சிறிலங்காப் பேரினவாத அரசால் இன்று தமிழ்மக்கள் மீது உச்சக்கட்டத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களிற்கு எதிராகவும், சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக இரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டிருக்கும் தமிழ் மக்களிற்கு பரிவும், ஆதரவும் காட்டும் முகமாகவும் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சிகளையும் நிகழ்வுகளையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச அரசின் அப்பட்டமான இனவாத அணுகுமுறையையும், மனிதவுரிமை மீறல்களிற்குச் சர்வதேச அளவில் பெயர் பெற்ற இலங்கை அரசபடைகளையும் நியாயப்படுத்திவரும தினமலர், ‘இந்து’ ராம், ‘துக்ளக்’ சோ போன்ற ஊடகக் கிரிமினல்களின் நச்சு வார்த்தைகளையும் நாம் ஆற்றாத கோபத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.
இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீவிரமாக ஒலிக்கப்படும் குரல்கள் எல்லாம் ஒருபடித்தானவையல்ல. கம்யூனிஸ்டுகள், ம.க.இ.க போன்ற இடதுசாரிகள் ஈழப் பிரச்சினையை அணுகும் முறைக்கும் தமிழ்த் தேசியவாதிகள், திரைப்படத் துறையினர் போன்றோர் ஈழப் பிரச்சினையை அணுகும் முறைக்கும் இடையே அடிப்படையிலேயே வேறுபாடுகள் உள்ளன. இடதுசாரிகளின் ஈழத் தமிழர்கள் மீதான அக்கறை அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிலிருந்தும் ஈழப் பிரச்சினை குறித்த வரலாற்று அறிவிலிருந்தும் பிறக்கின்றன. தமிழ்த் தேசியவாதிகள், திரைப்படத்துறையினர் போன்றோரின் ஈழத் தமிழர்கள் மீதான அக்கறை இனவுணர்வு முழக்கங்களிலிருந்தும், வெற்று மனிதாபிமானத்திலிருந்தும், ஈழப் பிரச்சினை குறித்த வரலாற்று அறிவின்மையிலிருந்தும், விடுதலைப் புலிகள் மீதான பிரமைகளிலிருந்துமே பெரும்பாலும் பிறக்கின்றன.
பெரியவர் நெடுமாறன், வைகோ போன்றவர்களின் மழுங்கிப்போன, அரசியல், சமூகம் குறித்துக் கூரிய பார்வைகளற்ற வெறும் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் உரைகள் நமக்கு இருபது வருடங்களாகவே பழகிப்போனவைதான். அந்த உரைகளும், அவர்களின் தமிழ்த் தேசிய ஆதரவு அரசியலும் ஈழப் பிரச்சினையைப் பொறுத்தளவில் தமிழகத்திலோ ஈழத்திலோ குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்களைச் சாதித்தவையல்ல. செய்யாத ஒன்றுக்காகச் சிறை சென்ற நிரபராதிகள் அவர்கள். இன்றைய திரைப்படத் துறையினர் கலை நிகழ்ச்சி நடத்தி கார்கில் யுத்தத்திற்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டியதிலிருந்து காவேரி நதி நீர்ப் பிரச்சினையில் நடத்திய போராட்டங்கள் வரையான செய்திகளை வர்த்தக விளம்பர நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே துண்டுக் காட்சிகளாகத் தொலைக்காட்சியில் நாம் பார்த்திருக்கிறோம். திரைப்படத்துறையினரின் இந்த ஈழப் பாசத்துக்குப் பின்னாலிருப்பது புகலிட ஈழத்தமிழ் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் கொழுத்த இலாபமே என்ற விமர்சனங்களையும் நாம் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தத் திரைப்படத் துறையினரையும் நாம் இப்படிக் கொச்சைப்படுத்திவிட முடியாது என்ற போதிலும் இந்த விமர்சனத்தில் பகுதியளவு உண்மைகள் இல்லாமலில்லை. நடிகர் அஜித்குமார் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்குபெற மறுத்ததாகச் செய்தி வந்ததும் புகலிட நாடுகளில் அவரின் புதிய திரைப்படமான ‘ஏகன்’ காட்சிகள் ரத்துச் செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து அவர் போராட்டத்தில் கலந்துகொண்டு விறைப்பாய் இருந்ததும் நினைவுக்கு வருகிறது. திரைப்படத் துறையினரின் சமூக உணர்வும், மனிதாபிமானமும், வீராவேசச் சவால்களும், ‘பஞ்ச்’ டயலாக்குகளும் கூட அவர்கள் உருவாக்கும் சினிமாக்களில் நாம் கண்டு ரசித்தவைதாம். ஆனால் ஈழப் பிரச்சினை குறித்துக் கருத்துரைக்கும் தமிழகத்தின் எழுத்தாளர்களதும் நூற்றுக்கணக்கான வலைப்பதிவாளர்களினதும் கருத்துகளைப் படிக்கும்போது நமக்குத் ‘திக்’கென்றிருக்கிறது. ஈழப் பிரச்சினை குறித்த வரலாற்று அறிவின்மை மட்டுமல்லாமல் ஈழத்தில் சமகாலத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்த தெளிவின்மையும் அவர்களிடம் விரவிக் கிடக்கிறது. நாஞ்சில் நாடன் போன்ற சமூகப் பொறுப்புணர்வுமிக்க மூத்த எழுத்தாளர்கள் கூடத் தவறான தகவல்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளைக் கட்டியெழுப்ப நேரிடுகிறது.
இருவாரங்களுக்கு முன்பு ‘ஆனந்தவிகடன்’ இதழில் ஈழம் குறித்து நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரையில் “இந்தியாவில் நடைமுறை என்னவாயிருந்த போதிலும் சட்டத்தைப் பொறுத்தளவில் ஒரு தமிழர் பிரதமராக வருவதற்குத் தடைகளில்லை. ஆனால் இலங்கையில் ஒரு தமிழர் பிரதமராக வருவதை அரசியல் சாசனமே மறுக்கிறது” என்று எழுதியிருந்தார். இது ஒரு தவறான கூற்று. இந்தக் கூற்றைச் சற்று நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரப் பேரணியில் இயக்குனர் சீமான் சொல்லிவைத்தார். நாஞ்சில் நாடன் அதை அப்படியே நம்பியிருக்க வேண்டும். இலங்கையின் அரசியல் சாசனத்தில் தமிழர் ஒருவர் பிரதமராக வருவதற்கு எதுவித தடைகளும் கிடையாது. ஆக இலங்கையிலும் நடைமுறை எதுவாயிருந்தபோதிலும் சட்டத்தைப் பொறுத்தளவில் பிரச்சினை கிடையாது.
அதேபோல தமிழின் முதன்மை அறிவுஜீவிகளில் ஒருவரும் சட்ட மன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கடந்த ‘ஜுனியர் விகடன்’ இதழில் “இராணுவ இலக்குகளைத் தவிர பொதுமக்களைத் தாக்குவதில்லை என்ற சுயகட்டுப்பாட்டுடன் புலிகள் இயங்குகிறார்கள்” என எழுதியிருந்தார். ஈழத்து எழுத்தாளர்களுடன் நீண்டகாலமாகவே நெருக்கமான தொடர்பைப் பேணிவரும் ரவிக்குமார் போன்றவர்களே இப்படியாக அநியாயத்திற்குப் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவது கவலைக்குரியது. இது வெறுமனே வக்காலத்து மட்டுமல்ல, புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
‘டொலர்’, ‘கென்’ பண்ணைகளில் தொடங்கி அநுராதபுரம், உலக வர்த்தக மையம், இலங்கை மத்திய வங்கி, தலதா புத்த கோயில், காத்தன்குடி மற்றும் ஏறாவூர் மசூதிகள் எனப் பொதுமக்களைப் புலிகள் குறிவைத்துத் தாக்கிய சம்பவங்கள் எத்தனையெத்தனை. இவை குறித்து சி. புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ நூலில் விரிவான பட்டியலே தேதி விபரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கெப்பற்றிக்கொலாவில் பொதுமக்கள் பேருந்துக்குள் குண்டு வைத்து 64 பொதுமக்களைப் புலிகள் கொன்றதையும் இந்த வருடம் மே மாதம் 16ம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின் மனித வெடிகுண்டு கொழும்பு கோட்டைப் பேருந்து நிலையத்திற்குள் வெடித்துப் பத்துப்பேரைக் கொலைசெய்ததைம் மே 26ம் தேதி தெஹிவள புகையிர நிலையத்தில் புலிகள் வைத்த குண்டால் ஒன்பதுபேர்கள் கொல்லப்பட்டதையும் ரவிக்குமாரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இங்கே நான் குறிப்பிடும் சம்மவங்கள் வெறும் எடுத்துக்காட்டுகள்தாம். ஒவ்வொரு நாளும் எல்லைப் புறங்களில் அப்பாவிச் சிங்களக் கிராமவாசிகள் புலிகளால் கொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் நான் இங்கே அழுத்திச் சொல்வதற்குக் காரணம் இலங்கையின் அரசியல் சாசனத்தையே தவறாக மேற்கோள் காட்டுமளவிற்கு வரலாற்று அறிவின்மையும், சமகால விவகாரங்களில் ஒருபக்கப் பார்வையும், சங்ககாலப் பெருமிதங்களை உருப்போடுதலும், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெறும் அனுதாபக் குரல்களும், உச்சுக்கொட்டல்களும் தமிழர்கள் மீதான படுகொலைகளால் கொதித்துப் போயிருக்கும் உள்ளங்களை ஒருகணம் ஆற்றுப்படுத்தாலாம். ஆனால் இந்தப் போக்கு ஒரு அரசியல் போக்காக உருவெடுக்கவோ, அல்லது இலங்கை - இந்திய அரசுகளை மயிரளவேனும் அசைத்துவிடவோ வலுவற்றது.
ஈழப் போராட்டம் உக்கிரமடைந்த காலத்திலிருந்தே யுத்தத்தை எதிர்த்தும், தமிழர்களையும் மற்றைய சிறுபான்மையினரையும் உள்ளடங்கிய அதிகாரப் பகிர்வு குறித்தும் பேசிவரும் தமிழகத்து இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இடது அறிவுத்துறையினரின் குரலுக்கும்; புலிகள் போரில் பின்னடைவைச் சந்திக்கும் போது யுத்த நிறுத்தத்தைக் கோரியும், புலிகள் போரியல் வெற்றிகளைச் சாதிக்கும்போது போர் வெற்றியைக் கொண்டாடியும் வரும் தமிழ்த் தேசியர்களின் போக்குக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்கள் தெளிவானவை. போரில் ஏற்ற இறக்கங்களை அரசும் புலிகளும் மாறி மாறிச் சந்திந்தாலும் தமிழ் மக்கள் இந்தப் போரால் கடந்த முப்பது வருடங்களாக இறக்கங்களை மட்டுமே சந்தித்துவருகிறார்கள். போரின் வீச்சு தமிழ் மக்களைப் பாதிப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. போர் இசுலாமியச் சமூகத்தை நோக்கியும் சிங்களச் சமூகத்தை நோக்கியும் தன் அழிவுக் கரங்களை ஆழமாகவே வீசியிருக்கிறது. யுத்தத்தால் வீங்கிப்போன பாதுகாப்புச் செலவீனங்களை நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் விலைவாசி உயர்வாகவும் வரிகளாகவும் தங்கள் முதுகுகளில் சுமக்கிறார்கள்.
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் சிங்களக் கிராமங்களில் இலங்கை அரசு ‘பூநகரி’ வெற்றி விழாவை நடத்திக்கொண்டிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த கிளிநொச்சிப் பகுதியை நோக்கி மூன்று தடங்களில் இலங்கை இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. புலிகளை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அரச படையினர் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசி வகைதொகையற்று மக்களைக் கொன்றொழித்துக்கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலமாகவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான தரைவழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் வன்னியில் பசியும் பட்டினியும் தலைவிரித்தாடுகின்றன. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் அரசால் யுத்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டன. முன்னேறிச் செல்லும் இராணுவத்தினரின் பீரங்கிகளின் வாய்களுக்குப் புலிகள், பொதுமக்கள் என்ற வித்தியாசங்கள் ஏதுமில்லை. பிணங்களை ஏறி நெரித்துக்கொண்டு அவை நிலங்களை கைப்பற்றுகின்றன.
கொழும்பில் நடந்து முடிந்த ‘சார்க்’ மாநாட்டின் போது மாநாட்டை ஒட்டிப் பத்து நாட்கள் யுத்த நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த போதிலும் அரசு யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஈழப் போராட்டத்தின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஒரு யுத்த நிறுத்தத்திற்குச் சம்மதிக்க அரசு மறுத்த சம்பவமது. யுத்தத்தில் வெற்றிகளை அரசு ருசிக்கத் தொடங்கியிருந்த காலமது. இன்று யுத்த நிறுத்தத்திற்குத் தயாரென்றும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாரென்றும் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் அறிக்கைக்கு மேல் அறிக்கை வெளியிட்டவாறேயிருக்கிறார். போரியல் வெற்றிகளால் இராணுவம் திகட்டிப் போயிருக்கும் காலமிது. மகிந்த ராஜபக்ச யுத்தத்தின் மூலமே தீர்வு என்பதில் உறுதியாயுள்ளார். கடந்த காலங்களைப்போல ‘அனைத்துக் கட்சிக் குழு’, ‘தீர்வுப் பொதி’ என்றெல்லாம் இப்போது அவர் முணுமுணுப்பது கூடக் கிடையாது. நாட்டில் விசுவரூபம் எடுத்து நிற்கும் இனவாத அரசியலை அவர் வோட்டுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார். அடுத்த அதிபர் தேர்தலில் தனது வெற்றிக்கான அத்திவாரத்தை ராஜபக்ச தமிழர்களின் வீடுகளுக்கு நடுவே விமானங்களால் தோண்டிக்கொண்டிருக்கிறார்.
இன்று அரசின் நிழலில் நின்றுகொண்டு அரசியல் பேசும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியும் EPDP, PLOTE, TMVP போன்ற தமிழ் இயக்கங்களும் இந்தப் போரை வலுவாக ஆதரிக்கிறார்கள். அரசியல் பரப்பிலிருந்து புலிகளைப் பூண்டோடு கிள்ளியெறிய வேண்டுமென்பது அவர்களது நிலைப்பாடு. புலிகளால் வஞ்சிக்கப்பட்ட, அழித்தொழிக்கப்பட்ட இந்த இயக்கங்களின் கோபத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் புலிகள் பொதுமக்களையும் மாற்று இயக்கத் தலைவர்களையும் கொல்லும்போது இந்த இயக்கங்களிடம் பொங்கிப் பிரவகித்த மனிதவுரிமைகள் மீதான கரிசனையும் அராஜகத்திற்கு எதிரான குரலும் எப்போதுமே அரச இயந்திரத்தின் முன்னே மண்டியிடுவதைத்தான் சகித்துக்கொள்ள முடியில்லை. பொதுமக்கள் மீது அரசு நடத்தும் படுகொலைகளுக்காக அரசைக் கண்டிக்கவோ அவற்றைத் தடுத்து நிறுத்தவோ இவர்களுக்குத் துப்பில்லை. இயக்கம் நடத்துவதற்கு அடுத்த மாதத்திற்கான செலவை பொதுமக்களா கொடுக்கப் போகிறார்கள். அரசிடமிருந்துதானே இவர்கள் அந்தச் செலவுத் தொகையை நத்திப் பெறவேண்டியிருக்கிறது.
இன்றைய புலிகளின் நிலையைக் குறித்துப் பேசுவதற்கு முதல் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக் காலமான எண்பதுகளின் தொடக்கப் பகுதியை சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக 1983 யூலை வன்முறைகளைத் தொடர்ந்து நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இனவாத அரசுக்கு எதிராகத் திரண்டுவந்த மக்களின் உணர்வும் அது வழியே தமிழ்த் தேசிய விடுதலை இயககங்களுக்குக் கிடைத்த பேராதரவும் வரலாற்றுத் திருப்பங்கள். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் உயிர்களை வெள்ளித் தட்டில் வைத்து இயக்கத் தலைமைகளிடம் ஒப்படைத்தார்கள். ‘எங்கும் சுதந்திர மென்பதே பேச்சு’ என்ற பாரதியின் சொற்கள் ஈழப் புலத்தில் செயலாய் நிமிர்ந்த காலமது. அரசியல் தெளிவீனங்கள், இயக்கங்களின் சகோதர உரசல்கள், ஈழப் போராட்டத்தின் மீது இந்திய வல்லாதிக்க அரசின் மேலாண்மை போன்ற பலவீனங்களுக்கு அப்பாலும் பரந்துபட்ட மக்கள் திரள் பேரினவாத அரசுக்கு எதிராகவும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் சொல்லொணா அர்ப்பணிப்பு உணர்வுடன் அணிவகுத்த காலமது. அந்த எழுச்சியில் ஆயிரம் வருடங்களாக அசைக்க முடியாமல் கெட்டிதட்டிப் போயிருந்த சாதியக் கலாச்சாரம் கூடக் கொஞ்சம் நெகிழப் பார்த்தது. அந்த எழுச்சி கிடுகு வேலிக் கலாச்சாரத்துக்குள் சிறையுண்டிருந்த ஒருதொகைப் பெண்களை அரசியல் வெளிகளுக்கு அழைத்து வந்தது. அந்த மக்கள்சக்தி அலாவுதீனின் அற்புத விளக்கு.
நமது போராளி இயக்கத் தலைமைகளின் தவறுகளால் அந்த விளக்கு வீடு கொழுத்தத்தான் பயன்பட்டது. விடுதலை இயக்கங்கள் தங்களை மக்களிலிருந்து வேறுபட்ட சிறப்பு உயிரிகளாகக் கருதினர். மக்களால் தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டே அவர்கள் மக்களை நாட்டாமை செய்தார்கள். மக்களை அரசியல் மயப்படுத்தவோ, அரசியல் சக்திகளாக்கவோ அவர்கள் முயலவில்லை. மக்களை இயக்கத்திற்கு வளங்களை வழங்கும் ‘சப்ளையர்’களாக மட்டுமே அவர்கள் பார்த்தார்கள். இயக்கங்களின் அரசியல் கொள்கைகள் தமிழ் மக்களைப் பாதுகாப்பது என்பதில் தொடங்கி, தங்கள் இயக்கத்தைப் பாதுகாப்பதாகத் தேய்ந்து, இயக்கத் தலைமைகளைப் பாதுகாக்கும் ஆராதிக்கும் கொள்கைகளாகச் சிறுத்தன. தம்பி பிரபாரகன் ‘தேசியத் தலைவரா’கவும் தோழர் உமாமகேசுவரன் ‘பெரியய்யா’ ஆகவும் வீங்கிப்போயினர்.
1986ல் விடுதலைப் புலிகள் மற்றறைய இயக்கங்களைத் தடைசெய்துவிட்டு நாட்டாமைகளுக்கெல்லாம் நாட்டாமை ஆனார்கள். தட்டிக் கேட்க ஆளில்லாததால் ‘தம்பி’ சண்டப்பிரசண்டர் ஆனார். ஒரு கெரில்லாத் தாக்குதலுக்கு நூறு அரசியல் தவறுகள் என்ற ரீதியில் ஈழப் போராட்டம் சீரழியத் தொடங்கியது. அ. அமிர்தலிங்கம் கொலை, முஸ்லீம்களைக் கட்டிய துணியுடன் துரத்தியது, ராஜீவ்காந்தி கொலை, பள்ளிவாசல் படுகொலைகள், என்று எண்ணற்ற பாரிய அரசியல் தவறுகள் புலிகளால் இழைக்கப்பட்டன. மக்கள் மீது அடக்குமுறைச் சட்டங்களும் வரிவிதிப்புகளும் புலிகளால் அவிழ்த்துவிடப்பட்டன. பள்ளிச் சிறுவர்களும் குழந்தைகளும் கட்டாயமாகப் புலிகள் இயக்கத்துக்குப் பிடித்துச் செல்லப்பட்டார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவது கட்டாயமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. புலிகளின் இயக்கத்தின் அடாவடி அரசியல் புலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் அகதிகளையும் விட்டு வைக்கவில்லை. அய்ரோப்பாவிலும் கனடாவிலும் மிரட்டிப் பணம் பறித்தல், வன்முறைகள் மூலம் மாற்று அரசியல் கருத்துள்ளவர்களை அடக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் புலிகளின் அணிகள் இறங்கின.
இந்தப் பாஸிசச் செயற்பாடுகளால் சொந்த மக்களிடையே கணிசமான ஆதரவை இழந்தது மட்டுமல்லாமல் சர்வதேசச் சூழலிலும் புலிகள் இயக்கம் கடும் கண்டனங்களைச் சந்திக்க நேரிட்டது. இந்தியாவிலும் பிரித்தானியாவிலும் அய்ரோப்பிய யூனியனிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட்டது. இந்த நாடுகளில் புலிகளின் நடவடிக்கைகள் பெருமளவில் முடக்கப்பட்டன. எல்லா நாட்டுச் சிறைகளிலும் புலிகளின் உறுப்பினர்கள் அடைக்கப்பட்டார்கள். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பிரஞ்சு அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. சர்வதேச அரசுகளின் இந்தச் செயற்பாடுகள் விரிந்து கூட்டம் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுக்குமளவிற்குக் கூட சர்வதேச அரசுகளின் பிடி இறுகிவருகிறது. சென்ற மாதம் பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் ஆதரவு அணிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது. சர்வதேச அரசுகளின் இந்த நடவடிக்கைகள் முற்று முழுதாகச் சரியானவை எனபதல்ல நான் சொல்ல வருவது. இந்தச் சர்வதேச வல்லாதிக்க அரசுகளின் அரசியல் கயமைத்தனங்களையும் காலனிய மனோபாவத்தையும் நாம் அறிவோம். புலிகள் மீதான வல்லாதிக்கவாதிகளின் பிடிகள் இறுகி வருவதை விளக்கவே மேலுள்ளவற்றைச் சொல்ல நேரிட்டது.
இன்று எல்லாவிதப் புறநிலைகளும் அரசியல் ரீதியாகவும் சரி, இராணுவ ரீதியாகவும் சரி புலிகளுக்குப் பாதகமாகவேயுள்ளன. இந்த அழிவைப் புலிகளின் குறுந்தேசிய பாஸிச வேலைத்திட்டமும், அவர்களின் சகிப்பின்மையுமே அவர்களுக்குத் தேடிக்கொடுத்திருக்கிறது. சிங்கள இனவாத அரசுக்கு எதிரான மக்களின் வீரஞ் செறிந்த எழுச்சியைச் சிதைத்து, விடுதலை அரசியலை வெறுமனே இராணுவவாதமாகத் திருப்பிச் சீரழித்து, மாற்று அரசியல் குரல்களை ஒடுக்கி, ஒரு போராட்டத்தைத் தோற்றதில் விடுதலைப் புலிகளுக்கே முதன்மையான பங்கிருக்கிறது.
எனினும் இத்தனை சீரழிவுகளிற்குப் பின்னும் ஒருதொகை மக்களிடையே புலிகளுக்கான ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. புலிகளின் பல்வேறு செயல்களால் அதிருப்தியுற்றிருந்தாலும் இலங்கைப் பேரினவாத அரசின் கொடுமைகள் வழியாக அவர்கள் புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிப் போராளிகளின் போர்க் குணாம்சமும் அர்ப்பணிப்பு உணர்வும் குறைத்து மதிப்பிடப்படக் கூடியவையும் அல்ல. ஆனால் இத்தகைய மக்கள் ஆதரவாலும் போராளிகளின் அர்ப்பணிப்பு உணர்வாலும் கூட வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் புலிகளின் வீழ்ச்சி ஆள் பற்றாக்குறையால் உருவானதல்ல. அது அவர்களின் பிற்போக்குவாத அரசியல் வேலைத் திட்டத்திலிருந்து உருவானது.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள அரசியல் உறவுகள் பாரம்பரியமுள்ளவை அதே நேரத்தில் சிடுக்குகள் கொண்டவை. சுதந்திர இலங்கையில் இந்திய இராணுவம் இருதடவைகள் கால் பதித்துள்ளது. இருதடவைகளும் இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் இரத்தச் சுவடுகளையே விட்டுச் சென்றது. ஜேவிபி நடத்திய 1971 ஏப்ரல் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வந்த இந்திய இராணுவத்தின் துணையுடன் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசு பத்தாயிரம் சிங்கள இளைஞர்களை வீதிகளிலும் களனி ஆற்றின் கரைகளிலும் கொன்றொழித்தது. 1987ல் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையினர் கொன்ற உயிர்களுக்கும் அவர்களால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட பெண்களுக்கும் அடித்த கொள்ளைக்கும் கொழுத்திய வீடுகளிற்கும் கணக்கே கிடையாது. முன்றாவது தடவையும் நாம் மொக்கயீனப்பட முடியாது.
வங்கப் பிரச்சினையில் இந்தியா தலையீடு செய்ததை உதாரணம் காட்டி இன்று நமது திரைப்பட நடிகர்கள் உணர்ச்சிவசப்படுவதையும் அதை காணொளியாகத் தரவிறக்கம் செய்து தமது வலைப்பதிவுகளில் போட்டு நமது வலைப்பதிவாளர்கள் அடிக்கும் கூத்தையும் பார்த்தால் பரிதாபமாயுள்ளது. நண்பர்களே திரைப்படத்தில் வைப்பது போல வரலாற்றிலெல்லாம் சுலபமாக ‘பிளாஷ் பேக்’ வைத்துவிட முடியாது.
வங்கப் போராட்டத்தின் போதிருந்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளும் இன்றிருக்கும் வெளியுறவுக் கொள்கைகளும் முற்றிலும் வேறானவை. சோவியத் யூனியன் உடைவிற்கு முன்னான சர்வதேச அரசியல் சூழுலும் இன்றிருக்கும் அரசியல் சூழலும் வேறுவேறானவை. அணிசேராக் கொள்கையென்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற இந்தியா வேறு. அமெரிக்காவுக்குப் பணிந்து அணு ஒப்பந்த அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் இன்றைய இந்திய அதிகார வர்க்கம் வேறு. இன்று இந்தியப் பெரும் முதலாளிகளின் முதலீடுகள் இலங்கையில் வடக்கில் காங்கேசன்துறையிலிருந்து தெற்கே மாத்தறை வரை குவிந்துள்ளன. இலங்கை கேள்வி கேட்பாரன்றிச் சூறையாடக் கூடிய ஒரு நிலமாக இந்தியப் பெருமுதலாளிகளுக்கு ‘செட்’ ஆகியிருக்கிறது. ஜெயவர்த்தனா காலத்திலிருந்தது போலவோ பிரேமதாஸ காலத்திலிருந்தது போலவோ. இன்று இரு நாடுகளுக்குமிடையில் ஒரு முறுகல் நிலமையும் கிடையாது. பொதுவாகவே சிறிமாவின் காலத்திலிருந்தே சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் இந்திய அரசுக்குமிடையில் ஒரு இணக்கம் இருப்பதையும் நாம் அறிவோம். நடுவில் அந்தத் ‘துன்பியல் சம்பவமும்’ நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் புறச்சூழல்களைக் கவனத்தில் எடுக்காமல் வங்கம், கச்சத்தீவு என்றெல்லாம் நாம் வாய்ப்பாடு ஒப்பித்துக்கொண்டிருக்க முடியாது.
இந்திய அதிகாரவர்க்கமல்ல வேறு எந்த அதிகார வர்க்க ஆட்சியாளர்களும் தங்கள் சொந்த வர்க்க நலன்களை முன்னிறுத்தாமல் ஒரு குண்டூசியைக் கூட அசைப்பதில்லை. ஆக நமது எழுச்சியாளர்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தாலோ ஒரு ஊர்வலத்தாலோ இலங்கைக்கு ஆயுதங்களையும் ராடர்களையும் வழங்காமல் இந்திய அரசைத் தடுத்துவிட முடியும் என்று நிச்சயமாகவே எண்ணமாட்டார்கள். ஆனால் அவர்கள் இலங்கைக்கு இந்தியா ஆயுதமும் ராடர்களும் வழங்கும் செய்தி இன்றுதான் தமக்குத் தெரிய வந்ததுபோல மேடையில் போடும் அதிர்ச்சி நாடகம்தான் சகிக்க முடியாமலிருக்கிறது. இந்தியா இலங்கைக்கு முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுதம் வழங்கிக்கொண்டுதானிருக்கிறது. இந்திய இராணும், இலங்கை இராணுவத்துடன் மட்டுமல்லாமல் அமெரிக்க இராணுவத்துடனும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறது. இன்று இலங்கையில் கொல்லப்படும் ஒவ்வொரு அப்பாவித் தமிழர் குறித்த விபரமும் நமக்குத் தெரிகிறதோ இல்லையோ இந்திய அதிகார வர்க்கத்துக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது. அதுபோலவே கடலில் கொல்லப்படும் மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் பரஸ்பரப் புரிந்துணர்வு உள்ளது.
எனவேதான் இந்தச் சூழலில் ‘இந்திய அரசே ஈழத் தமிழர்கள் மீது இரங்கு’ என்ற கோரிக்கை அல்லது ‘இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காதே’ என்ற ஒருநாள் கண்டனங்களால் நம்மால் எதுவும் சாதித்துவிட முடியாது. ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்துக் குரல்களை அரசியல்ரீதியாக அணிதிரட்ட வேண்டும். அந்த அரசியல் போக்கு வெறுமனே இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு புலிகளினதோ அல்லது மற்றைய இயக்கங்களினதோ மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டும் காணாமலும் விட்டுச் செல்லக்கூடாது. குறிப்பாக ஈழப்புலத்தில் நிலவும் கடுமையான சாதிய முரண்கள், கிழக்கு மற்றும் இசுலாமியரின் அரசியல் சுயாதீனம் போன்ற ஈழத்தின் அடிப்படையான அரசியல் விடயங்களிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய ஈழ அரசியலின் அடிப்படைகளைக் கவனத்தில் எடுப்பதின் மூலம்தான் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சரியான, தார்மீகப் பலம்கொண்ட அரசியல் போக்கைத் தமிழகத்தில் உருவாக்க முடியும். குறிப்பாக இலங்கை அரசுக்குப் போர்க் கருவிகளை வழங்கும் பிரச்சினையில் நடுவண் அரசிடம் கெஞ்சிக் கேட்கும் போக்கில்லாமல் முண்டி நிற்கும் தைரியம் வேண்டும். அதற்கு அமைப்புரீதியான பலம் வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாகத் தமிழக மக்கள் ஈழத் தமிழர்கள் மேல் காட்டிவந்த கரிசனை மறக்க முடியாதது. ஆனால் அந்தக் கரிசனை மனிதாபிமான உதவிகள் என்றளவில் ஒருபுறம் தேங்கிக்கிடக்க மறுபுறத்தில் வெறும் புலி ஆதரவாகச் சீரழிந்து கிடக்கிறது. இந்த இரு போக்குகளாலும் ஈழத்து அரசியலிலோ அல்லது ஈழத்துப் பிரச்சினையில் தொடர்ந்து அடாத்துப் பண்ணிக்கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளிலோ ஒரு துரும்பளவு மாற்றத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை என்பதே கடந்த கால வரலாறு சொல்லும் உண்மை. தோழர்கள் புதியன சிந்திக்க வேண்டும்.
இன்று உக்கிரமாக நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்தை நிறுத்தித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் புலிகள் விரும்புகிறார்கள். இலங்கை அரசோ புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்பதாகப் போரை அவிழ்த்துவிட்டிருக்கிறது. விடுதலைப் போராட்டங்களையும் ஒடுக்கப்படும் இனங்களின் தேசிய எழுச்சிகளையும் பயங்கரவாதமாக இந்திய அரசு முதற்கொண்டு மேற்கு வல்லரசுகள்வரை சித்திரிக்கின்றன. நியாயமான எழுச்சிகளையே பயங்கரவாதமாகச் சித்திரிக்கும் அந்த வல்லாதிக்கவாதிகளுக்குப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கும் வேலையைப் புலிகள் வைக்கவில்லை. புலிகள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைப் போட்டுக்கொண்டவர்கள். தமிழ், சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் மீதான அவர்களின் கூட்டுப் படுகொலைகள், இலங்கையிலும் சர்வதேசப் பரப்புகளிலும் அவர்கள் செய்த அரசியற் படுகொலைகள், புகலிட நாடுகளில் வாழும் அகதித் தமிழர்கள் மீது மேற்கு அரசுகளின் சட்டங்களையும் மீறிப் புலிகள் கொடுத்த தொல்லைகள் போன்ற எண்ணற்ற காரணிகளால் ஒரு விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாகப் பரிணமிக்க வைத்தவர்கள் அவர்கள். எனவே புலிகளை அழித்தொழிக்கும் இலங்கை அரசின் இன்றைய யுத்தத்திற்கு சர்வதேச வல்லாதிக்க சக்திகள் தங்களது முழு ஆதரவையும் வழக்குகின்றன. யார் இலங்கை அரசுக்கு அதிகமான இராணுவத் தளவாடங்களைத் தர்மம் செய்வதென்பதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிற்குள் ஒரு ‘தர்ம’யுத்தமே நடகக்கிறது.
அரசு - புலிகள் - சர்வதேச அரசுகள் என்ற முக்கோணச் சிக்கலுக்குள் ஈழத்தமிழர்கள் சிறையிருக்கிறார்கள். புலிகளிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் உடனடி யுத்த அபாயங்களும் புலிகளின் அடக்குமுறைகளும் இல்லாமலிருக்கலாம். ஆனால் அந்தப் பிரதேசங்களில் நடப்பது இனவெறி பிடித்த ஒரு இராணுவத்தின் இராணுவ ஆட்சி. கடந்த பதின்முன்று வருடங்களாக இராணுவத்தின் பிடியிலிருக்கும் யாழ்ப்பாணத்தில் கொலைகள் விழாத நாளே கிடையாது. இன்று அந்தப் பகுதியில் இளைஞர்களுக்குச் சிறைச்சாலை ஒன்றே பாதுகாப்பை உறுதி செய்யும் இடமாயிருக்கிறது. தாய்மார்கள் தாங்களாகவே தமது பிள்ளைகளை அழைத்துவந்து சிறையில் அடைத்து வைக்குமாறு அதிகாரிகளை இரக்கிறார்கள்.
இராணுத்தால் கைப்பற்றப்பட்ட கிழக்கில் மகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு முதல்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அங்கேயும் விமானக் குண்டுவீச்சுகள், ஷெல் வீச்சுகள் போன்ற உடனடி யுத்த அபாயங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், புலிகளின் கட்டாய பிள்ளைபிடி போன்ற அபாயங்கள் இல்லாதிருந்தாலும் அங்கே அதிகாரத்தில் இருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் (TMVP) நடக்கும் குத்துவெட்டுகளாலும் கொலைகளாலும் கிழக்கு அதிர்கிறது. அண்மையில் ரகு என்ற அந்த அமைப்பின் முக்கிமான தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவேயுள்ள நூற்றுக்கணக்கான கொலைப் பழிகளுடன் இந்தக் கொலைப் பழியும் கருணாவுக்கே சேர்ந்திருக்கிறது. ஆயுதப் போராட்டம் என்ற கொள்கையைக் கைவிட்டு TMVP சனநாயக அரசியல் நெறிகளுக்கு திரும்பித் தேர்தலில் பங்கேற்றது, கையில் ஆட்சிப்பொறுப்பு, அதுவும் மண்ணின் மைந்தர்களின் கையில் ஆட்சிப்பொறுப்பு, கிழக்கிலுள்ள மூவினங்களுக்கும் இடையேயான நல்லுறவுகளை வளர்த்தெடுப்பதற்கான அருமையான வாய்ப்பு என சாதகமான பல விடயங்கள் இருப்பினும் முதல்வர் சந்திரகாந்தனுக்கும் கருணாவுக்கும் உள்ள அதிகாரப் போட்டி, நிபந்தனையில்லாமல் ராஜபக்சவின் அரசுக்கு அடிபணியும் போக்கு, தொலைநோக்கிலான அரசியல் வேலைத்திட்டம் இல்லாமை போன்ற காரணிகளால் கிழக்குக்கு விடிவு தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது.
உன்னிப்பாகக் கவனித்தால் இன்று இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போரை விடுதலைப் புலிகளைத் தவிர மற்றைய அனைத்துப் பிரதான அரசியற் போக்குகளும் ஆதரிக்கின்றன, உற்சாகமூட்டுகின்றன என்பதே உண்மை. இவற்றுக்குள் தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் அடக்கம். சர்வதேச வல்லாதிக்க அரசுகளும் போரை ஊக்குவிக்கின்றன. புலிகளும் யுத்த நிறுத்தத்தைக் கோருவது கலிங்கத்தை வென்ற சாம்ராட் அசோகனின் நிலையிலிருந்தல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் வன்னியைத் தோற்கும் நிலையிலிருந்தே யுத்தநிறுத்தத்தைக் கோருகிறார்களே தவிர போர்மீது அவர்களுக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. கடந்த காலங்களில் போர் நிறுத்தங்களைப் பலதடைவைகள் தன்னிச்சையாக உடைத்தவர்கள் அவர்கள். இந்தப் பின்னணியில் போரை நிறுத்துவதற்கும் போரினால் அழிந்துகொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்குமான ஒரு அரசியல் தீர்வுக்காக யார் முயற்சிப்பது? போரை நிறுத்தும் வல்லமை யாரிடம் உள்ளது? போரிடும் தரப்புகளையும் போரின் ஆதரவாளர்களையும் யார் அமைதிப் பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வரக்கூடியவர்கள்? இந்தக் கணத்தில் இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. ஏனெனில் அதற்கான வல்லமை படைத்தவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ யுத்தத்தில் பங்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தேவதைகளாலும் எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கிறார்கள் யுத்தத்திற்குள் சிக்குண்டிருக்கும் ஈழத் தமிழர்கள்.
ஈழத் தமிழர்களைத் தனது அடக்குமுறைச் சட்டங்களின் மூலமும் ஆயுதங்கள் மூலமும் இலங்கை இனவாத அரசு தோற்கடித்துள்ளது. அதேபோல கருத்துச் சுதந்திர மறுப்பு, மாற்று அரசியல் போக்குகள் மீதான சகிப்பின்மை, ஒரு விடுதலை அரசியல் போராட்டத்தை சுத்த இராணுவவாத அரசியலாகச் சீரழித்தது, ஏகபிரதிநிதித்துவம் என்ற மன்னர் காலத்து எதோச்சாதிகார அரசியல் போன்றவற்றால் தமிழ் மக்களது நியாயமான உரிமைப் போராட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தி இன்று தமிழ் மக்களைக் கேட்க நாதியில்லாத மனிதர்களாகத் தோல்வியின் விளிம்புவரை இழுத்து வந்திருக்கிறார்கள் போராட்டத்தை ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்த விடுதலைப் புலிகள்.
ஈழத்து அரசியல் குறித்து நமது கடந்தகால மதிப்பீடுகளையும் கற்பிதங்களையும் பிரமைகளையும் நாம் தூக்கி எறிந்துவிட்டு இன்றைய புறநிலைகள், மாறிக்கொண்டேயிருக்கும் சர்வதேச அரசியல் - பொருளியல் சூழல்கள், நாட்டில் சிவனொளிபாதமலைக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் இனவாத அரசியல் போன்றவற்றைக் கவனத்தில் எடுத்தே நாம் இனிப் பேசவேண்டும். தேர்தல் அரசியல், பாராளுமன்ற ஜனநாயகம் போன்றவற்றையெல்லாம் நாம் முன்பைப் போல அசூசையுடன் நோக்கத் தேவையில்லை என்றுதான் கருதுகிறேன். இதன்பொருள் இந்த முதலாளிய அரசியல் நெறிகள்தான் நமக்கான இறுதித் தீர்வும் நமது அரசியல் வழியும் என்பதல்ல. குறிப்பான அரசியல் சூழல்களைப் பொறுத்துத்தான் நாம் எமது அரசியல் நெறிகளைத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. இந்த விடயத்தில் நமக்கு பிரசந்தாவும் ஹியூகோ சாவேசும் முன்னுதாரணங்களாகக் கொள்ளத்தக்கவர்கள்.
புதிய அரசியல் சூழல்களை முன்னிருத்தி மூன்று முக்கிய புள்ளிகளில் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனக் கருதுகிறேன். இவற்றில் முதலாவது கோரிக்கைக்கும் ஈழப் போராட்டத்துக்கும் ஒரே வயது. ஈழப் போராட்டத்துடனேயே சேர்ந்து பிறந்த கோரிக்கையிது:
1. மாற்று அரசியல் கருத்துகளைத் தடைசெய்தும் மாற்றுக் கருத்தாளர்களைக் கொன்று குவித்தும் விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் தொடக்கி வைத்த கருத்துச் சுதந்திர மறுப்புக் கலாசாரம் இன்று இலங்கைத் தீவு முழுவதற்குமான பொதுக் கலாசாரமாக மாறியுள்ளது. இந்தக் கருத்துச் சுதந்திர மறுப்புக்கு எதிரான போராட்டம்தான் அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதற்கான தொடக்கப் புள்ளி. கருத்துச் சுதந்திரம், மாற்று அரசியல் செயற்பாடுகள், கட்சி கட்டுவதற்கான உரிமை போன்ற அடிப்படை அரசியல் உரிமைகளை விடுதலைப் புலிகளிடம் மட்டும் கோரிப் போராடினால் போதாது. இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசிடமும் கிழக்கில் அதிகாரத்தை வைத்திருக்கும் TMVP யிடமும் நாம் வலியுறுத்திப் போராட வேண்டியிருக்கிறது.
2. ஒரு நாட்டின் அரசியலில் இடதுசாரிகளின் வகிபாகம் நிரம்பவும் முக்கிமானது. குறிப்பாக இலங்கையைப் பொறுத்தளவில் பல்வேறு சமூக நலச் சட்டங்களையும், தனியுடமைகளைப் பொதுச் சொத்துகளாக்கியது போன்ற பாரிய அரசியல் மாற்றங்களையும் சாதித்தவர்கள் இடதுசாரிகளே. இன்று அப்பாவிப் பொதுமக்கள் யுத்தத்தின் பேரால் கொல்லப்படுவதற்கு எதிராகச் சரியோ தவறோ தமிழகத்தில் எழுந்திருக்கும் யுத்த மறுப்புக் குரல்கள் அளவுக்கேனும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இடதுசாரிகள் தங்கள் தமிழ்ச் சகோதரர்களுக்காக ஒரு யுத்த மறுப்புப் போராட்டத்தைச் செய்யத் தவறியிருக்கிறார்கள். இன்று தீவிர இனவாதக் கட்சியாக மாறியிருக்கும் ஜேவிபி, அரசின் பங்காளிகளாயிருக்கும் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் நாட்டிலுள்ள ஏனைய சிறு இடதுசாரிக் குழுக்களதும் இடது அறிவுத்துறையினரதும் கலைஞர்கள் எழுத்தாளர்களினதும் ஆழ்ந்த மவுனம் வேதனைக்குரியது. இலங்கை அரசியலில் புதிய சனநாயகத்தக்கான ஒரு பாதையைத் திறந்து வைக்கச் சிங்கள இடதுசாரிகள் அளவுக்கு வல்லமையும் வாய்ப்புகளும் உள்ளவர்கள் வேறு யாருமில்லை. மிகச் சிறிய கட்சியான ‘சோசலிச சமத்துவக் கட்சி’ தொடர்ச்சியாக இனவாத யுத்தத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதுபோல சிங்கள மக்களை யுத்தத்திற்கு எதிராகவும் இனவாதத்திற்கு எதிராகவும் பரவலாக அணிதிரட்ட சிங்கள இடதுசாரிகள் முயற்சிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போலச் சோம்பியிராமல் சிங்கள இடதுசாரிகளுடன் நமது உரையாடல்களை நாம் வலுப்படுத்த வேண்டும்.
3. 1985ல் இருந்து நாம் எத்தனையோ அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் கண்டிருக்கிறோம். ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் பின்பாக முன்பிருந்ததைக் காட்டிலும் நிலமைகள் மோசமடைந்ததே கண்ட மிச்சம். பேச்சுவார்த்தை மேசைகளைப் பகடைகள் உருட்டும் பலகைகளாக உபயோகித்தார்களே தவிர யுத்தம் நிறுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்பதிலெல்லாம் இரு தரப்புமே அக்கறை செலுத்தவில்லை. அரசுக்கு இனவாத அரசியலும் அதன் மூலம் அறுவடை செய்யவிருக்கும் வாக்குகளும்; புலிகளுக்கு தமது இயக்கத்திற்கான உச்சபட்ச அதிகாரமுமே முக்கியமாயிருந்தன. யுத்தத்தால் துன்புறும் மக்களைப் பற்றி ஒரு மயிரும் கவலைப்படவில்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து மறுபடியும் பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்றால்கூட இந்த யுத்தமோகிகள் அமைதியை நோக்கி ஒரு காலடியாவது எடுத்து வைப்பார்களா என்பது சந்தேகமே. இந்த நிலையில்தான் நாம் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு அரசிடம் உரத்துக் கேட்க வேண்டியிருக்கிறது. இந்த நாட்டின் சட்டபூர்வமான அரசென்றும் அரசியல் சாசனத்திற்கமைய ஆட்சி நடத்தும் அரசென்றும் சொல்லிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு அந்தக் கடமையிருக்கிறது. தமிழர்களின் மற்றும் இதர சிறுபான்மையினர்களின் தலித்துகளின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் வண்ணம் இலங்கையின் அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்தத் தீர்வை இலங்கை அரசு முன்வைத்தால் புலிகள் ஏற்கிறார்களோ இல்லையோ மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதற்குப் பின்னால் புலிகளை அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்டும் வேலையை அரசு செய்ய வேண்டியிருக்காது. மக்களே அந்த வேலையைப் பார்த்துக்கொள்வார்கள். வரலாறு நெடுகவும் எத்தனையோ மல்லா மலைகளை ஒழித்துக்கட்டியவர்கள் அவர்கள்.
அரசு இத்தகைய நியாயமானதொரு தீர்வை வழங்காமல் இந்த நாட்டில் அமைதி திரும்பப் போவதில்லை. புலிகளை இராணுவரீதியாக ஒழித்துக்கட்டுவது சாத்தியமற்றதாயிருக்கலாம். ஆனால் புலிகளை அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்ட முடியும். இதை அரசு செய்யத் தவறினால் “இலங்கை அரசுத் தலைமையை என்னால் அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்ட முடியாமலிருக்கலாம் ஆனால் இராணுவரீதியாக ஒழித்துக்கட்ட முடியும்” என்று காலாதிகாலத்துக்கும் யாழ்ப்பாணத்தின் கடற்கரையிலோ மட்டக்களப்பு வாவியோரத்திலோ வன்னியின் வயல்களிலோ புதிது புதிதாகக் குரல்கள் முளைத்துக்கொண்டுதானிருக்கும். நம்மிடையே பிரபாகரன்களுக்கும் முகுந்தன்களுக்கும் சபாரத்தினங்களுக்கும் பஞ்சமா என்ன!
Courtesy: Sathyakadatasi
No comments:
Post a Comment