Sunday 5 July 2009

கொலைகளின் தன்மையும் பட்டியலும்!

- சதாசிவம். ஜீ.

இலங்கை அரசாங்கம், சரணடைந்த புலி அங்கத்தவர்களுக்கு 'பொது மன்னிப்பு' அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இவ்வங்கத்தவர்கள் தமது குற்றத்தை உணரும் பசட்சத்தில் அவர்களுக்கான வாழும் உரிமைய வழங்கும் நிலையில் உள்ளவர்கள் வழங்குவதுதான் மனிதகுல தர்மம். அரசாங்கம் பொதுமன்னிப்பு தொடர்பான நல்ல முடிவை எடுக்கும், எடுக்க வேண்டும் என்பதே எம் அவாவும்கூட.

புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியரை இரண்டாம் கேள்விக்கு இடமில்லாமல் சமூகத்துடன் இணைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதனையே ஐ.நாவும் வலியுறுத்துகிறது. ஆயுதக் குழுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் அவர்களை சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் செயல்திட்டங்களை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தவிடையத்தில் இலங்கை வாழ் மக்களுக்கு ஏற்பட்ட காயங்களை மீண்டும் நினைவுபடுத்தவேண்டிய தேவை எழுகிறது. 'தமிழீழம்' என்ற பெயரில் நடைபெற்ற கொலைகளை, 'தமிழ் தேசியம்' என்ற பெயரில் சில படித்தவர்கள், பிரமுகர்கள் நியாயப்படுத்தியதையும் மனவேதனையுடன் நாம் நினைவுபடுத்தவேண்டிய தேவையிருக்கிறது. எனவே புலிகள் 'எதிரியிலும் துரோகியே ஆபத்தானவர்கள்' என்று சொல்லிச் சொல்லியே கொன்றுகுவித்தார்கள் ஐயா! தம்மிடம் சரணடைந்தவர்களைகூட ஈவிரக்கமின்றி சித்திரவதைசெய்து கொன்றனர்.

புலிகளிடம் பிடிபடும் இராணுவ வீரர்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்த பின்னர் நல்லபடியாக பராமரித்து கொன்றுவிடுவதே அவர்களின் நடைமுறையாக இருந்தது. முள்ளிவாய்காலில் விடுவிக்கப்பட்ட 4 இராணுவ வீரர்களைத் தவிர அவர்களிடம் முன்னர் பிடிபட்ட அனேக இராணுவ வீர்கள் கொலை செய்யப்பட்டதே ஒழிய, உயிர்பிச்சை அளிக்கப்படவில்லை.

அதேபோல புலிகளிடம் அடைக்கலம் புகுந்த சகோதர இயக்க உறுப்பினர்களும் சரி, அவர்களுடைய உறவுகளும் சரி கொல்லப்பட்டார்கள். சகோதர இயக்கத்துக்கு உதவினார்கள் என்பதற்காகவே கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.

புலிகள் தவிர்ந்த இயக்க முக்கியஸ்தர்களின் குடும்பங்கள் சொல்லொனா துன்பங்களை அனுபவித்திருக்கின்றன. அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் குற்றச்சாட்டுக்கள் அல்ல. இவையெல்லாம் நடந்தவை. சந்தேகிப்பவர்கள் இதற்கான ஆதாரங்களை பாதிக்கப்பட்டவர்களை தேடிக்கண்டுபிடித்து அறிந்துகொள்ளலாம்.

குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படை இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், புலிகளால் அமைக்கப்பட்ட பல சித்திரவதை முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழ் சகோதரர்கள், சகோதரிகள் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இயக்கத்துக்குள் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக ஆரம்பித்திலேயே (புலிகள் ஏதாச்சதிகாரமாக மற்ற இயக்கங்களை தடைசெய்ய முன்னர்) வெளியேறி குடும்பமும் குழந்தைகளுமாக இருந்த பல நபர்கள் புலிகளால் பிடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

புலிகள் பல இயக்கங்களின் நடவடிக்கைகளையும் முடக்கிவிட்ட பின்னரும் அவ்வியக்கங்களின் அங்கத்தவர்களை வேட்டையாடுவதில் குறியாக இருந்தார்கள். அவர்களை அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்வதில் இன்பமடைந்தார்கள்.

இந்திய அமைதிகாக்கும் படைகளுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உட்பட அனைத்து இயக்கங்களும் அதன் முக்கிய உறுப்பினர்களும் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னரும், அவ்வியக்கங்களின் அடிமட்ட உறுப்பினர்கள் அல்லது அந்த இயக்கத்துடன் தொடர்புடைய சாதாரண பொது மகன் அகப்பட்டாலே புலிகளுக்கு மகா கொண்டாட்டம்தான்.

இதேகாலப்பகுதியில் 'தமிழ் தேசிய இராணுவ'த்துக்கு பிடிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவருமே விடுவிக்கப்பட்டார்கள். இவர்களில் பலர் புலிகளின் குணத்தை நன்கு அறிந்து இந்திய இராணுவத்துடன் வெளியேறினர். பெரும்பாலானோர் தத்தமது வீடுகளுக்குத் திரும்பி தமது இயல்பு வாழ்வைத் தொடங்கினர்.

ஆனால் புலிகள் இந்திய இராணுவம் வெளியேறிய கையுடன் ஒவ்வொரு கிராமம் கிராமமாக ஒலிபெருக்கியின் மூலம் "ஏதாவது இயக்க உறுப்பினர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் இந்திய இராணுவத்துடன் தொடர்படையவர்கள், தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்தவர்கள் மற்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எமக்கு எதிராக செயற்பட்டவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடையாது பதுங்கியிருப்பவர்கள் கண்டுபிடிக்குமிடத்து கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியேற்படும்" என்று அறிவித்தார்கள். அப்படி பதுங்கியிருப்பவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் புலிகள் சிலரைக் கைதுசெய்து கொலையும் செய்திருக்கிறார்கள்.

புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம் பிரசித்தமானவை. அங்கு ஏறக்குறைய பத்தாயிரம் வரையிலானோர் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் புலிகளுக்கு வறுமையின் காரணமாக கப்பம் செலுத்த முடியாதவர்களும் கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறானவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே உயிர் தப்பியிருக்கிறார்கள்.

மேலும் புலிகளின் கவனக்குறைவால் பல படுகொலைகள் நடந்திருக்கின்றன. அதாவது ஆள் மாறி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. புலிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள்கூட கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதாவது புலி பொறுப்பாளர் ஒருவர் தான் விரும்பிய பெண்ணின் தந்தையை ஒருநபர் கடுமையாக ஏசிய காரணத்தால் ஆத்திரம் கொண்ட பெண்ணின் தந்தை தனது பெண்ணை விரும்பிய புலி பொறுப்பாளருக்கு போட்டுக்கொடுக்க, மாமனாரை மகிழ்விக்கும் நோக்கில் அந்த ஏசியவரை போட்டுத்தள்ளினார் புலி பொறுப்பாளர். இது நடந்தது வன்னி நிலப்பரப்பில்.

அதேபோல உரும்பிராய் சந்தியில் இருந்த சிகையலங்கார நிலையத்தில், அருகிலிருந்த இந்திய இராணுவ முகாமில் இருந்து சிப்பாய்கள் சிகையலங்காரத்துக்கு நாள்தோறும் வந்துசெல்வது வழக்கம். இதை அறிந்துகொண்ட புலிகள் அவர் இந்திய இராணுவத்துக்கு உளவு சொல்கிறார் என்று குற்றம் சாட்டி கொலை செய்திருக்கிறார்கள்.

இவற்றைவிட புலிகள் தாம்முடன் இணைந்துகொள்ளும் அல்லது பலாத்காரமாக இணைத்துக்கொள்ளப்படும் சிறுவர் சிறுமியர் கடுமையான பயிற்சியின் காரணமாக தப்பி ஓடினால் அவர்களை தேடிக் கண்டுபிடித்து மற்ற சிறுவர் சிறுமியருக்கு முன்னால் அடித்தே கொல்லும் வழமையைக் கொண்டிருந்தனர். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் அதைப்பார்த்தால் தப்பியோடும் எண்ணம் மற்ற சிறார்களுக்கு ஏற்படாது என்பதே.

இவ்வாறாக புலிகளின் கொலையின் தன்மைகளும் பட்டியலும் நீண்டுகொண்டே செல்லும். கடந்த முப்பது வருடங்களாக புலிகளின் கொலைகள் தினம்தோறும் நடைபெற்றிருக்கிறது.

இதனைவிட எல்லையோரக் கிராமங்களில் படுகொலை. முஸ்லீம் மக்களை பள்ளிவாசலில் வைத்து படுகொலை. தமிழ், முஸ்லீம், சிங்கள அரசியல் தலைவர்களின் படுகொலைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

புலிகளின் இந்த வகைதொகையின்றிய கொலைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ சில பொதுமக்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். ஏனெனில் காழ்ப்புணர்வினால், ஏசியதற்காக மற்றும் இன்னபிற காரணங்களைச் சாட்டாகவைத்து புலிகளிடம் அண்டியே கொலை செய்ய தூண்டிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. புலிகளின் குறைந்தபட்ச தண்டனையும் உயர்ந்தபட்ச தண்டனையும் கொலைதான் என்பதை யாவரும் அறிவர். அப்படியிருக்க வெறும் கோபத்தினால் புலிகளிடம் சென்று இல்லாதபொல்லாததையும் போட்டுக்கொடுத்து ஒரு உயிரை அற்பத்தனமாக்கிய பங்கு சில பொதுமக்களையும் சாரும் என்ற உண்மையை நாம் மறந்துவிடமுடியாது. மறுத்துவிடமுடியாது.

இன்று பொதுமக்களுக்கு மேலே தொங்கிய கத்தி அகற்றப்பட்டிருக்கிறது. மீள் குடியேற்றங்கள், புனர்வாழ்வு, அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் தேவைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். அதேபோல எல்லா விடையங்களையும் அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்று நாம் வாழாதிருக்க முடியாது. எனவே கடந்தகாலத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களை நாம் மீட்டுப்பார்பதுடன் வருங்கால சந்ததிக்கும் இப்படியெல்லாம் நாம் பாடம் படித்தோம் என்பதனையும் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆகவேதான் கடந்த காலங்களில் புலிகள், அரச படைகள் மற்றும் தமிழ் இயக்கங்களினால் (இவர்கள் குறிப்பிட்ட குறுகிய காலத்தில் படுகொலைகளை அரங்கேற்றினார்கள் என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது) படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை ஆவணப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

இந்தக் கடமையை நிலத்திலும் புலத்திலும் நாம் இணைந்து செயற்படுவதன் மூலம் சாத்தியமாக்க முடியும். இணையத்தளங்கள் இதற்கு மிகுந்த உதவியாக இருக்கும். கிராமம் கிராமமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். கிராமசேவகர் அலுவலகம் இதற்கு பெருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள், அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள், மற்றும் மற்ற இயக்கங்களினால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களைத் திரட்டுவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து நாம் செயற்பட்டால் இதுவரை காலமும் நாம் செலுத்திய உயிர்களின் எண்ணிக்கையை கணக்கிலிடுவதுடன் மற்ற சமூகங்களுக்கும், நாடுகளுக்கும் இதுவொரு பாடமாக அமையும். மீண்டுமொரு வன்முறை எழாதிருக்க வகைசெய்யும்.

No comments: