Tuesday 28 April 2009

கோழிக்காலும், விஸ்கி போத்தலும்....

சக்கரவர்த்தி

இலங்கைத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஐரோப்பிய கனேடிய நகரங்களில் நடத்தப்பட்ட மனிதச்சங்கிலி, கறுப்புக்கொடி, புலிக்கொடி, உரிமை, உண்ணாவிரத, கவன ஈர்ப்பு போராட்டங்கள் எதுவும் ஏன் வெற்றிபெறவில்லை என்கின்ற கேள்விக்கு இருக்கும் ஒரே பதில்...?
பல்லாயிரம் உயிர்களை இழந்தும், பல்லாயிரம் கோடி சொத்துக்களை இழந்தும், பலலட்சம் பேர் புலம்யெர்ந்தும் தமிழீழ விடுதலைப்போராட்டம் ஏன் தோற்றுப்போனது என்கின்ற கேள்விக்கும் ஒரே பதில்..?
தலைமை சரியில்லை என்கின்ற கறுப்புவெள்ளைப் பதில்தான்.


பல்லாயிரம் மக்கள் ரொண்டோவின் தெருக்களிலும், தலைநகரின் பாராளுமன்றம் முன்பாகவும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக விதம் விதமான தலைப்புகளில் எல்லாம் விதம் விதமான போராட்டங்களை(!) செய்துகொண்டிருக்கின்றார்கள். பிற இனத்தவர்களின் கவனத்தை திருப்பவும் ஊடகங்களின் கவனத்தையும் தமிழர் போராட்டம் பக்கம் திருப்புவதற்காகவும் என்றுதான் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. ஆனால் நடத்தி முடித்த போராட்டத்தின் பயன், பிற சமூகத்தவர்களை அசூசைக்குள்ளாக்கி முகம்சுழிக்க வைத்ததுதான் மிச்சம். ஏனெனில் தமிழர்களுக்கு போராடத்தெரியாது. தெரிந்தது எல்லாம் மிரட்டுவதும் பூச்சாண்டி காட்டுவது மட்டும்தான். இதைத்தான் இவர்கள் இருபத்தி ஐந்து வருடங்களாக செய்து கொண்டிருக்கின்றார்கள்.


ரொண்டோவிலும் ஒட்டோவாவிலும் நடத்தப்பட்ட போராட்டங்களில் எல்லாம் பாதிக்ககப்பட்ட மக்களின் துயரத்தை 'கோழிக்கால்' போலும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்கின்ற கோசத்தை 'விஸ்க்கி' போத்தலாகவும் பாவித்திருந்தார்கள் புலம்பெயர்ந் தமிழர்கள். தொலை நோக்காக சிந்திக்கும் புலிகளின் தலைவரின் கட்டளை அதுதான் போலும். இலங்கை அரசின் குண்டு வீச்சில் இறந்த குழந்தைகளினதும், குழந்தைகளை பலிகொடுத்த அப்பாவி அம்மாக்களினதும் துயரக்குரல் 'அவ லீடர் பிரபாகரன்' என்னும் கோசத்துக்குள் அமுங்கிக் காணாமல் போய்விட்டது.


வேற்று சமூகத்து மக்களும் கனேடிய ஊடகங்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் தலைவரின் படத்தையும், அவரது பயங்கர வாத அமைப்பின் புலிக்கொடியையும் அருவருத்து பாத்த சலிப்பில் இடைக்கிடை காட்டப்பட்ட பலிகொள்ளபட்ட மக்களின் சிதைந்த காட்சியை காணத்தவறி விட்டார்கள். அல்லது காண விருப்பப் படாமல் விட்டு விட்டார்கள்.


அப்பாவி மக்களை கொல்கின்ற, பலவந்தமாக குழந்தைகளை போரிடச் செய்கின்ற, மனிதக்குண்டுகளை வெடிக்கச்செய்கின்ற   மனித குலம் வெறுக்கின்ற காரியங்களுக்கு முன்னோடியாக இருக்கின்ற அமைப்பும், அதன் தலைமையும், அதன் ஆதரவாளர்களும் எங்களிடம் இருந்து இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள் என கனேடிய ஊடகங்கள் தலையங்கம் தீட்டிய பின்பும் கூட போராட்டவடிவத்தை கனேடிதமிழர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. மாறக சீ.எம்.ஆர் என்கின்ற தமிழர் பண்பலை வானொலி புலிக்கொடிகளுடன் வாகனங்களில் இறங்கி 401 நெடுஞ்சாலையில் போராடலாம், வெள்ளையர்களை மிரட்டலாம் என அழைப்பு விடுகின்றது.


இலங்கையின் வடக்கே முல்லைத்தீவின் பலபகுதிகளில் நடக்கும் மக்கள் அவலத்திற்கு இலங்கை இராணுவம் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும்தான் காரணம் என அனைத்து தொண்டு நிறுவனங்களும் ஐநாவும் சொல்லிய பின்பும், ஆதார பூர்வமாக வீடியோ வடிவிலும் தப்பிவந்த மக்களின் வாக்கு மூலமாகவும் புலிகள் தமிழ்மக்களை மனிதக்கேடயங்களாக பயன் படுத்தப்படுகின்றார்கள் என்பதை அறிந்த பின்பும் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையரசை மட்டும் எதற்காக கண்டித்தும், எதிர்த்து போராடுகின்றார்கள் என்கின்ற கேள்வி சர்வதேச சமூகத்திற்கு எழுவதில் என்ன சந்தேகம்? இங்கு போராட்டம் செய்யபவர்கள் புலிகளை காக்கவே தந்திரம் செய்கின்றார்கள் என்பதை நம்புவதிலும் ஏது பிழை.


முல்லைத்தீவில் கொல்லப்படும் தமது உறவுகளை காக்க வேண்டுமெனில் புலிகளைத்தான் தமிழர்கள் முதலில் தடுக்கவேண்டும். புலிகளை தடுக்கவும் தட்டிக்கேட்கவும் அவர்களுக்குத்தான் உரிமை இருக்கின்றது. புலிகள் கடந்த பதினைந்தாண்டுகளில் நடத்தியது யாவும் புலம்பெயர்ந்த தமிழர்களை குசிப்படுத்தமட்டும்தானே. இரண்டு நாட்களுக்கு முந்தைய பேட்டி ஒன்றில்கூட புலித்தேவன் என்ன சொல்கின்றார்? புலம் பெயர்ந்த தமிழர்களினதும் தமிழ்நாட்டுத் தமிழர்களினதும் ஆதரவு இருக்கும் வரை நாங்கள் போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்போம் என்கின்றார். 


அப்படியானால் ஈழம்என்ன புலம்பெயர்த தமிழருக்கும் தமிழ் நாட்டுத்தமிழருக்கும்தானா?
அங்கு நடக்கின்ற சண்டையை நடத்திக்கொண்டிருப்பவர்கள் புலிகள் என்னும்பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள்தானே. புலிகளுடனான யுத்தத்தை செய்து கொண்டிருப்பது இலங்யைல்ல, இந்தியா என புலிகளும் அவர்கள் சார் ஊடகங்களும் பிரச்சாரம் செய்வதுபோல்.. இலங்யையரசுடன் சண்டை பிடிப்பது புலிகள் அல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் என்பதை நான் சொல்லித்தான் உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.


புலிகளின் தோல்வி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு கௌரவகுறைவை தருமென நம்புகின்றார்கள். யாழ் சமூகவியல் சிந்தனையூடாக கட்டமைத்து வளர்தெடுக்கப்பட்ட புலிகள் அமைப்பு சிதைவதிலோ அழிவதிலோ அச்சமூகம் அதிகம் அச்சம்கொள்வதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கின்றது.


ஒடுக்கப்பட்டவர்களினதும், தாழ்தப்பட்டவர்களினதும், வாழ்வு பறிக்கபப்பட்டவர்களினதும், இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினதும் பிராத்தனை எல்லாம் யாழ் சமூகவியல் சிந்தனை சிதறி சின்னாபின்னமாகி அழிந்து போக வேண்டும் என்பதுதான். எனது பிராத்தனையும் கூட அதுதான்.

No comments: