Monday 5 May 2008

diaspora opinion on eastern elections and Muslim - Tamil relations

,yq;if fpof;F khfhzrigj; Njh;jy; njhlh;ghfTk; fpof;F khfhz K];yPk; -jkpo; kf;fspd; cwTfs; njhlh;ghfTk; Gyk;ngah;e;Njhh; fUj;Jf;fs; Njrk; new;wpy; ntspahfpapUe;jJ. mjid rfrk;thjh jdJ jsj;jpYk; ntspapLtjd; %yk; fUj;Jf;fs; kw;Wk; mf;fUj;Jf;fs; njhlh;gpyhd fye;Jiuahly; gug;Gfs; tphptilAk; vd;W ek;GfpwJ.


எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நீண்ட காலம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த மீட்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு விடிவாக அமையப் போகிறது என அரசாங்கம் முழங்குகிறது. ஆனால் இத்தேர்தல் நீதியும் நியாயமானதுமாக இடம்பெறுமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. வரலாற்று முக்கியத்துவமிக்க இத் தேர்தலை சர்வதேச சமூகமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வசிப்போர் இத்தேர்தலை எந்தக் கண்னோட்டத்தில் நோக்குகின்றனர் என்பதை அறிய லன்டனில் வசிக்கும் சில புத்திஜீவிகளுடன் எங்கள் தேசம் அலசியது. - உரையாடியவர்: பருர் அலி

Naja Mohamadதமிழ் - முஸ்லிம் உறவைக் கட்டியயழுப்ப இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் - நஜா முஹம்மத் _ தலைவர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய போரம், லண்டன் :
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உண்மையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு தேர்தலா அல்லது அரசாங்கம் தனது பேரினவாதத் திட்டங்கச் சிறு பான்மையினருக்கு சொந்தமான கிழக்கு மாகாணத்தில் செயற்படுத்த எத்தனிக்கும் திட்டமா என்ற ஐயப்பாடுகள் இங்கு நிலவுகின்றன.

பல்வேறு வகையிலும் ஒடுக்கப்பட்டு இருக்கின்ற கிழக்கு வாழ் மக்களுக்கு ஜனநாயகமும் நீதியுமிக்க தீர்வைப் பெற்றுக்கொடுக்கத் தேர்தலே வழிவகுக்கும் என்பது உண்மை. ஆனால் இத்தேர்தல் இந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா என்பதுதான் இன்றுள்ள கேள்வியாகும். ஆனாலும் மக்களுக்கான சுதந்திரத்தை வழங்க அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்தேர்தலை வரவேற்பதே சிறந்தது எனக் கருதுகின்றேன்.

இந்தத் தேர்தல் தமிழ் முஸ்லிம் உறவில் ஆரோக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும். ஏனென்றால் கிழக்கு மாகாணம் குறிப்பாக ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானது என யாரும் நூறுவீத உரிமை கோர முடியாது. அது முஸ்லிம் - தமிழ் - சிங்களம் ஆகிய மூவின மக்களும் ஏறத்தாழ சரிசமமாக வாழ்கின்ற ஒரு மாகாணமாகும். எனவே இங்கு இன முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு எந்தவொரு சமூகமும் மகிழ்வுடன் வாழ முடியாது. குறிப்பாக கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் சூழலே காணப்படுகின்றது. எனவே இவ்விரு இனங்களுக்கிடையேயான பரஸ்பர புரிந்துணர்வு சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்ற போது மாத்திரமே பொருளாதார அரசியல் ரீதியிலான நன்மைகளை இரு சமூகமும் அடைந்து கொள்ள முடியும்.

பேரினவாதத்தின் சதித் திட்டங்களில் தமிழ் - முஸ்லிம் மக்கள் சிக்கிக் கொள்ளாமல் புரிந்துணர்வுடன் பரஸ்பரம் ஒற்றுமைப்பட்டு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கை அபிவிருத்தி செய்ய இத்தேர்தலை பயன்படுத்த வேண்டும். இதற்கு வழிகோலும் சுதந்திரத் தேர்தலாக இது அமையுமா என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க இவ்வாறான சமூக சிந்தனையும் தூர நோக்கும் கொண்ட அரசியல் தலைமைகள் கிழக்கில் உள்ளனவா என்பதும் கேள்விக்குறியே.

இருந்த போதிலும் இந்த சவாலுக்கு மத்தியில் தமிழ் - முஸ்லிம் உறவைக் கட்டி எழுப்புவதில் அரசியல் தலைமைகளும் சிவில் அமைப்புகளும் மும்முரமாக ஈடுபட வேண்டும். இத்தேர்தலை மறுப்பதாலோ பகிஷ்கரிப்பதாலோ ஜனநாயக நீரோட்டத்திற்கு வரமுடியாது. ஜனநாயகப் பாதையின் ஆரம்பப் புள்ளியாக இத்தேர்தலைக் கணிக்க வேண்டும். ஏனென்றால் கிழக்கு ஜனநாயகத்தை ஏற்படுத்த இதைத் தவிர வேறு ஒரு வழி அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

Sivlingam Vகிழக்கு மாகாண சபை பிரதேச மக்களின் சுய தீர்மானத்தில் செயற்படுமா ? - சிவலிங்கம் _ அரசியல் ஆய்வாளர். லண்டன் :
இலங்கையில் மூன்று இனங்களும் ஏறத் தாழ சமமாக வாழும் பிரதேசம் கிழக்கு மாகாணமாகும். இப்பிரதேசத்தின் அரசியலும் அபிவிருத்தியும் இத்தேர்தலின் விளைவுகளில் பெரிதும் தங்கியுள்ளது. இலங்கையின் இன அரசியலின் கொடூரங்களின் சாட்சியமாக உள்ள இப்பிராந்தியம் அடிப்படையான பல மாற்றங்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகால அரசியலில் தமிழ்ப் பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் சக்திகளின் தீர்க்கதரிசனமற்ற அரசியல் போக்குகளால் அங்கு அரசியல் மட்டுமல்ல பிரதேச பொருளாதாரமும் சீர்குலைந்தது. குறிப்பாக கடந்த 25 அண்டு கால ஆயுத வன்முறையானது அரசியல் பொருளாதாரம் என்பவற்றை மட்டுமல்ல சுமுகமாக நிலவி வந்த சமூக உறவுகளையும் சீரழித்துள்ளது. இந் நிலையிலிருந்து இப்பிரதேசம் மீளவேண்டுமெனில் இப்போர்க் கலாசாரத்தில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டும்.

அரசியல் சமூக பொருளாதார சீரழிவிலிருந்து மீள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இத்தேர்தல் நோக்கப்பட வேண்டும். சிதைக்கப்பட்டுள்ள இப்பிரதேசம் புனர்நிருமாணம் செய்யப்பட வேண்டுமெனில் பழைமையான அரசியல் சித்தாந்தங்கள் தூக்கி எறியப்பட வேண்டும். இனங்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் பண்ணும் போக்கை முற்றாக நிராகரிக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தின் பெயராலும்ள நாட்டுப் பிரிவினையின் பெயராலும்ள இனவாத அரசியலின் பெயராலும் அரசியல் பண்ணியதன் விளைவுக ளையே நாம் இன்றும் அனுபவிக்கிறோம். இதனால்தான் எமது தாயகம் அமைதி இழந்து அவஸ்தைப்படுகிறது.

இத் தேர்தலில் இனவாத சக்திகளின் சூழ்ச்சி அரசியலிற்கு மக்கள் இரையாக அனுமதிக்கக் கூடாது. புலிகள் துரத்தியடிக்கப்பட்டதால் கிழக்கு மக்களுக்கு சுதந்திரக் காற்றை வழங்கியதாக ஒரு சாரார் கூறலாம். கிழக்கிற்குத் தனி நிருவாகம் கிடைக்க வாய்ப்பை வழங்கியதாக இன்னொரு சாரார் கூறலாம். முஸ்லிம் முதலமைச்சர் வந்தால் அல்லது தமிழ் முதலமைச்சர் வந்தால் அப்பிரதேசத்தில் பாலும் தேனும் ஓடும் என மறு சாரார் உரக்க உரைக் கலாம். ஆனால் இவர்கள் எவருமே அப்பிரதேச மக்களின் மீது பாசம் கொண்டோ அல்லது பரிவு கொண்டோ பேசவில்லை. அம்மக்களின் மீது தமது அதிகார வெறியைத் திணிப்பதற்காகவே பேசுகின்றனர்.

உண்மையிலேயே இவர்கள் அப்பிரதேச மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களாயின் இனங்களின் பெயராலும் மொழியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களை ஏன் கூறுபோட வேண்டும்? அவ்வாறான அரசியலை ஏன் பேச வேண்டும்? ஆயுத வன்முறையாலும் சுனாமியாலும் மற்றும் பல இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள இப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனில் அதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் அப்பிரதேச மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

இத்தேர்தல் மூலம் அப்பிரதேச மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்வு செய்யலாம். ஆனால் உண்மையான அதிகாரம் அப்பிரதி நிதிகளின் கையில் ஒப்படைக்கப்படுமா? தேர்தலை வைப்பதன் மூலம் ஜனநாயக உரிமை கிட்டிவிடப் போவதில்லை. அப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் அதிகாரம் ஜனாதிபதியின் கையில் குவிக்கப்பட்டடு இருக்கிறது. மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படுமா? கிழக்கு மாகாண சபை அப்பிரதேச மக்களின் சுய தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படுமா?

இதுவே வாக்காளர் முன்னுள்ள கேள்வியாகும். அரசாங்கத்தின் கூட்டணியாகவும் எதிர்க்கட்சிக் கூட்டணியாகவும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் கிழக்கு மாகாண சபையின் சுய அதிகாரம் குறித்து எவ்வாறான அபிப்பிராயம் கொண்டுள்ளார்கள்? இதுவரை அவை பற்றி மௌனமாக இருப்பதன் அர்த்தமென்ன? தேர்தலில் போட்டியிடுவது மக்கள் வாக்களிப்பது தேர்வு செய்யப்படுவது இவை மட்டும் ஜனநாயகம் அல்ல உண்மையான அதிகாரம் யார் கையில்?

மூவின மக்களின் எதிர்காலம் இதற்கான பதிலில்தான் தங்கியுள்ளது.

Nithirajah Drஜனநாயகம் சுதந்திரத்தின் மீது கட்டி எழுப்பப்பட வேண்டும் - நீதிராஜா _ சமூக சேவை ஆர்வலர், லண்டன் :
பொதுசனம் யாருடைய கட்டுப்படுத்தலும் அடக்குமுறையும் இன்றி சுதந்திரமாக தமது பிரதிநிதியைத் தெரிவு செய்வதே தேர்தலாகும். ஆனால் தற்போது கிழக்கில் நடைபெறவிருக்கும் தேர்தல் இந்த சுதந்திரத்தின் பின்னணியில்தான் நடைபெறப் போகிறதா என்ற கேள்வி எனக்கு உண்டு. நான் 2002 ஆம் ஆண்டுவரை இலங்கையில் வசித்தவன். எனது அனுபவத்தின்படி அங்கு எந்தத் தேர்தலும் சுதந்திரமாக நடைபெறுவதில்லை.

கிழக்கிலுள்ள மக்கள், விடுதலைப் புலிகளினதும் அரசாங்கத்தினதும் ஏனைய ஆயுதக் குழுக்களினதும் அடக்குமுறையின் கீழ் நீண்டகாலமாக இருந்து வருகின்றனர். கிழக்கு மீட்கப்பட்டு அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு உள்ளதாக இலங்கை அரசாங்கம் சொல்லிக் கொண்டாலும் கூட இன்னும் அடக்குமுறையின் கPழேயே அங்குள்ள மக்கள் உள்ளனர்.

எனவே கிழக்கில் நடைபெறவிருக்கும் தேர்தல் ஒரு ஜனநாயகத் தேர்தலாக இருக்க முடியாது. மக்கள் தாம் விரும்பும் தமக்கு சேவையாற்றும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுமளவு சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதேவேளை சமூக சேவையாளர்கள் நல்ல மனிதர்கள் களத்தில் இறங்கி வேலைசெய்யுமளவு சுதந்திரம் அங்கு இல்லை. இருக்கின்ற வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிப்போம் என பொதுசனம் சிந்திக்குமே தவிர, அவர்கள் விரும்பும் சேவையாளர்கள் களத்தில் இல்லை. அப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் சமூகத்தில் நன்மதிப்புப் பெற்றவர்கள் அச்சுறுத்தல் காரணமாக பின்வாங்குகின்றனர் என்பதே யதார்த்தம். எனவே இந்த நிலைமை மாற்றப்பட்டு இது முற்று முழுதான ஜனநாயகத்தின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும். நடைபெறவிருக்கும் இத்தேர்தல் அந்த ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவருமா என்று எனக்குத் தெரியாது. அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜனநாயகம் என்பது அரைவாசி முக்கால்வாசி என்ற கணக்கில் இருக்க முடியாது. அது நூறுவீத சுதந்திரத்தில் கட்டியயழுப்பப்படல் வேண்டும். தாம் விடுவித்து விட்டதாக அரசாங்கம் கூறும் கிழக்கில் இந்த முழுமையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும்.

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் எமக்கு ஆட் சேபணையில்லை. ஆனால் மக்களின் ஜனநாயக சுதந்திரத்துடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர் பார்ப்பு. மறுபுறம் இத்தேர்தல் தவறான முறையில் நடைபெறுமாக இருந்தால் அது இலங்கை அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

ஒவ்வொருவரும் தத்தமது சமூகத்துக்காக குரல் கொடுக்கலாம். அது அவர்களது சுதந்திரம். ஆனால் அதன்பேரில் சமூக நல்லுறவுக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இன முரண்பாட்டை வளர்த்துத்தான் சமூகத்துக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே எப்போது சமூகத்துக்கான முழு பாதுகாப்பும் சுதந்திரமும் கிடைக்கிறதோ அப்போது அச்சமூகத்தில் நலன்விரும்பிகளும் சமூகத் தொண்டர்களும் சமூகத்துக்காக வேலை செய்ய முன்வருவார்கள். அவர்களைத் தெரிவுசெய்ய மக்கள் முன் வாருங்கள். மாறாக நூறுவீத ஜனநாயக சுதந்திரம் இல்லாதபோது இந்தத் தேர்தல் பாதகமாகவே அமையும் என்ற சந்தேகம் எம் மத்தியில் உள்ளது.

Nirmala Rajasingamகிழக்கில் ஜனநாயகத்தை அமுல்படுத்துவது அரசின் கடமையும் பொறுப்புமாகும் - நிர்மலா ராஜசிங்கம் _ இலங்கை ஜனநாயக அமைப்பின் பிரதிநிதி, லண்டன் :
தேசியவாத அரசியல் அலைகளாலும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளினாலும் கடந்த காலங்களில் கிழக்கிலங்கை தமிழ் - முஸ்லிம் உறவில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டியதன் தேவை வலியுறுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் தமிழ் - முஸ்லிம் உறவைப் பலப்படுத்துவதற்கான முயற்சியாக இந்தத் தேர்தல் அமையுமாயின் அது ஆரோக்கியமானது. ஆனால் எங்களது பார்வையில் இந்தத் தேர்தல் அப்படியான ஆரோக்கியத்தை நோக்கிய முன்னெடுப்பாகத் தெரி யவில்லை.

வழமையாக இலங்கையின் அனைத்துத் தேர்தல்களுமே வன்முறைகளை மையப்படுத்தியதாகவே நடைபெற்றுள்ளமை வரலாறு. ஆனாலும் நடைபெறவிருக்கும் இத்தேர்தல் முன்னெப்போதையும்விட வன்முறைமிக்கதாக நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு எங்கள் மத்தியில் உள்ளது.

இத்தேர்தல் தமிழ் - முஸ்லிம் உறவின் விரிசலை இன்னும் கூர்மைப்படுத்துமாக இருந்தால் அது இனப்பிரச்சினைக்கான தீர்வை இன்னும் தூரப்படுத்தும். எனவே இத் தேர்தலில் நடைபெறும் வன்முறைகளை சாதாரண வன்முறைகள் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

கிழக்கில் ஆயுதக் குழுக்களின் பிடி வேரூன்றி இருக்கின்ற இத்தருணத்தில் அங்கு நடை பெறும் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டு வந்துவிடுமா அல்லது ஆயுதக் குழுக்களின் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்து விடுமா என்ற சந்தேகத்துடன் கூடிய அச்ச நிலைமை எங்கள் மத்தியில் உள்ளது.

இதுவரை காலமும் வீட்டை விட்டு வெளியேறக் கூட சுதந்திரமில்லாமல் இருந்த மக்கள் வெளியில் வந்து வாக்களிக்கும் நிலை நல்ல சமிக்ஞைதான். ஆனால் இது நிலையான சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் வழிவகுக்குமா என்பதுதான் கேள்விக்குறி. கிழக்கில் நடைபெறவிருக்கும் இத்தேர்தலை சர்வதேச சமூகம் மிக உன்னிப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறது. எனவே இத்தேர்தலின் முடிவு இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் கவனத்தை அதிகரிக்கச் செய்யும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் - சிங்கள - முஸ்லிமாகிய மூவின மக்கள் மத்தியிலான கருத்தாடல்கள் முன்னெடுக்கப் படாத ஒரு சூழ்நிலையிலேயே இநத்த தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. எனவே இத் தேர்தல் அம்மக்களின் சுதந்திரத்துக்கான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு முன்னெடுப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நடைபெறவிருக்கும் தேர்தல் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெறப்படுமாக இருந்தால் கிழக்கு மாகாணம் முழு உலகுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழும். ஆனால் இதற்கு மாறாக அத்தேர்தல் இன்னும் இனமுரண்பாட்டைக் கூர்மைப்படுத்திவிடுமோ என்ற சந்தேக நிலைமையையே நாம் உணர்கிறோம்.

No comments: