Sunday 10 May 2009

வடக்கின் வசந்தத்திற்கு வழியென்ன?

-மனோரஞ்சன்-

அகில இலங்கை தமிழ் காங்கிரசில் தொடங்கி தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழப் புரட்சி அமைப்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் என தமது தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை இவர்களிடம் கையளித்து தமிழ் மக்கள் இன்று கையறு நிலையிலேயே நிற்கிறார்கள். தமிழ் மக்களால் தமக்கு வழங்கப்பட்ட சமூக அரசியல் ஒப்பந்தத்தை (Socio Political contract) நாம் சரிவர நிறைவேற்றவில்லை. இவ்வுண்மையை சகலரும் மனம் திறந்து ஏற்றுக்கொள்ளுவதே தமிழ் மக்களின் வாழ்வில் வசந்தம் பிறக்கச் செய்வதற்கான முதல் படியாகும்.

2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் தென்பகுதியை எதிர்பாராவிதமாக ஹரிகேன் கட்ரீனா என்னும் கடும் சூறாவளி தாக்கியது. பொருளாதாரம், இராணுவம், தொழில் நுட்பம் ஆகிய சகலதிலும் உலகின் முதலிடத்திலுள்ளதாக கூறும் அமெரிக்க அரசாங்கமும் அதன் நிர்வாக இயந்திரமும்கூட சூறாவளியால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டதாக கண்டனங்களுக்கு உள்ளானது. இந்த நிலைமையை  'A Total system failure' என பல ஊடகங்கள் அமெரிக்க அரசையும், அரச இயந்திரத்தையும் கடுமையாக சாடின. அந்த சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள் என்பதாலேயே அமெரிக்க அரசாங்கம்  மெத்தனமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் இலங்கையின் வன்னியில் ஏற்பட்டுள்ள அவலமானது எதிர்பாராதது ஒன்றல்ல. ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கை அரசாங்கத்தாலும், சர்வதேச சமூகத்தினராலும், மனிதாபிமான அமைப்புக்களாலும், உலக நாடுகளாலும் எதிர்பார்க்கப்பட்ட நிலைமையாகும். பாரியளவில் இடம்பெயரும் அந்த மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்கள் முதல் தற்காலிக தங்குமிட வசதிகள் என்பவற்றை உரிய முறையில், விரைவில் செய்து கொடுத்தல் என்பது மேற்சொன்ன சகலரினதும் மிகப் பொறுப்பானதும் பிரதானமானதுமான பணியாகும்.

சர்வதேச மட்டத்திலிருந்து எத்தகைய உதவிகள் ஒத்தாசைகள் கிடைத்தாலும் அதனை செவ்வனே நிறைவேற்றுவது இலங்கை அரசாங்கத்தையே சார்ந்ததாகும். தமது யுத்த வெற்றிக் களிப்பை முக்கியத்துவப்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் தமிழராக இருப்பதால் அரசாங்கம் மெத்தனமாக நடந்துகொள்ளுமாக இருந்தால் அது அரசாங்கத்திற்கு பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இராணுவ ரீதியான யுத்தத்தை விடவும் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, மீள் கட்டமைப்பு என்பதே மிகப் பெரிய யுத்த நடவடிக்கையாகும்.

பொதுவாகவே இலங்கை போன்ற நாட்டில் இயற்கை அனர்த்தங்களினால் பாரிய மானுட அவலங்கள் நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னர் நிகழும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது ஊழல்கள், மோசடிகள் உ;ட்பட பல்வேறு முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகள் வெளிவருவது வழமையாகும். ஆனால் அதுபற்றி பெரிதாக அதிகாரத்திலுள்ள அரசாங்கங்கள் அலட்டிக் கொள்வதுமில்லை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுமில்லை. காரணம் அந்த முறைகேடுகள் மேலிருந்து கீழ்வரை சகல மட்டங்களிலும் நிகழுவதாலேயேயாகும்.

இலங்கையில் வடக்குப் போர் முனையில் பாரிய இராணுவ நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. யாழ்ப்;பாணக் குடாநாடு, மன்னார்த் தீவும் அதை அண்டிய சில கிராமங்களும், வவுனியா நகரமும் அதனை அண்டிய பகுதிகளும் நீங்கலாக வடமாகாணத்தின் பாரிய பிரதேசம் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் உடனடியாக குடியேறமுடியாத பிரதேசங்களாக காணப்படுகின்றன.  குறிப்பாக கிளிநொச்சி மாவட்டமும் முல்லைத் தீவு மாவட்டமும் முழுமையாக அதன் பிரதான நகரங்கள் உட்பட முழுமையாக சிதைந்து போயுள்ளன. வடக்கில் அரசியல் ஸ்திரத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளது. சகல சமூக ஜனநாயக கட்டுமானங்கள் சுதந்திரமாக இயங்க முடியாது முடக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கணக்கில் எடுக்கப்பட்டே வடக்கின் வசந்தம்பற்றி பேசப்படல் வேண்டும்.


கிழக்கின் உதயத்தில் கிடைத்த அனுபவம்

கிழக்கு மாகாணத்தில் பாரிய யுத்த நடவடிக்கைகள் முடிவடைந்த கையோடு அரசாங்கம் கிழக்கின் உதயம் என்னும் புனரமைப்பு பணிகளை துரிதமாக முடுக்கிவிட்டது. அதில் முக்கிய விடயமாக கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி முடித்தது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் சகோதரரும் பிரதான ஆலோசகருமான பசில் ராஜபக்சவின் நேரடி மேற்பார்வையில் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சமூக மீள்கட்டுமானம் என்பவை மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கம் இதனைத் துரிதமாகவும் அக்கறையுடனும் செய்வதற்கு பின்புலமாக இருந்த அரசியல் அவசியப்பாடு யாவரும் அறிந்ததே.

கிழக்கு மாகாணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் அங்குள்ள மக்களுக்கு 'சிங்கள அரசாங்கம்' எதுவுமே செய்யாது என்னும் உள்ளு+ர் மற்றும் சர்வதேச பரப்புரைகளை தோற்கடிப்பது ஒரு நோக்கமாகும். மற்றையது கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களை வடக்கின் பிரிவினைவாத அரசியலிருந்து பிரிப்பதுமாகும். அடுத்து கிழக்கு மாகாணத்தில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பிற்கு எதிர்காலத் தேர்தல்களில் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான அடித்தளத்தையிடுவது.

கிழக்கில் மூவின மக்கள் வாழ்வதும், கணிசமான மக்கள் பிரிவினர் ஐக்கிய தேசிய கட்சிக்கும், முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பினனர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பெரும்பாலான முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசிற்கும் வாக்களிக்கும் நிலைமையே காணப்பட்டது. இந்த நிலையில் அங்கு தமது வெற்றியை உறுதிப்படுத்துவது அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது.  மேற்சொன்ன சகல விடயங்களிலும் கருணா மற்றும் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசாங்கத்திற்கு பெரும் ஒத்தாசையாக இருந்தார்கள் என்பதும் இரகசியமான விடயமல்ல.

அதன் பெறுபேறாக பிள்ளையான் தலைமையிலான TMVP உள்ளுராட்சி சபைகள், மாகாண சபை என்பவற்றின் அதிகாரங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது. கருணா மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக உள்வாங்கப்பட்டிருப்பதோடு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராகி அதன் உபதலைவர் பதவிக்கும் நியமிக்கப்பட்டுளார். இந்த நிலைமையானது கிழக்கு மாகாணத்தின் அரசியல் பயணத்தை ஒரு புதிய திசையை நோக்கி நகர்த்திச் செல்லப்போகின்றது. 

வட மாகாணத்தின் மீள் குடியேற்றமும் அரசியலும்

வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாகும். அங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்கள் முற்று முழுதாக புலிகளினால் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு நிலைமைகளை கையாளுவது அரசாங்கத்திற்கு அவ்வளவு இலகுவானதல்ல. கிழக்கில் மேற்கொண்டதுபோல் வடக்கில் அவ்வளவு விரைவாக மீள் குடியேற்றத்தை செய்ய முடியாது. வடமாகாணம் முழுவதும் நிலக்கண்ணிகள் விதைக்கப்பட்ட பூமியாக காணப்படுகின்றது. ஆகக் குறைந்தது இரண்டுவருடங்களாவது செல்லலாம் என்பதே அங்குள்ள யதார்த்த நிலைமையாகும்.

இந்த நிலைமைய எதிர்பார்த்தே அரசாங்கம் நிரந்தரமான அகதி முகாம்களை ஏற்படுத்திவருகின்றது. மன்னார் மாவட்டத்தில் ஆரம்பித்து கட்டம்கட்டமாக அந்த மக்களை குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாகத் தெரிகின்றது. பாரிய யுத்த நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை முகாம்களில் அடைத்துவைத்திருப்பது என்பது பாரிய நடை முறைச் சிக்கலையும் அரசியல் சிக்கலையும் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 'புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து வடக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டது' என அரசாங்கம் பிரச்சாரப்படுத்தும் போது அந்த மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்திருப்பதற்கான தர்க்கத்தை அது இழந்து விடும். எனவே மீள்குடியேற்றப் பணிகளை அரசாங்கம் இயன்றளவு விரைவில் மேற்கொள்வது தவிர்க்க முடியாதது. 

முதலாவது அங்குள்ள மக்கள் அகதி முகாம்களில் இருந்து தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படல் அவசியம். அடுத்து பிரதானமாக அந்த மக்களின் பொருளாதார வாழ்வை கட்டியெழுப்புவதற்கான உதவிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். கல்வி, மருத்துவம், சுகாதார வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் என்பன முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய ஏனைய விடயங்கள் என்பதில் எவருக்கும் பேதங்கள் இருக்க முடியாது. கிழக்கில் ஒரு இலட்சத்து எண்பதினாயிரம் மக்களை மிகக் குறுகிய காலத்தில் செவ்வனே குடியமர்;த்திய திறமையான அனுபவம் தமக்கு இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. அதில் உண்மையும் இருக்கின்றது என்பதை அங்கு சென்று பார்க்கும் பலரும் ஒத்துக் கொள்கின்றனர்.

கிழக்கில் இதனை மேற்கொள்ளுவதற்கு அரசாங்கத்திற்கு இருந்த பெரும் வாய்ப்புகள் இரண்டு. ஒன்று புலிகளின் இராணுவ ரீதியான பலம் கிழக்கில் நொருக்கப்பட்டதாகும். வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு புலிகளுக்கு அவர்களின் பாதுகாப்பு தொடர்பான தலையிடியை கொடுத்த வண்ணமே அரசாங்கம் கிழக்கின் மீள்கட்டுமான பணிகளை மேற்கொண்டது. அவற்றை குழப்புவதற்கு புலிகளால் எந்த வகையிலும் முடியவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும். இரண்டாவது அரசாங்கத்துக்கான அரசியல் ஆதரவை கருணா, பிள்ளையான் போன்றோர் வழங்கியமை.

வடக்கில் வரக்கூடிய சவால்கள்

வடக்கில் மீள்குடியேற்றம் மீள்கட்டுமானம் என்பதை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் 'பெரும் திட்டத்தை'  (Master Plan) தயாரித்து வைத்திருப்பதாக தெரியவருகிறது. ஆனால் முழு வட மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதும் அதேவேளை அரசாங்கத்திற்கு சார்பாகவும் செயல்படக்கூடிய தமிழ் அரசியல் தலைமையை இனம்காணும் முயற்சியில் அரசாங்கம் தற்போது இறங்கியிருக்கிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பின் சின்னத்தின் கீழ் போட்டியிடக்கூடிய தமிழ் தலைமையாவும் அதேவேளை வடக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கை கொண்டுள்ள அல்லது செல்வாக்கை பெறக்கூடிய தமிழ் அரசியல் சக்தியையே அது தேடுகின்றது.

அரசாங்கத்துடன் முழுமையாக தம்மை இனம்காட்டி அரசியல் செய்யும், ஏற்கனவே மத்திய அமைச்சில் அமைச்சராக பணியாற்றும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு புறம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்டின் அரசியல் கட்சி), ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா) ஆகியோர் இணைந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுபுறமும், புலிசார்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னொரு புறமுமே வடக்கில் காணப்படுகின்றன.

ஆனால் வடக்கைப் பொறுத்தவரை அரசாங்கம் கணக்கில் எடுத்துச் செயற்பட வேண்டிய பிரதான ஒரு விடயமுண்டு. அதாவது அவசரப்பட்டு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு செல்வதற்கு முன்னர் அங்கு சிதைக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்டுமானங்கள் மீளச் சீர்செய்யப்படும் பணி என்பதாகும். கிழக்கில்கூட இன்னமும் அந்த நிலைமை முற்றாக கொண்டுவரப்பட வில்லை. கருணா பிரிவினருக்கும் பிள்ளையான் பிரிவினருக்கும் இடையிலான முரண்பாட்டை அரசாங்கம் பாவிக்கின்றது என்னும் குற்றச்சாட்டு வெளிப்படையாகவே முன்வைக்கப்படுகின்றது. கிழக்கில் ஜனநாயக அரசியல் சூழல் உருவாகுவதற்கான பிரதான தடையாக இதுவே காணப்படுகின்றது.

இதே நிலைமை வடக்கிலும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. புலிகளின் இராணுவப் பலம் அதிகமாக இருந்த காரணத்தினால் வடக்கிலும் தமிழ் கட்சிகள் தமது பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது புலிகளின் இராணுவப் பலம் உடைக்கப்பட்டுள்ள நிலைமையில் தமிழ் கட்சிகள் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்களா என்னும் விடயம் விவாதத்திற்கு வரவிருக்கிறது. குறிப்பாக இதற்கு முகம் கொடுக்கவிருக்கும் கட்சிகளாக ஈ.பி.டி.பி.;, புளொட், மற்றும் வவுனியாவில் புதிதாக இயங்கத் தொடங்கியுள்ள சிறீ டெலோ என்பவற்றை கூறலாம்.

வட மாகாணத்தை கையாளுவது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு Acid Test என்றே கூறவேண்டும். நிலைமைகளை தவறாகக் கையாண்டால் அது கையை சுட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். புலிகளின் தலைமை அதாவது பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் அழிக்கப்பட்டால் அது அரசாங்கத்திற்கு மிக வாய்ப்பான நிலைமையை உருவாக்கும். அவர்கள் தப்பி ஓடிவிட்டால் வடக்கில் இன்னும் பல வருடங்களுக்கு பாரிய இராணுவப் பிரசன்னம் இருக்க வேண்டியிருக்கும். அந்த சூழ்நிலையில் தமிழ்க் கட்சிகள்  ஆயுதங்கள் வைத்திருப்பதும் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும். இத்தகைய ஒரு நிலைமையில் அரசாங்கம் எதிர்பார்க்கும் அரசியல் ஸ்திரத் தன்மையை அது கிழக்கில் கொண்டு வந்த அளவிற்குகூட வடக்கில் கொணடுவர முடியாமல் போய்விடும்.

வட மாகாணத்தை பொறுத்தவரை மக்கள் 30 வருட ஆயுத அரசியலாலும் யுத்தக் கொடுமையினாலும் வதைக்கப்பட்டு களைப்படைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக எதிர்பார்ப்பது துப்பாக்கிகளின் அச்சுறுத்தலற்ற நிம்மதியான வாழ்வையே. அதனை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கமோ அல்லது அதற்கு ஒத்தாசையாக தமிழ் அரசியல் சக்திகளோ செயற்படுகின்ற பட்சத்தில் அந்த மக்களின் ஆதரவு அவர்களுக்கே கிட்டுமென்பதில் எவ்வித ஐயப்பாடுகளுக்கும் இடமில்லை. 

(உதயம்  வைகாசி)

No comments: