Saturday 2 May 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும். (பகுதி 11)

- யஹியா வாஸித்-

உற்சாகம் எப்போதும் உங்களுடனேயே இருக்கட்டும்.அதற்கு விடை கொடுத்துவிடாதீர்கள்.

சில அசாத்திய துணிச்சல் உள்ள வியாபாரிகள் நம் மத்தியில் இருக்கின்றார்கள். கம் ஓர் கோ என முயற்சி பண்ணுவது. இது நடக்கவே நடக்காது என தெட்டத் தெளிவாக பால் குடிக்கும் பிள்ளைக்கும் புரியும். ஆனால் எல்லா அபிப்பிராயங்களையும் தூக்கி கடாசிவிட்டு முயற்சிப்பார்கள். இதை மயிரை கட்டி மலையை இழுப்பது என நாம் நக்கலாக சொல்வோம். இந்த முயற்சியாளர்கள் இழுப்பார்கள். தம் கட்டாமல் நிதானமாக ஒரு நேக்காக இழுப்பார்கள். இதற்கு அரசியலில் உதாரணம் நேபாள மாவோயிஸ்ட்களை சொல்லலாம். விடாக்கண்டன் இந்தியா. கொடாக் கண்டன் அமெரிக்கா, விட்டுப் பிடிப்போம் என வேடிக்கை பார்க்கும் அகண்டு விரிந்த சைனா எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்து ஒரு நேக்கா, ரொம்ப வாகாக மிக மிக ஜாக்கிரதையாகபாமர மக்களின் உள்ளங்களில் ஜாலியாக குடியேறிக்கொண்டு மயிரைகட்டி மலையை இழுத்தார்கள். அவர்களது டார்கட் டென் இயர். உலகமே உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறது. ராஜாதி ராஜ ராஜமகாத்தாண்ட பிரேந்திராக்களுக்கும் இனி கூப்பன்கடை சிவப்பரிசிதான் என்றநிலைக்கு தார்மீகத்தை கொண்டு வந்துள்ளார்கள். நம்மாளும் மனிதர்களை கயிறாக கட்டி ஜயவர்த்தனபுரவில் இருக்கிற ஜப்பான்காறன் கட்டி கொடுத்த பாராளுமன்றத்தை கட்டி இழுத்தார். நம்மாளுக்கு அந்த வாகு தெரியல்ல. அல்லது அந்த நேக்கு பிடிபடல. லபுக்கடீர் என விழுந்து கொண்டு மீசையில மண் ஒட்டல என…..

இப்படித்தான் 1970களில்  கிழக்கு மாகாணத்தில் ஒருவர் இருந்தார்.  சைக்கிளில் தினபதி பேப்பர் விற்றுக் கொண்டு திரிந்தார்.அப்புறம் சுவீப் டிக்கட்டும் விற்றார். பல வருடம் இவ்வாறு வீதி வியாபாரத்தில் சேர்ந்த கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கொழும்பு புதுச்செட்டி தெருவுக்கு வந்து. ஒரு பீடி கம்பனியில் பீடிக்கு லேபல் ஒட்டும் தொழிலில் இறங்கினார். ஐந்து லாம்பு சந்தியடியின் சுறு சுறுப்பும், செட்டியார் தெருவின் ஜொலி ஜொலிப்பும் இவரது மூளையை கிளற மனிஷன் மயிரைக்கட்டி மலையை இழுக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போதைய அமைச்சர் தொண்டமான் அவர்களை தொடர்பு கொண்டு காய்களை நகர்த்தினார். சிறிலங்காவில் உள்ள அத்தனை மலைகளும் இவர் சொல் கேட்டன. கம்பஹா டிஸ்ரிக்கில் உள்ள அத்தனை மலைகளையும் 99 வருட குத்தகைக்கு எடுத்தார். பிரேமதாஸ காலை உணவுக்கு இவரை வந்து கூட்டிக் கொண்டு போகும் அளவுக்கு வியாபாரத்தை விஸ்தரித்தார்.மகிந்த ராஜபக்ஸ அவர்கள் விஷேட பட்டங்கள் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தார். இப்போது சிங்கப்பூரில் நல்லது செய்யுங்கோ என்ற பெயரில் இவரது கம்பனிகள் வானைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன.

எந்த ஒரு வியாபாரத்தில் இறங்க முன்னர் அதை பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அதை பற்றி கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டும். முற்று முழுதாக அறிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் நமது கிராமங்களில் லேகியங்கள் விற்பனை செய்யும் லேகிய வியாபரிகள், மந்திரவாதிகள் போலாவது மந்திரம் கால் மதி முக்கால் என்ற நிலையாவது இருக்க வேண்டும்.மார்கட்டிங் (விற்பனை)தான் இங்கு மிக மிக முக்கியம். முதலில் நமது பகுதியில், நமது கிராமத்தில் என்ன தேவை என்பதை முதலில் தெரிந்து முதலில் கிராம மட்டத்தில் அதற்கு ஒரு தேவையை ஏற்படுத்தி அப்புறம் மெதுவாக நகரங்களை நோக்கி நகரலாம்.

இரண்டு இந்திய இளைஞர்கள் துபாயில் மலசலகூடம் கழுவிக் கொண்டு இருந்தார்கள். துபாயில் நிறைய அரேபிய கம்பனிகளுக்கு இந்திய பொருட்கள் தேவைப்பட்டன. கம்பனிகளுக்கு மட்டுமல்ல வியாபார நோக்கமுள்ள பலரும் இந்திய கம்பனிகளின் விபரம் தெரியாமல் தடுமாறினர்.இதை அறிந்து கொண்ட இவ்விரு இளைஞர்களும் அடுத்த முறை ஊருக்கு போய் இந்தியாவில் உள்ள சில பல கம்பனிகளை தொடர்பு கொண்டு மிக மிக குறைந்த கட்டணத்தில் விளம்பரங்கள் பெற்று ஒரு நாற்பது பக்கம் அளவில் குட்டி விளம்பர புத்தகம் ஒன்று ஆங்கிலத்திலும்,அரபியிலும் வெளியிட்டார்கள். அத்தனை துபாய் வியாபார நோக்கமுள்ளவர்களும் இதனூடாக இந்திய கம்பனிகளை தொடர்பு கொண்டு பொருட்களை இறக்குமதி செய்தார்கள்.இப்போது இந்தியாவில் உள்ள டொப் 50 வியாபாரிகளில் இவர்கள் இருவரும் 23வது இடத்தில் இருக்கின்றார்கள்.

துபாய் ட்ரேட் கைடு என்ற பெயரில் வரும் இப்புத்தகம் 2800 பக்கங்களை கொண்டது.முழுப்பக்க அட்வடைசிங் கட்டணம் இரண்டு லட்ச ரூபா.வரி விளம்பரம். வரிக்கு இரண்டாயிரம் ரூபா.இந்தியாவில் மட்டும் இவர்களது கம்பனிக்கு 38 கிளைகள்.உலகம் முழுக்க 26 கிளைகள். விரைவில் இங்கிலாந்திலும், லாஸ் ஏஞ்ஞல்சிலும் கிளைகள் திறக்க உள்ளனர். தமிழ் பேசும் அனைவருக்கும் ஒரு பசி இருக்கிறது. புத்தகப் பசி. எதையாவது படிக்க வேண்டும். அதுவும் தமிழில் அதை படிக்க வேண்டும், அந்த புத்தக வாசனையை மூக்கில் வைத்து நுகர வேண்டும். அதை வாசிக்கும் போது இடைக்கிடை போய் ஒரு தேனீரோ காப்பியோ குடித்துவிட்டு வந்து. விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும் என ஒவ்வொரு தமிழ் பேசுவோனுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் புத்தகம் கிடைப்பதே இல்லை.

