Tuesday, 10 March 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும், கிழக்கு மாகாண மக்களுக்கும். (பகுதி 3)

- யஹியா வாஸித்

உலகத்தில் தோன்றிய அத்தனை புரட்சிகளும், சமூக மேம்பாடுகளும், வளர்ச்சிகளும் அப்பகுதி மக்களினதும், அவர்களது வாழ்க்கையுடன் இணைந்ததாகவுமே முன்னெடுக்கப் பட்டுள்ளது. சீரழிந்து கிடந்த சீனத்தைச் சிவப்பாக்கிய மா.ஓ.சேதுங்கின் சீனப்புரட்சியாகட்டும் முந்தா நாள் ஆட்சிக்கு வந்த நேபாளப் புரட்சியாகட்டும் மக்களையும் மக்களின் மனங்களையும் கெட்டியாக பிடித்ததனால்தான் அவர்களால் கோட்டைகளைத் தக்கவைத்துக் கொள்ளமுடிந்தது. தங்கள் மடிகளை மட்டுமே நிரப்பிக் கொண்டிருந்த "சியாங்கே சேக்" களும், "பிரேந்திராக்களும்" இப்போது நமது …….களும் துரத்தப்பட்டார்கள். துரத்தப்படுகின்றார்கள். எ.கிளாஜனிகோ 47ம் ஆண்டு கண்டுபிடித்த  எ.கே.47 என்று சொல்கின்ற அந்த துப்பாக்கி சனியனின் ஆரம்ப கால விலை உலகசந்தையில் 42 யு.எஸ்.டொலர்தான். அந்தச்சனியனின் விலை 86க்குப் பின்னர்தான் விஸ்வரூபம் எடுத்தது. ஆம் 345 யு.எஸ்.டொலர் வரை விலை போனது. அக்கால கட்டங்களில் ஒரு தையல் இயந்திரத்தின் (உஷா,சிங்கர்)விலை 50 டொலர் மட்டுமே. கிட்டத்தட்ட அதே அளவு கூலியாட்கள்,அதே அளவு மூலப் பொருட்கள், அதே அளவு உற்பத்திச் செலவில் உருவான எ.கே.47 345 யு.எஸ்.டொலர். தையல் இயந்திரம் 50 டொலர். அவர்களுக்கு 5வீத நிகர இலாபம். இவர்களுக்கு 700வீத இலாபம். விடுவார்களா வெள்ளையர்கள். அனைத்து தையல் இயந்திர நிறுவனங்களையும் இழுத்து மூடிவிட்டு இந்த சனியன் கம்பனிகளை திறந்து விட்டார்கள். இதனால்தான் இவ்வளவு வினையும், வினோதமும் என்று சொல்வோரும் உண்டு.

ஆனால் இப்படி குறுக்குப் புத்தியுடனும், குள்ள நரித்தனத்துடனும் உழைத்ததனால்தான் இப்போது அமெரிக்காவும், யுரோப்பும் வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் 832 பில்லியண்ணா என உட்கார்ந்து கொண்டு உச்சிக் கொட்டுகின்றனர். (இங்குள்ள நிறைய அங்கவீனர்கள் நிலையங்களில் உள்ள 90 வீதமான குழந்தைகள் இந்த ஆயுத வியாபாரிகளின் பிள்ளைகளென்று ஒரு புள்ளி விபரம் சொல்கின்றது .நிறையப் பேர் கம்பனிகளை இழுத்து மூடிவிட்டு ஓப்பனேஜ் நடாத்துகின்றனர். பர மண்டலத்திலிருக்கும் பிதாவே உன் நாமமும் எங்கள் வருங்காலசந்ததிகளின் நாமமும் பரிசுத்தமடைவதாக)

எந்த விடயத்தையும் கொஞ்சம் ஆயுத பாணியில் சொன்னால்தான் டக்கென்று மண்டையில் படுகின்றது. அதனால்தான் கொஞ்சம் எ.கே.47 பற்றிய உண்மையைச் சொன்னேன். கேரளா காலிகட்டைச் சேர்ந்த அந்த நபர் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததும் தற்கொலை செய்யும் நோக்குடன் கடற்கரைக்குச் செல்கின்றார். கடற்கரையில் தற்கொலை செய்வதா? வேண்டாமா என்ற எண்ணத்துடன் இவர் உட்கார்ந்து இருந்த போது அங்கு வந்த ஒரு அமெரிக்க உல்லாசப் பிரயாணி இவருடன் கதைத்து குசலம் விசாரித்துவிட்டு என்ன தொழில் செய்கின்றீர் எனக்கேட்க இவர் எவ்விததொழிலுமில்லை எனக்கூற அவர் 1000டொலர் கொடுத்து இந்த தென்னம் தோட்டங்களில் கிடக்கின்ற தும்புகளை எல்லாம் சேர்த்து எனக்கு அனுப்பி வை என தனது கம்பனி விலாசமும் கொடுத்து விட்டு சென்றுள்ளார். அந்த அமெரிக்கர் ஒரு தும்பு மெத்தை செய்யும் கம்பனி உரிமையாளர்.

இவர் மாதம் 1000கிலோ, 2000கிலோ என அனுப்ப வியாபாரம் களை கட்டியுள்ளது. அத்துடன் கொஞ்சம் குறுக்குப் புத்தியும் வேலை செய்துள்ளது. தும்பில் தண்ணியைக் கொட்டி நிறையைக்கூட்டி அனுப்பியுள்ளார். அங்கிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. இவ்வாறு பல முறை தண்ணீரை கொட்டி அனுப்பியுள்ளார். இவர் தண்ணீரை கொட்டி அனுப்பிய பின்னர், அவ்அமெரிக்க வியாபாரி இன்னும் நிறைய தும்பு அனுப்பு எனச்சொல்லியுள்ளார். இவ்வாறு பல வருடமாக இந்த கலப்பட வியாபாரத்தை இவர் செய்துள்ளார். வருடங்கள் பல உருண்டோட( இப்போது இவர் கேரளாவில்ஒரு பெரிய எக்ஸ்போர்ட்டர்) இவரது மகன் உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சென்றவர் தங்களிடமிருந்து தும்பு இறக்குமதி செய்யும் இறக்குமதியாளரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.அந்த இடத்தில் தும்பு இறக்குமதி செய்யும் எந்த கம்பனியும் இல்லவாம்.

ஆனால் அங்கு அதே இடத்தில் "கனிமப்பொருள்கள்"விற்கும் கம்பனி ஒன்று இருந்துள்ளது. ஆம் இவரது தகப்பனார் தும்பில் தண்ணீரை கொட்டி அனுப்ப கடற்கரை மணலில் கலந்துள்ள ஒரு கனிமப் பொருள் அந்த தும்புகளில் ஒட்டிக் கொண்டுள்ளது. என்னடா தும்பில் ஏதோ பளபள என மணல் துகள்கள் ஒட்டியுள்ளதே என அமெரிக்கர் ஆய்வு கூடத்தில் பரிசோதிக்க ஆம் அது மிக மிக விலை அதிகமான ஒரு கனிமப் பொருள். உலக சந்தையில் அதன் விலை கிலோ பலலட்சடாலர். மற்ற விடயங்களை எல்லாம் நீங்களே கூட்டிக் கழித்துப் பாருங்கள். வியாபாரத்தில் நேர்மை மிக மிக முக்கியம். நாம் நேர்மை  தவறினால் நமது வாடிக்கையாளரும் நமக்கு மொட்டை அடிப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இப்படியாக பல உதாரணங்களை அள்ளி விடலாம். அப்போது சிறிலங்காவில் சீமெந்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவியது. கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கிராம சேவகர், உதவி அரசாங்க அதிபர் ஆகியோரிடம்  கடிதம் பெற்று கூட்டுறவு சங்கத்தில் சீமந்து பெறக்கூடிய நிலை இருந்தது. எங்களது தமிழாசிரியர் (ஏழாம்ஆண்டு) அரசு நிறுவனங்களுக்கு எவ்வாறு கடிதம் எழுதுவது என பாடம் நடாத்திவிட்டு அனைவரையும் "எனக்கு அவசரமாக வீட்டு வேலைக்கு சீமெந்து தேவை" எனக் கேட்டு  உதவி அரசாங்க அதிபருக்கு மடல் எழுதச் சொன்னார். 42 மாணவ மாணவிகளும் மடல் எழுதினோம். "ஐயா எனது வீட்டுக்கு மலசல கூடம் கட்டுவதற்காக அவசரமாக 5பக்கட் சீமெந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்" இப்படிக்கு தங்கள் உதவியை நாடும் யஹியா வாஸித் என நானும் எழுதினேன். மளார் என எனது கன்னத்தில் ஒரு அறை. அத்துடன் அந்த கொப்பியின் கட்டுரைப் பக்கத்தை அப்படியே கிழித்து வீசி என்னடா ! பிச்சை சம்பளம் கேட்டா மடல் எழுதுகின்றாய் !! அவர் ஒரு அரச உத்தியோகத்தர். நமக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர் அவரிடம் போய் என்ன உதவி கேட்பது. சீமெந்து தர வேண்டியது அவரது கடமை என்று போட்டாரே ஒரு போடு. அன்றுடன் பாடசாலைக்கு முழுக்குப் போட்டு விட்டு இடைக்காட்டில் வாப்பாவின் பழைய இரும்புக் கடையில் தூங்கி வழிந்தேன். என்னடா ஏழாம் வகுப்பு படித்த இவர் இப்படி எழுதுகின்றாரே என யோசிக்கின்றீர்களா! அன்று ஆசிரியர் செவிப்பறை கிழிய தந்த அடி மட்டுமல்ல முழுப் பாடசாலையுமே எங்களை சந்தை மாடு என்றுதான் அழைக்கும், ஊருக்குள்ள சோத்து மாடு என்று ஒரு செல்லப் பெயரும் உண்டு. இப்படி செக்கு மாடாக இருந்த என்னை ஒரு சர்வதேச இரும்பு வியாபாரி ஆக்கிய பெருமை முழுக்க முழுக்க நமது மூத்த குடிமகனையே (தானைத ;தளபதி, பங்கர் தலைவர்) சாரும்.

ஏற்றுமதி அபிவிருத்தி திணைக்களம் (எக்ஸ்போர்ட் டெவலப்மென்ட் போர்ட் ஈ.டி.பி) கொழும்பு நவம் மாவத்தையில் இருக்கின்றது. பழவகை, கடல் பொருட்கள், மரப் பொருட்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு டிபுடி டிரக்டர் என பதினான்குக்கு மேற்பட்ட டிபுடி டிரக்டர்களுடனும் பல உயர் அதிகாரிகளுடனும் எமக்கு சேவை செய்ய என்றே காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடம் போய் கூனிக்குறுகாமல் (தங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன் என்று கும்பிடு போட வேண்டிய அவசியமில்லை என சொல்ல வந்தேன்) ஆலோசனை கேழுங்கள். நல்லவர்கள். வல்லவர்களான இவர்கள் நிச்சயம் உட்கார வைத்து ஆலோசனை தருவார்கள்.

நாம் புத்தளத்திலும்,அனுராதபுரத்திலும், பிபிளையிலும் குட்டிக் குட்டி ஆடுகளை வாங்கி வளர்த்து ஆறுமாதத்தில் சொற்ப இலாபத்தில் விற்றுக் கொண்டிருக்க தெல்லிப்பழையிலும்,தலவாக்கல்லவிலும். கண்டி திகனவிலும் ஆடு வளர்த்து பெரும் இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள் .எப்படி. இவர்கள் அவ்வப்பகுதி விவசாயத் திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் ஜேர்மனியில் இருந்து "ஜேர்மன் பொயர்"ஆடுகளைத் தருவித்து நமது நாட்டு ஆடுகளுடன் இனப் பெருக்கம் செய்து 300வீதம் இலாபம் பெறுகின்றார்கள். ஜேர்மன் பொயர் ஆடு ஒன்றின் விலை 50ஆயிரத்திலிருந்து எழுபத்தைந்து ஆயிரம் ரூபா. இரண்டு ஆண் ஆடுகளை இறக்குமதி செய்து நமது பெண் ஆடுகளுடன் இணையவிட்டால் பிறக்கும் குட்டி ஆடு ஆறு மாதத்தில் மும்மடங்கு நிறையுடன் வளரும். அப்புறம் என்ன ! மக்கள் சேவையே மகேசன் சேவை என செய்து கொண்டு ஒரு விவசாயத் திணைக்கள அதிகாரி 2004வரை தெல்லிப்பழையில் இருந்தார். அவரிடமும் நம்மவர்கள் பெரியதொரு தொகையைக் கப்பமாகக்கேட்டு அவரை கனடாவுக்கு ஓரம் கட்டி விட்டனர். இப்போது மக்கள் மொத்தமாகவே தம்பிகளை ஓரம் கட்டிவிட்டனர். இவர் போன்ற திறமையான நல்ல மனித நேயமுள்ள அதிகாரிகள் இன்னும் நம்மிடையே இருக்கின்றார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து ஜேர்மன் பொயருக்கு இப்போதே ஓடர் பண்ணுங்கள். ஜேர்மனியில் இருக்கும் நண்பர்களுக்கு போன் பண்ணி மச்சான் இந்த ஆட்டு சமாச்சாரத்தை பார் எனச் சொல்லுங்கள். ஸ்ரூடன் விஸா, ஐ.ஜீ.எஸ்.விஸா(இன்டர் நெஷனல் கிறஜூ வேஸன் ஸ்கீம்), வேர்க் பேர்மிட், விஸிட்டிங் விஸா,அ கதி விஸா எல்லாவற்றையும் தூக்கி கிடப்பில் போட்டு விட்டு "பொருளாதார மேம்பாட்டு புறஜக்ட்"பற்றி உட்கார்ந்து கொண்டு முள்ளந்தண்டு விறைக்க வெள்ளையன் யோசித்துக் கொண்டிருக்கிறான்.

கொள்ளுப்பிட்டியில் தனது வீட்டுக்குள்ளேயே ஜேர்மன் பொயர்களை வளர்த்து ஹில்டன் ஹோட்டலுக்கும், கலதாரி மெரிடியனுக்கும் ஆட்டிறைச்சி வளங்கும் பலர் இருக்கும் போது எல்லா வளமும் உள்ள நம்மால் ஏன் முடியாது ! தீக்கோழி (ஓஸ்ரிஜ்) கூட இப்படித்தான். உலகிலேயே கால் நகம் முதல் சொண்டு (இதற்கு எனக்கு வேறு சொல் தெரியாது) வரை விலை போகக் கூடிய பொருள் இருக்கும் என்றால் அது தீக்கோழிதான். சவூதி மன்னரும் பிள்ளைகளும் போட்டுள்ள கால் செருப்பிலிருந்து உலக அழகு ராணிகள் அணிந்து வரும் மெல்லிய ஜாக்கட் வரை இந்த தீக்கோழி தோலினால் செய்தவை. இதன் இறைச்சி கிலோ 112யு.எஸ். டொலர். அதன் இறகு ஒவ்வொன்றும் ஒவ்வெரு விலை. தீக்கோழி கூடிய வரை புல் பூண்டுதான் சாப்பிடும். தீக்கோழி முட்டையை கண்டி விவசாயப் பண்ணையை தொடர்பு கொண்டு சைனாவில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஒரு முட்டை 15 யு.எஸ்.டொலர்.ஆறு முட்டையை இறக்குமதி செய்யலாம். அந்த முட்டையை பொரிக்க வைக்கக் கூடிய இயந்திரம் 100 யு.எஸ்.டொலர் (யு.கே,கனடா,இஸ்ரேல்,சைனா). அப்புறம் என்ன தீக்கோழி ரெடி. ரொம்ப ஆசை பட்டு 100 முட்டைகளை இறக்குமதி செய்து விடாதீர்கள்.ஒரு ஏக்கர் நிலத்தில் நான்கு அல்லது ஆறு தீக்கோழிதான் வளர்க்கலாம். வரவு எட்டணா செலவு பத்தணா என்ற கதையெல்லாம் இங்கு கிடையாது. செலவு பத்தணா வரவு 200 அணா கதைதான்.

இதே போல்தான் கோழியும். நாம் கோழிக் குஞ்சுகளை 100, 200 என மொத்தமாக வாங்கி 45,50 நாட்கள் வளர்த்து சிறிய இலாபத்துடன் விற்றுக் கொண்டிருக்கின்றோம். ஏன் அந்த குஞ்சுகளை நாமே உற்பத்தி செய்யக்கூடாது. முடியும். எப்படி ? இதற்காக பக்கத்துக் கடைக்குப் போய் புறய்லர் (செயற்கை)முட்டைகளைக் கொண்டு வந்து அடைகாக்க வைத்து விடாதீர்கள். இந்த முட்டைகளை கண்ணொறுவ விவசாய திணைக்களத்தில் பெறலாம். அது சிரமமாயிற்றே என சிந்திக்கின்றீர்களா?  அப்படியானால் நீங்கள் ஒரு தடவை இஸ்ரேல் எம்பஸி அல்லது ஸ்கண்டி நேவிய எம்பஸிகளின் கொமர்ஸியல் டிவிஷன் கதவுகளை ஒரு முறை, ஒரே ஒரு முறை தட்ட வேண்டும். இந்த நாடுகளில்தான் இந்த முட்டைகளை இடக்கூடிய தாய்க்கோழிகள் ( பேரண்ட் சிக்) கிடைக்கும். ஒரு குஞ்சு அறுபது ரூபா என 100 குஞ்சுகளை இறக்குமதி செய்யலாம். இக்குஞ்சுகளை ஆறு மாதம் கண்ணின் இமை காப்பது போல் காக்க வேண்டும். அப்புறம் இரண்டு வருடத்துக்கு டெய்லி 100 முட்டை.70 டொலர் கொடுத்து "கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம"; மூன்றோ நான்கோ வாங்கி வைத்துக் கொண்டால் நீங்கள் ஒரு பார்ம் ஓணர். உங்கள் கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களுக்கும் நீங்கள் ஒருநாள் (ஒன்டே ஓல்ட் சிக்கன்) குஞ்சு விற்கலாம். யுரோப்பில் சிக்கன் சொப்பில் 12 மணிநேரம் கால்வலிக்க ஒரு மாதம்  உழைக்கும் 1200 டொலரை ஒரு வாரத்தில் வீட்டில் இருந்து கொண்டே உழைக்கலாம்.

இங்கு ஒரு பாரிய சங்கடம் இருக்கின்றது. மிருகவதை தடை சட்டம்,ஜீவ காருண்யம் (பௌத்தம்) என தடைகள் வரலாம். சீதுவஇல் உள்ள "லங்கன் லிபியன் பார்ம்" கம்பளையில் உள்ள "ஸட்ணா போள்றி பார்ம்" எல்லாவற்றுக்கும் யார் டிரக்டர்ஸ்,உரிமையாளர் என விசாரியுங்கள்.நமது ஜனாதிபதி கூட விவசாய அமைச்சராக இருக்கும் போது தீக்கோழி பார்ம் திறக்க புத்தளத்தில் வைத்து ஒரு பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தும் போது நானும் அருகில் இருந்தேன் என்பதையும் (2003) தாழ்மையாக சொல்லிக்கொள்கின்றேன். ஆகவே தட்டுங்கள் எல்லாமே திறக்கப்படும். 

என்ன இது எல்லாமே மிருகமாகவே இருக்கின்றது என யோசிக்கின்றீர்களா? 15 வருடமாக மிருக ஆட்சியின் கீழ் இருந்ததன் விளைவோ என்னவோ. அரண்டவன் கண்ணுக்கு எல்லாமே அதுவாகத்தான் இருக்கின்றது. போகப் போக மீன், அட்டை, மரம்பழம், மண், தொழில் நுட்பம், மூளை என எழுதி பழையவைகளை மௌ;ள மௌ;ள மறப்போம். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எல்லாம் அழிக்க வேண்டியதில்லை.தனித் தனியே முயற்சித்தாலே போதும்.

தொடரும்......

நன்றி :தேனீ

No comments: