Monday, 16 March 2009

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?

-    சதாசிவம். ஜீ.

இந்திய தமிழ் சினிமாவின் மூன்றாம்தர பாடல்கள் இல்லையென்றால் புலன்பெயர் உணர்ச்சித் தமிழர்கள் எப்பவோ நாண்டுகொண்டு செத்திருப்பார்கள். "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா………?" (ஊமைவிழிகள்) "சக்திகொடு…….. இறiவா!....." (பாபா) "எழுகவே படைகள் எழுகவே………" (மாவீரன்)  புலிக்காரர்களால் படப்பட்ட பாடல்கள் (தேனிசை செல்லப்பா) மற்றும் இன்னபிற கண்றாவிகள் போதாதென்று புலன்பெயர் ய+த் இசையமைத்து வெளியிட்டுள்ள பாடல்கள் (பொங்கு தமிழா பொங்கு……., இறுதிப்போருக்கு எழுந்திடா………) வானெலிகளில் ஒலித்துகெ;ககொண்டே இருக்கிறது. இவர்கள் இசையமைத்து பாடியுள்ள பாடல்கள் சின்னமேளம் ஆடுவதற்கு தோதானதாக இருக்கும். இதனைக் கேட்டல்தான் அதன் சுவை தெரியும். வானொலி நேயர்களும் வானலைகளில் வந்து இந்தமாதிரிப் பாடல்களை தெரிவுசெய்து கேட்கிறார்கள். யாருக்காக கேட்கிறார்கள் வன்னியில் அல்லலுறும் தமிழ் மக்களுக்காக, உலகம் பூராவும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளுக்காக.

இந்தக் கூத்து இப்படியென்றால் தேனீ இணையத்தில் பலரும் சுட்டிக்காட்டியது போன்று காசு கறக்கும் கூத்தும் ஓய்ந்தபாடில்லை. இதில் இப்போது கோயில் காரர்களும் இணைந்துள்ளார்கள். அவர்கள் பூசை வழிபாடு என்று இதில் கிடைக்கும் நிதி அப்படியே வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் என்கிறார்கள். இதெல்லாம் வருமான வரிக்குட்படாத சுழையான வருமானங்கள்.

இவ்வாறான செயற்பாடுகளால் குளிர்விட்டுப்போய் இப்போது மீண்டும் 'புலிகள்' என புலம்பத் தொடங்கியுள்ளார்கள். இவ்வளவு காலமும் அமுக்கிவைக்கப்பட்ட புலிக் கோஷம் இப்பொழுது எழுப்பப்படுகிறது. கனடாவில் அண்மையில் நடந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் குளிரையும் பொருட்படுத்தாது பெரும்பாலான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். இதனை கனடா தேசிய ஊடகங்களும் முதன்மைப்படுத்தியிருந்தன. அதன் பிறகு நடைபெற்று வருகின்ற கவனயீர்ப்புகளில் புலிவேசம் மெல்ல தலையெடுப்பதால் கலந்துகொள்ளுகிறவர்கள் குறைந்துவிட்டார்கள். மேலும் கனடா தேசிய ஊடகங்களும் கண்டுகொள்வதாக இல்லை.

இந்நிலையில் தலைக்கு மேலே போனாப்பிறகு சானென்ன முழமென்ன என்பதுபோல புலிகள் தான் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் என்று புலம்பத்தொடங்கியுள்ளனர். வெளிப்படையாகவே புலிகளை காவாந்து பண்ணும் பணியை ரி.வி.ஐ தொலைக்காட்சி, சி.எம்.ஆர் வானொலி போன்ற புலி எடுபிடி ஊடகங்கள் முன்னெடுத்துவருகின்றன. கனடிய தமிழர் மாணவர் சமூகம் முன்னெடுக்கும் போராட்டமும் இதில் அடங்கும்.

இதன் சூத்திரதாரி சோரம்போனவர் என்பதை எல்லோரும் அறிவர். ஊரில மட்டுமல்ல, கனடாவிலும் நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்பதுபோல இந்த அறிவுஜீவி(?) அலைந்துதிரிகிறார் என்பது ஒருபுறம் இருக்க, கனடிய தமிழர் மாணவர் சமூகத்தையும் தூண்டிவிட்டு இலங்கையில் புலிகளால் முன்னெடுக்கப்படும் வன்முறையை கனடாவிலும் தொடரும்பணியை முன்னெடுத்துவருகிறார். இவர்கள் போன்றவர்கள் இவ்வாறு பிழைப்பு நடத்திக்கொண்டு மாணவர்களையும், சாதாரண பொதுமக்களையும் பாடசாலைக்கும் வேலைத்தளத்திலும் விடுமுறை எடுத்துக்கொண்டு போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தப்படுகின்றனர்.

எது எப்படியோ, வீதியோரங்களில் நடைபெறும் கவனயீர்ப்பில் கலந்துகொள்பவர்களிலும் பார்க்க பொழுது போகாமல் தமிழ் கடைகளில் வந்து குழுமுபவர்கள் அதிகம் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கனடிய தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டிய தருணமிருது. கனடா குடியுரிமை பெற்றுவிட்ட எமக்கு எதுவும் நடாக்காது என்றோ, மிஞ்சிப்போனால் சிறையிலடைப்பார்களென்றோ லேசாக நினைக்க வேண்டாம். குடியுரிமை பறிக்கப்பட்டு இலங்கைக்கே நாடுகடத்தப்படும் அபாயமிருக்கிறது.

மேலும் இந்த ஊடகங்கள் கனடாவில் வாழும் தமிழ் மக்களின் உறவுகள் (இறந்து, காயமடைந்து, காணமல்போய்) வன்னியில் பாதிக்கப்பட்டால் தம்முடன் தொடர்பு கொள்ளும் படியும் அவர்களுக்கான நட்ட ஈடு வழங்குவதாகவும் தெரிவிக்கிறது. வன்னியில் பாதிக்கப்படும் உறவினருக்கு இங்கு வைத்து உதவி வழங்குகிறார்களா? இல்லை உபத்திரவம் வழங்குகிறார்கள். இவர்களுடைய தகவல்களை பெற்று கவனயீர்ப்பு போராட்டத்துக்கு வரவற்புறுத்துவம், வன்னியிலுள்ளவர்களுக்கு தாம் உதவுவதாக பணம் கறப்பதும்தான் நோக்கம். இதற்குள், குளத்தோட கோவிச்சுக்கொண்டு குண்டி கழுவாமல் விடுறமாதிரி சிறீலங்கா பொருட்களை விற்கவேண்டாம், இலங்கை வங்கியிலுள்ள வைப்புக்களை தமிழர் மீளப் பெறவேண்டும் என வர்தகர்கள் - பொதுமக்கள் கோரப்படுகின்றனர்.

ஆகமொத்தத்தில் போராட்டத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறது வியாபாரம். இந்த வியாபாரத்தினை விஸ்தரிக்கும் செயல்தான் கவனயீர்ப்புகள், போராட்டங்கள், உண்ணா நோன்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள், இசை நிகழ்சிகள்! ஒரு தொகுதி மக்களே எல்ல நிகழ்வுகளில் கலந்துகொள்ள வைக்கப்படுகின்றனர். மந்திரங்கள் தந்திரங்களில் பேர்போன இவர்கள், எதோவொரு வகையில் கலந்துகொள்ள வைக்கப்படுபவர்களின் தகவல்களை பெற்றுக்கொள்கின்றனர். அதாவது வெல்பயரில் இருந்துகொண்டு வேலைசெய்பவர்களுக்கு போன் செய்து இதில் கலந்துகொள்ள வேண்டும் இல்லை என்றால் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள் என்று மிரட்டித்தான் இவர்கள் அணிதிரட்டப்படுகிறார்கள்.

சர்வதேசத்துக்கு முன்னால் இலட்சக்கணக்கானோர் அணிதிரண்டாலும் வகை வகையான போராட்டங்களை முன்னெடுத்தாலும் எத்தனை முருகதாஸ் தீக்குளித்தாலும் புலிகள் பயங்கரவாதிகள்தான் என்பதை சர்வதேசம் மாற்றப்போவதில்லை. அதனால்தான், புலிகள் ஆயுதங்களை களையவேண்டும் அல்லது புலிகளின் ஆயுதங்களை களையவேண்டும் என்னும் கருத்து சர்வதேசரீதியாக முதன்மைபெற்றவருகிறது.

ஒரு குடம் பாலுக்கு ஒரே ஒரு துளிதான் விஷம் என்பதுபோல இலங்கைத் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் கோரிக்கைகள் எல்லாம் புலிகளின் பாசிச செயற்பாடுகளால் மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கிறது. புலிகளோடு பட்டதுபோதும் என்று இடதுசாரிகளும் முற்போக்குவாதிகளும் ஒதுங்கியிருக்காது மீண்டும் கைகோர்த்து கல்தோன்றாக் காலத்துக்கு இட்டுச்சென்றுள்ள தமிழ் மக்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

நன்றி :தேனீ

No comments: