Friday, 15 May 2009

மகிந்த சகோதரயாவுக்கு!

  -யஹியா வாஸித் -

( பாகம் 1 )

ஐயா எம்பெருமானே, முருகா, ராசா, அப்பு ,மகிந்த சகோதரயோ, உங்களத்தான் ஐயா. போதும் ராசா, போதும், எல்லாமே போதும் ஐயனே. பாம்பு செத்து போயிற்று ஐயனே. இனியும் செத்த பாம்ப அடிக்காத ஐயனே. நாங்க ஒரு காலத்தில ஒரு சூப்பர் வாழ்க்கை வாழ்ந்துட்டம் அப்பு. அந்த வாழ்க்கையை எங்களை வாழவிடு அய்யனே. நாங்க வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் கேள் அய்யனே.

எங்கட கிழக்கு மாகாணத்துல ஒரு நோய் இருந்தது. ஓ.எல், ஏ.எல் பரீட்சைகள் தோல்வியில் முடிந்தால் உம்மாமாரும், வாப்பாமாரும் வாயக்கட்டி வயித்தக்கட்டி, வீட்டு ஸ்ரோர் ரூமுல உள்ள நெல்லு மூட்டையில ஒரு இருபது மூட்டையை விற்று எங்களை யாழ்ப்பாணத்துக்கு படிக்க அனுப்புவார்கள். யாழ்ப்பாணம் படிக்க அனுப்புவது என்பது கிட்டத்தட்ட ஏதோ லெமூரியாக்கண்ட த்தில் இருந்து ஆபிரிக்கா கண்டம் போறமாதிரி உம்மா ஒரு பத்து நாள் அழுது, ராத்தாமாரும், தங்கச்சிமாரும் ஒரு அஞ்சி நாள் மூக்குச்சிந்தி, வாப்பா ஊர்பட்ட புத்தி எல்லாம் சொல்லி ஒரு பழைய றங்குப் பெட்டி(சூட்கேஸ்)ல உடுப்புகள், ஒரு குட்டி டோச் லைட், நெயில் கட்டர், பிறஸ் எல்லாம் வைத்து மட்டக்களப்புக்கு பஸ் ஏற்றி விடுவார்கள்.

அப்போதெல்லாம் மட்டக்களப்பு பஸ் நிலையத்திலிருந்து காலை ஏழே காலுக்கு ஒரு சீ.ரீ.பி.பஸ் யாழ்ப்பாணம் புறப்படும். எங்களுர் கொஞ்சம் தூரம் என்பதால் முதல் நாள் நாலுமணிக்கு மட்டக்களப்பு வந்து. மட்டக்களப்பு டவுண் பள்ளிவாசலில் இரவு தங்குவோம். பள்ளி வாசலில் றங்கு பெட்டியை வைத்துவிட்டு சிக்ஸ் பிப்ரீனுக்கு ராஜேஸ்வரா தியேட்டரில் மக்கள் திலகம் எம்.ஜீ.ஆரின் இதயக்கனி பார்ப்போம். இந்த மெட்டர் வீட்டாரின் லிஸ்ட்டுக்குள்ள வராது. படிக்க போற புள்ளைக்கு படமாவது மண்ணாங்கட்டியாவது. படம் முடிந்து வந்து ஹாஜியார் சாப்பாட்டுக் கடையில ஒரு சாப்பாடு. சாப்பாடு என்னவோ அது நம்முட உம்மாமார் ஆக்கிற மாதிரித்தான் இருக்கும். ஆனால் சாப்பாட்டுக்குப்பின் ஒரு ரசம் தருவார்கள். அம்மாடியோவ். மூக்கால ஒரு ஜலம் வரும், வாய் உச்சுக் கொட்டும். கண்ணுகள் இன்னும் ரசம் தேடும். ஹாஜியார்ர மூத்த மகன் சாறனை தாறாப்பிச்சை கட்டிக்கொண்டு பம்பரமாய் சுழல்வார். மொத்த மட்டக்களப்பானும் அந்த ஒரு கோப்பை ரசத்துக்காக ஹாஜியார் சாப்பாட்டுக்கடையில கிய+வில நிற்பார்கள். இதில் மட்டக்களப்பு கச்சேரியில் வேலை செய்த அத்தனை தமிழர்களும் அடங்குவர்.

(இந்த 25 வருட தமிழீழப் போராட்டம் மட்டக்களப்பு டவுணில் சோனியும், தமிழனும் கைகோர்த்து படம் பார்த்த, உலாவிய அனுபவத்தை குழிதோண்டி புதைத்துவிட்டது. )

காலை ஏழு மணிக்கு. 40 பேர் புறப்பட வேண்டிய பஸ்ஸில் எழுபத்தைந்து பேர் அடுக்கப்படுவார்கள். நாங்கள் ஒரு பத்துப் பேர்தான் கிழக்கு மாகாணத்தவர்கள். மற்ற அனைவரும் முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்தவர்கள். அனைவரும் அரச உத்தியோகத்தர்கள். அப்போதெல்லாம் எமது பகுதிகளில் 95வீதம் அண்ட ஜப்னா கொன்றோல். மின்சார மீட்டர் கணக்கெடுக்க வாற மாசிலாமணியர் தொடக்கம் எங்க ஊர் இன்ஸ்பெக்டர் ஒப் பொலீஸ் வரை ஜப்னா. ஜப்னா. ஜப்னா. பெண்களும் கொஞ்சம் வயோதிபர்களும் உட்கார மற்ற அனைவரும் கம்பிகளில் தொங்கிக் கொண்டு பஸ் புறப்படும். புறப்பட்டு 30 நிமிடத்தில் சத்துருக் கொண்டானில் வீதியோரக் கோயிலடியில் பஸ் நிறுத்தப்பட்டு மொத்த பிரயாணிகளும் சாமிதரிசனம் செய்வர்.

15 நிமிடம் சாமிதரிசனம் முடிய பஸ் புறப்படும். யாழ்ப்பாண மக்கள் எல்லாம் காலைச்சாப்பாடு,பகல் சாப்பாடு கட்டிக்கொண்டுதான் பஸ்ஸில் வருவர். பஸ் மெதுவாக புறப்பட ஒரு தோசை வாசனையும், பொங்கல் வாசனையும் பஸ்ஸை திக்கு முக்காடச்செய்யும்..அழகாக வாழையிலையில் சுற்றிக்கட்டப்பட்ட பார்சலை திறந்து சாப்பிட்டு. வீட்டில் இருந்து கொண்டுவந்த சுடவைத்து ஆறிய நீரையே பருகுவார்கள். பஸ் ஏறாவூர், வாழைச்சேனை, மன்னம்பிட்டி என ஹோ என்று கொண்டு செல்லும்.

இருபக்க வீதிகளிலும் பாடசாலை செல்லும் மாணவ மாணவிகள், வயலுக்குச் புஸ் பைக்கிளில் செல்லும் போடிமார், குட்டி, குட்டி சீ 70 ஹொன்டா பைக்கிளில் வேலைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள், கடைகளை திறப்பதற்காக  கடைகளுக்கு முன்னால் ஈக்கில் கட்டால் (விளக்குமாறு) பெருக்கிக் கொண்டிருக்கும் கடை கூலியாட்கள் என ரசித்துக் கொண்டுவரும் போது மன்னம் பிட்டிபாலம் வந்து சேர்ந்துவிடும்.
 
பஸ் றைவரும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக மன்னம்பிட்டி பாலத்தால் ஒரு சுலோ ஓட்டம்தான் ஓடுவார். ஜில் என்ற ஒரு குளிர்காற்று அடிக்கும். பாலத்துக்கு கீழே ஆற்றில் நன்கு உண்டு கொழுத்த எருமை மாடுகள் தண்ணீரில் ரொம்ப ஜாலியா தவழ்ந்து திரியும். சேறும் சகதியுமான அந்த மாடுகள் தலையை திருப்பி ரொம்ப கூர்மையா பஸ்ஸை நோட்டமிடும். ஆங்காங்கே ஆற்றுக்குள் இருந்து சிலபேர் மண் சேகரித்துக் கொண்டிருப்பர்.

மன்னம்பிட்டி பாலம் முடிய உட்கார்ந்திருக்கும் பிரயாணிகள் மெதுவாக கல்கி,குமுதம்,ஆனந்த விகடன் புத்தகங்களை விரித்து வாசிக்க தொடங்குவார்கள். நாங்கள் கம்பியில் தொங்கிகொண்டு அவர்களது கழுத்துகளுக்கிடையால் அந்த புத்தகங்களை மேயுவோம். இந்திய சஞ்சிகைள் வாசிக்கும் ஆர்வம் எங்களுக்குள் இப்படித்தான் முளைவிட்டது. இன்னும் கொஞ்சம் பேர் மோகமுள்,கடல்புறா,கம்பராமாயணம்,எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிவதாண்டவம் என மதவாச்சி வரை பிரயாணம் தொடரும்.

எங்கட பரிதாபம் பார்க்க முடியாமல் பக்கத்தில் இருக்கும் ஒரு அம்மா. இரு புள்ள இரு என சீட்டில் ஆறங்குலத்துக்கு பன்ரெண்டங்குலம் ஒதுக்கித்தருவா. அத்துடன் மெதுவாக வறுத்த நிலக்கடலையும் கொஞ்சம் கிடைக்கும். மதவாச்சிவரை எங்களுக்கு நேற்று ராவு ஹாஜியார் கடையில் சாப்பிட்ட ரசம்தான் நிண்டுபிடித்துக் கொண்டிருக்கும்.

(இந்த இருபத்தைந்து வருட போராட்டம் மட்டக்களப்பு தொடக்கம் மதவாச்சிவரை ஆனந்தவிகடன் பார்த்துக் கொண்டு. நிலக்கடலையும் கொறித்துக்கொண்டு ஒரு சோனியும் தமிழனும் நிம்மதியாக மனம்விட்டு பேசிக்கொண்டு. போகும் சுதந்திரத்தை பறித்துள்ளது. நூற்றிச் சொச்சம் செக்பொயின்ட், பஸ்ஸ_க்குள் குண்டுகள் எதுவும் வெடித்துவிடுமோ என்ற பீதி, எவ்விடத்தில் பஸ்ஸை கன்னிவெடிகள் சிதைத்துடுமோ என்ற அங்கலாய்ப்பு என திக்..திக்..திக்..)

உச்சிவெயில் ஒண்ணரைமனிக்கு மதவாச்சியில் வேர்க்க விறுவிறுவிறுக்க பஸ் நிற்கும். ஒரு குட்டி லஞ்ச் பிறேக். அரை அவியல் சோறு, அவிந்தும் அவியாததுமான வெண்டிக்காயும், மரவெள்ளியும், முந்தாநாளுக்கு முதல் நாள் சமைத்த மாட்டிறைச்சி என வேண்டா வெறுப்பாக விழுங்கிவிட்டு ஒரு எலிபன்ட் ஒறேஞ்ச் பார்லி அடித்து சமிக்கச் செய்து கடையைவிட்டு வெளியேறுவோம். இதில் ஒரு ரகசியம் என்னவென்றால் றைவருக்கும் கண்டக்டருக்கும் இங்கு சாப்பாடு பிறீ. அவர்களை தனியே அழைத்து கடை ஓணர் கோழி புரியாணி, அவிச்ச முட்டை, மீன் பொரியல் என தனியாக கவனிப்பார். அவர்களுக்கு எல்லாம் சுடச்சுட நடக்கும். எங்களுக்குத்தான் நாறினதுகள்.

மதவாச்சியில் இருந்து நேர் றோட். துறு முறிகண்டிதான். றைவர் சீட்டில் உட்கார்ந்து சேர்ட் கொலறை ஒரு இழுவை இழுத்து தூக்கி போட்டுக்கொண்டு ஸ்டேரிங்கை பிடித்தால் முறிகண்டிலதான் பிறேக்போடுவார். வேகா வெயில். அனல்காத்தடிக்கும். பஸ் கம்பிகளில் தொங்கி, தொங்கி இரண்டு தோள்சந்து (தோள்பட்டை)களும் களண்டு விடும்.எப்படா முறிகண்டிவரும் என ஏங்கும் போது முறிகண்டி குட்டிக் கோயில் தரிசனம் கிடைக்கும்.

நாங்கள் ஆசுவாசப்படுத்தி இறங்குவதற்கிடையில் அக்காமாரும், அம்மாமாரும் சட சடஎன இறங்கி அங்குள்ள வாளிக்கிணற்றில் கைகால் அலம்பிக்கொண்டு வந்து மடிசார் சாறிகளை சரிசெய்து, முந்தானைகளை இடுப்பில் சொருகிக்கொண்டு கடவுளே எனக்கூறிக் கொண்டு தேங்காய் உடைத்து திருநீறு சாத்தி கோயிலை நாலு சுற்று சுற்றி…. ரம்மியம்,ரம்மியம்,அப்படி ஒரு ரம்மியம.; தோளுடைய செவியன்….கந்தனுக்கு அரோகரோ முருகனுக்கு அரோகரா…மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க….போற்றி போற்றி ஐயனே போற்றி, அம்மா அகிலாண்டேஸ்வரியே…

அய்யனே திருத்தல குண்ட நாயகனே முருகா….என்ற சூலமங்கலம் சகோதரிகளின் பக்திப் பாட்டுக்கள் எங்கள் மனதைவந்து முட்டும். இப்போது அந்த இடத்தில் போய் நின்றால் துப்பாக்கி சோங்குதான் வந்து தட்டும்.

ஆண்கள் மெதுவாக அப்படியே போய் நிலலக்கடலை வாங்கி கொறித்துக்கொண்டு, ஆசுவாசுவமாக வந்து தேங்காய் வாங்கி. சாமியை ஒரு பார்வை பார்த்து ஏதோ புசு புசுத்துவிட்டு டமால் என தேங்காய் உடைப்பார்கள். கொஞ்சம் இளசுகள் தூர நின்று இந்தச்சாமி நமக்கு என்னத்த கிழிக்க போகுது என நினைத்துக்கொண்டு ஒரு தம் (சிகரட்)அடித்துக் கொண்டிருப்பார்கள்.

அப்புறம் பக்கத்தில் உள்ள தேனீர்கடைகள். உழுந்துவடை, கல்லு தோசை, பெரிய பெரிய சிவப்பரிசி சோறு, அதற்குள் பால் சொதியை ஊற்றினால் அது ஒருபக்கத்துக்கு வரம்பை உடைத்துக் கொண்டு போகின்ற வாய்க்கால் தண்ணிபோல ஓடி பீங்கான் போடருல போய் நிற்கும். ( இங்கு ஒரு ரகசியம் சொல்ல வேண்டும். உம்மா ஒரே ஒரு நாள் இந்த பெரிய அரிசி சோறு தந்ததற்காக சோத்துப் பீங்கானை தலையை சுற்றி குசினிக்குள்ள வீசி. அதற்குப் பிராயச்சித்தமாக சோத்துப் பீங்கானையாடா வீசினாய் நாயே என. இறைவன் திருச்சி கொட்டப்பட்டு அகதிமுகாமில் கொட்டப்பாக்கு சைஸில் ஒண்ரை வருடம் உணவு தந்து தண்டித்தான். கோட் இஸ் பிக் என்பது இதுதானோ. அப்போது திருச்சி எழில் நகரில் குடியிருந்த சிறுகுடிமகன் பிரபாகரனின் அப்பர் வேலுப்பிள்ளையருடன் போய் அரசியல்கதைத்துக் கொண்டிருந்தையோ, திருச்சி டோல் கேட்டில் நம்ம  செல்வம் அடைக்கலநாதனின் புஸ்     பைசிக்கிலுக்கு காத்தடித்த கதைகளையோ இந்த அத்தியாயங்களில் நான் சொல்லப்போவதில்லை) அப்புறம் சாம்பார். கத்தரிக்காய் கமகமக்க, தக்காளியும், புளியும் பதமாகப் போட்ட சுகமான சாம்பார்.

அதற்கப்புறம் ஒரு சூப்பர் பிளேன்டி. கொழும்பு ஹோட்டல்காறர்கள் போல் இத்தனூண்டு கிடையாது. வஞ்சகமில்லாமல் ஒரு புள் கிளாஸ் பிளேண்டி. அப்புறம் கடைசந்துகளுக்குள்ளால் பின்னால் போய் மலசல கூடத்தை தரிசித்து முடிய பஸ் ஹோரன் சத்தம் கேட்கும். மீண்டும் ஒரு புது தெம்புடன் பஸ் புறப்படும். செம்மண், பற்றைக்காடுகள், கண்ணுக் கெட்டிய தூரம் வரை வெயில், வெயில், வெயில். குட்டி ராண்ஸிஸ்டர் வைத்துள்ளவர்கள் கே.எஸ்.ராஜாவையும், பி.எச்.அப்துல் ஹமீட்டையும் ரசிப்பார்கள். இப்படியே புழுதி வாசனை மூக்கைத்துளைக்க ஆனையிறவு, பரந்தன், வெள்ளை வெளேர் என்ற உப்பளங்கள், உப்பளங்களை உரசிக் கொண்டு அனலும்,வெப்பமுமாக ஜிவ் என்று ஒரு கடல்காற்று. சுகம், சுகம், சுகம். எய்ற் ஹவஸ்; பிரயாணத்தின் வலியும் இந்த கசமுசா காற்றில் தொலைந்து போகும். றைவர் மெதுவா ஒரு கோடாச்சுருட்டை எடுத்து மூக்கில் வைத்து ஒரு நுகருவ நுகர்ந்து விட்டு சுருட்டுக்கு கொள்ளி வைப்பார். கொஞ்சம் ஆசாரமான பெண்கள் றைவரை ஒரு நோட்டம் இடுவார்கள். டோன்ட் வொறி என்ற ஒரு நக்கல் பார்வையுடனும். வண்டி ஒரு தள்ளாட்டத்துடன் அலிமன்கட பாஸாகும்.

(25 வருட போராட்டம் இந்த அனுபவத்தையும், ஒரு ஜெனரேசனின் வாழ்வாதாரத்தையும்,வாழ்க்கையையும், இயற்கை காற்றையும், முறிகண்டி சுகத்தையும், ஆணையிறவு புழுதியையும், தமிழனுடன் மனம்விட்டு பேசும் அனுபவத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டது சகோதரயா.)

போதும் சகோதரயா. போதும். எய்தவனிருக்க அம்பை நோவான் ஏன் சகோதரயா. ஒரு குட்டி கறுப்பாட்டுக் கூட்டத்துக்காக மொத்த வெள்ளாட்டையும் கோபிக்கலாமா போதிமைந்தனே.பிளீஸ். ஆயிரம் துப்பாக்கி சனியன்களுக்கு சமமான அந்த மன்னிப்பு என்ற சூலாயுதத்தை யூஸ் பண்ணிப்பார்த்தால்தான் என்ன போதிசத்துவனே. பாவம் வன்னிக் குழந்தைகள் தலைவா. வயிறு பதறுது ராசா, இதயம் கனக்குது ஐயனே, நெஞ்சு பொறுக்குதில்லையே, சோறு வயிற்றுக்குள்ள எறங்க மறுக்குது ராசா. சிவப்பு குண்டரிசி சோறும் ஆக்கி,  மீன் குழம்பும் வைத்து,கருவேப்பிலைய
மைபோல அரைச்சி. ஒரு குழி செய்து வன்னி செம்மன் சகதிகளில் உண்டு களித்த அந்த அனுபவம் இன்னும் இதயங்களை வருடுகிறது தலைவா. பிளீஸ்.பிளீஸ் அய்யனே. வீ டோன்ட் கெயார் எபவுட் கறுப்பாடு. வீ எக்ஸ்ரீம்ளி வொறி எபவுட் வெள்ளாடுகள்.


(தொடரும்)

14 – 05 - 2009

No comments: