Friday, 7 May 2010

முக்காலமும் மூழ்கிக் குளித்தாலும் காகம் வெள்ளையாகுமா?

சதா.ஜீ.

புலன் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் ‘நாடு கடந்த தமிழீழ அரசி’ன் நோக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பது. இரண்டு புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பதுதான் அந்த இரண்டும். நாடுகடந்த அரசுக்கான தேர்தலுக்கே லொத்தர் குலுக்கியவர்கள், நாடு கடந்த அரசாங்கத்தை ‘ரன்’ பண்ணுவதற்கு எதைப்போட்டுக் குலுக்குவார்கள்? என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். தேர்தலன்று பல சுவையான சம்பவங்கள் அந்தந்த நாடுகளில் நடந்திருக்கின்றன. குறிப்பாக கைகலப்புகள், வாக்குப்பெட்டியை கடத்தல், குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்கும்படி கோரி கண்காணித்தல் என்று பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. லண்டன் நகரில் நடைபெற்ற வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து வாக்குப்பெட்டி களவாடப்பட்டிருக்கிறது. கனடாவில் நடைபெற்ற வாக்கெடுப்பு நிலையமொன்றில் போட்டியிடும் 5வேட்பாளர்களும் அங்கு வாக்களிக்க வந்தவர்களிடம் எனக்கு வாக்களியுங்கள் உனக்கு வாக்களியுங்கள் என்று கதைக்கத் தொடங்கி கைகலப்பில் முடிந்தது. இதைக் கேள்விப்பட்ட பலரும் வாக்கெடுப்பு நிலையப்பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை.

கனடா மத்தியில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தெரிவாகியிருக்கிறார்கள். அங்கு பிரசன்னமான 5 வேட்பாளர்களும் தமக்குப் போடும்படி கோர வாக்களிப்பதற்காக வந்தவர்களும் வஞ்சனையில்லாமல் 5பேருக்கும் புள்ளடி போட்டிருக்கிறார்கள் இது எப்படியிருக்கு? “கைகொட்டிச் சிரிப்பார்கள்.. ஊரார் சிரிப்பார்கள்..”

இதைச் சொன்னாலும் வெட்கமடா! சொல்லாட்டாலும் வெட்கமடா என்பதுபோல தமிழ் இனவாத ஊடகங்கள் நாசூக்காக அவிப்பிராயங்களை வெளியிடுகின்றன. இந்த முறை ‘ஜனநாயகம்’ சரியாகப் பேணப்படவில்லை. அடுத்த முறை ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கின்றன. ஆக மீள் வாக்களிப்பு நடைபெறலாம். மீள் லொத்தர் இழுக்கப்படலாம்!

சிங்கள அரசாங்கங்கள் செய்த அத்தனை ஜனநாய அத்துமீறல்களுக்கும் சற்றும் சளைக்காமல் புலன் பெயர்ந்தவர்களின் தேர்தலும் நடைபெற்றிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில் முடிவுகள் உத்தியோகப+ர்வமாக அறிவிக்கப்படவில்லை. வாக்காளரை தெரிவு செய்தாகி விட்டது. அடுத்தது என்ன? எங்களுடைய புலனும் பெயர்ந்துள்ளதால் அடுத்து என்ன ‘கமாடி’ வரும் என்ற ஆவலில் இருக்கிறோம். அதுபோக இது ஜனாதிபதி முறையிலான ஆட்சியா? அல்லது பிரதமர் முறையிலான ஆட்சியா? ஜனாதிபதியை அல்லது பிரதமரை எவ்வாறு தெரிவுசெய்வது போன்ற கலக்கத்தில் புலன்பெயர் மக்கள் தவிக்கிறார்கள்.

புலன்பெயர்ந்த தமிழர்களின் இந்த ஜனநாயக ரீதியான போட்டத்தை சர்வதேசம் மதிப்பளிக்க வேண்டும் என்று வின்சன் பல்கலைக் கழக பேராசிரியர், கவிஞர், ‘சரிநிகர்’ ஆசிரியர், பெண் உடல்மீது தீராக் காமம் கொண்ட முத்தமிழ் மன்னர்களில் ஒரு மன்னனுடைய பெயருடைய மன்னன் அறிவிக்கிறார். இவர் ‘நாடுகடந்த தமிழீழ அரசு’க்கான பத்திரிகையாளர் மகாநாடு மற்றும் கொள்கை விளக்கங்களை வழங்கி வருகிறார். இவர் தமிழை ஆராச்சி செய்வதாக சொல்லிக் கொண்டு கொழும்புக்கும் கனடாவுக்கும் பறந்து பறந்து திரிந்தவர் இப்போ ‘நாடு கடந்தது’க்காக ஐரோப்பா எங்கும் பறந்து திரிகிறார்.

மேலத்தேய நாடுகளில் அதுவும் கனடாவில் சும்மா இருந்து வாழ்கையை ஓட்டுவது மற்றும் கழியாட்டம், பெயர், புகழோடு வாழ வேண்டும் என்றால் ஒரேஒரு வழிதான் இருக்கிறது. மற்றவர்களை ஏமாற்றிப் பிழைப்பது. அது புலிகளுக்கு கைவந்த கலை. அந்த கலையின் சாரத்தை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே அள்ளிக்கொள்வது எல்லோராலும் முடியுமான காரியமல்ல. அது மேலே குறிப்பிட்ட சில பச்சோந்திகளால் மட்டுமே முடியும்.

‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்பதே ஒரு பேய்காட்டு! அந்த பேய்காட்டுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அதவிடப் பேய்காட்டுகள்! இந்த பேய்காட்டுகளுக்கெல்லாம் பேய்காட்டு காட்டுபவன் மகா பேய்காட்டுக்காறன்! அவன் எப்படிப்பட்டவன் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? வற்றிய நதிகளெல்லாம் வற்றாத நதியப்பாத்து ஆறுதலடையும். அந்த நதியே காஞ்சுபோச்சுதென்டால்..! மக்கள் ஆண்டவனிடத்தில் ஆறுதலடைவார்கள். அந்த ஆண்டவனே கலங்கி நின்றால்..! சூசூசூ…. இப்பவே கண்ணைக்கட்டுதே!

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதிருந்தாலே மகா புண்ணியம் என்பது நமமனுபவிக்கும் அன்றாடங்காட்சி. இவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசு என்பதை தூக்கிப் பிடிக்க ‘புலிகளின் புதிய இராணுவப் பிரிவொன்ற அமைக்கப்படு’வதாக இலங்கையின் பிரதமர் கூறுகிறார். இதெல்லாம் தேவைதான்? சரணடைந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு ப+ர்த்தியாகி இந்தா அந்தா விடுதலை செய்யப்படுவார்கள் என்றிருந்த நிலைமை தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது இந்த புண்ணியவால்களால்!

நெல்லியடி, பருத்தித்துறை பிரதான வீதியில் முன்னாள் புலிகளின் நிதி வசூலிப்பாளர் ஒருவர் இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டிருக்கிறார். இது ஒன்று போதும் சிங்களவனுக்கு வயித்தைக் கலக்க. தமிழ் இனவாத ஊடகங்கள் தங்களது வாயையும் –த்தையும் பொத்திக் கொள்வதைப் பாத்தால் நமக்கு வயித்த கலக்குது!

சனத்துக்கே தெரியும் இந்த பத்திரிகைக்காரனுக்கா தெரியாது? ஆனால் திரும்பவும் விட்ட இடத்துக்கே வந்து, ‘இனம்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்’ என்று பத்திரிகைகள் எழுதத் தொடங்கினால் தமிழர்களின் தலையெழுத்தை யாரால் தான் மாற்ற முடியும்? சமூகப் பொறுப்புக்களற்ற இந்த சத்திராதிகள் தமிழர்களின் ‘தேசியம் – சுயநிர்ணயம் – தன்னாட்சி’ பற்றி வாய்கிளியக் கத்துகிறார்கள். கத்திக் கத்தியே மாரித் தவளைகள் மாதிரி சாகமாட்டார்கள் மற்றவர்களைதான் சாகடிப்பார்கள்! அதுசரி.. இவர்களெல்லாம் கண்ணை மூட நித்திரை வருதுதானே!!!!!!

No comments: