Saturday, 23 January 2010

யுத்தத்தை வைத்துப் பிழைப்பு நடத்தியவர்கள் படம் காட்டி பிழைக்க முயற்சி!

சதா. ஜீ.

தமிழ் மக்கள் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்துவிடக்கூடாது என்று கூத்தமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார். அஃதானப்பட்டது தமிழ் மக்கள் ஜனரல் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே அவருடைய வேண்டுகோள். வேலில போற ஓணானை பிடிச்சு சரத்துக்க கட்டின மாதிரியான ஒரு நிலையை தமிழ் மக்கள் ஏற்படுத்திக் கொள்ளப்போகிறார்களா? என்பது 27ம் திகதி அதிகாலை தெரிந்துவிடும்.


இந்த அவதியுறும் நிலைக்கு தமிழர்களையும் தள்ளிவிடுவதில் கூத்தமைப்பு மட்டும் ஈடுபட்டிருக்கவில்லை. செய்திகளை தருவதாகக் கூறிக்கொள்ளும் ஊடகங்களும் குறிப்பாக தமிழ் ஊடகங்களும் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன. இவை தருகின்ற செய்திகளின் தன்மையை வைத்துக்கொண்டு இந்த முடிவுக்கு வரமுடியும். பத்து செய்திகளில் ஜெனரல் பொன்சேகாவின் செய்தி எட்டு என்றால் மிகுதி இரண்டுதான் ஜனாதிபதி மகிந்தவின் செய்தியாக இருக்கும்.

அதுவும் ஜெனரல் பொன்சேகாவின் வாக்குறுதிகள்தான் பிரதான செய்தியாகின்றன. ஜனாதிபதி மகிந்த பக்கத்து செய்தி என்பது தேர்தல் வன்முறையை பிரதானப்படுத்தியதாக இருக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்: தமிழர்களைப் பொறுத்தவரை ஜெனரல் பொன்சேகா வழங்கிவரும் வாக்குறுதிகள் வாயுறவைப்பவை. இவற்றில் மிகப் பிரதானமானவற்றை ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றிவருகின்றது.

உதாரணமாக வடபகுதியிலுள்ள உயர் பாதுகாப்பு வலையங்களுக்குள் மக்களை குடியமர அனுமதித்தது. மீன்பிடி தடை நீக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - கொழும்பு நெடுஞ்சாலை திறந்துவிடப்பட்டுள்ளது. மிகப் பிரதானமாக சரணடைந்த புலி உறுப்பினார்களில் பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சிங்கள, முஸ்லீம் மற்றும் தமிழ் மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கூத்தமைப்பு வகையறாக்களும் அதன் ஊதுகுழல்களும் இதை விரும்பவில்லை. யுத்தத்தை வைத்துப் பிழைப்பு நடத்திவந்தவர்கள், இப்போது 'படம்' காட்டி பிழைப்பு நடத்துவதற்கு துடிக்கிறார்கள். இயல்பான வாழ்நிலைக்கு மக்கள் திரும்பிவிட்டால் இவர்களுடைய 'பருப்பு' வேகாது, எனவே 'அவருடன் (ஜெனரல்) கதைத்தில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டிருக்கிறது. அவர் வந்தால் அப்படிச் செய்வார், இப்படிச் செய்வார்' (ஈரடி இயல்பல்ல இந்த வாக்கியம்!) என்று கதையளந்துகொண்டிருக்கிறது. இவர்களுக்கு திரைமறைவில் படியளந்ததினால்தான் ஜெனரலுக்கு ஆதாரவாக வெளிக்கிட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் இந்த தமிழ் ஊது குழல்கள் கண்டுகொள்ளாது!

'இயல்பு' என்பது இவர்களுக்கு ஜென்மத்துப் பகை. மக்களை இயல்பான நிலையில் வாழவிட்டால் பிழைப்பில மண்ணள்ளிப்போடுவதற்கு சமன். புலிகளும் அதனையே முள்ளிவாய்க்கால்வரை தொடர்ந்தார்கள். தொட்டகுறை விட்டகுறையை கூத்தமைப்பு தலைமைதாங்கி முன்செல்ல பெரும்பாலான தமிழ் ஊதுகுழல்கள் சங்கூதியபடியே பின்செல்கின்றது.

எனவே மக்கள் வரலாற்றை தவறவிடக்கூடாது. சரியான முடிவை பிழையான நேரத்திலும் பிழையான முடிவை சரியான நேரத்திலும் எடுத்து வருந்துவதிலும் பார்க்க சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்தால்தான் நேர்மையான திசைவழி பயணிக்க முடியும்.

சாத்தியமே
வாழ்வதற்கு
பொருள் வேண்டும்
ஆனால்........
வாழ்வதிலும்
பொருள் வேண்டாமா?

தீய
குறிக்கோள்கள் எல்லாம்
கொள்கைகளாகிவிடாது
ஜனனமும்
மரணமும்
ஒரு முறை தான்
சோதனைகளே
கேள்விக்குறியாகி.......

வாழ்க்கையாகி
விட்டாலும் - நீங்கள்
முயற்சித்தால்
சாதனையும்
சாத்தியமே.......

(தொகுப்பு:- மங்களம்)

எனவே தமிழ் மக்கள் தமக்குக் சொல்லப்படும் செய்திகளைவிட சொல்லப்படாத செய்திகளை, நாட்டு நடப்புக்களையும் அறிந்துகொண்டு சாதனையை சாத்தியமாக்க வேண்டும்.

No comments: