- சதாசிவம். ஜீ.
காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - – திருவள்ளுவர்.
இலங்கை இராணுவம் புலிகளை சுற்றிவளைத்து நிற்கிறது. புலிகள் மக்களுக்குள் பதுங்கியிருக்கிறது. முள்மேல் விழுந்த சேலையை எப்படி கிழிசலின்றி எடுக்கவேண்டுமோ, அப்படி புலிகளின் பிடியிலிருந்து மக்களை பக்குவமாக மீட்டெடுக்க வேண்டும். அதுவும் இலங்கை இராணுவம்! கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களவன் - தமிழன் என எல்லைகளைப் பிரித்து இனவாதத்தை வளர்த்தெடுத்த பெருமை இரு இனங்களையும் சேர்ந்த குறுந்தேசியவாதிகளையே சேரும். ஊதிப்பெருப்பித்துக் காட்டப்பட்ட எதிரியான சிங்களவன் இன்று தமிழ் மக்களை காப்பாற்றும் பொறுப்பிலிருக்கிறது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் யுத்த அவலம் நெஞ்சைப் பதறடிக்கிறது. மனித நாகரித்தின் மிகப் பெயரிய அவலத்தை கண்டும் காணாது வாழாதிருக்க முடியாது. புலிகள் மக்கள் மீதான தமது பிடியை தளர்த்துவதாக இல்லை. அரசாங்கமும் தனது பிடிவாதத்தை தளர்த்துவதாக இல்லை. ஐ.நா மற்றும் சர்வதேசத்தின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்பதே தமிழர் ஒவ்வொருவரின் கோரிக்கையும். ஆயிரம் குற்றவாளிகளை தண்டிப்பதானது ஒரு நிரபராதியைத் தன்னும் தண்டித்துவிடக்கூடாது என்பது மனித குலத்தின் பெருஅவா.
கடவுளிடத்தில் நம்பிக்கையிருப்பவர்கள் கடவுளிடம் இறைஞ்சுவார்கள். அரசாங்கத்தில் நம்பிக்கைவைத்து, புலிகளின் படுகொலையிலிருந்து தப்பிவரும் - தப்பிவரவிருக்கும் அப்பாவிமக்கள் அரசாங்கத்திடமே இறைஞ்ச முடியும். அந்த மக்களுடன் நாமும் இணைந்துகொண்டு தற்காலிகமாகவேனும் 'யுத்தத்தை நிறுத்தி' பேரவலத்தை தணித்து புலியின் பிடியிலிருக்கும் மக்களை காப்பாற்றும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். மனிதத்தன்மையற்றவர்களைவிட ஓரளவேனும் மனிதத்தன்மையுடையவர்களையே மனம் நாடுமென்பது இயல்பாது அந்தவகையில் நாம் அரசாங்கத்தையே நாடுகிறோம். யுத்தத்தை நிறுத்தி அம்மக்களின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. - திருவள்ளுவர்.
கருணா அம்மானை புலிக்கும்பலிலிருந்து ரணில் பிரித்தெடுத்தார் என்பது தவறு. பிரிந்து வந்த கருணா அம்மானுக்கு அடைக்கலம் கொடுத்ததுதான் பிரபாகரனின் பார்வையில் ரணில் செய்த குற்றம். இது ஜனாதிபதி மகிந்த செய்த புண்ணியமாகிப்போனது. தமிழீழத்தை பிரித்துத்து தந்தாலும் குற்றம் குற்றமே என்பதற்கமைய கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்தது புலித்தலைவரின் தீர்க்கதரிசனம். அந்த தீர்க்க தரிசனம் இன்று அரியாசனம் இழந்து - ஆதரிப்பார் யாருமற்று – நக்கி நாவிழந்து பங்கருக்குள் பதுங்கிக் கிடக்கிறது.
வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்கவிடாது தடுக்கப்பட்டமையினால் ஜனாதிபதி ஆகக்கூடிய வாய்ப்பை ரணில் இழந்தார் என்பதே அரசியல் அவதானிகளின் கணிப்பு. இந்த செய்நன்றிக்கு மகிந்த நன்றிக்கடன்பட்டார். எனவே அந்த மக்களை புலி பாசிசத்தில் இருந்து விடுவித்து ஜனநாயக ஆட்சிமுறைக்குள் கொண்டுவர தற்போதைய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். பழம் நழுவி பால்லவிழுந்த கதைய நம் எல்லோருக்கும் நினைவூட்டி நம்மையெல்லாம் வாயுறவைத்து எம்மையெல்லாம் வியக்கவைத்திருக்கிறார்கள் முப்படைகளின் தளபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி சரத்பொன்சேகர மற்றும் விமான, கடற்படையினர்.
புலிதொடர்பான பிரமிப்பு சகலராலும் கட்டியெழுப்பப்பட்டது. மாற்றுக் சிந்தனை, செயற்பாட்டாளர்கள்கூட புலிகள் தொடர்பான மிரமிப்பு மிரளும் வகையில் அமைந்திருந்தது. புலிகளின் சர்வதேச வலைப்பின்னலோ, ஆயுதங்களோ இரண்டாம்மிடம். ஆனால் புலிகளின் மூளைச்சலவையின் காரணமாக ஆயிரம் ஆயிரம் புலிகள் தாங்களாகவே தற்கொலை செய்துகொள்ள முன்வந்தார்கள் என்பது முதலாவது முதன்மையானதும்கூட. இது சாதாரண விடயமல்ல. இந்த நூற்றாண்டிலும் ஏன்? ஏதற்கு? எப்படி? ஏன்ற எந்த கேள்வியும் இல்லாமல் தம்மைத் தாமே அழித்துக்கொள்ள ஒரு இளைய தலைமுறை தாயாராகியது என்றால் இதனுள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் புதைந்திருக்கின்றன.
இந்தப் பிரமிப்புக்களையெல்லாம், சாவால்களையெல்லாம் சுக்கு நூறாக்கி இலங்கை இராணுவம் புலிகளின் கடைசிப் பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் புலிகளை கடுமையாக சாடியவர்களுக்குக்கூட நெருடல் ஏற்பட்டிருக்கிறது. அது இலங்கை அரசாங்கம் புலிகளை ஓரங்கட்டினாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். அப்பொழுதுதான் புலிகள் மீண்டும் வளரவிடாமல் தடுக்க முடியும். இன்னபிற வெறுங்கையால் முழமிடும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
நடைபெற்ற யதார்தமோ தமிழர்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ளார்கள். இதற்கு முழுக்க முழுக்க புலிகள்தான் காரணமாக இருந்தாலும், மாற்றுச் சக்திகளும் இதன் பங்களிப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். புலிகளின் மனிதத் தன்மையற்ற பாசிச நடவடிக்கையால் மிரண்டு உயிர் தப்பினால் போதும் என்னும் அளவிலேயே நாம் அனைவரும் செயற்பட்டோம். புலிகள் அழித்தொழிக்கப்படும் பட்சத்தில் ஒரு அரசியல் சக்தியொன்றின் தேவை உண்டென்பதை உணர்திருந்தபோதும் அதற்கான குறைந்தபட்ச செயற்பாடுகூட நாம் மேற்கொண்டிருக்கவில்லை. எனவே தேனீயில் பலரும் அடிக்கடி சுட்டிக்காட்டிவருகின்ற விடயம் நாம் அரசியல் பேரம்பேசும் சக்தியாக உருவெடுக்கவேண்டும். அது நம்மிடம் தோற்றம்பெறாதவரை நாம் இலங்கை அரசாங்கத்துடன் பேரம்பேசும் சக்தியினை இழந்தவர்களே!
தற்போதைய நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மற்றம் முஸ்லீம் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதில் வழமைபோலவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்துள்ளது. தப்பித்தவறி பொட்டன் போட்டுடுவான் என்ற கதி கலக்கம்தானோ என்னவோ? கலந்துகொண்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் தமது பழைய வீம்புகளுடனே கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு இன்னும் கலக்கத்தை கொடுக்கும் வகையில் நாடந்துகொண்டிருக்கிறார்கள்.
மாற்று தளத்தில் இயங்கக்கூடடியவர்களுடனும் அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. திக்குத்தெரியாதவனுக்கு ஒரு சிறு வெளிச்சம் எவ்வளவு பெரிய நம்பிக்கையைக் கொடுக்குமோ அதுபோல, நட்டாற்றில் நிற்கும் தமிழனுக்கு இந்த செயற்பாடு அமைந்திருக்கிறது. இந்த செயற்பாடுகளை நாம் வளமாக்கவேண்டும். குறுநலன்களை கைவிட்டு தமிழ் மக்களின் கடந்த கால்நூற்றாண்டு கால துன்பியலை கவனத்தில் எடுத்து அந்த மக்களின் தேவைகளை யார் முன்னெடுப்பது? என்பதை தவிர்த்து அந்த மக்களின் தேவைகளை, அரசியல் அபிலாசைகளை நிறைவுசெய்ய நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே இலங்கையின் அரசியல் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்.
வாழ்வியலாலும் சிந்தனையாலும் பலநூற்றாண்டுகளுக்கு பின்தள்ளப்பட்ட சமூகம் நினைத்தமாத்திரத்தில் அபிவிருத்தியையும் முற்போக்கான சிந்தனையையும் அடைந்துவிட முடியாது. இதனை எட்டுவதற்கு நாம் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும். இந்தப் பயணத்தை புலிகள் தமது பாஷையில் அழித்தொழிக்கத்தான் முனைவார்கள். எனவே இரட்டைச் சுமைகளோடு நாம் பயணித்தேயாக வேண்டும்.
இடைத்தங்கல் முகாம்களில் அமர்த்தப்பட்டிருக்கும் மக்களுக்கு உடனடித் தேவைகளை நிறைவு செய்வது இன்றியமையாததது. ஆனால் அவர்கள் தொடர்ந்தும் தங்கியிருந்து ஜீவனமோட்டும் நிலைக்கு தள்ளவிடக்கூடாது. அது அரசியல் செய்பவர்களுக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தினாலும் காலப்போக்கில் அதன் விளைவுகள் பாரதூரமாக அமைந்துவிடும்.
எனவே தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு எட்டப்படும் அதேவேளையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் அரசியல் கட்சிகள் வெறும் அரசியல் இலாபங்களை முன்னிறுத்தாது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளையும் அவர்களின் நீண்டகால வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டும்.
பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதிலும் பார்க்க மீன் பிடிப்பதைக் கற்றுக்கொடுப்பது சாலச்சிறந்தது என்பதற்கு அமைய, மக்களின் நீண்டகால வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல பகுதிகளிலும் அபிவிருத்தியினை மேற்கொள்ளும் அதேவேளையில் சிறுபான்மை இனங்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கான வழிமுறையினையும் நாம் கண்டறியவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.
இதனை அரசியல் தலைவர்கள் குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் உணராத பட்சத்தில், வெந்தபுண்ணில் வேல் பாய்ந்ததுபோல கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக இழப்புக்களையும் தீராத வேதனையையும் அனுபவித்துவந்த மக்களின் மனங்களை மேலும் மேலும் துன்புறுத்துவதுடன் தொடர்ந்த மனித உயிரிழப்புக்களையும் தடுத்து நிறுத்திவிடமுடியாத கையறு நிலைக்கு தமிழ் அரசியல்வாதிகள் தள்ளப்படுவார்கள் என்பது திண்ணம்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். - திருவள்ளுவர்.
No comments:
Post a Comment