Thursday 16 April 2009

வழிதவறும் செம்மறியாடுகள்!

-    சதாசிவம். ஜீ.

'தலைவன் எவ்வழியோ அவ்வழியே குடியும்' என்பதையே புலன் பெயர் இளைய தலைமுறையினர் நிரூபித்து வருகின்றனர். இலங்கை மற்றும் இந்திய தூதரங்களை இவர்கள் தாக்கி நாசப்படுத்தியுள்ளனர். நடந்ததென்னவோ அநியாயமான செயல் என்றாலும் புலிகளிடம் அகப்பட்டுள்ள மக்களைப் பொறுத்தவரையில் நன்மையே.

'முன்னை இட்ட தீ முப்புரத்திலே, பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே, அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே' என பட்டினத்தடிகளாரின் வாக்குக்கு இணங்க பிரபாகரன் மாவிலாறில் மூட்டிய தீ புதுமாத்தளம் மூலையில் மூண்டெழுந்து எரிகிறது.

'கோமா' நிலைக்குச் சென்றுவிட்ட புலிகள் மீண்டும் நடமாடுவார்கள் என்று நம்பிக்கையுடன் இன்றும் புலன் பெயர்ந்தவர்கள் உண்ணாநோன்பு, கொடிபிடிப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட, புலிபினாமிகள் காசு வசூலிப்பு – மாற்று தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை கண்காணிப்பது மற்றும் பயமுறுத்துவது என்பனவற்றை செவ்வனே செய்துவருகின்றனர். இது இவ்வாறிருக்க!

விசர் நாய் வாலைமிதிப்பதற்கு ஒப்பானதுதான் புலிகளுடன் போர்நிறுத்தத்தை மேற்கொள்வதோ, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதோ. ஏனெனில் கடந்தகாலத்தில் நிறைய அனுபவங்களை அரசாங்கங்களும், மக்களும் பட்டு உணர்ந்திருக்கிறார்கள்.

புதுவருடத்தை முன்னிட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 48 மணிநேர போர்நிறுத்தத்தை வழமைபோலவே புலிகள் தமக்கான கொடையாக எடுத்துக்கொண்டுள்ளனர். தமது போர் நடவடிக்கையை சிறிது புதுப்பித்துள்ளனர். மண் அரண்களை மக்களைக் கொண்டே அமைத்துள்ளனர். ஆனால் புலிகளிடம் அகப்பட்டுள்ள மக்கள் வெளியேற இது ஒரு அருமையான சந்தர்ப்பம் என அரசாங்கம் உட்பட சர்வதேசமும் நாமும் எண்ணிக்கொண்டோம்.

ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் உட்பட பல சர்வதேச அமைப்புக்கள், அதிகாரிகள் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர். புலிகள், மக்களை அப்பிரதேசத்தைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும். புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் போன்ற கோரிக்கைகளை விடுத்துவருகின்றன. ஆனால் புலிகளோ நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும் என ஒப்பாரி வைக்கிறது. இந்த ஒப்பாரியுடன் சேர்ந்துகொண்டு புலன் பெயர்ந்தவர்களும் ஒப்பாரி வைக்கிறார்கள்.

இந்த ஒப்பாரிகளெல்லாம் புலிகளை உயிர்ப்பிக்க உதவாது. ஐ.நா சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ 'போரை நிறுத்தும்படி' இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கலமே தவிர, கட்டளையிட முடியாது. ஆனால் இந்த ஒப்பாரிக் காரர்களோ இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்த ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளால் முடியும் என மனப்பால் குடிக்கிறார்கள். இந்த அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரசாங்கங்கள் மீதும் வேறு கோபப்படுகிறார்கள். (பார்க்க: நிதர்சனம்.கொம்)

இவர்களுக்கு ஒரு உண்மையேன் உறைக்குதில்லை என்பது இன்றுவரை புதிராகவே உள்ளது. மனிதக் கேடயமாக மக்களை புலிகள் பிடித்துவைத்துள்ளார்கள் என சர்வதேசம் குற்றம் சாட்டுகிறது. இது  இவர்கள் காதுக்கு எட்டவில்லையா? அல்லது செவிடர்கள் போல் நடிக்கிறார்களா?

அந்த மக்கள் உணவு மற்றும் குடி நீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மனித வாழ்வுக்கு முக்கியமானதும் முதன்மையானதுமான உணவு யானைவிலை குதிரைவிலை விற்கிறது. மக்கள் எளிதில் தொற்று நோய்க்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. குண்டடிபட்டு துடிதுடித்து சாகும் மனிதர்களை பரிசளித்துள்ள தமிழீழக் கனவு மேலும் நோயுனால் குற்றுயிராய் துடிதுடிக்கும் மனிதர்களையும் பரிசளிக்க காத்துக்கிடக்கிறது.

இந்த மனிதப் பேரவலம் மனதை கலங்கடிக்கிறது. இதை எண்ணும்போது போர் நிறுத்தம் அவசியம்தான் என்பதை எண்ணாமல் இருக்கமுடியவில்லை. ஆனால் விசர் நாயின் வாலை மிதிக்க யார் தயார்? நிரந்தர போர் நிறுத்தம் கோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரா? அல்லது புலன் பெயர்ந்தவர்கள் தயாரா?

புலிகள் தொடர்பாக உத்தரவாதம் தருவதற்கு தயார் நிலையில் யாராவது இருக்கிறார்களா? புலிகள் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாத சூழ்நிலையில், அரசாங்கத்திடம் யுத்தத்தை சற்று தணிக்கும்படி கூட கோரமுடியாத நிலையில் தான் அனைத்து அமைப்புக்களும் நபர்களும் இருக்கிறார்கள்.

இதற்குள் வழிதவறிய வெள்ளாடு, ஆம் வெள்ளாட்டின் தலைமையில் இரண்டு கறுத்தாடுகள் டெல்லி சென்றுள்ளன. அவைகளுக்குள் இப்போ வெட்டுக்குத்து ஆரம்பித்துள்ளன. இன்னும் என்னென்ன நடக்கப்போகின்றன என்பதை மிக குறுகியக காலத்துக்குள் நாம் அறிந்துகொள்ள முடியும். ஒன்றும் மட்டும் நிதர்சனமான உண்மை, அது செத்த மிருக உடலில் இருந்து உண்ணி கழருவதைப்போல, இவர்களில் சிலர் கழண்டு புலிகளை ப+ண்டோடு அழித்த அரசாங்கத்துடனேயே இணைந்துகொள்வார்கள்.

எது? எப்படியோ? - எவர்? எப்படியோ? சந்தர்ப்ப சூழ்நிலைகளால் புதுமாத்தளத்தில் அகப்பட்டுள்ள மக்களை உயிருடன் பாடையிலேற்றி, சமாதிகட்டும் நிலையினை யார் செய்தாலும்? யார் காரணமாக இருந்தாலும்? பாவம் சும்மாவிடாது. இது ஆற்றாமையினால்தான் எழுதவேண்டியிருக்கிறது. ஆனால் வரலாறு மன்னிக்கவோ மறக்கவோ மாட்டாது.

நோயுண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?

பேயுண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ?

 ஊனவுடல் கூண்குருடா யுற்றநாள் போதாதோ?

ஈனப் புசிப்பு லிளைத்த நாள் போதாதோ?

 பட்ட களைப்பும் பரிதவிப்பும் போதாதோ?

கெட்டநாள் கெட்ட னென்றுகேளாதும் போதாதோ? (பட்டினத்தடிகளார்)

No comments: