Sunday 28 June 2009

சாத்தான்களின் வேதம்!

-    சதாசிவம். ஜீ.

'சட்டி, பானையைப் பார்த்துச் சொல்லிச்சாம் "நீ கறுப்பு" என்று' அதுபோலத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் நடைபெறவிருக்கும் உள்ள+ராட்சி தேர்தல் 'பொய்யான' தேர்தல் என்றும் இத்தேர்தல் சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு தந்திரம் என்றும் கூறுகிறது. அதுவும் யார் கூறியிருக்கிறார் என்றால் சுரேஸ் பிரேமச்சந்திரன். இவரைப்பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ளார்கள் என்பது பரமரகசியம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகளின் அனுக்கிரகத்தினாலும் புலிகளின் முழுமையான கள்ளவோட்டினாலும் இவரும் இவருடன் சேர்த்து 22 திருடர்களும் பாராளுமன்றம் புகுந்தார்கள். இவர்களின் 'அலிபாபா' இந்த 22 திருடர்களையும் அந்தரிக்கவிட்டுவிட்டு நரகத்துக்குள் புகுந்துவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் தேர்தல் "சுதந்திரமாக நடைபெறுமா?" என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் சுரேஸ். மேலும் மனிதப் பேரவலத்தின் விளைவு, மக்களின் நீண்டகால போருக்கான தீர்வு, யாழ். மாநகரசபையை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை நாங்கள் முதன்மைக் கோஷமாக முன்வைத்திருப்பதாகவும் அருளியிருக்கிறார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் நடந்த பத்திரிகை எரிப்புச் சம்பவத்துக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டமென மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார். இலங்கையில், ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இதைவிட மோசமான நிலை காணப்படுவதை நாங்கள் அறிவோம். ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மேலும் அவர் சொல்லியிருக்கிறார்.

இந்த இரண்டு பேர்வழிகளும் தாம் வரித்துக்கொண்ட தலைவர்களை புலிகளின் கொலைவெறிக்கு பறிகொடுத்தவர்கள். கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் கொழும்பில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பது உலகறிந்த உண்மை. அதேபோல ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா புலிகளால் தமிழ்நாட்டில் வைத்து படுகொலைசெய்யப்பட்டார் என்பதும் உறுதிசெய்யப்பட்ட உண்மை.

வெட்கம், ரோசம், மனம்கெட்டு கொலையாளிகளின் காலடியில் விழுந்து பாராளுமன்ற கதிரை பெற்றவர்கள்! இவர்களா யாழ்மாநகர சபையை அபிவிருத்தி செய்யப்போகிறார்கள்?

90களின் முற்பகுதியில் வடகிழக்கில் பெரும்பகுதியை புலிகள் தமது இரும்புப் பிடியில் வைத்திருந்தனர். இதன்போது இந்த இரண்டு பேர்வழிகளும் வடகிழக்குப் பக்கமாக தலைவைத்துக்கூட படுத்ததில்லை. "ம்" என்றால் வனவாசம்! "ஏன்?" என்றால் சிறைவாசம்! ஏன்ற நிலைமையில் தமிழ் மக்களை கசக்கி பிழிந்தெடுக்கும்போது அரசாங்கத்தின் பாதுகாப்பில் சுகத்தை அனுபவித்தவர்கள்.

அரசாங்கம் தரும் சுகத்திலும் பாராளுமன்றம் தரும் சுகம் மேலானது என்று புலிகள் சுகம் அனுபவிக்கவிக்க விட்டுவிட்டு(!) பாராளுமன்ற கதிரையைப் பெற்றுக்கொண்டவர்கள். இன்று 'ஆடு நனையுதென்று அழுகின்றன இந்த …….'

'தானும் ஒரு ஆளாம் தவிடும் ஒரு கொழுக்கட்டை' என்றுதாம் என்பது போல இவர்கள் மனிதர்கள் என்று வாக்குப் பிச்சையேந்தி நிற்கிறார்கள். எப்படி புலிகள் கேட்டது தமிழீழம் கிடைத்தது எதுவுமில்லாமல் போனார்களோ? அதுபோலத்தான் இவர்களும் தமிழ் மக்களின் உரிமைகள், சுயநிர்ணயம், ……… என்று நீட்டி முழங்குகிறார்கள். 13வது திருத்தச்சட்டம் போதாது என்கிறார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது என்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வைத்த தீர்வுப்பொதி முசுப்பாத்தி பண்ணுகிறார்கள் என்கிறார்கள். அப்ப என்னதான் வேணும்? இவர்களின் நினைப்பென்னவோ பன்னீரில் கைகழுவுவது. ஆனால் குடிப்பது கூழ்தான்.

 'வட்டுக்கோட்டைக்கு போறதுக்கு வழிகேட்டால் இரண்டு கொட்டைப்பாக்கின் விலை என்ன? என்று திருப்பிக்கேடுக்கொண்டே, நகரசபை அதிகாரத்துக்காக பிச்சை எடுக்கிறார்கள்.

பிச்சை எடுத்தால் எடுத்துட்டுப்போகட்டும். மக்கள் தீர்மானிக்கட்டும் எந்த பிச்சைப் பாத்திரத்தில் இடுவது என்று? அதற்காக கடந்தகால வன்முறைகளையும் அடாவடித்தனங்களையும் மறந்து தற்போது எழுந்திருக்கும் ஜனநாயக சூழலை கொச்சைப்படுத்துவதுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை.

யாழ்ப்பாணிகள் தாம்தான் மற்ற பிரதேசங்களிலும் பார்க்க முன்னிலையானவர்கள் என்று சுயதம்பட்டம் அடிப்பது வழக்கம். கிழக்கு வாழ் மக்கள் எது அபிவிருத்திக்கும் - வளர்ச்சிக்கும் உகந்தது என்பதை தீர்மானித்து முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

மலையக தமிழ் மக்களும் தொண்டமானின் காலத்திலிருந்து தமக்கு தக்கதான அரசியல் முடிவுகளுடன் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களும் தமிழ் ஈழம்போல ஏதாவது ஒன்றை முன்வைத்தோ, அல்லது புலிகளுடன் இணைந்தோ வன்முறையில் இறங்கியிருந்திருந்தால் இன்று மலைகள் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

பார்ப்போம் இனியாவது வடக்கு முன்னேறும் எண்ணம் கொண்டு நடந்துகொள்ளுமா? இல்லை குண்டுச் சட்டிக்குள் நரியை ஓட்டுமா? என்று. ஓகஸ்ட் 8ம் திகதிவரை பொறுத்திருப்போம்.

No comments: