Friday 3 April 2009

கருணா என்கிற முரளிதரனுக்கும், கிழக்கு மாகாண மக்களுக்கும். (பகுதி 7)

 - யஹியா வாஸித் -

 திருகோணமலை  புல்மோட்டையில் படிந்து கிடக்கும் அந்த லட்சக்கணக்கான மெற்றிக் தொன் இல்மனைட்டை பற்றித்தான் இப்போது நாடு பிடிக்க ஆசைப்படுபவர்கள் எல்லாம் கவலைப் படுகின்றார்களே தவிர திருகோணமலையிலிருந்து மூதூர், பணிச்சங்கேணி, சுங்கான்குளி, கிளிவெட்டி, தோப்பூர். பாலத்தடிச்சேனை, வாகரைவரை உள்ள பச்சைப் பசேல் நிலங்களைப்பற்றியும் அம்மக்களின் உழைப்பை பற்றியும் யாருமே கவலைப் படவில்லை.

காய்ந்து உதிர்ந்து விடும் தென்னோலைகளை கிரமமாக சேர்த்து அந்த ஈக்கில்களை பாகிஸ்தானிற்கு ஏற்றுமதி செய்யலாம். அல்லது நாங்களே அதை கிரமமாக சீவி "துத்பிக்" (பல்குத்தி) செய்து விற்கலாம். குருநாகலையில் பல ஆயிரம் மக்களின் அன்றாட வருமானம் இந்த தென்னோலையிலேயே திரட்டப்படுகிறது. குருநாகலையில் குழியாப்பிட்டி, வாரியப்பொல, குருவிக் கொட்டுவ, என பல கிராமங்கள் இருக்கிறது. இங்கு ஈக்கிலை வெட்டி பதப்படுத்தி சிறு குச்சிகளாக்கக்கூடிய இயந்திரங்களை இந்தியாவில் இருந்து தருவித்து சிறு முதலீட்டில் லட்சாதிபதிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். கேகல்லயைச் சேர்ந்த ஒருவர் கிண்ணியாவில் இருந்து தென்னோலைகளை அள்ளிவந்து ஈக்கில்கட்டு(விளக்குமாறு) செய்து சிறிலங்கா முழுதும் விற்றுக் கொண்டிருக்கிறார்.

கிண்ணியா, மூதூர், வெருகல் பகுதிகளிலிருந்து காய்ந்த தேங்காய் மட்டைகளை கொண்டுவந்து, அதை சிறு,சிறு துண்டுகளாக வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றார் ஒரு சிங்கள வர்த்தகர். கண்டி கட்டுகஸ்தொட்டையில் வீதியில் பதியுதீன் மஃமூத் பெண்கள் கல்லூரிக்கருகில்  அவரது ஷோ றூமும், அதிலிருந்து 20மைல் தொலைவில் அவரது தும்பு பெக்டரியும் இருக்கின்றது. நாம் அவர்களுக்கு தேங்காய் மட்டையை இலவசமாக கொடுத்துவிட்டு, அப்புறம் அவனிடம் போய் அதை "கால் மிதி" என்ற புதிய பெயரில் 225 ரூபா கொடுத்து வாங்கி வருகின்றோம். அவ்வளவு புத்திசாலிகள் நாங்கள்.

அதே போல்தான் பழைய பிளாஸ்ரிக் பக்கட்கள்,பிளாஸ்ரிக் பொருட்களை குப்பை அள்ளுபவனுக்கு வாரிவழங்கிவிட்டு அதை ஆர்.பி.கோ.மெட்ரஸ் என்ற பெயரில் ஆராயிரம் ரூபா கொடுத்து வாங்கி வருவோம்.இந்த பழைய பிளாஸ்ரிக் பொருட்களை பாரிய பாத்திரங்களில் போட்டு உருக்கிய பின் அதை அழகான மெட்ரஸ் ஆக மாற்றக்கூடிய சிறிய இயந்திரங்கள் சைனா வீதிகளில் பத்தாயிரம் டொலருக்கு பெறமுடியும்.

இன்று நமது கிராமங்களிலெல்லாம் நிறைய துணிக்கடைகள் முளைத்து விட்டன.பெண்களுக்குரிய சல்வார் கமிஸ் முதல் ஆண்களுக்குரிய வித விதமான துணிகள் வரை பேங்கொக்கிலிருந்தும், இந்தியாவில் இருந்தும் வாங்கி வந்து குவிக்கின்றனர்.ஆனால் இப்போது உலக சந்தையில் வங்காளதேஷ் துணிதான் மிக மிக மலிவு. ஆண்களுக்குரிய சகல துணிகளும் இன்று பங்காளதேஷத்திலிருந்துதான் போகிறது.சாதாரண ஒரு 100 வீத கார்ட்டன் சேர்ட் பங்காளதேஷத்தில்  40 சிறிலங்கா ரூபாவுக்கு பெற முடியும். ஒரு முறை பங்காளதேஷ் எம்பஷி கொமர்ஷியல் டிவிஷன் கதவை தட்டிப்பாருங்கள். ஏன் பங்காளதேஷத்துக்குத்தான் எந்த விஸா கெடுபிடியும் இல்லையே.அன்பான மக்கள்.குறைந்த கட்டணத்தில் ஹோட்டல்கள்.வீதி எங்கும் துணிக்கடைகள்.

பெண்களுக்கான சல்வார், சுடிதார்,சாறி என்பவற்றுக்கு இந்தியாவில் உள்ள "சூரத்"துக்கு பயணிக்க வேண்டும்.அனைத்து துணிகளையும் துட்டுக்கு இரண்டு என அள்ளி வரலாம்.இங்கு கொண்டு வந்து நாங்களே பெண்களுக்கான துணிகளை தைக்கலாம்.நீங்கள் என்ன துணி. எந்த களரில் வாங்க வேண்டும் என நினைக்கின்றீர்களோ.அதைவிட ஆயிரம் மடங்கு விதவித துணிக்கடலை நீங்கள் இங்கு தரிசிக்கலாம். இதனால் நமது பகுதி பெண்களுக்கு வேலையும் வழங்கலாம். 500வீத இலாபம் உழைக்கலாம். 10லட்ச ரூபா பணத்தை ஏஜென்சிக்கு கட்டி ஏமாந்து தடுமாறுவதைவிட 3 லட்ச ரூபா பணத்தில் ஒரு ஜவுளிக்கடலுக்கு நீங்கள் சொந்தக்காறராகலாம்.

ஒரு வியாபாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை குஜாராத்,சூரத் வியாபாரிகளிடம் படிக்க வேண்டும். போன வருடம் குஜாராத் அகமதாபாத்தில் 17 குண்டு வெடிக்கும் போது நான் அங்கு இருந்தேன். பத்திரிகைகள் முஸ்லீம்கள் குண்டு வைத்துவிட்டார்கள் என பிதற்றிக் கொண்டிருந்தன. ஆனால் மக்கள். தாமுண்டு தம் பாடுண்டு என்றிருந்தனர்.அதிலும் வியாபாரிகள் எதையுமே கண்டு கொள்ளவில்லை. நான் சூரத்தில் உள்ள ஒரு துணி ஆலைக்கு சென்றிருந்தேன். இரண்டாயிரம் ஊழியர்கள் வேலை செய்யும் கம்பனி அது. ஆலை உரிமையாளருடன் நான் கதைத்துக் கொண்டிருக்கும் போது பகல் சாப்பாட்டு நேரம் தொடங்கிவிட்டது.வாருங்கள் சாப்பிடுவோம் என அழைத்தார். சாப்பாட்டு மண்டபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உட்கார்ந்திருந்தனர். முஸ்லீம் ஊழியர்களும்,ஹிந்து ஊழியர்களும் ஒரே மேசையில்.அதே மேசையில் ஊழியர்களுடன் ஒருவராக இவரும் உட்கார்ந்தார்.

வருட நிகர இலாபம் 170 கோடி இந்திய ரூபா. இந்தியா எங்கும் 85 கிளைகள் உள்ள அவரும் ஊழியர்கள் எதை சாப்பிட்டனரோ அதைதான் இவரும் சாப்பிட்டார். இவரும் கியூவில் நின்றுதான் கைகழுவினார்.சாப்பாடு முடிய பாங்கோசை பெக்டரி எங்கும் கேட்டது.ஹிந்து மத வெறியர்கள் நிறைந்த குஜாராத் என்று சொல்லப்படுகின்ற அந்த குஜாராத்தில்,85 வீதம் ஹிந்துக்கள் வேலை செய்யும் ஒரு ஹிந்துவின் கம்பனியில் முஸ்லீம் வேலையாட்களுக்கான தொழுகை நேர பாங்கோசை காதை சன்னமாக பிளந்து கேட்டது.அங்கே அவர்களுக்கு ஒரு தொழுகை மண்டபம். அன்று எனக்குள் இருந்த மதம் செத்து ஒரு பத்து நாள் அவரின் வீட்டில் மனிதமும் வியாபாரமும்  படித்தேன்.

இதே நிலை சிறிலங்காவிலும் எனக்கு ஏற்பட்டது. புதிய பணக்காறர். இவருக்கு கொழும்பில் ஒன்றும்,கொழும்புக்கு வெளியே இரண்டும் என மூன்று குட்டி பெக்டரிகள்.வருட இலாபம் கிட்டத்தட்ட 2 கோடி ரூபா தேறும்.வீடு நாலரை கோடி ரூபா, பெக்டரியில் இவருக்கு தனியே ஏஸி றூம், நேரத்துக்கு ஊழியர்களுக்கு உணவில்லை. அந்த மலையக ஊழியர்களுக்கு உறங்குவதற்கும் பாய் கூட வழங்கப்படவில்லை.ஆனால் கதை மட்டும் தன்னைவிட பரோபகாரி இந்த உலகில் யாருமே இல்லை. அவரது வீடு நடமாட மனிதரில்லாமல் பாழடைந்து கிடந்தது. ஒரு குட்டி ரகசியம் இவருடன் இருந்த ஐந்து நாளும் ஐயாவுக்கு ஹில்டன்,தாஜ் சமுத்ரா,பனானா லீப்லதான் சாப்பாடு கீப்பாடு எல்லாம். அதை திண்டு விட்டு இங்கு வீட்டுக்கு வந்தவுடன் வயிற்றுவலி வந்து. "பழஞ்சோறும் பழங்கறியும் திங்கிற நாய்க்கு ஹில்டன் ஹோட்டல் சாப்பாடு ஒரு கேடா"என நம்ம பொண்டாட்டி புண்ணியவதிக்கிட்ட நாலு திட்டு வேற.

இவைகளை இங்கு ஏன்சொல்ல வருகிறேனென்றால் ஒரு வியாபாரியின் அனைத்து முன்னேற்றமும் அவன் தனது கடை நிலை ஊழியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றான் என்பதிலேயே தங்கியுள்ளது.இவர் எவ்வளவுதான் புத்தியை தீட்டினாலும்.அவன் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களுக்குள் ஒரு பிடி மண்ணை அள்ளிப் போட்டுவிடுவானானால் அனைத்துமே குடி முழுகிப் போய்விடும்.

கடந்த ஏழு வருடத்துக்கு முன் இங்கிலாந்தில் தூத் பேஸ்ட்டிற்குள் ஒரு துளி மண் இருந்ததற் காக ஒரு கம்பனி ஒரு அம்மணிக்கு நஷ்ட ஈடாக ஏழு மில்லியன் பவுண் கொடுத்து மூக்குடை பட்டுக் கொண்டது. உழைக்கும் ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது.குடுக்காறனைப் போல் ஒரே பார்வை,நியாயமான இலாபம் உழைக்கும் வெறி,அரசு அங்கீகரிக்கும் தொழிலை செய்யும் பக்குவம்,நாலு பேருக்கு உதவுமே என்ற இத்தனூண்டு மனிதாபிமானம்,ஊழியர்களையும் தோழனாக நினைக்கும் தைரியம், எதிர்காலத்தையும் முன்னரே திட்மிடக் கூடிய குள்ளத்தனம், வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் உள்ளே "ஐ எம் எ கிங்" என்ற சூரத்தனம். மொத்தத்தில் என்னால் முடியும் தம்பி,என்னால் முடியும் அண்ணா.என்னால் முடியும் அக்கா, என்னால் முடியும் அப்பா என சொல்லி புறப்படுங்கள்.


( எக்ஸ்போர்ட் டெவலப்மென்ட் போர்ட் கொழும்பில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள்."அடோவ் மச்சான் கொடக்கட்டிய கோள் கண்ணவா.அபே கட்டியட்ட மொணவத உணே தன்ன னே மச்சான்" என்று சொன்னார்கள். நன்றி. தொடர்ந்து இணையத்தளங்களுக்கு நன்றி மடல் எழுதி இந்த சோத்து மாடை பேனா மாடாக்கி கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
தொடருவேன்……)

3-4-2009

No comments: