Sunday, 5 April 2009

துவேஷத்தில் அச்சம் இருக்கிறது. அச்சத்தில் துவேஷம் இருக்கிறது. (புத்தர்)

-    சதாசிவம். ஜீ.

"கம்பெடு தடியெடு சகோதரா – படையெடு களையெடு சகோதரா….." என்று பாடிய புலி வானொலிகள் இப்போது "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு……." என்று பாடுகின்றன. இதிலிருந்து புலிகளின் இன்றைய நிலை என்ன? என்பதை நாம் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

ஆனால் அங்கு அகப்பட்டுள்ள மக்களின் நிலைமையோ அகலபாதளத்தை நோக்கி விழந்துகொண்டிருக்கிறது. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருததரும் கவலை, சொல்லொனாவேதனை அடைகின்றனர். அதேபோல சர்வதேசமும் தனது கவலையை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அங்கு அகப்பட்டுள்ள மக்களின் நிலைமையோ மேலும் மேலும் மோசமடைந்துகொண்டிருக்கிறது.

மீண்டும் மீண்டும் 'யுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த' வலியுறுத்துவதைத் தவிர வேறுமார்கத்தை கண்டறிய முடியாத கையறு நிலையில் ஜனநாயக சக்திகள். ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் இலங்கையிலுள்ளவர்களும் இல்லை. புலன் பெயர்ந்தவர்களோ மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக புலிகளை குறிப்பாக பிரபாகரனை காப்பாற்ற படாதபாடு படுகின்றனர்.

இது இப்படியென்றால் புலிகள் அழிக்கப்படும் தறுவாயில், வடக்கில் ஏற்படும் ஜனநாயக சூழலை ஆரோக்கியமான அரசியல் களமாக மாற்றவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. ஆனால் சில அரசியல் ஜனநாயக கட்சியாகள் வடக்கை குத்தகைக்கு எடுத்துவிட முண்டியடிக்கின்றன. இதனை உதிரியாக இருக்கின்ற அரசியல் ஆர்வலர்களும் நியாயப்படுத்தியும் வருவது வேதனையளிக்கிறது.

'சட்டியிலிருந்து நெருப்புக்குள் விழுந்த' கதையை அனுபவிக்கும் நிலைக்கு மக்களை தள்ளிவிடக்கூடாது. ஆனால் தமிழ் மக்களின் தலையெழுத்து அம்மக்களின் நலனுக்கு உழைப்பதாகக் கூறிக்கொண்டு தங்களுக்குள் காழ்ப்புணர்வோடு செயற்பட ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்திலேயே இந்த நிலைமையினை கிள்ளி எறியாவிட்டால் வன்முறை அரசியல் தொடர்ந்துகொண்டே இருக்கும். இது கொலைகள் தொடர்ந்து நடைபெற வழிவகுக்குமே தவிர தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை.

கருத்து முரண்பாடுகள் எப்படி கோபத்தை கிளறிவிடும் என்பதை நாம் அறிவோம். 'மனிதர்கள் பேச்சில் மட்டும் சாமர்த்தியர்காரர்களல்ல, விவாதம் செய்வதிலும் விரோதம் பாராட்டுவதிலும்தான். அடுத்தவரை விரோதியாக நினைத்தால் நமக்கு கெடுதல் செய்கிற எண்ணந்தான் தோன்றும். நாம் அவர்களுக்கெதிராய் திட்டம் தீட்டுவோம். ஏப்படி நமக்குள் ஒரு ஆக்கபூர்வமான, களங்கமற்ற ஒரு குழந்தை இருக்கிறதோ அப்படித்தான் ஒரு பேராசையும் வெறுப்பும் கொண்ட குழந்தையும் இருக்கிறது' என்கிறார் புத்தர். இதில் எந்தக் குழந்தையை நமது அரசியல் செயற்பாட்டாளர்கள் அரவணைக்கப்போகிறார்கள்?

'அவன் என்னை நிந்தித்தான், அடித்தான், என்னை தோற்கடித்தான், என்னுடையதை அபகரித்தான்' இத்தகைய எண்ணங்களுக்கு இடமளிக்கிறவனின் பகைமை குறைவதில்லை. அத்தகைய எண்ணங்களுக்கு இடமளியாதவன் பகை குறைந்துவிடுகிறது, தணிந்துவிடுகிறது.

இந்தக் கணத்தில் வாழுங்கள். மலர்களைத் தொட்டுப் பரவசியுங்கள், பறவைகளின் இன்பக் கூச்சலுக்குக் காதுகொடுங்கள். மாலைச் சூரியன் சாயும் அழகைக் கண்டு களியுங்கள். கையில் இருக்கும் கூழாங்கல்லின் எடையை உணர்வதுபோல வாழ்க்கையின் யதார்த்தத்தை உணருங்கள். (புத்தர்)

ஒவ்வொருவரும் தத்தமது கடந்தகால வாழ்வை எண்ணி எங்குவதுண்டு அதுபோலத்தான் தென்னிலங்கை அரசியலின் நிலைமையையும். இராணுவ வெற்றியை மட்டுமே கவனத்தில் எடுத்து அரசாங்கம் செயற்படுவதனால், இனவாதிகளுக்கு அது வாய்ப்பாக அமைந்திருக்கிறது. புலிகள் ஊடுருவியுள்ளனர் என்பதை சாட்டாகவே வைத்து பலவழிகளிலும் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் புலிகளுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றாலும் தென்பகுதியில் இனவாதிகள் ஊக்குவிக்கப்படவில்லை. பதிலாக 'சமாதான செயலகம்', 'வெண்தாமரை' போன்ற அமைப்பினூடாக சிங்கள மக்கள் மத்தியில் சமாதானத்தின் அவசியத்தையும் இனஐக்கியத்தை வலியுறுத்தியும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது இந்தமாதிரியான செயற்பாடுகள் நடைபெறுவதில்லை. இதனால் இனவாதம் தலையெடுப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது தமிழ் மக்களை மேலும் இன்னல்களுக்குள் மாட்டிவிடுகின்றன. ஊடுருவியிருக்கும் புலிகளை இனங்காண வேண்டும் என்றால், பொலிஸ் பதிவுகள், சோதனைகள் போன்றவை அவசியம் என்றாலும் இதனை சாட்டாகவைத்து குளிர்காயும் செயற்பாடுகள் சம்மந்தப்பட்ட துறைகளில் நடைபெற்றுவருகின்றன.

புலிகள் மனிதத்தன்மையற்று நடப்பதால் அரசாங்கத்தின் நியாயமின்மையை நாம் நியாயப்படுத்திவிட முடியாது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அப்படி நடந்துகொள்ள முடியாது. புலிகளோடு கடுமையாக போராடிவரும் அரசாங்கத்துக்கு மக்களைக் காப்பாற்றும் பாரிய பொறுப்பும் இருக்கிறது. இதனை பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதுடன் அவர்களின் ஜனநாயக ரீதியிலினா சுதந்திரமான நடமாட்டத்துக்கும் அரசாங்கம் வழிசமைக்கவேண்டும். புலிகளின் பிடியிலிருந்து தப்பினால் போதும் என்று வந்து அரசாங்கத்திடம சரணாகாதி அடைந்துவிட்டவர்களை மேலும் அரசாங்கம் 'சோதனை'க்குள்ளாக்குவது காலத்தினால் நியாயப்படுத்திவிட முடியாது.

எப்படி புலிப்பினாமிகள் மக்களைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு புலிகளைக் காப்பாற்ற முற்படுகிறார்கள் என்பதை வைத்துக்கொண்டு அந்த மக்களுக்காக உண்மையாக குரல் கொடுப்பவர்களை புலி முத்திரை குத்துவதும் ஆரோக்கியமானதல்ல. அந்த மக்களின் உரிமைபற்றி பேசவிழைகிறபோது அது புலிகளை ஊக்கப்படுத்திவிடும் என்றோ அல்லது முதலில் புலிகளை ஒழித்துக்கட்டிய பிறகுதான் எல்லாம் என்றோ விவாதிப்பது சபைக்குதவாது.

இதேபாணியில்தான் புலிகளும் தமிழீழம் கிடைத்தபிறகுதான் எல்லாவற்றையும் கதைக்கலாம் என்று மக்களின், சமூக செயற்பாட்டாளர்களின் வாயை மூடி ஒரு பாசிச கட்டமைப்பை நிறுவினார்கள். எனவே அராங்கமும் அதனைச் சார்ந்தவர்களும் அவ்வாறானதொரு வாதத்தை முன்வைப்பது ஆரோக்கியமான சூழலை, ஆரோக்கியமான ஜனநாயகத்தை ஏற்படுத்தப்போவதில்லை.

விலங்குகளுக்குள் அதிகம் பகைமைபாராட்டும் விலங்கு மனிதன்தான். இதிலிருந்து விடுபடவேண்டுமென்றால் நாம் திறந்தமனதோடு செயற்படவேண்டும். ஒருவரின் கருத்து வேறுபாடானதாக இருக்கிறது என்பதற்காக பகைமைகொள்வதோ எள்ளி நகையாடுவதோ அரோக்கியமானதல்ல.

எனது கருத்துக்காக உயிரைக் கொடுக்க வேண்டாம். உதவியும் செய்யவேண்டாம். குறைந்தபட்சம் உபத்திரமாவது செய்யாது இருக்கலாம் அல்லவா!

"நான் துன்பத்தில் இருக்கிறேன், எனக்கு உதவுங்கள்"

"நீங்கள் துன்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது, கவலை வேண்டாம் நான் உதவுகிறேன்" (புத்தர்)

No comments: