Saturday 11 April 2009

கருணா என்றகின்ற முரளிதரனுக்கும், கிழக்குமாகாண மக்களுக்கும். (பகுதி 8)

   - யஹியா வாஸித் -

வெறும் கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும் மூலதனம்.

இன்று எம்மில் பலர் உலகமெல்லாம் பரந்து இருக்கின்றனர். எல்லோருக்கும் தாம் நிறைய உழைக்க வேண்டும். நிறைய பணம் உழைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றதே தவிர அதை எவ்விதம் நடை முறைபடுத்துவது என்பதில் தான் பிரச்சனையே. பணமிருக்கிறது தொழில் செய்யலாம்.. ஆனால் என்ன தொழில் செய்யலாம். என்பதுதான் அடுத்த பிரச்சனை. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்தேடுபவர்கள்தான் இவர்கள்.

அவுஸ்திரேலியாவில் 15வருடம் இருந்து விட்டு சிறிலங்கா சென்ற ஒருவருக்கு. தான் ஒரு மாணிக்கக் கல் வியாபாரியாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. இரத்தினபுரி அவிசாவளை ரோட்டில் அரச காணியொன்றை மாணிக்கக்கல் தோண்டுவதற்காக குத்தகைக்கு எடுத்து பல கூலி ஆட்களை கொண்டு தோண்டத் தொடங்கினார். இப்பகுதிகளில் அரசிடம் காணிகளை குத்தகைக்கு எடுக்கலாம். ஒவ்வொரு நிலத்தைப் பொறுத்து காணியின் விலை வேறுபடும். 15லட்ச ரூபாவிலிருந்து 85லட்ச ரூபாவரை இரு நூறு அடி நீள அகல காணியை வாங்கலாம். 60லட்ச ரூபா கொடுத்து இவர் வாங்கிய நிலத்தில் 15லட்ச ரூபா பெறுமதியான மாணிக்க கல்கள்தான் கிடைத்தது.

மீண்டும் ஒரு காணியை 40லட்ச ரூபா கொடுத்து வாங்கினார்.அ தில் இரண்டு லட்ச ரூபா பெறுமதியான மாணிக்க கல்கள்தான் கிடைத்தது .இவர் நொந்து நூலாகி ஓட்டாண்டியாகி. இருக்க இடமும் இல்லாமல் பல வருடம் ஓட்டாண்டியாகி விட்டார். அவிசாவளை ரோட்டில் ஒரு குட்டி பெட்டிக்கடை வைத்துக் கொண்டு காலத்தை கடத்தினார். பேங்கொக் மாணிக்கக் கல் வியாபாரிகள் அடிக்கடி இந்த வீதியால் பலாங்கொடைக்கு மாணிக்கக்கல் வாங்க செல்வது வழமை.ஒரு நாள் இவ்வழியால் வந்த ஒரு பேங்கொக் வியாபாரி காரை நிறுத்தி இவரிடம் சிகரட் பக்கட் வாங்கியுள்ளார். தற்செயலாக இவரிடம் கதைத்துக் கொண்டிருந்த அந்த வியாபாரி கடைக்குள் நோட்டமிட அங்கே ஒரு மூலையில் கதவிற்கு அணையாக ஒரு கல் (ஒண்ணரை அடி உயரம்) இருப்பதை கண்டு.அது என்ன என கேட்டுள்ளார்.தனது பின் கதவு அடிக்கடி காற்றுக்கு மூடிக்கொள்ளும். அதை தடுப்பதற்காக அக்கல்லை வைத்துள்ளேன் என்றுள்ளார். அடேய் அடி முட்டாளே.நான் ஒண்ணரை வருடமாக இந்த "எமதிஸ்ட்" இன கல்லை வாங்க நாயாய் அலைந்து கொண்டிருக்கின்றேன் எனக் கூறி மொத்தமாக அந்தக் மாணிக்கக்கல்லை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளார். இப்போது அவர் இலங்கை மகா பணக்காரர்.கண்டி சுகசென ஹொஸ்பிட்டலுக்கு முன்னால் உள்ள பில்டிங் தொடக்கம் பேராதனை பூங்காவரை உள்ள மொத்த கட்டிடங்களுக்கும் சொந்தக்காரர் அவர்.

ஒரு தொழிலை செய்யும் போது முதலில் அதைப்பற்றி கொஞ்சம் துளியளவு அறிவு இருக்க வேண்டும்.அப்புறம் தொழிலை தொடங்கலாம். இல்லாவிட்டால் மொத்த பணத்தையும் கடலில் கொண்டு கொட்டிவிட்டு பெட்டிக்கடை வைக்க வேண்டியதுதான். இரத்தினபுரி, அவிசாவளை, பலாங்கொடை, ஹப்புத்தள போன்ற இடங்களில் புழூசபயர், எலோசபயர், எமதிஸ்ட், தூரமலின், கெற்ஸ்ஐ, ஸ்டார் சபயர் சில சமயம் டைமன் என உலகப் புகழ் பெற்ற மாணிக்க கல்கள் கிடைக்கும். வெள்ளையர்களுக்கும், அரேபியப் பெண்களுக்கும் இவைகள் என்றால் கொள்ளை ஆசை. இவர்கள் பொண்டாட்டிகளிடமும், பெண் பிள்ளைகளிடமும் சண்டை பிடித்து விட்டு அதை சமாதானப் படுத்துவதற்காக இக்கற்களை பரிசாக கொடுப்பார்கள்.

அடுத்தமுறை ஊருக்கு வெகேஷனோ. ஹொலிடேவோ போய்வரும் போது அப்படியே இரத்தினபுரி டவுணுக்கு சென்று அங்குள்ள ஆயிரக்கணக்கான மாணிக்கக்கல் வியாபாரிகளிடமும் உட்கார்ந்து பேசி ஒரு பத்தாயிரம் ரூபாவுக்கு குட்டி குட்டி மாணிக்ககல்களாக நாலைந்தை வாங்கி வாருங்கள். உங்களை சந்திக்கும், அல்லது உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள உங்களுக்கு அறிமுகமான வெள்ளையர்களிடமும், அரேபிக்களிடமும் காட்டுங்கள்.அக்கற்கள் சில சமயம் ஒரு லட்ச ரூபாவுக்கு விலைப்படலாம். அப்புறம் மௌ;ள மௌ;ள வியாபாரத்தை பெருக்கலாம் .கொழும்பு காலி வீதியில் உள்ள இலங்கை மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்துக்கு சென்று அது உண்மையான மாணிக்க கல்லா என இலவசமாக பரிசோதிப்பதுடன், அது சம்பந்தமான சகல புத்தகங்களையும் இலவசமாக அங்கு பெறலாம்.

ஐரோப்பிய நாடுகளிலும், அரபு நாடுகளிலும் மாடாய் உழைத்து பணத்தை ஊருக்கு எத்தனை வருடத்துக்குத்தான் அனுப்பிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள். வீட்டுக்கு கலர்கலராக பெயின்ட், அடுத்த வீட்டுக்காறர் வீட்டுக்குள்ள மூன்று டொய்லட் வைத்துக் கட்டியிருக்கின்றான். நாம் நாலு டொய்லட் வைக்க வேண்டும். 36அங்குல பிளாஸ்மா ரீவி, அதிலேட்டஸ்ட் மொபைல் போன் என ஊருக்கு அனுப்பிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு நமது காலடியில் விரிந்து கிடக்கும் உலகத்தை கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள். அப்புறம் பத்து டொய்லட் வைத்து, விதவிதமாக பெயின்ட் அடித்து வீடுகட்டலாம். இது வியாபார உலகு ஒவ்வொரு நாடும் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்காக தங்கள் நாடுகளில் பல நூறு "எக்ஸ்ஸிபிஸன்சென்றர்" (பொருட்காட்சி சாலை) களை கட்டி வைத்துள்ளது. உலகம் முழுதும் தினமும் ஆயிரக்கணக் கான பொருட்காட்சிகள் இலவசமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த எக்ஸ்ஸிபிஸன் ஹோள்கள் மிகபிரமாண்டமாக இருக்கும்.உலகில் உற்பத்தியாகும் சகல பொருட்களும் தையல் ஊசி நூலில் இருந்து இன்று தயாரிக்கப்பட்டுள்ள எம்.எக்ஸ்.118 என்கின்ற அதிநவீன துப்பாக்கிவரை காட்சிக்கு வரும்.

கொழும்பில் லேக் ஹவுஸ் பத்திரிகை காரியாலயத்துக்கு முன்னாலும்,பீ.எம்.ஐ.சீ.எச்.இலும் கடந்த ஒரு சில வருடமாக ஆரம்பித்துள்ளார்கள் .டுபாயில் தினமும் நடந்து கொண்டிருக்கின்றது. சைனா,பேங்கொக்,ஹொங்கொங்கில் ஒவ்வொரு விநாடியும் நடந்து கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தில் 143, பெல்ஜியத்தில்23 ,பிரான்சில் 47, அமெரிக்காவில் ,கனடாவில் என பல லட்சம் எக்ஸ்ஸிபிஸன் சென்டர்கள் இருக்கின்றன.

கொம்பியுட்டரில் படம் பார்ப்பதை விட்டுவிட்டு கொஞ்ச நேரம் "ட்ரேட் எக்ஸ்ஸிபிஸன்.கொம்" எனத்தட்டுங்கள். நீங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ அந்த நாட்டை தேடுங்கள். அப்புறம் எல்லாம் புரியும். ஓவ் வொரு நாளுக்கு ஒவ்வொரு பொருட்காட்சி என இங்கு நடக்கும். இன்று உணவு(பூட் எக்ஸ்ஸிபிஸன்) என்றால் அடுத்த நாள் புத்தகம், அதற்கடுத்த நாள் துணி,அப்புறம் சமைத்த உணவு,  மொபைல் போன்,மீன் பிடி உபகரணம், மணிக்கூடு, குதிரை உணவு, பிஸ்கட் என பல ஆயிரம் தினமும் நடந்து கொண்டே இருக்கும். அனுமதி முற்பதிவு செய்பவர்களுக்கு இலவசம். நேரடி ஆயின் 10 டொலர். இன்டர் நெட்டிலேயே முற்பதிவு செய்து கொள்ளலாம். யாரும் போகலாம். வியாபரிகளைத்தான் அனுமதிப்பார்கள். ஆனால் போமை நிரப்பும் போது ஏதாவது ஒரு வியாபார பெயரைப் போட்டால் போதும். யாரும் வந்து கேட்கப் போவதில்லை.

உதாரணமாக நீங்கள் மீன் பிடித்தொழிலில் ஆர்வமுள்ளவராக இருந்தால் மீன் (பிஸ்ஸிங் எக்ஸிபிஸனுக்கு) பொருட்காட்சிக்கு போகலாம். அதே போல் கொம்பியூட்டர் ஆனால் ஐ.ரி.அல்லது கொம்பியூட்டர் பொருட்காட்சிக்கு முற்பதிவு செய்து கொள்ளலாம். உலகில் புதிது புதிதாக உற்பத்தியாகும் பொருள்கள் எல்லாம் இங்கு வரும். இப்போது துபாயில் "எக்ரிகல்சர் எக்ஸ்ஸிபிஸன்" நடந்து கொண்டிருக்கிறது. அங்கே ஆடு, மாடு, கோழி, மீனில் தொடங்கி அவற்றிற்கான உணவு,அதற்கான நோய்த்தடுப்பு மருந்து, நவீன இயந்திரங்கள்,குறைந்த செலவில் விவசாயம்,பண்ணைகள் எப்படி அமைக்கலாம் என கடைபரப்பி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தவாரம் இங்கிலாந்தில் "ஏர்ள்ஸ் கோர்ட் எக்ஸ்ஸிபிஸன் சென்றரில்" கோப்பி வியாபாரிகள்,கோப்பித்தூள் வியாபாரிகள்,அவைகளை தயாரிக்கும் இயந்திர கம்பனிக்காறர்கள் எல்லாம் குவியப் போகின்றார்கள்.இந்தியாவில் பம்பாயில் உள்ள நாரிமன் பொருட்காட்சி சாலையில் றப்பர் பொருட்காட்சி தொடங்கி விட்டது.ஆட்டுத்தோல்,மாட்டுத்தோல்,பாதணி,கைப்பை வியாபாரியிலிருந்து கால் செருப்பு தைக்கும் இயந்திரம்வரை உற்பத்தி செய்யும்வியாபாரிகள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். செக்கோஸ்லோவேக்கியாவில் அடுத்த மாதம் ஆயுத வியாபாரிகளின் பொருட்காட்சி இருக்கிறது.ஹொங்கொங்கில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியும்,நியுயார்க்கில் போன்கார்ட் கம்பனிகளுக்கான பொருட்காட்சியும் போன வாரம்தான் நடந்து முடிந்தது.

குட்டிக் குட்டி கம்பனிகளிலிருந்து பில்கேட்ஸ்ஸின் ஐ.ரி.கம்பனிவரை இங்கு வருவார்கள். எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இதற்குள் ஒரு நடை போய்பாருங்கள்.உங்கள் கண்களில் ஏதாவது ஒன்று தட்டுப்படும்.உடனே அவர்களுடன் கதையுங்கள்.சத்தம் இல்லாமல் இந்த பொருளை சிறிலங்காவில் நான் சந்தைப் படுத்துகின்றேன் என்று தைரியமாக சொல்லுங்கள்.ஒப்பந்தத்தை போடுங்கள்.முதலில் மாதிரி(சாம்பள்)க்காக ஒரு இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் டொலருக்கு பொருளை அனுப்பச் சொல்லுங்கள். ஊரில் ரோட்டில் மாடு மேய்த்துக் கொண்டு மாதா மாதம் உங்களிடம் பணம் கறக்கும் தம்பிக்கோ அத்தானுக்கோ போன் எடுத்து இனி பணம் எல்லாம் அனுப்ப மாட்டேன்.இப்போது ஒரு பொருள் அனுப்புகின்றேன் இதை விற்று தொழிலை ஆரம்பியுங்கள் என எச்சரியுங்கள். வியாபாரம் களை கட்டும்.யூ ஆர் த ஏஜன்ட் போர் ஓள் ஓவர் சிறிலங்கா.

இல்லையே எனக்கு மொழி தெரியாதே.அவர்கள் பெரிய கம்பனிக்காறர்களாச்சே,கோர்ட். டை எல்லாம் அணிந்து போகவேண்டுமே என கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாதீர்கள். என்ன வெள்ளையன் தமிழ் படித்துக் கொண்டு வந்தா நம்மை ஆட்சி செய்தான். மொழியே தெரியாமல் அவன் இருநூறு வருடம் நம்மை எல்லாம் கட்டி மாடு மேய்க்கிறது போல் மேய்த்து விட்டுப் போயுள்ளான். நாம் அவர்களை ஒரு ஐந்து பத்து வருடம் கட்டி மேய்ப்போமே. வியாபார நோக்கமுள்ளவனுக்கும்,உழைக்கும் ஆர்வம் உள்ளவனுக்கும் மொழி ஒரு பிரச்சனையே கிடையாது. இவ்வளவு பம்மாத்தாக எழுதும் நான் என்ன பிற மொழி தெரிந்தவனா. எனக்கு தெரிந்ததெல்லாம். எஸ்.நோ. அத்துடன் ஒரு பழைய ரீ சேர்ட். இந்த எஸ் நோவையும்,பழைய ரீ சேர்ட்டையும்  வைத்துக் கொண்டுதான் 1982  ஆம் ஆண்டு 18ரூபா பணத்துடன் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடந்த பொருட்காட்சி பார்க்கப் போய் 5000 ஆயிரம் பேர் வேலை செய்யும் அந்த ஐரோப்பிய கம்பனிக்கு மார்கட்டிங் டிரக்டர் ஆன அதிசயம் நடந்தது.

கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மொனறாகலை சேம்பர் ஒப் கொமர்ஸ் ஓரு கருத்தரங்கு நடாத்தியது.அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட இரு நூறு வியாபார நோக்கமுள்ளவர்கள் அங்கு சமூகமளித்திருந்தனர்.அனைவரும் சிங்கள கிராமப்புற மக்கள்.மூன்று நாள் கருத்தரங்கு.அப்போது ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு சிங்கள கிராமப்புறத்தான் ஒருவர். தனக்கு வியாபாரம் செய்ய நிறைய ஆர்வம் இருப்பதாகவும். ஆனால் கையில் பணமில்லை எனவும். வங்கிகளிடம் உதவி பெறவும் முடியவில்லை எனவும் ஓ என்று கண்ணீர் விட்டழுதார். தனக்கு ஹொங்கொங் அல்லது பேங்கொக் போய் பொருட்காட்சிகள் பார்த்து ஏதாவதொரு வியாபாரம் தொடங்க ஆசை என்றார். நாங்கள் ஓரிருவர் அவருக்கு எங்களால் முடிந்த இத்தனூண்டு உதவியை செய்தோம்.

ஹோங்கொங் பறந்த அவர் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான சிறிய ஆறங்குல நீளமான டோச்லைட் அளவிலான ஒரு பொருளை கொண்டு வந்தார்.அதை தங்கூசியிலோ அல்லது நூலிழையிலோ கட்டி ஆற்றில் அல்லது கடலில் வீசினால் அதில் இருந்து ஒரு சிறிய ஒலி வரும்.மொத்த மீனும் அவ்வோசையை நாடி வரும். அப்புறம் என்ன ஊவா மாகாணத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காறர்களில் ஒருவராகிவிட்டார்.ஆனால் இவர் பழையவற்றை மறக்கவில்லை. உழைக்கும் பணத்தில் பெரும் பகுதியில் 23 தாய்தந்தையற்ற ஏழைக்குழந்தைகளுக்கு ஒரு வீடு கட்டி அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு சிங்களத்தை தவிர வேறெந்த மொழியும் கிஞ்சித்தும் இன்றுவரை வரவே வராது. ஆனால் இவர் ஹொங்கொங் வியாபாரிகளுடன் கடந்த ஆறுவருடமாக ஜாலியாக வியாபாரம் செய்கின்றார். வியாபாரம் செய்கின்றோம் பேர்வழி என புறப்பட்டு நம்ம நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஈடான பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பி அவர்களின் வயிற்றில் அடித்து விடாதீர்கள். யாழ்ப்பாண சின்ன வெங்காயம், யாழ்ப்பாண பென்னாம் பெரிய வாழைப்பழம்,
யாழ்ப்பாண ஊதா நிற அருமையான கத்தரிக்காய் இவைகளை இந்த பொருட்காட்சிகளுக்கு வரும்; வர்த்hகர்களுக்கு விற்கலாமா எனவும் சிந்தியுங்கள். சில நேரம் ஒரே கல்லில் பல மாங்காயும் சட சட என விழுவதுமுண்டு. பெஸ்ட் ஒப் லக்.

யாரையும் பின் பற்றாதீர்கள்
நீங்கள் யாருக்கும் நிழலல்ல
எதிர்கொள்ளும் இருட்டை
உங்கள் வெளிச்சத்தால்
விரட்டுங்கள்.

9-04-2009
 

( தொடருவேன்…..)

No comments: