“இறந்துபோன குழந்தையை
அந்தப் பாலைமரத்தடியில் விதைத்து வந்தேன்
இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது.”
-தமிழ்நதி
ஈவ் தானியல் என்ற அந்தப் பிரஞ்சு நீதிபதி செல்வி. டயானாவின் மரணச் சான்றிதழை வரிவரியாகப் படித்து முடித்துவிட்டுச் சான்றிதழின் தலையில் பொறித்திருந்த சிங்க இலச்சினையை விரல்களால் வருடிப் பார்த்தான். பின்பு அந்த மரணச் சான்றிதழைத் தூக்கிப் பிடித்து ஒரு ‘லேசர்’ பார்வை பார்த்தான். சான்றிதழோடு விளையாடிக்கொண்டிருக்கும் நீதிபதியின் முகத்தைச் சலனமேயில்லாமல் அகதி வழக்காளி தே. பிரதீபன் பார்த்துக்கொண்டிருந்தான். மரணச் சான்றிதழை ஓரமாக வைத்த நீதிபதி தனது கொழுத்த முஞ்சியை விரல்களால் தேய்த்துவிட்டவாறே தே. பிரதீபனிடம் கீழ்வரும் கேள்விகளைக் கேட்கலானான் :
“டயானா மகேந்திரராஜாவிற்கு குண்டு விழுந்தபோது நீர் எங்கிருந்தீர்?”
“குண்டு வீச்சு விமானங்களின் சத்தத்தைக் கேட்டதுமே தூக்கத்திலிருந்து நாங்கள் விழித்துக்கொண்டோம். பள்ளிக்கூடத்தின் மேலே குண்டுகள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. வெடிச்சத்தம் கேட்டதும் முற்றத்தில் படுத்திருந்த நான் ஓடிப்போய் குடிசைக்குப் பின்னால் ஒரு பாலைமரத்தின் கீழே வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் இறங்கிவிட்டேன். குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்களும் ஒருவர் பின் ஒருவராகப் பதுங்கு குழிக்கு ஓடிவந்தார்கள். டயானா பதுங்கு குழிக்கு ஓடிவரும் வழியிலேயே அவள் மீது குண்டு விழுந்தது. அவளின் பிரேதம் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. பதுங்கு குழிக்கும் குடிசைக்கும் நடுவில் குண்டு விழுந்த இடத்தில் ஏற்பட்ட அரைக்கிணறு ஆழமுள்ள குழிக்குள் டயானா உடுத்திருந்த உடைகள் தூசி போலச் சிதறிக் கிடந்தன.”
இப்போது நீதிபதியின் கண்கள் சலனமேயில்லாமல் பிரதீபனைப் பார்த்தன. பின்பு நீதிபதியின் சன்னமான குரல் ஒளியைப் போல அந்த இடத்தில் பரவிற்று. “குண்டு வீச்சில் இறந்துபோன டயனா உமக்கு என்ன உறவு?”
பிரதீபன் மொழிபெயர்ப்பாளரின் முகத்தைப் பார்த்தான். மொழிபெயர்ப்பாளர் கேள்வியைத் தமிழில் சொல்லத் தொடங்கும்போதே பிரதீபனின் முகம் கறுக்கத் தொடங்கியது. அவனின் பார்வை இருளைப் போல அந்த அந்த இடத்தை நிரப்பிற்று. அவனின் மார்பு ஏறி இறங்கி அவனிலிருந்து பிரிந்த பெருமூச்சு அந்த விசாரணை மன்றத்தில் அமர்ந்திருந்த ஒவ்வொருவருக்கும் கேட்டிருக்கக்கூடும். குரல் நடுங்கிக் கிடக்க பிரதீபன் நீதிபதிக்குப் பதில் சொன்னான்:
“டயானா என்னுடைய மச்சாள், அல்லைப்பிட்டிப் படுகொலைகளுக்குப் பிறகு தீவிலிருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குப் போன நாங்கள் நல்லான்குளத்தில் அவளின் குடும்பத்துடனேயே தங்கியிருந்தோம்.”
“அன்று எத்தனை குண்டுகள் வீசப்பட்டன?”
“மூன்று குண்டுகள் வீசப்பட்டன. முதலாவது குண்டு கிராமத்தின் பாடசாலை மீதும் இரண்டாவது குண்டு அங்கிருந்து அரைக் கிலோமீற்றர் தூரத்திலிருந்த ஒரு குடியிருப்புப் பகுதியிலும் முன்றாவது குண்டு டயானா வீட்டின் மீதும் போடப்பட்டன.
“நல்லான் குளம் என்று இங்கே குறிப்பிடப்படும் கிராமத்துக்கும் கிளிநொச்சி நகரத்துக்கும் இடையே எவ்வளவு தூரமிருக்கும்?”
“அய்ந்து கிலோமீற்றர்கள் தூரமிருக்கும்.”
நீதிபதி கேள்விகள் கேட்பதை நிறுத்தி, குனிந்து எழுதிவிட்டு நிமிர்ந்தபோது அகதி வழக்காளி தே. பிரதீபனின் வழக்கறிஞர் “பிரபு! 21. 05. 2007 அன்று அந்தக் கிராமத்தில் இலங்கை வான்படையினரால் குண்டுகள் வீசப்பட்ட தமிழ்ச் செய்திப் பத்திரிகைக் குறிப்பும் அதன் பிரஞ்சு மொழிபெயர்ப்பும் தங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.
நீதிபதி தலையை அசைத்தவாறே அந்தப் பத்திரிகைக் குறிப்பையும் டயானாவின் மரணச் சான்றிதழையும் அருகருகே வைத்துப் பார்த்தான். மரணச் சான்றிதழின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த சிங்க இலச்சினையை அவனின் விரல்கள் வருடியவாறேயிருந்தன. முரட்டுக் காகிதத்தில் ஒரு ரூபா நாணயமளவுக்கு பொறிக்கப்பட்டிருந்த அந்த சிங்க இலச்சினையை விரல்களால் தடவிப் பார்க்கும்போது நீதிபதியின் விரல்கள் இலச்சினையில் உராய்வை அறியாமல் வழுக்கிப் போயின. போலிச் சான்றிதழ்களுக்கும் அசல் சான்றிதழ்களுக்குமுள்ள வேறுபாட்டை இலச்சினையை விரல்களால் வருடிப் பார்த்தே கண்டறியக்கூடிய அனுபவசாலியான நீதிபதி ஈவ் தானியல் அதுவொரு உண்மையான மரணச் சான்றிதழ் என்பதைக் கண்டுகொண்டான்.
தூரத்தில் அந்த ரீங்காரத்தைக் கேட்டதும் பிரசவ விடுதியின் கட்டில்களில் படுத்துக் கிடந்த பெண்கள் அனிச்சையில் புரண்டு விழுந்து கட்டில்களின் கீழே பதுங்கிக்கொண்டார்கள். அந்த ரீங்காரம் இரைச்சலாய் அவர்கள்மீது கவிந்தபோது அவர்கள் ஓலங்களை எழுப்பினார்கள். பிரசவ வலி பொறுக்காமல் அங்குமிங்கும் நடந்து திரிந்துகொண்டிருந்த இளம் பெண்ணொருத்தி அடி வயிற்றைக் கைகளால் ஏந்திப் பிடித்தவாறே ஓடிச்சென்று கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டாள். தாயின் படுக்கையினருகே நின்றிருந்து சிறுமி துஷ்யந்தி துள்ளிப் பாய்ந்து கட்டிலில் ஏறித் தாயாரை மூடியிருந்த கொசுவலைக்குள் தானும் நுழைந்து தன் கண்களை மூடிக்கொண்டாள். 150 கிலோ எடையுள்ள குண்டுகளிலிருந்து அந்தக் கொசுவலை தன்னைக் காப்பாற்றும் என துஷ்யந்தி நம்பியிருக்க வேண்டும்.
தென்திசை முகில்களுக்குள் மறைந்து வந்த விமானங்களிரண்டும் ஒரு கணத்தில் முகில்களில் சறுக்கிக் குத்திட்டு இறங்கி அதே கணத்தில் கூவிக்கொண்டே மூளாய் பிரசவ ஆஸ்பத்திரியின் மீது நெருப்புக் குண்டுகளை வீசியபோது பேரோசையுடன் ஆஸ்பத்திரியின் அலுவலக அறையும் சமையற்கூடமும் சிதறிப்போயின. வெடியின் அதிர்வில் பிரசவ வார்ட்டின் ஓடுகள் காகிதங்களாய் பறக்க பிரசவ வார்ட் கந்தகப் புகையால் நிரம்பிற்று. அப்போது டயானா பிறந்து தொண்ணூறு நிமிடங்கள் மட்டுமே ஆகியிருந்தன. அம்மா இன்னும் பிரசவ மயக்கம் தெளியாமல் வெள்ளத்தில் கரைந்த மண் சிலையாகப் படுக்கையிலேயே கிடந்தார்.
தாதியொருத்தி தள்ளிச் செல்லக்கூடிய ஒரு தொட்டிலுக்குள் டயானாவையும் இன்னும் மூன்று சிசுக்களையும் தூக்கிக் கிடத்தித் தொட்டிலை இழுத்துக்கொண்டு ஆஸ்பத்திரியின் பின் ஒழுங்கைக்குச் சென்று மொட்டையாயிருந்த பூவரசம் மரத்தின் கீழே தொட்டிலை நிறுத்திவிட்டு ஆகாயத்தைப் பார்த்தபோது ரீங்காரத்துடன் சுற்றிக்கொண்டிருந்த விமானங்கள் இரண்டும் முகில்களில் ஏறிப்போயின. தாதியின் முகத்தில் ஒரு மாசில்லாச் சிரிப்புத் தொற்றியது. டயானாவும் தன்னாரவாரம் சிரித்தது.
டயானாவுக்கு மூன்று வயதானபோது மழைக்கால இரவொன்றில் அவர்கள் ஊரிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. முழு யாழ்ப்பாணமும் கைதடிப் பாலத்தால் நடந்துகொண்டிருந்தது. டயானா சாக்குப் பை ஒன்றினால் முக்காடிடப்பட்டு அப்பாவின் தோளில் உட்கார்ந்திருந்தாள். அப்பாவுக்கு மகேந்திரராஜா என்று பெயர். அப்பாவை ‘மென்டல்’ மகேந்திரம் என்றுதான் ஊரில் கூப்பிட்டார்கள். அப்பா தனது குச்சிக் கால்களால் அடிமேல் அடிவைத்து நடந்துகொண்டிருந்தார். அம்மா தலையில் ஒரு மூட்டையும் கையிலொரு பையுமாக முன்னே நடந்தார். இருளைக் கிழித்துக்கொண்டு வானத்திலிருந்து வெளிச்சப் புள்ளிகள் விழலாயின. விமானத்திலிருந்து தேடுதல் விளக்குகள் சனங்களின் மீது போடப்பட்டன. சனங்கள் அந்த வெளிச்சத்தில் வன்னியை நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். பாலத்தில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடந்தபோதோ, ஒரு முதியவரோ ஒரு கைக்குழந்தையோ இறந்தபோதோ அந்த அகதிகளின் வரிசை பாலத்தில் அசையாமல் நின்றது. முன்னாலிருந்தவர்களால் நகர முடியவில்லை. அப்பாவுக்குத் தனது ஒருகாலின் மீது மற்றைய காலை ஊன்றி நிற்கவேண்டியிருந்தது. அம்மா பார்த்தபோது அப்பாவின் தோளில் டயானா சிலையாக விறைத்துப்போயிருந்தாள். அப்பாவின் தலைமுடிகளைப் பற்றியிருந்த அவளின் கைகளிலிருந்து அப்பாவின் முடிகளை விடுவிக்க முடியவில்லை. குழந்தையைத் தோளிலிருந்து இறக்கவும் முடியவில்லை. டயானாவின் கண்கள் சொருகியிருந்தன. டயானாவோடு கீழே அப்பா உட்கார முயற்சித்தபோது பின்னாலே வந்த சனத்திரள் அப்பாவை எற்றி முன்னாலே தள்ளியது. அந்தப் பெருமழையின் துளியால் கூடப் பாலம் நனைவதாயில்லை. அப்பாவின் கண்ணீரை மழைதான் கழுவிவிட்டது.
அந்த நிலைக்கு என்ன பெயர் என்று எவருக்கும் தெரியவில்லை. டயானா துறுதுறுவென ஓடிக்கொண்டிருப்பாள். ஒரு உரத்த சத்தத்தைக் கேட்கும்போதோ அல்லது அவளை யாராவது மிரட்டும்போதோ அவளுக்கு முதலில் காதுகள் அடைத்துக்கொள்ளும். பின்பு வாயைக் கிழித்து இரண்டு மூன்று கொட்டாவிகள் விடுவாள். அப்படியே உடல் மரத்துப்போய் சிலையாய் நின்றுவிடுவாள். உட்கார்ந்திருந்தால் உட்கார்ந்தபடியே சிலையாகிவிடுவாள். சாப்பிட்டுக்கொண்டிருந்தால் சோற்றுக் கோப்பைக்குள் கையை வைத்தவாறே அப்படியே மரத்திருப்பாள். அவளின் கண்கள் பாதி திறந்திருக்க கருமணிகள் மேலே சொருகியிருக்கும். சிலவேளைகளில் நின்றவாக்கிலேயே உடல் மடங்காமல் சரிந்து அவள் நிலத்தில் விழுவதுண்டு. மூன்று நிமிடங்களிலோ நான்கு நிமிடங்களிலோ அவள் கண்களை மலங்க மலங்கப் புரட்டிக்கொண்டே மறுபடியும் தன்னுணர்வுக்கு வருவாள். கழிந்த அந்த நிமிடங்களில் நடந்தது எதுவும் அவளுக்குத் தெரியாதிருக்கும்.
வற்றாப்பளை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்றிருந்த சனங்கள் மீது போர் விமானங்கள் சுற்றிச் சுற்றி வந்தபோது சனங்கள் கலைந்து ஓடினார்கள். அப்பா டயானாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஓட முயன்றபோது டயானா வாய் கிழிந்து கொட்டாவி விட்டாள். அப்பா அவளைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்குள் ஓடினார். குண்டுவீச்சு விமானம் கீழே பதிந்தபோது டயானா கண்கள் சொருகப் பொத்தென கோயிலுக்குள் விழுந்தாள். பின்பு சனங்கள் ஓடிவந்து பார்த்தபோது இடிபாடுகளுக்கிடையே கண்டெடுக்கப்பட்ட ஒரு வெள்ளிச் சிலையாக டயானா அசையாமல் கிடந்தாள். அவள் கண் திறந்ததும் கண்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு முதலில் வெட்கத்துடன்தான் சிரித்தாள். வெட்கத்துக்கும் அச்சத்துக்கும் இடையே கோடுகள் ஏதுமில்லை. அச்சம் வெட்கமாயும் வெட்கம் அச்சமாயும் கணத்திலேயே மாறுகின்றன. இப்போது டயானா அச்சப்படலானாள். அச்சம் அவளைத் தொடர்ந்துகொண்டிருந்தபோது அவளால் வெட்கத்தை உணர முடியாமற் போயிற்று.
அச்சத்தால் நிரப்பப்பட்ட டயானாவின் உடல் ஊதிக்கொண்டே போயிற்று. பத்து வயதிலேயே அவள் பருவத்துக்கு வந்தாள். அவளது வெள்ளை வெளேரென்ற உடலில் கைகளும் தொடைகளும் கரணை கரணையாகப் பழுத்திருந்தன. கன்னக் கதுப்புகளும் தாடையும் வீங்கிக் கிடந்தன. இப்படித்தான் அவளுக்கு ‘குண்டச்சி’ என்ற பெயர் கிராமத்திலும் ‘குண்டு’ டயானா என்ற பெயர் பள்ளிக்கூடத்திலும் வாய்த்தது.
கிளிநொச்சி நகரத்திலிருந்த பிரஞ்சுத் தொண்டு நிறுவன மருத்துவர் டயானாவைப் பரிசோதித்துவிட்டு அவளின் விறைத்துப் போகும் நோயே அவளின் உடல் வீக்கத்துக்குக் காரணமென்றார். இப்போது வன்னியில் மட்டும் இருபது குழந்தைகளுக்கு இந்த விறைத்துப்போகும் நோயிருப்பதாக மருத்துவர் அம்மாவிடம் சொன்னார். அப்பாவிடம் மாத்திரைகளைக் காட்டியவாறே அம்மா இந்தச் செய்தியைச் சொன்னபோது அப்பா படாரென்று “வன்னியில் இருபது குண்டன்களும் குண்டச்சிகளும் இருக்கிறார்கள்” என்றார். அம்மா பாவமாய்ச் சிரித்தார்.
டயானா பாடசாலையிலிருந்து திரும்பி வரும்போது மெயின் ரோட்டின் ஓரமாய் நின்றிருந்த பாலைமரத்தில் ஒரு மனிதனைக் கைகால்களைப் பிணைத்து இயக்கம் கட்டி வைத்திருந்தது. அந்த மனிதன் இராணுவத்தின் உளவாளியாம். அவனுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட குண்டொன்றை இயக்கம் அவனிடம் கண்டுபிடித்தாம். அந்தக் குண்டு அந்த மனிதனின் மார்பில் கட்டப்பட்டிருந்தது. டயானா கூட்டத்திலிருந்து விலகி வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள். பருத்த உடலைத் தூக்கிக்கொண்டு முச்சிரைக்க அவள் ஓடிக்கொண்டிருந்தபோது அந்த மனிதனின் மார்பில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அந்த வெடிச் சத்தம் டயானாவில் மோதியபோது டயானா வீதியில் நின்றவாறே கொட்டாவிகளை விட்டாள். அவள் வாயிலிருந்து காற்றுப் பிரிந்தது. அந்தத் தெருவில் ஒரு கால் முன்னேயும் மறுகால் பின்னேயுமாகக் கையில் இறுகப் பிடித்த புத்தகப் பையுடன் வெண்ணிறச் சீருடையில் டயானா சிலையாக நிற்கத் துவங்கினாள்.
டயானா எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும்போது ஒருகாலையில் இயக்கம் டயானாவின் பள்ளிக்கூடத்துக்கு வந்தது. மாணவிகளை முற்றத்தில் நிறுத்திவைத்து இயக்கம் போராட்டத்தின் அவசியம் குறித்துப் பேசலாயிற்று. பத்தாவது வகுப்புக்கு மேலே படிக்கும் மாணவிகள் அடுத்தடுத்த வாரவிடுமுறை தினங்களில் இயக்கத்தால் நடத்தப்படவிருக்கும் முதலுதவிப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வேண்டுமென்று இயக்கம் கண்டிப்புடன் சொன்னது. பயிற்சி முகாமுக்கு வராதவர்களை இறுதிப் பரீட்சைகளை எழுதத் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் இயக்கம் சொல்லியது. மாணவிகள் பயிற்சிக்காக இயக்கத்திடம் தங்கள் பெயர்களைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது எட்டாம் வகுப்பு வரிசையில் நின்றிருந்த டயானாவின் மீது ஒரு இயக்கப் பொடியனின் பார்வை விழலாயிற்று. அவன் துப்பறியும் புலியாய் இருக்கக்கூடும். டயானாவின் குண்டுத் தோற்றம் அவளை வயதுக்கு மீறியவளாகத்தான் காட்டியது. அவள் பயிற்சிக்கு வருவதைத் தவிர்ப்பதற்காக எட்டாம் வகுப்பு வரிசைக்குள் மறைந்து நிற்கிறாள் என அந்தப் பொடியன் சந்தேகப்பட்டிருக்கலாம். அவன் தனது விரலை மடக்கி டயனாவைப் பார்த்து அவளை முன்னே வரும்படி அழைத்தபோது டயானா வரிசையிலிருந்து அசையவில்லை. அந்த இயக்கப் பொடியன் கண்களைச் சுருக்கி ஒரு புலனாய்வுப் பார்வையுடன் டயானாவை நெருங்கியபோது அவள் வரிசையிலேயே விறைத்திருந்தாள். அவன் மவுனமாகத் திரும்பியபோது டயானா பிடரி அடிபட மல்லாக்கப் பறிய நிலத்திலே விழுந்தாள்.
அடுத்த வாரவிடுமுறையில் இயக்கத்தால் பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள் பயிற்சி மைதானத்தில் காலையில் குழுமி நின்றபோது அந்த மாணவிகள் மீது விமானங்கள் துல்லியமாகக் குண்டுகளை வீசின. அறுபத்துநான்கு மாணவிகள் அந்த மைதானத்திலே அன்று தசையும் நிணமுமாகச் சிதறிக்கிடந்தார்கள். சகமாணவிகளின் கூட்டு ஓலம் ஆகாயத்தை நோக்கிக் கிளம்பிற்று. அறுபத்துநான்கு உடல்களும் ஒரே வரிசையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது அஞ்சலி செலுத்த டயானாவும் தன் பள்ளி மாணவிகளுடன் போயிருந்தாள். அன்று முழுவதும் அவள் அழுதுகொண்டேயிருந்தாள். துக்கமும் அச்சமும் தாள முடியாத எல்லையை மீறியபோது அவள் விறைத்துப்போக விருப்பப்பட்டாள். அஞ்சலி மண்டபத்தின் ஒரு மூலையில் குந்தியிருந்து கைகளை இறுகப் பொத்தியபடிக்கும் கண்களை மூடிக்கொண்டும் ஒரு மீன்போல வாயைத் திறந்து வாயினால் காற்றை வெளியேற்றியும் அவள் விறைத்துப்போக முயன்றாள்.
சற்று நாட்களில் இயக்கம் வீட்டுக்கொருவர், அது ஆணோ பெண்ணோ இயக்கத்தில் சேரவேண்டும் என்றது. அதிகாலை வேளையில் படுக்கைகளில் கிடந்த சிறுவர்களையும் சிறுமிகளையும் இயக்கக்காரர்கள் தட்டியெழுப்பித் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். பள்ளிக்கூடங்களிலும் வீதிகளிலும் சிறுவர்கள் இயக்கத்தால் பிடித்துச் செல்லப்பட்டார்கள். பிள்ளைகளைப் பெற்றவர்கள் இயக்க அலுவலகங்களின் வாசல்களிலே தங்கள் பிள்ளைகளைத் தேடி அன்னந் தண்ணியில்லாமல் பழியாய்க் கிடக்கலானார்கள்
எந்த நேரமும் அவர்கள் தன்னையும் பிடித்தச் செல்லக்கூடுமென அஞ்சி அஞ்சி டயானா செத்துக்கொண்டிருந்தாள். தனக்கு ஒரு தம்பியோ அண்ணனோயிருந்தால் இயக்கம் அவர்களைப் பிடித்துச் செல்லத் தான் தப்பித்துக்கொள்ளலாம் என்றுகூட அவள் நினைத்துக்கொண்டாள். இப்போது டயானாவுக்கு எவரைப் பற்றியும் அக்கறை கிடையாது. ஒரு விமானக் குண்டு வீச்சு நிகழும்போதோ, ஒரு ‘ஷெல்’ வீசப்படும்போதோ, இயக்கம் பிடிக்க வரும்போதோ எப்படித் தப்பித்துக்கொள்வது, முக்கியமாக அந்தத் தருணத்தில் எப்படி விறைத்து விழாமலிருந்து தப்பிப்பது என்று மட்டுமே அவள் சிந்தித்தாள். அவள் அம்மாவிடம் “என்னை அவர்கள் பிடித்துப் போவதால் அவர்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை, நான் விறைத்து விறைத்துத்தான் விழுவேன்” என்றாள். தாள்வாரத்திலிருந்து கம்பு சீவிக்கொண்டிருந்த அப்பா “வீட்டுக்கு ஒருவரைத்தானே கேட்கிறார்கள், அவர்கள் இங்கே வந்தால் அவர்களுடன் நான் போகிறேன்” என்றார். டயானாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
அவர்களின் குடிசைக்குப் பக்கத்துக் குடிசையிலிருந்த பழனியின் மகனைப் பிடிப்பதற்காக இயக்கம் பழனியின் குடிசையை ஒரு காலையில் சுற்றிவளைத்தபோது பழனியின் மகன் ஓடிப்போய்க் குடிசையின் பின்னால் ஓங்கி வளர்ந்திருந்த பாலைமரத்தின் மீது ஒரு குரங்குபோல தொற்றியேறி உச்சிக்குப்போய் பதுங்கிக்கொண்டான். இயக்கம் மரத்தைச் சுற்றி நின்று அந்தச் சிறுவனைக் கீழே இறங்குமாறு மிரட்டிக்கொண்டிருந்தது.
பழனி தோட்டக்காட்டிலிருந்து வந்து வன்னியில் குடியேறிய மனிதர். இப்போதும் அவரின் பேச்சு கலப்பில்லாத தோட்டக்காட்டுத் தமிழாகவேயிருந்தது. அவர் காசுக்குச் சல்லியென்றும் கடவுளுக்குப் பெருமாளென்றும் சொல்வதைக் கேட்டு டயானா விழுந்து விழுந்து சிரிப்பாள். டயானாவைக் `குண்டுப் பாப்பா’ என்றுதான் அவர் கூப்பிடுவார். ‘மென்டல்’ மகேந்திரத்தை `அண்ணாச்சி’ என்பார்.
அன்று பழனி இயக்கப் பொடியன்களிடம் சாமி சாமியென்று கெஞ்சிக் கூத்தாடினார். “நாங்கள் ஏழைப்பட்டவர்கள், சாமி என் மகனை விட்டுவிடுங்கள்” என்று பழனி இயக்கப் பொடியளிடம் மன்றாடியபோது ஒரு இயக்கப் பொடியன் “நாங்கள் ஏழைகளுக்கும் சேர்த்துத்தான் தமிழீழம் கேட்டுப் போராடுகிறோம்” என்று சொல்லிவிட்டு ஒரு கல்லையெடுத்து பாலைமரத்தில் தொற்றியிருந்த சிறுவனை நோக்கி வீசினான். மரத்தில் தொற்றியிருந்த சிறுவன் இன்னொரு பாய்ச்சலில் மரத்தின் இன்னொரு கிளைக்குத் தாவினான்.
பாலைமரத்தின் கிளைகளைக் காட்டிலும் மரத்தின் கீழே கிடந்த கற்கள் அதிகமாயிருந்தன. ஒரு கல் சிறுவனைத் தாக்கியபோது சிறுவன் “அய்யா” என்று கத்தினான். அந்த அலறலைக் கேட்ட பழனியின் கால்கள் குடிசைக்குள் பாய்ந்து திரும்பிய வேகத்தில் அவரின் கையிலே ஒரு கோடரியிருந்தது. இயக்கப் பொடியள் நிதானிப்பதற்கு முதலே ஒரு இயக்கப் பொடியனின் தோளிலே கோடரி வெட்டு விழுந்தது. உடனடியாகவே இயக்க வாகனத்தில் காயப்பட்டவன் எடுத்துச் செல்லப்பட்டான். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பழனியும் அவரின் மகனும் ஒருவரின் கையோடு மற்றவரின் கை கயிற்றால் பிணைக்கப்பட்டு, இயக்கத்தால் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டார்கள்.
பழனியின் குடிசைக்கு இயக்கம் வந்ததைதைக் கண்டவுடனேயே டயானா ஓடிப்போய் குசினிக்குள் இருந்த ‘பக்கீஸ்’ பெட்டிக்குள் ஒளிந்து கொண்டாள். சட்டி பானைகளும் அரிசி சாமான்களும் வைக்கப் பயன்படுத்தப்பட்ட அந்தப் பெட்டிக்குள் தனது பருத்த தேகத்துடன் அவள் கடும் சிரமப்பட்டுத்தான் புகுந்துகொண்டாள். இயக்கம் அங்கிருந்து போனதன் பின்பு அப்பா ஓடிவந்து ‘பக்கீஸ்’ பெட்டியைத் திறந்து பார்த்தார். முழங்கைகளையும் முழங்கால்களையும் கீழே ஊன்றி ஒரு மாடுபோல மண்டியிட்டு டயானா அந்தப் பெட்டிக்குள் சிலையாக விறைத்திருந்தாள்.
ஆண்டுத் தொடக்கத்தில் டயானா ஒன்பதாம் வகுப்புக்குச் செல்வதற்கு முன்பாக உள்ளாடைகள், செருப்பு, சோப்பு, சீப்பென்று சில பொருட்கள் அவளுக்குத் தேவைப்பட்டன. டயானாவின் உடல் வீங்கிக்கொண்டேயிருந்ததால் அந்தப் பஞ்சத்திலும் டயானாவுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை புதிய உடுப்புகள் தேவைப்பட்டன. டயானாவும் அம்மாவும் அவற்றை வாங்குவதற்காக கிளிநொச்சி நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். நல்லான்குளத்திலிருந்து நகரத்திற்கு வந்த ட்ரக்டரில் ஏறிவந்த அவர்கள் பாதிவழியில் இருக்கும்போதே குண்டுகள் வெடிக்கும் சத்தங்களைக் கேட்டார்கள். நகரத்தை நெருங்கும்போது நகரத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தவர்கள் நகரத்துக்குள் ‘கிபீர்’ விமானங்கள் குண்டு வீசியதால் சனங்கள் செத்துப் போய்விட்டதாகச் சொன்னார்கள். டயானா பதற்றத்தடன் அம்மாவிடம் “நாங்கள் திரும்பிப் போய்விடுவோம்” என்றாள். அம்மா வாகனச்சாரதியிடம் கேட்டபோது அவன் ஓங்காளித்துக் காறித் துப்பிவிட்டு “நாளைக்கும் குண்டு போடுவார்கள்” என்று சொல்லிவிட்டு வாகனத்தை நகரத்தின் மையப்பகுதியை நோக்கிச் செலுத்தினான்.
கடைவீதியில் கடைகள் திறந்துதானிருந்தன. வியாபாரமும் ஒன்றுபாதி நடந்துகொண்டுதானிருந்தது. கடைவீதியின் ஓரத்தில் இரத்தமும் சதையுமாக கிடந்த உடல்களைத் தூக்கி வாகனம் ஒன்றிற்குள் சனங்கள் அடுக்கிக்கொண்டிருப்பதை டயானா பார்த்தாள். அவள் ட்ரக்டருக்குள் இருந்து வாயைக் கிழித்துக் கொட்டவிகள் விட்டாள். அவள் காதுகள் அடைத்துக்கொண்டன. கைகள் இரண்டையும் மார்புக்குக் குறுக்கே இறுகக் கட்டியவாறே கால்கள் சப்பணமிட்டிருக்க டயானா ட்ரக்டருக்குள் விறைத்துப்போயிருந்தாள்.
டயானா அப்பாவிடம் விமானக் குண்டுவீச்சிலிருந்து தப்பிப்பதற்காக குடிசைக்குப் பின்னே ஒரு பதுங்கு குழி வெட்ட வேண்டுமென்று சொன்னாள். அப்பா சிரித்துக்கொண்டே “இந்தக் காட்டுக்குள் வந்தெல்லாம் குண்டு போடமாட்டார்கள்” என்றார். அப்பா சொல்வது போல நல்லான்குளத்தைக் கிராமம் என்று சொல்வதைவிடக் காடு என்று சொல்வதுதான் சரியாயிருக்கும். அந்தச் சிறுகுளத்தைச் சுற்றி எட்ட எட்டக் குடிசைகளிருந்தன. நல்லான்குளத்தில் எண்ணி மூன்று கல்வீடுகளேயிருந்தன. ஒரு கிராமத்திற்குரிய எந்தக் கட்டமைப்பும் அங்கே கிடையாது. பாடசாலைக்குப் போவதற்குக் கூட டயானா மூன்று கிலோமீற்றர்கள் நடந்துபோக வேண்டியிருந்தது. டயானா அம்மாவிடம் பதுங்கு குழி வெட்ட வேண்டும் என்று சொன்னபோது அம்மா “இதென்ன வெட்கக்கேடு” என்றார். நல்லான்குளத்தில் யாரும் அதுவரை பதுங்கு குழிகள் அமைத்துக்கொண்டதே கிடையாது.
டயானாவோ கோரிக்கையைக் கைவிடுவதாகயில்லை. அவள் இருபத்து நான்கு மணிநேரமும் குண்டுகளை நினைத்து அச்சப்பட்டுக்கொண்டேயிருந்தாள். வள்ளிபுனத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்படடிந்த மாணவிகளின் உடலங்கள் அவள் கண்களுக்குள் உருண்டுகொண்டேயிருந்தன. அறுபத்துநான்கு டயானாக்கள் வரிசையாக நிலத்தில் பிணங்களாக நீட்டுக்கு அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை அவள் பார்த்தாள். கிளிநொச்சி கடைத்தெருவில் டயானா வயிறு வெடித்துக் குடல் சரியப் பிணமாய்க் கிடந்தாள். அவள் ஒரு இரவில் அப்பாவிடம் “விமானங்கள் குண்டுபோட வரும்போது நீங்களும் அம்மாவும் ஓடிவிடுவீர்கள், நான் விறைத்துப் போய் விழுந்துவிடுவேன்” என்றாள். அப்பா தலையை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டே “நீ குண்டச்சி உன்னைத் தூக்கிக்கொண்டு ஓடவும் முடியாது” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். அவரின் சிரிப்பு விக்கல் மாதிரியிருந்தது.
மறுநாள் காலையில் அப்பா ‘முழியன்’ செல்வத்தைக் கூட்டி வந்தார். செல்வத்தின் ஒருதோளில் மண்வெட்டியும் மறுதோளில் நீண்ட அலவாங்குமிருந்தன. அப்பா தனது தலையில் ஒரு கடகத்தைக் கவிழ்த்தபடி வந்தார். குடிசையின் பின்னால் ஓங்கி வளர்ந்திருந்த பாலைமரத்தின் கீழே அப்பாவும் செல்வமும் பதுஙகு குழி தோண்டத் தொடங்கினார்கள். டயானா அன்று பாடசாலைக்குப் போகவில்லை. அவள் உற்சாகமாகப் பதுங்கு குழி தோண்டுபவர்களுக்கு உதவிகள் செய்தாள். அப்பா தொடர்ச்சியாக வேலை செய்யுமளவிற்கு தேக ஆரோக்கியம் உள்ளவரல்ல. அவர் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு “இங்கே வந்து யார் குண்டு போடப் போகிறார்கள்” என்று சொல்வார். ஒருமுறை செல்வம் அப்பாவின் சலிப்புக்குப் பதிலாகத் தனது முழிக் கண்களால் சிரித்தக்கொண்டே “அண்ணே பிள்ள ஆசைப்படுகிறதல்லவா” என்று சொல்லிவிட்டு ஒரு இயந்திரம் போல வேலை செய்தான். அம்மா வந்து வாயில் கைவைத்துக்கொண்டே “இந்தக் கூத்தைப் பார்த்தால் அயலட்டம் சிரிக்கவல்லவா போகிறது” என்றார்.
முழியன் என்ற செல்வத்துக்கு இருபத்தைந்து அல்லது இருபத்தாறு வயதிருக்கும். மெலிந்த ஆனால் உரமான கறுவல். பஞ்சத்தில் அடிபட்ட அவனது முகத்தில் இரண்டு கண்களும் எந்த நேரத்திலும் கீழே தெறித்து விழப்போவதுபோல துருத்திக்கொண்டிருக்கும். வெற்றிலைக் காவியேறிய பெரிய பற்கள் உதடுகளுக்கு மேலாக நீண்டிருக்கும். அந்த உதடுகளில் இரத்தம் துளியாய்க் காய்ந்திருக்கும். பேசும் போது எப்போதும் தலையைச் சத்தாராகச் சாய்த்து வைத்திருப்பான். அவன் பேசும்போது அவனது வலதுகை விரல்கள் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கிள்ளுவது போலக் குவிந்திருக்கும். அன்றிரவு வேலை முடிந்ததும் அப்பா போய் கள் வாங்கிவந்தார். குடிசையின் முற்றத்திலிருந்து அப்பாவும் செல்வமும் கள்ளுக் குடித்தார்கள். அப்பா எப்போதும் குடிப்பவரல்ல. எப்போதாவது குடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் ஒரு இராணுவ முகாமைத் தாக்குவதற்குத் தயாரானவர் போல ஒரு சாகச மனோநிலையில் மிதப்பார். ஆனால் ஒரு சிரட்டை கள் குடித்ததுமே நிலத்தில் சுருண்டு விடுவார். அப்பா சுருண்டு விழச் செல்வம் அப்பாவைக் கைகளில் தூக்கிக் குடிசைக்குள் எடுத்துச்சென்று பாயில் கிடத்தினான். பின்பு அவன் தனியாக முற்றத்திலிருந்து கள் குடித்தான். அம்மா செல்வத்தோடு பேசிக்கொண்டிருந்தார். செல்வம் மிக நிதானமாகப் பேசினான். பழமொழிகளும் விடுகதைகளும் காத்தவராயன் கூத்துப் பாடல்களின் வரிகளும் நொடிக்கொரு தரம் அவன் நாவிலிருந்து வழுக்கிக்கொண்டிருந்தன. பேசும் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் செல்வம் ‘சரியோ’, ‘சரியோ’ என ராகத்துடன் இழுப்பதில் ஒரு கவர்ச்சியிருந்தது.
பதுங்கு குழி வெட்டும் வேலைகள் மூன்று நாட்களாக நடந்தன. பாடசாலையில் இருக்கும் போதெல்லாம் டயானா பதுங்கு குழி பற்றியே யோசித்துக்கொண்டிருப்பாள். பாடசாலை விட்டதும் உருவாகிக் கொண்டிருக்கும் பதுங்கு குழியைப் பார்ப்பதற்காக அவள் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குப் போனாள். வழி தெருவெல்லாம் அவளுக்கு பதுங்கு குழி குறித்த சிந்தனையாகவேயிருக்கும். வீட்டுக்கு வந்ததும் உடை கூட மாற்றாமல் பதுங்கு குழியருகே போய் நின்றுகொள்வாள். செல்வம் வேலைகாரன். ‘டானா’ப் பட ஆறடி ஆழத்துக்கு வெட்டிய குழிக்குள் இறங்குவதற்குத் திருத்தமான படிக்கட்டுகளை மரத் துண்டங்களைக்கொண்டு அமைத்திருந்தான். பதுங்கு குழியின் மேலாக மரக்குற்றிகளைக் காற்றுப் போகவும் இடுக்கின்றி நெருக்கமாக அடுக்கி அவற்றின் மேல் கற்களை அடுக்கிக் கற்களின் மேலாக மண்ணால் நிரவியிருந்தான். செல்வம் ஒரு கலைநயத்தோடு அந்தப் பதுங்கு குழியை வடிவமைத்திருந்தான். அந்தப் பதுங்கு குழி அவன் டயானாவுக்காகக் கட்டிய தாஜ்மஹால்.
செல்வத்திற்கு ஏற்கனவே கல்யாணமாகியிருந்தது. அவனின் மச்சாள் மீராவைத்தான் செல்வம் கட்டியிருந்தான். முன்று வயத்தில் ஒரு பெண் குழந்தையும் அவர்களுக்கிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு தீபாவளி நாளில் செல்வம் மீராவை அடித்து அவளின் தாய் வீட்டுக்குக் குழந்தையுடன் துரத்திவிட்டான். இந்த இரண்டு வருடங்களாகவே மீராவின் குடும்பத்திற்கும் செல்வத்திற்கும் தீராத பகையாயிருக்கிறது. சென்ற வருடம் செல்வத்தின் தாயார் இறந்தபோது இழவு வீட்டிற்கு வந்த மீராவைச் செல்வம் சனங்களுக்கு முன்னால் வைத்தே அறைந்தான். “குடும்பத்திற்கு ஒத்துவராத பெண்ணை வீட்டுக்கு மருமகளாய் கொண்டுவந்ததை நினைத்துப் பொருமி பொருமித்தான் கிழவி செத்தாள்” எனச் சொல்லிச் சொல்லி செல்வம் மீராவை உதைத்தான். மீராவோ அவ்வளவு அடிகளையும் தாங்கியவாறு பிரேதத்தின் கால்களில் முகத்தைப் புதைத்தவாறு “மாமி, மாமி” என்று அரற்றிக்கொண்டிருந்தாள். கடைசியில் செல்வம் கையில் உலக்கையைத் தூக்கவும் சனங்கள் மீராவை அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். மீரா போகும்போது ஒரு கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டும் மறுகையால் தனது வயிற்றில் அறைந்தவாறும் ஓலமிட்டுக்கொண்டே போனாள். அப்போது கூட அவள் வாயிலிருந்து ஒரு சாபம் வந்ததில்லை. அதற்குப் பின்பு அவள் செல்வத்தின் முற்றத்தை மிதிக்கவேயில்லை. இதற்குச் சிலநாட்கள் கழித்து மீராவின் தம்பிமார்கள் இருவரும் ஒரு இரவில் கணபதியரின் தோட்டத்தில் கிணறு வெட்டிவிட்டு வந்த செல்வத்தை வழியில் மடக்கி அடித்து நொருக்கிவிட்டார்கள். இரும்புக் கம்பியினாலும் சைக்கிள் செயினாலும் அடிகள் விழுந்தன. வயிற்றிலும் மார்பிலும் மூன்று குத்தூசிக் குத்துகளும் விழுந்தன.
பதுங்கு குழி வெட்டும் வேலைகள் முடிந்த பின்பும் இப்போது செல்வம் டயானாவின் வீட்டுக்கு வந்து போகத் தொடங்கினான். வரும்போது கையில் மான் இறைச்சி, மர வற்றல் என்றொரு காரணத்துடன்தான் வருவான். அவன் வரும் மாலைநேரங்களில் டயானா பதுங்கு குழியின் மேலே அமர்ந்திருந்து படித்துக்கொண்டிருப்பாள் அல்லது மேலே சடைத்திருக்கும் பாலைமரத்தை மணிக்கணக்காக வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பாள். மானோ மரையோ கறியாகி, செல்வம் சாப்பிட்ட பின்பே அங்கிருந்து போவான். “அவன் பாவம் தனியாகச் சீவிக்கிறான், அவனுக்குச் சமைத்துப் போட யாருமில்லை” என்று அம்மாவுக்குப் பரிதாபம். இப்போது டயானா பாடசாலைக்குப் போகவும் வரவும் செல்வம் அவளுக்குப் பின்னாலேயே சைக்கிளை உருட்டிக்கொண்டு நடக்கத் தொடங்கினான். செல்வம் சிரித்துக்கொண்டு கதை சொன்னால் கேட்பவர்களுக்கும் கண்டிப்பாகச் சிரிப்பு வரும். செல்வம் அழுதுகொண்டு கதை சொன்னால் கேட்பவர்களுக்கும் கண்ணீர் வரும். அப்படியொரு வாலாயம் அவனுக்கு. தனது மனைவி மீராவைப் பற்றிச் செல்வம் அழுதழுது டயானாவுக்குக் கதை சொன்னான். தனது குழந்தையை அவள் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போய்விட்டாள் என்றும் இயக்கத்திடம் புகார் சொல்லி இயக்கத்தைக் கொண்டு தன்னை அடித்துவிட்டாள் என்றும் அவன் கண்கலங்கப் பேசினான்.
மே மாதம் இருபதாம் தேதி இருள் பிரியாத அதிகாலையில் டயானா செல்வத்துடன் ஓடிப்போனாள். செல்வம் டயானாவின் வீட்டுக்குப் பின்னாலிருந்த பாலைமரத்தின் கீழ் கையில் புது கவுன் ஒன்றுடன் நின்றிருந்தான். அவன் அதை டயானாவிடம் கொடுத்து அவள் உடுத்திருந்த சட்டையைக் கழற்றி அங்கேயே வைத்தவிட்டுப் புதுக் கவுனை அணிந்துகொண்டு தன்னோடு வருமாறு சொன்னான். டயானாவின் வீட்டிலிருந்து ஒரு சட்டையைக் கூட டயானா தன்னோடு எடுத்து வரக்கூடாது என்பது செல்வத்தின் நிலைப்பாடு. டயானாவின் வீட்டிலும் எடுத்து வருவதற்கும் எதுவுமில்லை. அவர்கள் இருவரும் ஒருவரின் கையை ஒருவர் பற்றிக்கொண்டு செல்வத்தின் குடிசையை நோக்கி நடந்தார்கள். நடந்துகொண்டிருந்த டயானா திடீரென்று செவியைச் சாய்த்துக்கொண்டு வழியில் அப்படியே நின்றாள். அவளின் கால்கள் பதறத் தொடங்கின. தூரத்தில் விமானம் ஒன்றின் மெல்லிய இரைச்சலை அவள் கேட்டாள். அவள் செல்வத்தின் கையை உதறியவாறே “குண்டு போட வருகிறார்கள்” என்று மெதுவாகச் சொன்னாள். செல்வம் அவளின் கையை மறுபடியும் பிடித்தவாறே “இது இயக்கத்தின் விமானம், இரணைமடுவுக்குப் போகிறது” என்றான். டயானா செல்வத்தின் குடிசைக்கு வந்து சேர்ந்தபோது நிலம் வெளிக்கத் தொடங்கியது.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் டயானாவைக் காணவில்லை என்று தேடும் சிரமங்கள் எதையும் செல்வத்தின் மனைவி மீரா விட்டு வைக்கவில்லை. நித்திரைப் பாயிலிருந்து அம்மாவையும் அப்பாவையும் மீராவின் குரல்தான் உலுக்கி எழுப்பிற்று. டயானா செல்வத்தின் வீட்டிலிருப்பதை அவள் அவர்களுக்கு வசைகளால் அறிவித்தாள். “என் புருசனை என்னிடமிருந்து பிரிக்கவா நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்தீர்கள்” என்று அவள் கண்களில் நீரும் ஆத்திரமும் கொப்பளிக்கக் கூச்சலிட்டாள். அம்மா இடிந்துபோய் அப்படியே நிலத்தில் உட்கார்ந்துவிட்டார். முற்றத்தில் நின்று ஏசிக்கொண்டிருந்த மீராவை அப்பா வாயைத் திறந்து பார்த்தவாறே சுற்றிச் சுற்றி வந்தார். மீரா “நீ பைத்தியத்துக்கு நடிக்காதே” என்று அப்பாவை பார்த்து நிலத்தில் காறியுமிழ்ந்தாள். மீரா அங்கிருந்து போன பின்பும் அப்பா முற்றத்திலேயே கால்களைத் தேய்த்துக்கொண்டு அமைதியாக நடந்துகொண்டிருந்தார். அம்மா எழுந்து அப்பாவுக்குப் பக்கத்தில் வந்து அவரின் முகத்தைப் பார்த்தவாறே “குண்டச்சி அந்த முழியனோடு ஓடிவிட்டாள்” என்றார். அப்பா கண்கள் ஒளிர அம்மாவைப் பார்த்து அமைதியாக “இனி இயக்கம் அவளைப் பிடித்துக்கொண்டு போகாது” என்றார். அம்மா பற்களை இறுகக் கடித்தார். மூடிய அவரின் வாய்க்குள் ‘பைத்தியகாரன்’ என அவரின் நாவு துடித்தது.
டயானா செல்வத்தின் குடிசைக்குள் குந்தியிருந்து வரிச்சு மட்டைகளுக்கு இடையால் பார்த்தபோது அந்த மத்தியான வெயிலில் மீரா வெறுங் கால்களுடன் கையில் குழந்தையையும் தூக்கிக்கொண்டு குடிசையை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தாள். குடிசையின் வாசலில் குந்திக்கொண்டிருந்த செல்வமும் வரும் மீராவைக் கண்களை உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கிட்டே வந்ததும் ஒரு மாடு மாதிரிப் பாய்ந்து செல்வம் மீராவை முட்டித் தள்ளினான். சுடுமணலில் தடுமாறி விழுந்த மீராவிடமிருந்து செல்வம் குழந்தையைப் பறித்தெடுத்துத் தன் கைகளில் வைத்துக்கொண்டான். குழந்தையை அவன் பறிப்பான் என்று மீரா எதிர்பார்த்திருக்க மாட்டாள். எனவே அவளுக்கு இப்போது புருசனை மீட்பதை விடக் குழந்தையை மீட்பதே முக்கியமாயிருந்தது. அவள் தவழ்ந்து வந்து செல்வத்தின் கால்களைப் பிடித்துக்கொண்டாள். அவள் குழந்தையைத் தருமாறு செல்வத்திடம் கெஞ்சியழுதாள். செல்வம் குழந்தையுடன் குடிசைக்குள் செல்ல முயற்சித்தான். மீராவோ அவனின் கால்களை விடுவதாயில்லை. செல்வம் குழந்தையை உயரே தூக்கிப் பிடித்தவாறே “டயானா, டயானா” என்று உரத்துக் கூப்பிட்டான். அப்போது டயானாவின் வாய் பிளந்து காற்று வெளியேறியது. அவளின் காதுகள் அடைத்துக்கொண்டன. செல்வம் என்ன நினைத்தனோ மீராவை எற்றித் தள்ளிவிட்டு அவன் குழந்தையுடன் நடந்து தெருவுக்கு வந்தான். மீரா அவனுக்குப் பின்னால் குழறியவாறே வந்தாள். தெருவில் நின்றிருந்த கொஞ்சப் பேர்கள் செல்வத்தைச் சமாதானப்படுத்தப் பார்த்தார்ர்கள். சனங்களைக் கண்டதும் மீராவுக்குக் கொஞ்சம் தைரியம் வந்திருக்க வேண்டும். அவள் அந்தச் சனங்களிடம் “அந்தக் குண்டச்சியைக் கொண்டுவந்து வீட்டிற்குள் வைத்துக்கொண்டு என்னை அடித்து விரட்டுகிறானே” என்று ஓலமிட்டாள். இதைக் கேட்டதும் செல்வம் தெருவில் கிடந்த ஒரு பெரிய தடியைத் தூக்கி மீராவின் தலையில் அடித்தான். எவ்வளவு அடி வாங்கியும் மீரா அங்கிருந்து போவதாயில்லை. கடைசியில் செல்வம் குழந்தையைக் கீழே இறக்கிவிட்ட பின்புதான் அவள் ஓய்ந்தாள். அவள் குழந்தையைக் கைகளில் வாரியெடுத்தக்கொண்டே தனது தாய் வீட்டைப் பார்த்து நடந்தாள். அப்போது கூட அவள் வாயிலிருந்து புலம்பலும் ஓலமும் வெளிப்பட்டனவே தவிர ஒரு சாபம் விழவில்லை.
செல்வம் குடிசைக்குத் திரும்பி வந்தபோது குடிசைக்குள் டயானா வரிச்சு மட்டைகளைப் பற்றிப்பிடித்தவாறே குந்தியிருந்த நிலையிலேயே விறைத்திருந்தாள். அவள் விழித்ததும் செல்வம் அவளைப் பாயில் படுக்க வைத்துவிட்டு வெளியே போனான். திரும்பிவரும்போது அவனது கையில் ஒரு சாரயப் போத்தலும் ரொட்டியும் மாட்டுக்கறியும் இருந்தன. டயானாவைச் சாப்பிடச் சொல்லிவிட்டு செல்வம் முற்றத்தில் அமர்ந்து சாராயம் குடிக்கத் தொடங்கினான். டயானாவின் பெற்றோர்கள் டயானாவை மீட்பதற்கோ மீராவின் சகோதரர்கள் தன்னைத் தாக்குவதற்கோ வரக் கூடுமென அவன் எதிர்பார்த்திருக்கலாம். அவனின் கைகளின் அருகே நிலத்தில் ஓர் நீண்ட வாள் இருந்தது. லொறி வில்லுத் தகடு கொடுத்து அய்யம்பிள்ளை ஆசாரியிடம் செய்வித்த வாள் அது. போதை ஏற ஏற அவன் காறிக் காறித் துப்பிக்கொண்டான். நேரம் நள்ளிரவுக்கு மேலாகியும் அவன் கையில் வாளுடன் அய்யனார் சிலைபோல முற்றத்தில் ஆடாமல் அசையாமல் தன் எதிரிகளுக்காகக் காத்திருந்தான், அல்லது டயானாவுக்குக் காவலிருந்தான்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்த டயானா அவளது கால்கள் முரட்டுத்தனமாக அழுத்தப்படுவதை உணர்ந்து திடுக்குற்றுக் கண்விழித்தபோது அவளை இருள் சூழ்ந்திருந்தது. அங்கே அழுகிய பழவாசனை வீசிற்று. அவள் எழுந்து தலைமாட்டிலிருந்த விளக்கைப் பற்ற வைத்தாள். அவள் படுத்திருந்த பாயின் தலைமாட்டில் ஒரு நீண்ட வாள் தரையில் குத்தென நிறுத்திவைக்கப்பட்டிந்தது. கால்மாட்டில் முழிக் கண்கள் இரத்தமாய்ச் சிவந்திருக்கச் செல்வம் நிர்வாணமாகக் குந்திக்கொண்டிருந்தான். டயானா படாரென விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் பாயில் குப்புறப் படுத்துக்கொண்டாள். டயானாவைச் செல்வத்தின் வலிய கைகள் புரட்டிப்போட்டன. அவள் மார்பில் அவனின் கை பதிந்தபோது டயானா திகிலுடன் அவனது கையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அந்த அழுகிய பழவாசனை அவளது உடல் முழுவதும் பரவிற்று. டயானாவிற்கு வாயில் எச்சில் சுரந்தது. டயானாவின் இடுப்புத் தானாகவே மேலே உன்னிற்று. அவளின் உடற்பாரம் முழுதும் அவளின் கெண்டைக் கால்களில் தங்கிற்று. டயானாவின் கொழுத்த காலொன்றைத் தூக்கிச் செல்வம் தன் முதுகில் போட்டபோது டயானாவின் விழிகள் செருகின. அவள் பதற்றத்துடன் “நான் விறைத்துப் போகப் போகிறேன்” என்று முணுமுணுத்தாள். அவளின் வாயில் செல்வத்தின் வியர்வைத் துளிகள் தெறித்தன. அவள் வாயை அகலப் பிளந்துகொண்டே “கொட்டாவி வருகிறது நான் விறைக்கப் போகிறேன்” என்றாள். செல்வத்தின் வலிய கை அவளின் வாயை இறுக மூடிக் கொட்டாவியை அடக்கியது. அவனின் அடுத்த கை டயானாவின் முதுகுக்குக் கீழாக நீண்டு அவளின் ஆசனவாயை மூடியது. அவளின் மனது நிர்மலமாய்க் கிடந்து. அவளின் தலைமாட்டிலிருந்து செல்வம் வாளை உருவி எடுக்கும் ஓசை கேட்டது. அவன் டயானாவை ஒரு கையால் அணைத்தவாறே மறுகையில் வாளைப் பற்றிப் பாயில் கிடந்தான். டயானாவின் அடிவயிற்றில் சுருக்கென ஒரு வலி கிளம்பியது. டயானா கைகளால் தனது நிர்வாண வயிற்றைப் பொத்தியவாறு தனக்குள் ஒரு குழந்தை சனிப்பதாக நினைத்துக்கொண்டாள். அப்போது விமானங்களின் இரைச்சல் அந்த நல்லான்குளத்துக்குள் தாழக் கேட்டது.
டயானா பாயிலிருந்து துள்ளி எழுந்திருந்து காதுகளைக் குவித்துக் கேட்டாள். இப்போது விமானங்கள் குடிசையின் கூரையைத் தட்டிச் செல்வதுபோல பேரிரைச்சல் எழுந்தது. டயானா எழுந்து நின்று கவுனை அணிந்துகொண்டு குடிசைக்கு வெளியே ஓடிவந்து பார்த்தாள். அவள் பிடரிக்குப் பின்னாலிருந்து கிளம்பிய பேரிரைச்சல் வடக்கு நோக்கிப் போய் மறுபடியும் திரும்பி நல்லான்குளத்திற்குள் பதிந்து வந்தது. டயானா பார்த்துக்கொண்டிருக்க அவள் கண் முன்னமே ஒரு விமானம் சிவப்பு விளக்கு முணுக் முணுக்கென எரிய பூமிக்குப் பாய்ந்து குத்திய வேகத்தில் மேலெழுந்தது. பெருத்த வெடியோசை அந்தக் கிராமத்தில் எழுந்தது. டயானா ஒரு செக்கன் கூட யோசிக்கவில்லை. அவள் அந்தக் கச இருட்டில் செல்வத்தின் குடிசை முற்றத்திலிருந்து ஓடத் தொடங்கினாள். காட்டுக்குள் புகுந்து தனது வீட்டின் பின்புறம் பாலைமரத்தின் கீழே அமைந்திருக்கும் பதுங்கு குழியை நோக்கி அவள் ஓடினாள். இப்போது நல்லான்குளத்தின் தெற்குப் பக்கத்தில் வெடியோசையும் புகையும் எழுந்தன. ஓடிக்கொண்டிருந்த டயானாவுக்குக் காது அடைக்கத் தொடங்கிற்று. அவள் விறைத்து விழப்போகிறாள் என்பது அவளுக்குத் தெரிந்தது. டயானாவால் கால்களை அசைக்க முடியவில்லை. கண்கள் செருகத் தொடங்கின. டயானா வழியிலிருந்த பாலைமரம் ஒன்றின் கீழே முழங்கால்களை மடக்கிக் குந்திக்கொண்டாள். விமானங்களின் இரைச்சல் வரவரப் பெரிதாகிக்கொண்டேயிருந்தது. பாலைமரத்தின் கீழே குந்தியிருந்த டயானா தான் விறைத்து விழக் கூடாது என்று நினைத்துக்கொண்டாள். எப்படியாவது சமாளித்துக்கொண்டு எழுந்து பதுங்கு குழிக்கு ஓடிவிட வேண்டும் என அவள் நினைத்தாள். அவளது வாய் கிழிந்து கொட்டாவி எழ டயானா சட்டென்று தனது இரு கைகளாலும் வாயை இறுக மூடிக் கொட்டாவியை அடக்கப் பார்த்தாள். பின்பு ஒரு கை வாயிலிருக்க அடுத்த கையை எடுத்து அந்த வெட்கம் கெட்ட டயானா அந்தக் கையால் தனது ஆசனவாயை மூடிக்கொண்டாள்.
அகதி வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த அகதி வழக்காளி தே. பிரதீபன் அவசரமாக ஒரு நண்பனைத் தொலைபேசியில் அழைத்தான். அந்த நண்பனிடம் விசாரணை பிரச்சினைகளின்றி முடிந்தது என்றும் கேட்ட கேள்விகளுக்குத் தான் சரியாகவும் தெளிவாகவும் பதிலளித்திருப்பதாகவும் சொன்ன பிரதீபன் ஒரு சிறிய விசயம்தான் நெருடலாக இருக்கிறது என்று நிறுத்தி, அந்த நண்பனிடம் “நல்லான்குளத்திற்கும் கிளிநொச்சி நகரத்திற்கும் எவ்வளவு தூரமிருக்கும்” என்று கேட்டான். அந்த நண்பன் வன்னியிலிருந்து வந்தவன். அவன் தெளிவாகக் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு “பதினைந்து கிலோ மீற்றர்களுக்குக் குறையாது” என்றான். பிரதீபனுக்கு நெஞ்சு கமாரிட்டது. அவன் விசாரணையில் நல்லான்குளத்திற்கும் கிளிநொச்சி நகரத்திற்கும் இடையேயான தூரம் அய்ந்து கிலோ மீற்றர்கள் என்றே சொல்லியிருந்தான். அவன் ஒரு கையால் தொலைபேசியைப் பிடித்தவாறே மறுகையால் தனது நெற்றியில் ஓங்கி அறைந்து “கெடுத்தாளே பாவி” என்று முணுமுணுத்தான். அவன் டயானாவின் மரணச் சான்றிதழை மரண சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் விற்பவர் ஒருவரிடமிருந்து முப்பது ஈரோக்களுக்கு வாங்கியிருந்தான்.
(’தீராநதி’யில் -ஜனவரி 2009 - வெளியாகியது)
No comments:
Post a Comment