தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
பகிரங்க வேண்டுகோள்!
- தமிழ் சமாதான ஓன்றியம்
தமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமஷ்டி ரீதியிலான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வது எமது உரிமைப் போராட்டத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வாகும். சமஷ்டி முறையிலான தீர்வினை ஏற்றுக் கொள்வது எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு தீங்கிழைப்பதல்ல. அத்தகைய தீர்வினை அடைவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய அளவில் உதவ முடியும். எனவே சமஷ்டி முறையிலான தீர்வினை விரைவில் சாத்தியமாக்கவும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம விரைவில் சுபீட்சம் அடைவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காத்திரமான பங்களிப்பினைக் கோரும் இவ் வேண்டுகோளை சமாதானத்தை விரும்பும் மக்கள் சார்பாக முன் வைக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை எற்று தமிழ் பேசும் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களை தியாகங்களை மனதில் கொண்டு செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம். தமிழ் பேசும் மக்களின் வாழ்வை உத்தரவாதம் செய்யும் இவ்வேண்டுகோளை அக்கறையுடன் பரிசீலிக்குமாறு நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற கோஷத்தை முன்வைத்து பாரிய அர்ப்பணிப்புக்களை செய்யும்படி கேட்டுக் கொண்டீர்கள் என்பதால் சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக் கொள்வது எவ்வகையிலும் அவர்களின் தியாகங்களை அர்தமில்லாததாக மாற்றிவிடாது. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் செய்யப்பட்ட அனைத்து அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் தமிழ்மக்களின் உரிமையை பெற்றுக் கொடுத்தனவாக அமையும். தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பெற்று கௌரவுத்துடன் சமத்துவமாகவும் சமாதானமாகவும் வாழ்வதை உறுதி செய்வதே இலட்சியமாக இருப்பின் அதனை உறுதி செய்யும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நடைமுறையாக்க உதவுவது எப்படித் தவறாக முடியும்? பாலஸ்தீன விடுதலை இயக்கம் முன்னர் இஸ்ரேலின் இருப்பை நிராகரித்து சபதம் செய்து இன்று அதனை அங்கீகரித்து வாழ முற்படுவதால் பாலஸ்தீன மக்களின் நலனுக்கு குந்தகமாக செயல்பட்டவர்களாக மாட்டார்கள்.
சிங்கள பௌத்த பேரினவாத சத்திகள் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான உரிமை கிடைப்பதற்கு எதிராக செயல்படுவார்கள் என்பதில் ஜயமில்லை. பெரும்பான்மை இனமக்களிடையே உள்ள தமிழர்களுக்கு நியாயமான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக சத்திகளை வலிமைப்படுத்துவதன் மூலமே அவர்களைப் பலவீனப்படுத்த முடியும். இன்று தென்னிலங்கையில் பேரினவாத சத்திகள் சிறிய தொகையினராகவே உள்ளனர். அப்படியிருந்தும் அவர்கள் எதிர்ப்புகளையும் மீறி தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான உரிமை கிடைப்பதற்கு பாரிய இழப்புகளையும் துயரங்களையும் அடைய வேண்டியுள்ளது. இனிவரும் காலங்களில் பேரினவாத சத்திகள் பெரும்பான்மை அரச அதிகாரம் கொண்டவர்களாக மாறினால் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவது மேலும் கடினமானதாகும். எனவே இன்றுள்ள சூழ்நிலைகளை சாதகமானவையாகக் கருதி தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்கும் சமஷ்டி முறையிலான தீர்வினைப் பெற முயல்வது அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.
இப்பொழுதும் சமஷ்டி முறையிலான தீர்வு ஏற்படுவது மிகவும் சாத்தியமானதே. இதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் காத்திரமான பங்களிப்பு மட்டுமே விரைவில் நடைமுறைப்படுத்த முடியம். சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக் கொள்ளும் தெளிவான மனப்பூர்வமான பகிரங்கமான அறிக்கையினை வெளியிடுவதன் மூலம் அவர்களால் இதற்கான பாதையை திறந்துவிட முடியும். சமஷ்டி முறையிலான தீர்வு முன்வைக்கப்படுமாக இருந்தால் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவர பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கள மக்களுக்கு பகிரங்கமாக தெளிவாக தெரிவிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தகைய துணிச்சல் மிக்க நடவடிக்கை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக துரிதப்படுத்தும். போரினை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் அழிவை அவலங்களை தடுக்க உதவும். நல்லெண்ணம் கொண்ட மக்களுக்கு உந்து சக்தியாக அமையும்.
தமிழ் பேசும் மக்கள் மேலும் மேலும் படுகொலை செய்யப்படுவதை நிறுத்தவும் இதுவரை கால தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் வீண் போகாமல் இருக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் துணிவுடன் இத்தகைய அறிக்கையை வெளிவிட வேண்டுமென்று சமாதானத்தை விரும்பும் மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர். சமஷ்டி முறையிலான தீர்வை முன்வைப்பின் ஆயுத போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முடிவுக்கு கொண்டு வர பூரண ஆதரவு அளிப்போம் என்ற அறிவிப்பு சாதிக்கக் கூடிய மாற்றங்கள் எதனையும் எத்தகைய ஆயுத நடவடிக்கையும் சாதிக்க முடியாது. இலங்கை அரச படையினரால் தமிழ்பேசும் மக்கள் மேலும் துன்புறுத்தப் படுவதையே ஏனைய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நீடிக்கும்.
உங்கள் பங்களிப்பு முழுமையாக இருக்கும் பொழுது தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளை அனுபவிக்கக் கூடிய அதிகபட்ச அதிகார பரவலாக்கத்தை பெற்றுக் கொள்ளமுடியும என்ற உண்மையை அணைவரும் ஏற்றுக்கொள்வர். இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சத்திகளை மிகவும் பலவீனப்படுத்தப்படுவர். இது யுத்த நிறுத்தம் ஏற்படுவதை உத்தரவாதப் படுத்தும்.
தமிழ் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படாமையே தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறத் தவறியமைக்கான காரணமென தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளதனையும் கவனத்திற் கொண்டு செயல்படின் நியாயமான தீர்வினை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.
சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் சமஷ்டி ரீதியான தீர்விற்கு சாதகமான கருத்துக்களையே கொண்டுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சிங்கள மக்கள் அவர்களை அதனை வற்புறுத்தும் வகையிலும் அமையக் கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு அனைத்து உலக நாடுகளாலும் இந்திய அரசியல் தலைவர்களாலும் பல்வேறு அரசியல் நிபுணர்களாலும் பெரிதும் வரவேற்க்கப்படும். இவர்களும் அதற்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க முடியும். இலங்கை அரசிற்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுக்க முடியும். எனவே சமஷ்டி அடிப்படையிலான திர்வினை ஏற்று ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பூரண ஆதரவு வழங்குவதாக மனப்பூர்வமான அறிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகள் துணிவுடன் காலம் தாழ்த்தாது வெளிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். சமஷ்டி ரீதியான தீர்வினை விரைவில் நடைமுறைச் சாத்தியமாக்கும் வல்லமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உண்டு. சமாதானத்தை விரும்பும் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பான இக்கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்.
சமஷ்டி ரீதியான நியாயமான அதிகார பகிர்வினை எமது பாரம்பரிய பிரதேசங்களில் ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்வது எவ்வையிலும் சரியானதே. அதன் மூலம் தென்னிலங்கை எங்கும் பரந்து வாழும் மலையக மக்கள் முஸ்லிம் மக்கள் ஏனைய தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பெரும்பான்மை இன மக்களுடன் சமாதானமாக வாழ்வதற்கான பாரிய கடமையினையும் சரிவர புரிந்தவர்களாவோம். இலங்கையில் சமூக அமைப்புகளின் தன்மை மக்களின் பரவலாக்கம் வரலாறு என்பன சமஷ்டி ரீதியான தீர்வை வலியுறுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் பின் நிற்க்கக் கூடாது என்பதை தெளிவுறுத்தும். எமது இதுவரை கால அரசியல் போராட்டமும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது.
இவர்கள் யார் எமக்கு அறிவுரை கூறுவதற்கு? இவர்களுக்கத் தான் எல்லாம் விளங்கும் போலும்! ஏமக்கத் தெரியாதா என்ன செய்ய வேண்டுமென்று? இவர்கள் சொல்லி நாம் ஏன் செய்ய வேண்டும்? நாம் எத்தனை ஆயிரம் உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம் எமக்குச் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை? சமஷ்டி தான் வேன்டுமென்றால் நாம் எப்பொழுதோ எடுத்திருக்க முடியும் போன்ற பல கேள்விகள் உங்கள் மத்தியில் எழ நியாயமுண்டு. இன்றைய சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு பல்லாயிரம் தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடிய இத்தகைய அறிக்கையின் உடனடி அவசியத் தன்மை கருதி எமது கோரிக்கையை பரிசீலிப்பதை நிராகரிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இதனை முன்வைக்கிறோம்.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்தக் கூடிய இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி விரைவில் சமாதான சூழ்நிலைகளை தோற்றுவிக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் முடியும். தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளைக் பெறவும் சமாதானமும் போருக்கு முடிவும் ஏற்படுத்தவும் உங்கள் ஆக்க பூர்வமான பங்பளிப்பை வழங்குவீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். மிகவிரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் அண்டைய தமிழ் நாட்டு மக்களைப் போல் எமது மக்களும் முன்னேற துயரங்களிலும் அழிவகளிலும் இருந்கு விடுபட ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம். இதற்கு சார்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் மிகவும் துணிகரமான நடவடிக்கைகளாகவே கருதப்படும். சமஷ்டி ரீதியான தீர்வின் மூலம் விரைவில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை ஆதரித்து தெளிவான பகிரங்க அறிக்கையினை விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ் பேசும் மக்களின் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் அர்த்தமுள்ளவையாக அவர்களின் எதிர்காலம் விரைவில் நம்பிக்கையுள்ளதாக சுபீட்சமானதாக மாற எமது கோரிக்கையை அக்கறையுடன் பரிசீலிக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கிறோம்.
21/05/2008
Tamil Forum for Peace (TFP)
27
tamilforumforpeace@gmail.com
No comments:
Post a Comment