- யஹியா வாஸித் -
சந்தேகம், சந்தேகம். நிறைய சந்தேகம். வெரிகுட். இந்த சந்தேகம் பல வருடங்களுக்கு முன்னால் நமக்கு வந்திருக்க வேண்டும். 1948ல் சுதந்திரம் வாங்கும் போது. இந்த சுதந்திரம் உடரட்ட சிங்களத்துக்கு மட்டுமா. இல்லை பஹல ரட்ட தமிழனும் இதில் குளிர்காயலாமா என வெள்ளையனிடம் கேட்டிருக்க வேண்டும். 1971 சிறிலங்கா குடியரசு ஆகும் போது. அம்மா, தாயே வெள்ளையன்ட இலச்சினைக்குள்ள அடங்காத தனி சோஷலிச குடியரசுக்குள்ள இந்த வட கிழக்கும் தண்ணி குடிக்கலாமா. இல்லை தண்ணி காட்டுவீர்களா என கேட்டிருக்க வேண்டும். எம்.எஸ்.காரியப்பர்; சேனநாயக்கா சமுத்திரம் கட்டும் போது. கருப்பு குஞ்சம் கட்டிய சிவப்பு துருக்கி தொப்பி போட்ட காக்கா. இந்த அணைக்கட்டு மொத்த கிழக்கு மாகாணத்துக்கும் ஆப்பா இல்லை இது நீங்க சிங்களத்துக்கு போடுற சோப்பா என கேட்டிருக்க வேண்டும். தேவநாயகத்துக்கு மந்திரி போஸ்ட் கொடுக்கும் போது. ஐயா.வெள்ளை கோட் போடும் கருப்பு ராசாவே நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குமாங்கே பொசியுமாம் என்று சிங்களம் சொல்லுகின்றதே.பொசிய வைப்பீர்களா என கேட்டிருக்க வேண்டும்.எல்லாம் போகட்டும் கழுத இப்போவும் கிழக்கு காட்டுக்குள்ள இருந்து ஆங்காங்கே கொல்லும் புலிக் குஞ்சுகளே எதற்கு ராசா எதற்கு என கேட்டோமா அல்லது கேட்கின்றோமா. ஐயோ அது பெரிய இடம் கேட்க முடியாது. இவர் சாதாரண நபர்தானே ஒரு மண்ணும் பண்ண மாட்டார் என ஆயிரம் கேள்விகள், பதினாறாயிரத்தி சொச்சம் சந்தேகங்கள்.
சந்தேகம் - 1
ஏறாவூர் நண்பர்கள் நம்முடைய பகுதி ரொம்ப சூடான பகுதி ஆயிற்றே அங்கே அவுஸ்திரேலியா பசு வளர்க்கலாமா என அடுத்த வீட்டுக்காறனுகளிடம் போய் சந்தேகம் கேட்டுள்ளனர். இந்தப் பசு எங்கும் வளரும். சுட்ட மண் ஆன தெல்லிப் பழையில் வளரும் போது குறிஞ்சி. முல்லை, பாலை,நெய்தல் நிலங்களை தன்னிடத்தே கொண்டே கிழக்கில் எல்லாமே பொன்னாகும். டோன்ட் வொறி.கோ ஹேட்.
சந்தேகம் - 2
மாட்டு சாணியை வறட்டியாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.மாவனல்லை,கடுகண்ணாவ, திப்பிட்டி,அரணாயக்க ஊதுபத்தி வியாபாரிகள் உங்கள் கொல்லைக்கு வந்து மொத்த சாணியையும் அள்ளிக் கொண்டு போவார்கள். இல்லையே அவர்கள் குறைந்த விலைக்குத்தான் எடுப்பார்களாமே என நீங்கள் சந்தேகப் படுவது புரிகிறது. புதிதாக மூன்று ,நான்கு பதுளை சகோதரயாக்கள் கொலன்னாவ பகுதியில் உரத்தொழிற்சாலை உருவாக்குகின்றார்கள்.அவர்களிடம் பேரம் பேசுங்கள்.நல்ல விலைக்கு விற்கலாம். டண். விற்று விட்டீர்கள். அப்புறம் அவன் உங்களுக்கு உரம் விற்பான் வாங்கி வெள்ளாமைக்கு(விவசாயப்பயிர்) விசிறுங்க. ரொம்ப சந்தோஷம்.
சந்தேகம் - 3
ஏன் மாட்டு சாணியை கொண்டு நாங்களே உர உற்பத்தி செய்யக்கூடாது. செய்யலாமே.ஜப்பானிலும், இங்கிலாந்திலும் இருக்கும் வடிவேலு ரசிகர்களுக்கெல்லாம் ஈமெயில் பண்ணுங்க.கிட்டத்தட்ட 4000 டொலருக்கு ஆறடி நீள, ஐந்தடி அகல,ஐந்தடி உயரமான ( நிறை 5 டொன்) உரம் தயாரிக்கும் அந்த இயந்திரத்தை வாங்கி அனுப்ப சொல்லுங்க. இல்ல மச்சான் எங்களுக்கு படம் பார்க்கத்தான் நேரம் இருக்கு உருப்படுகிற ஐடியாவே இல்லை என்று அவர்கள் சொன்னால். உங்கள் ஊரில் உள்ள அக்ரிகல்ச்சர் ஒபீசர்களைத் தேடிப்பிடியுங்க. பேராதனை பல்கலைக் கழகத்துல படிச்ச சரக்குகளை அவிழ்த்துவிட சொல்லுங்க. இப்படியான இயந்திரங்களை அனுராதபுரத்துல செய்கின்றார்களாமே உண்மையா என கேளுங்க.கேளுங்கள். தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கிடைக்கும் என்றார். ஏசு. அது ஒரு பொற்காலம். வெள்ளிக்கிழமை பகல் பதின்ரெண்டு மணிக்கு கே.எஸ்.ராஜா பக்கிப்பாடல்கள் என்று தொடங்குவார். நாங்கள் ஜூம்ஆவுக்குப் போக அவசர அவசரமாக சாறனை உடுப்போம். கே.எஸ்.ராஜா ஹிந்து,பாட்டு கிறித்துவம், நாங்கள் முஸ்லீம்கள் பள்ளிக்கு போக ரெடியாகுவோம். பாத்த்தீர்களா என்ன ஒற்றுமை. எல்லாவற்றையும் குழிதோண்டி வன்னியில் கொண்டு போய் புதைச்சிப் போட்டு. இப்போ மலையாள பகவதி, மலையாள பகவதி என முகையதீன் ஆண்டவர் சத்துரு சங்காரம் படித்துக் கொண்டிருக்கிறோம்.
சந்தேகம் - 4
ஆடு வளர்க்கலாம் சரி. அந்த ஆட்டுப் புழுக்கைகளை என்ன செய்வது. ஆட்டுப் பட்டிக்குப் பக்கத்தில் ஒரு குட்டி தண்ணி தொட்டி ( 10 அடி நீளம்,10 அடி அகலம்,3 அடி உயரம் )கட்டி வைத்து. குட்டி விரால் மீன் 25 வாங்கி அதில் போட்டு விடுங்கள். ஆட்டு புழுக்கையை தினமும் மீன் தொட்டியில் அள்ளிப் போடுங்கள். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய். ஆடு வியாபாரம். அத்துடன் துடிக்கத் துடிக்க விரால் மீன் வியாபாரம். ஆட்டுப் புழுக்கை விரால் மீனுக்கு அல்வா மாதிரி. விரால் மீனில் ஒன்றுக்கு பத்து வீதம் இலாபம் கிடைக்கும்.
சந்தேகம் - 5
செட்டியர் தெரு நித்திய கல்யாணி ஜூவலர்ஸ் தொடக்கம் 157 டைமன் ஹவுஸ் வரையும், டைமன் ஹவுஸ் முதல் 237 பூக்கடை வரையும், பூக்கடை தொடக்கம் புதுச் செட்டித் தெரு வரையும் உள்ள மொத்த மட்டக்களப்பானுக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. நம்முடைய பெரிய போரைதீவைப் பற்றி எழுதி இருக்கிறார். இவர் தமிழனா சோனியா என பட்டி மன்றம் நடாத்துகிறார்களாம். அதை விட்டு விட்டு தொழிலை கவனியுங்கோ. சீட்டுப் பிடித்து சேகரித்து வைத்துள்ள பணத்தை எல்லாம் ஊருக்கு கொண்டுவாங்கோ. அழகான மீன்பண்ணை.இறால் பண்ணை போடுங்கோ.
ஊரில் தரிசாக உள்ள நிலத்தில் ஒரு ஏக்;கரில் முயற்சி பண்ணி பாருங்கள். அப்புறம் ஐயோ இந்த கொழும்பும் வேண்டாம்,ஒன்றும் வேண்டாம் என ஓடி விடுவீர்கள். இல்லையே கடல் தண்ணியில,உவர்ப்பு மண்ணுலதான் இறால் வளரும் என்று சொல்கின்றார்களே. இல்லை.நமது கிணற்றுத் தண்ணியில் இறால் துள்ளி விளையாடும்.கட்டுநாயகா விமான நிலையத்தில் இருந்து மினுவாங்கொட ரோட்டுல வேனைத் திருப்புங்கள். 8 மைல் தொலைவில் "பொளிபுறப்"கம்பனி என எழுதி ஒரு பெரிய விளம்பரத்துடன் ஒரு பெயர்பலகை பல்லிளிக்கும்.( எந்த இடம் என்பதை மறந்து விட்டேன்).போய் அவன் கதவை தட்டுங்க.மலையளவு நீள அகலத்தில் அவனிடம் பொளிப்புறப் துணி இருக்கும்.இது நமது யூரியா வேக் போன்று தடிமனானது. நீர் கசியாது.இதை வாங்கிவந்து "சுவீமிங் பூள்"போல் அமைத்து (மூன்றடி உயரம்)இறால் வளர்க்கலாம்.
இறால் குஞ்சுகளை கொழும்பில் வாங்கலாம். செலவு சிறிது அதிகம். பலன் தங்கத்தை விட அதிகம். 10 லட்சம் ரூபா செலவு செய்தால் 40 லட்சம் ரூபா நிச்சய லாபம். இதற்குரிய ஆலோசனைகளை புத்தளத்தில் உள்ள இறால் பண்ணைகளில் வேலை செய்யும் ஊழியர்களிடம் இலகுவாகப் பெறலாம். உரிமையாளர்களிடம் நிச்சயம் பெற முடியாது. அது ரொம்ப நஸ்டமான தொழிலாச்சே என முகத்தை சுழிப்பார்கள். "வைட்ஸ்பொட்" என்கின்ற வெள்ளைப் புள்ளி நோய் வந்து நம்மை ஓட்டாண்டி ஆக்கிவிடும் என சொல்வார்கள்.அது காகத்தினால் (அண்டங்காக்காய்) வருவது,காக்காயை துரத்த எங்களிடம் நல்ல சீன வெடி இருக்கிறது.வெடியை கொழுத்தி போட்டு காகத்தை விரட்டுவோம் என தைரியமாகச் சொல்லுங்கள்.
சந்தேகம் -6
கோழிப்பண்ணை போட்டால் நிறைய கோழி எரு சேருமே என யோசிக்காதீர்கள். மலையகத் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அது பொன். தேயிலை மரத்தின் அடியில் இதை தூவினால் தேயிலை உற்பத்தி இரட்டை மடங்காகும்.
சந்தேகம். – 7
ஊரெங்கும் பழைய,பாவித்த, எதற்குமே உதவாத சைக்கிள் டயர், கார் டயர், வேன் டயர் என குவிந்து கிடக்கிறதே இதற்கு ஒரு வழியில்லையா என பலர் கேட்டுள்ளனர்.இவைகளை சேகரித்து கைக்கடக்கமாக துண்டு துண்டாக வெட்டி வீட்டுக் கொல்லையில் சேகரித்து வையுங்கள். இங்கிலாந்தில் இருந்து "வணங்கா மண்" வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நீண்ட நாள் கடலில் நிற்க வேண்டியேற்பட்டால் "கப்பல் ஓயில்" தேவைப்படலாம். கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒயில் விற்க இந்த டயர்கள் தேவை. ஆம். இந்த டயர் துண்டுகளை பாரிய இரும்பு சட்டியில் போட்டு எரித்து ஆவியை சேகரிக்க வேண்டும்.இந்த ஆவி ஒயிலாக மாறும்.அது கப்பல் இன்ஜின்களுக்கு பயன்படுத்தப்படும். பாரிய வெட்டை வெளிகளில் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இதை தயாரிக்க வேண்டும். சுற்றுச் சூழல் இதனால் மாசடையலாம். உரிய அனுமதிகளை பெற்று செய்ய வேண்டும். ஏற்கனவே துப்பாக்கி சனியன்களால் ஏற்பட்ட கந்தக வாசனையால் நம்மவர் சுவாசிக்க முடியாமல் இருக்கின்றனர். அப்புறம் இந்த கந்தக வாசனை மக்களை குழப்பிவிடும். ரொம்ப ஜாக்கிரதை.ஆனால் கைமேல் பலன் நிச்சயம்.
சந்தேகம் -8
மாட்டுத்தோலை என்ன செய்யலாம். ஒரு மாட்டின் தோலை ஏழு அல்லது எட்டாக பேப்பர் மாதிரி
பிரிக்கலாம். ஆனால் எம்மவருக்கு அந்த நுணுக்கம் தெரியாது. பாகிஸ்தானியர்கள் இதில் கில்லாடிகள். ஒரு மணிநேரத்தில் பத்து மாட்டின் தோலை உரித்து கடாசி விடுவார்கள். புத்தளத்தில் ஆங்காங்கே பாகிஸ்தானியர்கள் விசிட்டிங் விசாவில் வந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை அழைத்து வந்து இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். உரித்து காயவைத்து கொழும்பு டாம் ஸ்ரீட் வர்த்தகர்களுக்கு ஒரு தூது விட்டால் போதும். தோல் வியாபாரம் களை கட்டும்.
நீ ஒரு நல்ல வியாபாரியாக இருக்க விருப்பமா .நிச்சயமாக நீ ஒரு நல்ல இடிதாங்கியாக இருக்க வேண்டும். அப்படி இருக்க விருப்பமில்லையா. உடனே பணத்தை கட்டி சவூதிக்கு அல்லது ஐரோப்புக்கு போய் அவர்களுடைய டொய்லட் கழுவ வேண்டியதுதான். ஊரில் இருந்து நாளுக்கு மூன்று போன் வரும். உழைக்கிற பணத்தை எல்லாம் அனுப்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். இல்லை நான் இடிதாங்குவேன். என்னால் முடியும்.ஐ கென் வின் என்றால்.கோஹெட். ஆயிரம் வழிகளிருக்கிறது.
( தொடருவேன்………)
28-03-2009
No comments:
Post a Comment