பாதை திறந்து நம்ம பெரும்தலை வழிவிட்ட போது யாழ் பல்கலைக்கழகத்தில் மூன்றாவது மனிதன் பதிப்பகத்தார் ஒரு புத்தக கண்காட்சி நடாத்தினர்.நானும் அங்கு ஒரு அழையா விருந்தாளியாக சென்றிருந்தேன். அடக் கடவுளே மொத்த யாழ்ப்பாணியும் அந்த மூன்று தினமும் புத்தகம், புத்தகம், புத்தகம் என பிய்த்து உதறி விட்டார்கள்.அவ்வளவு பசி.அவ்வளவு தாகம், பல்கலைக்கழக உபவேந்தர் தொடக்கம் பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்னால் ஆட்டோ ஓட்டியவர் வரை அடிப்புல், நுனிப்புல் வரை மேய்ந்து விட்டார்கள். ஆம் சிறிலங்கா முழுக்க ஒரு புத்தகவியாபாரம் தொடங்கலாம். முகய்தீன் ஆண்டவர் சத்துரு சங்காரம் என்கின்ற மலையாள மாந்திரீக. அந்தக் காலத்து புத்தகங்கள் தொடக்கம் மிஸ்டர் பராக் ஓபாமாவின் சுயசரிதைப் புத்தகம் வரை தமிழில்; மெட்ராஸ் அங்கப்ப நாயக்கர் ஸ்ரீட் (மண்ணடி) தொடக்கம் மவுண்ட் ரோட் ஹிக்கின்ஸ் பாதம்ஸ் ஊடாக திநகர் காந்தி கண்ணதாஸனின் இரண்டு தட்டு மாடிவரை கோட்டோ கொட்டென கொட்டிக் கிடக்கிறது.

நைஜீரியா என்ற ஒரு நாடு இருக்கிறது. நீண்டு பரந்து விரிந்த நாடு.பல கோடி மக்கள்.எண்ணி ஒரு பத்து பேர்தான் அங்கு பணக்காரர்களாக இருக்கின்றனர். கண்ணுக் கெட்டிய தூரம் வரை கிராமம், கிராமம், கிராமங்கள்தான். ஒரு நகரில் இருந்து இன்னுமொரு நகரம் 400மைல் தூரம் இருக்கும். பக்கா கிராமங்கள். மல மல என முழிக்கும் குட்டி குட்டி சிறுவர்கள். ஆனால் ஒவ்வொரு கிராமத்தானும் உலக சரித்திரத்தை விரல் நுனியில் வைத்துள்ளான். ஆம் எல்லோரும் வாசிக்கின்றனர். ஒவ்வொரு காட்டிற்குள்ளும் லெண்டிங் லைப்ரரி, புத்தக விற்பனை வான் என சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் வாகனங்களை மறித்து உடையே இல்லாத சிறுவர்கள் புத்தகம் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஏன் இதை நாம் தொடங்க கூடாது. சிறிலங்கா பணம் பத்தாயிரம் ரூபாவில் புத்தகங்களை தருவித்து. புஸ் பைசிக்கிளிலோ குட்டி மோட்டார் பைசிக்கிளிலோ வீடு வீடாக விலையாக அல்லது வாடகை அடிப்படையில் விற்கலாம். இது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் விளையாட்டு. மெதுவாக வாடிக்கையாளர்களுடன் பழகி அவர்களின் தேவை அறிந்து வௌ;வேறு பொருட்களை அவர்களுக்கு விற்கதொடங்கலாம்.

மதுரை கிழக்கு மாசி வீதியைச் சேர்ந்த ஜமால் முகம்மது என்ற இளைஞர் ஆரம்பத்தில் மதுரை டவுண் ஹால் வீதிக்கு வடக்கில் (டெல்ஹி,பஞ்சாப்,அரியானா ) இருந்து வரும் உல்லாசப்பிரயா
ணிகளுக்கு புத்தகங்கள், தமிழ் நாட்டு வழிகாட்டிகள் விற்றுக் கொண்டிருந்தார். அப்புறம் மதுரையிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள மேலூர் போய் ஒரு இத்தனூண்டு லெண்டிங் லைப்ரரி வித் நடமாடும் புத்தக விற்பனை நிலையமும் ரிக்ஷாக்களில் ஆரம்பித்தார். வியாபாரம் ரொம்ப மெதுவாக சூடு பிடிக்க மூன்று ரிக்ஷாவை வாடகைக்கு அமர்த்தி கிராமங்களில் இன்ஸ்சோல்ட்மென்ட் அடிப்படையில் டியுப் லைட், மடக்கி வைக்கக் கூடிய கதிரை, கட்டில் என வியாபாரத்தை தொடங்கினார். உதாரணமாக ஒரு கதிரையின் விலை 200 ரூபாவானால் இவரிடம் கட்டுப் பணத்திற்கு ஒரு நாளைக்கு அல்லது ஒரு வாரத்திற்கு 10 ரூபா என வாங்கலாம். விலை சற்று அதிகம். ஆனால் ஏழைகளுக்கு இது சிறு துளியாக தெரிய.ஒரு வருடத்தில் 400 கைரிக்ஷா, 400 ஊழியர், மேலூரில் தலைமை அலுவலகம். மதுரை தங்கம் தியேட்டருக்கருகில் ஷோரூம், உசிலம்பட்டியில் தளபாட பெக்டரி என வளர்ந்தார். இதை பார்த்துவிட்டுத்தான் பின்னாளில் வி.ஜீ.பன்னீர்தாஸ் (வி.ஜீ.பி ) சகோதரர்கள் மவுண்ட ரோட் சாந்தி தியேட்டருக்க ருகில் ஷோரூம் திறந்து கிரைண்டர்களையும், ரி.வீக்களையும் மாதாந்த கட்டண அடிப்படையில் விற்கத் தொடங்கினர்.

கிழக்கு மாகாண மண்ணை ஆய்வு செய்த பல ஆய்வாளர்கள் கோமாரி, சங்கமான்கண்டி, திருகோணமலை தங்கவேலாயுதபுரம் நிலத்தடி மண்ணுக்கு பல மகிமை உள்ளதாக குறிப்புகள் எழுதி வைத்துள்ளார்கள். இப்பகுதிகளில் 15 அடிக்கு கீழ் மண் ஒருவித சிகப்பு நிறமாக இருக்கும். அந்த மண்ணை ஒரு பிடி எடுத்து ஆய்வு கூடங்களில் மூன்றாகப் பகுத்தால் ஒரு தொகுதி டெய்லர்கள் (தையல்காறர்கள் ) உபயோகிக்கும் சோக் (வெண்கட்டி அல்ல சிகப்பு கட்டி) ஆகவும் மற்றய பகுதி….( இப்போதைக்கு இது வேண்டாம். கொஞ்ச நாளைக்கு சுத்தமான காற்றை சுவாசிப்போம் ) ஆகவும் மற்றய பகுதி விமான என்ஜினை தயாரித்து விட்டு இந்த மண்ணினால் அதை மெழுகி, விறகு அடுப்பில் அதை போட்டு வெப்பமேற்றுவார்கள். அந்த என்ஜின் சூடேறி ஒரு நேக்கா,வாகாக வரும்.அப்புறம்தான் இந்த என்ஜினை விமானத்தில் பொருத்துவார்கள். ஏற்கனவே சில கல்லுளி மங்கர்கள் காதும்  காதும் வைத்தாற் போல் தொழிலை தொடங்கி விட்டார்கள். ஆனால் இது மொத்த கிழக்கு மாகாணத்துக்குமுரிய சொத்து.
அரசிடம் அனுமதி வாங்கி செய்யலாம்.

இல்லையே திகன,வெல்லவாய,திஸ்ஸமகராம பகுதிகளில்தான் இது கிடைக்குமே என்று நினைக்க வேண்டாம்.அது கற்பாறை.அங்கு கிடைப்பது டொலமைட் இன வெண்ணிற கற்கள்.அவைகளை எடுத்து பகுத்து பீங்கான்,மாபிள்கற்கள்,கொம்பியூட்டர் சிப்ஸ் என செய்து முடிவுப் பொருட்களாகவும்,மூலப் பொருட்களாகவும் சில பேர் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றார்கள். கிழக்கில் இருவாட்டியுடன் கூடிய பசையுள்ள மண் கிடைக்கும்.


( தொடருவேன்…அடுத்த வாரம் வங்கிகளில் போய் எவ்வாறு  பேசி வியாபாரக்கடன் பெறலாம் என பார்ப்போம் )

2-5-2009

No comments: