாம் என்ற
யுக்திகளும் பல மட்டங்களிலும் முன்னெடுக்கப் படுகின்றன என்றுதான் சொல்ல
வேண்டும்.
இதுவரை இலங்கையில் நடந்து முடிந்த போரில் இறந்தவர்களின் (தமிழர்களின்) தொகையென்ன? மனித உரிமை மீறல்களின் அடிப்படையில் அழிந்தவர்
தொகையென்ன? புலிகளால் அழிக்கப்பட்டவர்களின் தொகையென்ன? அரசபடைகளால்
அழிக்கப்பட்டஅப்பாவி மக்களின் தொகையென்ன? போரில் இறந்த இலங்கை
இராணுவத்தினரின் தொகையென்ன? என்றெல்லாம் விவாதிக்கப் படுகிறது.
ஆனால்
பலரிடமிருந்து இப்போரால் இடம் பெயர்க்கப் பட்ட தமிழ் மக்களை எப்படி
அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பிக் குடியேற்றுவது, அவர்களின்
பொருளாதாரத்தை முன்னேற்றுவது? ஓரு சீரான தமிழ்சசமுதாயம் உருவாக நாங்கள்
எப்படி உதவலாம்? என்னவென்று ஒரு போரற்ற சூழ்நிலையை உண்டாக்குவது என்ற
கேள்விகள் வருவது குறைவாகத்தான் இருக்கிறது.
இலங்மையில் நடந்து
முடிந்த போர் பற்றிப் பல கேள்விகளைப் பலர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பல கோணங்களிலிருந்தும் பல பதில்கள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இலங்கை
அரசைக் கூண்டில் நிறுத்தவிரும்பும் புலி ஆதரவாளர்களும் அகில உலக மனித
உரிமைவாதிகளும பல தரப்பட்ட விபரங்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
உண்மையான துயருடன் போராடும் கணவனையிழந்த தாய்மார்கள்தாய், தகப்பனையிழந்த
குழந்தைகள், சகோதர சகோதரங்களையிழந்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கானோர்
தமிழ் சிங்களப்பகுதிகளில் தங்கள் துயர்களை யாரிடம் சொல்லியழுவது என்ற
தெரியாமல் தவிக்கிறார்கள். இதுவரை நடந்த யுத்தத்தில் கிட்டத்தட்ட 200.000 மேற்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் உயர்கள்; இறந்திருக்கலாம் என்று
கணிக்கப் படுகிறது. இவர்கள் அப்பாவி தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள்
மட்டுமல்லாது விடுதலைப் போருக்காகத் தங்களை அர்ப்பணித்த தமிழ், முஸ்லிம்
இளைஞர்கள்;அரசபடையிற் சேர்ந்த இராணுவத்தினர் என்று பல தரப்பட்டவர்களும்
அடங்குவர்.
போரின் காரணமாக நாட்டை விட்டுப்போனவர்கள் தொகை, ஒரு
கோடியைத் தாண்டும். போரில் ஊனமானோரின் தொகை யாருக்கும் தெரியாது.
அன்னியரிடமிருந்து சுதந்திரம் பெற்றும் ஒரு பெரிய சமுக முன்னேற்றததையும்
இலங்கை காணவில்லை. இலங்கை ஒரு சிதிலமான நாடாகவிருக்கிறது. 1971ம்ஆண்டு
ஜேவிபி இளைஞர்களின் படுகொலையுடன் (கிட்டத்தட்ட 30.000- 40.000 வரை என்று
கணக்கெடுக்கப்பட்டது), இலங்கையில் காணாமற்போனவர்கள், அரசபடையால்
இறந்தவர்கள் என்று எத்தனையோபேரை இன்றும் அவர்களின் குடும்பம்
தேடிக்கொண்டிருக்கிறது. தேர்தல்கள் வருகின்றன, அரசுகள் மாறுகின்றன, பிரச்சினைகள் தொடர்கின்றன. அநியாயங்கள் தொடர்கின்றன.
1985ல்; வடக்கிலும் முக்கியமாகக்; கிழக்கில் பல இளைஞர்கள் அரசின் அதிரடிப்படையால்
உயிரோடு புதைக்கப்பட்டார்கள் பறவைகள், காட்டு மிருகங்களாகப் பட்டப்
பகல்களில், தெருக்களில் சுட்டுவீழ்த்தப்பட்டார்கள்.
1985 சித்திரைமாதம் அக்கரைப்பற்றைச்சேர்ந்த வயல் வெளிகளில் ஒரு காலை நேரத்தில் 125 இளம் பெண்கள் விதவையாக்கப் பட்டார்கள . அதே கால கட்டத்தில்
கொக்கட்டிச்சோலைக் கிராமத்தில் அதிரப்படையால் கொலை செய்யப்பட்ட தாய்
தகப்பனைப் புதைக்க யாருமில்லாததால் ஆறுவயதுக் குழந்தைகள் புதை குழி
வெட்டிய கதைகளும் உண்டு.
இனப் படுகொலை செய்யும் எதிரிக்குப் பயந்த தமிழினம் தங்கள் தலைவர்களுக்கு நடுங்கிய காலம் 1986ல் பிறந்தது.
1986ல்
விடுதலைக்குப் போராடவென்று முன்வந்த தமிழர்களின் இயக்கங்களைச்
சேர்ந்தவர்கள்; பலர் தங்களுக்குள் தாங்களே அழிந்தார்கள். வலிமை பெற்ற
கூட்டம் வலிமையற்ற கூட்டத்தை வேட்டையாடித் தீர்த்தன. யாழ்ப்பாணம் ஆரிய
குளம் சந்தியில் தமிழனைத் தமிழன் மடையர்களைப் போட்டு உயிருடன எரித்து தனது
மிருகக் குணத்தை வெளிப் படுத்தினார்கள். பொது மக்கள் வாய் திறக்க
வழியற்றுப் புதினம் பார்த்தார்கள் 1987ல் இந்தியப் படை இலங்கைத்
தமிழர்களுக்கு ஆயுதபாந்தவர்களாக வந்தவர்கள் தங்கள அநியாயக்; கைவரிசையைத்
தாரளமாகக் காட்டினார்கள்.
இந்தியாவின் தலையீட்டாலும் வெளிநாட்டார்
முயற்சியாலும் முன் வைக்கப்பட்ட பல தீர்வுகளைத் தூக்கியெறிந்த
முட்டாள்த்தனத்தால் இன்று தமிழனம் படுகேவலமான அரசியல் நிலைக்குத் தள்ளப்
பட்டிருக்கிறது.
தொடர்ந்து நடக்கும் கொடுமையால் இன்று இலங்கையில்
ஆயரக்கணக்கான விதவைகள் தங்கள் வாழ்வுக்கு வழி தெரியாது திண்டாடுகிறார்கள்.
கிழக்கில் மட்டும் கிட்டத் தட்ட 40.000 விதவைகள் தவிக்கிறார்கள்.
அண்மையில் ( சித்திரை 2009) நான் சந்தித்த பழைய பெண்போராளிகள் (கிழக்கிலிருந்து வந்தவர்கள) 3000மேற்பட்டவர்களைச் சமுகம் தங்களிடமிருந்து
பிரித்து வைத்திருக்கிறது என்று துயர் பட்டார்கள். இந்தப் பெண்கள் எந்தத்
தமிழ்ச்; சமுகத்தின் விடுதலைக்குப் போராடினார்களோ அந்தத் தமிழ்ச்
சமுகத்தால் ஒதுக்கப் பட்டிருக்கிறார்கள். ஆண்களுடன் திரிந்தவர்கள் என்ற
வசையுடன வாடுகிறார்கள். எதிர்காலத்தில் தங்கள் காலில் நின்று பிழைக்க ' சக்தி' என்ற அமைப்பை உண்டாக்கி அதற்கு உதவி தேடுகிறார்கள்.
2006ம்
ஆண்டு தொடக்கம் கிழக்கிற் தொடங்கி; புதுமாத்தளன் வரைக்கும் தொடர்ந்த
போரில் ஆயிரக்கணக்கான விதவைகள், ஆயிரக்கணக்கதன புதை குழிகள் நாட்டை
நிறைத்து வைத்திருக்கின்றன. விதை நெல்போட்டு அறுவடை செய்யும் நிலங்கள்
புதை குழிகளாக்கப் பட்டிருக்கின்றன. வாழவேண்டிய இளம் உயிர்களை மாள வைத்து
மாவீரர்களாக்கொண்டாடும் கலாச்சாரத்தில் மக்கள் மூளைச்சலவை செய்யப்
பட்டிருக்கிறார்கள்.
இன்று வன்னியில் தங்களின்
வாழ்விடங்களிலிருந்து இடம் பெயர்க்கப்பட்ட(பிரிக்கப்பட்ட) துயருடன்; கிட்டத்தட்ட 215.000 தமிழ் மக்கள் தவிக்கிறார்கள். இடம் பெயர்ந்த 285.000 மக்களில் யாழ், மட்டக்களப்பு மன்னார்ப் பகுதிகளுக்கு 60.000 தமிழ் மக்கள்
இதுவரையும் மீழ் குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக அரசு சொல்கிறது.
மிகுதியான மக்களிற் கணிசமானவர்களை இம்மாதத்துக்குள் அவர்களின் சொந்த
இடங்களுக்கு மீழ்குடியேற்றம் செயவதாக அரசு அறிவித்திருக்கிறது.
இடம்
பெயாந்திருக்கும் மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள். தங்களின் ஒரு சிறு
நிலப்பரப்பில் தங்களால் முடிந்த பயிர் வகைகளைப்பயிரிட்டுத் தங்கள் வாழ்வை
நடத்திக்கொண்டிருந்தவர்கள் இன்று மூன்று நேர உணவுக்கும் யாரோ ஒருத்தரின் (அகில உலக உணவு ஸ்தாபனம்) தயவை எதிர்பார்க்க நிர்ப்பந்திக்கப்
பட்டிருக்கிறார்கள்.
இன்று வன்னியில் வாடும் மக்களில் பெரும்பாலோர்
பலவிதமான போசாக்கின்மையால் அவதிப்படுகிறார்கள். கடந்த 2006ம் ஆண்டு
தொடக்கம் வைகாசி மாதம் 18ம் திகதியன்று போர் முடிவுறும் வரையும், மன்னார்
தொடக்கம் புதுமாத்தளன் வரைக்குமாக 20 தடவைகள் புலிகளால் 'இடம்பெயர்க்கப்பட்டவர்கள்' இம்மக்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும்
குழந்தைகளுமாவர்.
.உள்நாட்டுப்போர் நடக்கும் பல இடங்களிலும் சிறு
குழந்தைககும் பெண்களும்; சொல்லவொண்ணாத துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
பாலஸ்தீனமாகட்டும், காஷ்மிராகவிருக்கட்டும், ஈராக்காகவிருக்கட்டும்
ஆப்கானிஸ்தானாகவிருக்கட்டும், சூடானாகத்தானிருக்கட்டும் அவ்விடமெல்லாம்
விடுதலைப்போராளிகளுக்கும் அவர்களை ஒடுக்க நினைக்கும் அரசபடைக்கும் இடையில்
அகப்பட்டுத் தவிப்பவர்கள் பெரும்பாலும் பெண்களும குழந்தைகளும்தான்.
இலங்கையிலும் இதுதான் நடக்கிறது. ஜேவிபி காலத்தில் சிங்களத் தாய்மார் பட்ட
கொடுமையை விட எத்தனையோ மடங்கு துயரை இன்று தமிழ்த்தாய்கள் முகம்
கொடுக்கிறார்கள்.
மைல் கணக்காக நீண்டு தெரியும் வன்னி அகதி
முகாம்களில் சோகம் தாங்கிய துயருடன் தாய்மார் தங்கள் நாளைய நிலையை
யோசிக்கிறார்கள். ஓரு எதிரிக்கும் இந்த வாழ்நிலை வரக் கூடாது என்று அங்கு
போவோர் நினைத்தாலும் ' இந்த நிலை கொடுமையானது, ஆனால் இந்த இடத்தில்
எத்தனையோ வசதிகள் இல்லாவிட்டாலும் எங்கள் உயிர்கள் பத்திரமாகவிருக்கிறது, புலிகள் வந்து எங்கள் குழந்தைகளையோ கணவரையோ பிடித்துக்கொண்டு போக
மாட்டார்கள்' என்று அவர்கள் சொல்லும்போது புலிகள் அவர்களை நடத்திய
வி;தத்தை அவர்கள் பல வார்த்தைகளால விபரிக்கத் தேவையில்லை என்பது
தெளிவாகிறது. அகதி முகாம்களில் பெரும்பாலானோர் சோகத்துடன் நேரம்
கடத்துகிறார்கள். முகாம்களின் நிலமை
மிகவும் அதிருப்தியாகவிருந்தாலும்
எங்களின் உயிர் பாதுகாப்பாகவிருக்கிறது என்று ஆண்களும் பெண்களும்
குழந்தைகளும்; அடிக்கடி சொன்னார்கள்.
( இக்கட்டுரை முகாம்களில
கண்ட மக்களின் வார்த்தைகளை, பெரும்பாலும், பெண்களின் கதைகளுக்கு முன்னிடம்
கொடுத்து எழுதப்பட்டதாகும் .ஜக்கிய நாடுகள் சபையைச்சேர்ந்த 6 பிரதிதிநிதிகளை 27.07.09ல் கொழும்பில் சந்தித்தபோது அவர்கள் இடம்
பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அவர்கள் செய்யும் பணிகள் பற்றிச் சொன்ன
விபரங்கள் இன்னொரு கட்டுரையில் எழுதப்படும்).
புலிகளிடமிருந்த
அரச படையை நோக்கி பாதுகாப்புக்காக ஓடிவரும் போது பல திசைகளுக்கும் பலர்
ஓடியதால பெரும்பாலானோரின் குடும்பங்கள் பல முகாம்களில்
சிதறிப்போய்கிக்டக்கிறார்கள். வுவனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ்
அவர்கள் இந்தக் குடும்பங்களை ஒன்று சேர்க்கும் பணியில் இடைவிடாது
பாடுபடுகிறார். பெரும்பாலான பெண்கள் கணவரையும் அவர்களின், இளம் மகள்மார், மகன்களையும் இழந்தவர்கள்;.
;அந்தப் பெண்களில் சிலர் சொன்ன சில கதைகள் இவை:
'எங்களை
மிருகக்கூட்டங்களாகப் புலிகள் இடத்துக்கு இடம் தங்கள் பாதுகாப்புக்காக
இழுத்துக்கொண்டு திரிந்தார்கள். சிலவேளைகளில் இரண்டு நாளைக்கு ஒருதரம்
இடம்டமாறவேண்டியிருந்தது. அடுத்த நாளைக்குத் தேவையாக எடுத்தக்கொண்டு
போகுமளவுக்கு கையிருப்பில் சாப்பாடும் இருக்காது;. அகில உலக ஸ்தாபனங்கள்
எங்களுக்குக கொடுக்கச் சொல்லியனுப்பிய உணவுகளைப் புலிகள் எங்களுக்கு
அநியாய விலையில் விற்றார்கள். அரச படை நெருங்கி வரும்போது புலிகளும்
மக்களும் ஓடவேண்டிவந்தபோது உணவுப் பட்டறைகளை எரித்துவிட்டுப் போனார்கள், அவற்றில் கொஞ்சத்தை எடுக்கும்போது புலிகள் பொதுமக்களுக்கு பச்சை மட்டையால்
அடிபோட்டார்கள'';.
''பன்னிரண்டு பதின்மூன்று வயது வந்த
பெண்களையும் ஆண்களையும் போர்முனைக்கு இழுத்துக்கொண்டு போனார்கள்.
அவர்களுடன் வாதாட முனைந்த சில தாய்தகப்பன் பயங்கரமாகத் தாக்கப்பட்டார்கள், சில பெற்றோர் புலிகளாற் கொல்லப் பட்டார்கள, இந்தக்கொடுமைக்குப் பயந்த தாய்
தகப்பன் தங்கள் குழந்தைகளைத் தங்கள் குடிசைகளுக்குள் ஒரு குழி தோண்டி
அதில் மறைத்து வைத்தார்கள.; ஒன்றிரண்டு அடி ஆழத்தில், ஒரு ஆள்
குந்தியிருக்கும் அளவில் வெட்டுப்பட்ட இந்தக் குழிக்குள் பல இளம்
சிறார்கள் அடைத்து வைக்கப் பட்டார்கள் புலிகளின் ரோந்து நடக்கும்போது, பெற்றோர் அல்லது பாட்டன் பாட்டிமார் இந்தக் குழிகளுக்கு மேலால் ஒரு பாயைப்
போட்டுப் படுத்துக் கொள்வார்.
சில வேளைகளில் புலிகளின் கெடுபிடி
அதிகமாகவிருக்கும்போது பல இளம் உயிர்கள், அவர்கள் மறைந்திருக்கும்
குழியிலிருந்து வெளியே வர வழியின்றி கல்லறைக் காவியங்களாகி விட்டார்கள்.
பெரும்பாலான நேரங்களில் அவர்களை வெளியே கொண்டுவந்து புதைக்கக்கூட
முடியாது. ஓரு காலத்தில் எங்கள் தார்மீக உணர்வுடன் ஆரம்பிக்கப்பட்ட எங்கள்
விடுதலைப் போராட்டம் எங்கள் குழந்தைகளை எங்கள் குடிசைகளுக்குள் கருமாதி
செய்யப் பண்ணிய கொடுமையை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. இறந்த
குழந்தைகளுக்காக அழ முடியவில்லை. அவர்களை எங்கள் கலாச்சாரச் சடங்குகளுடன்
புதை;கவோ எரிக்கவோ முடியவில்லை''
' புலிகள் நெருக்கமாக இருக்கும் மக்களுக்குள் மறைந்து நின்று கொண்டு இராணுவத்துக்குச்
ஷெல்
அடிப்பார்கள். பெரும்பாலான புலிகள் வயது குறைந்த சிறுவர்கள். வயது
வித்தியாசம் பார்க்காமல் அவர்களின் கால்களில் வீழுந்து ஷெல்
அடிக்கவேண்டாம் என்று கெஞ்சுவோம். ஏவ்வளவுக்கு தொகை இறப்பு வருகுதோ அந்த
அளவுக்கு உலகுக்கு எங்கள் நிலமை தெரியும். அப்போதுதான் எங்களுக்கு ஈழம்
கிடைக்கும் என்பார்கள். அவர்களின் புத்தியின்மை அப்பட்டமாகத் தெரிந்தது.'
'புலிகளி;டமிருந்து
தப்பி ஓடும்போது இராணுவத்தின் ஷெல் வந்து ஓடியவர்களில் விழுந்தபோது
நூற்றுக்கணக்கானோர் இறந்தார்கள். எங்கும் பிணங்களாகத்தான் கிடந்தன.
எடுத்துப் புதைக்க முடியாமல் மக்கள்; ஓடிக்கொண்டிருந்தார்கள். ஓரு இரண்டு
வயது மதிக்கத்தக்க குழந்தை ஷெல் அடிபட்டுக்கடந்த தாய் தகப்பனின் இரத்தத்தை
அள்ளித் தன் முகத்தில் பூசி விளையாடிக்கொண்டிருந்தது. அந்தக்குழந்தையைத்
தூக்கிக்கொண்டு ஓட முடியாமல் எனது மனம் விறைத்துக் கிடந்திருந்தது என்பதை
இப்போது நினைக்கும்போது என்னில் எனக்கு அருவருப்பாகவிருக்கிறது'
' எனக்கு முன்னால் ஓடியவர்களில் அப்பாவும் ஒருத்தர், அவரின் உடமபு
சிதறிவிட்டது. ஆம்மாவின் தலையில் பெரிய காயம் நான அவர்களைத் திரும்பிப்
பார்த்தேன் 'எங்களைப்பார்க்காமல ;ஓடித்தப்பு என்றார்கள். நான் எனது
பெற்றோருக்கு ஒரே ஒரு மகள். அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. எங்களை
இந்தக ;கொடுமைகளுக்கு ஆளாக்கிய புலிகளும் அவர்களுக்குப் பணம் கொடுத்து
இந்தப் போரை நடத்துபவர்களும் ஒரு காலமும் நன்றாக வாழமாட்டார்கள்.
தூரத்திலிருந்து கொண்டு சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ஒரு கற்பனை
நாட்டைக் கட்டி எழுப்ப நினைக்கும் புலம் பெயர்ந்த தமிழனை நேரில் கண்டால
செருப்பால் அடிப்பேன' இதைக்கேட்டுக்கொண்டிருந்த முதியவர் ' அவர்கள் நேரில்
வந்தால் அவர்களை உரித்து விடுவேன் . புலிகளுக்கு வால் பிடித்துப் பணம்
சேர்ப்பதை விடத் தங்;கள் பெண்களை விற்றுப் பிழைக்கலாம். அரசன்
அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும், ஏழேழு தலை முறைக்கும் புலிக்குப்
பணம் கொடுத்தவர்கள் தங்கள் கர்மத்தை அனுபவிப்பார்கள்' என்று குமுறினார்
(தொடரும்)
No comments:
Post a Comment