Friday 20 March 2009

அண்ண ரைட். வடக்குக்கு போவோம். (பகுதி- 2)

 – யஹியா வாஸித் -

உ.சிவமயம்.

பெரியம்மாவுக்கு

அம்மா நான் இங்கு சுகம். நீ அங்கு சுகமா.

நீண்ட நாட்களுக்கு பிறகு மடல் எழுதுவதற்கு மன்னிக்கவும்.அம்மா உனக்கு மடல் எழுதவே கூடாது என்றுதான் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தேன். ஆனால் கடந்த பல மாதங்களாக கெட்ட செய்திகளும், கெட்ட கனவாகவுமே வந்து கொண்டிருக்கிறது. அது நிஜமா.அல்லது கனவா என கேட்கத்தான் இந்த ஆர்வ மடல்.

போன வாரக்கனவில் ஹம்மாந்தோட்டையில் இருந்து ஒரு சிங்கள வைத்தியன் வடக்குக்கு வந்து கடுக்காய் கொடுப்பது போல் கனவு கண்டேன். துணுக்கிற்று எழுந்து ரி.வி.யை திறந்தால் எனது கனவு உண்மையாகவே தெரிகிறது.ஏன் அம்மா. இவனிடம் கடுக்காய் வேண்டும் அளவுக்கு உங்களுக்கு என்ன குறை. புளட் வைத்தியர், ரெலோ வைத்தியர், ஈபிஆர்எல்எப் வைத்தியர் என பல யூனானி புதிய வைத்தியர்களையும், ஜீ.ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் என பழைய ஆயுர் வேத மருத்துவர்களையும் கொண்ட பகுதி அல்லவா அது. ஏனம்மா சிங்களத்தின் மூலிகை வைத்தியம்.

கடுக்காய் கொடுப்பவனை விட அதை குடிப்பவனுக்குத்தான் நோய் அதிகம் வரும் தாயே. கடுக்காய் பெரியம்மைக்கு கொடுக்கலாம் தாயே. ஆனால் இந்த கடுக்காயால்; கிட்டத்தட்ட ஒண்டரை லட்சம் பேருக்கு சின்னம்மை வரும் சாத்தியக்கூறு உண்டு தாயே. இங்கு கிழக்கிலும் பெரியம்மை ஆங்காங்கே தலைகாட்டுது தாயே. நாங்க எங்கட உரல், உலக்கை எல்லாம் கடுக்காய் வைத்தியனிடம் கொடுத்ததனால் அவனே இப்போது வைத்தியம் செய்யிறான். போன கிழமை புதுசா புணான காட்டுக்குள்ள பெரியம்மைக்கு அக்யுபங்சர் கொடுத்தான் தாயே.

அனோபிளஸ் கொசுவாலதான் இந்த பெரியம்மை வருவதாக யுரோப்புல பேசிக்கிறாங்க. எங்கட கிழக்கு பகுதியென்டா பரவாயில்ல. சேறும் சகதியுமாக இருக்கும் ஒத்துக்கலாம். அது சுத்தமான காய்ந்த இருவாட்டி மண் அல்லவா தாயே. குப்பை கூழங்களை அப்படியே சேகரித்து உரமாக்கி விடுவீர்களே. அப்படி இருக்க எப்படி அம்மா பெரியம்மை தோன்றியது. வைத்தியர்கள் சரியில்லையா. வைத்தியம் சரி இல்லையா.

நாங்க இப்ப ரொம்ப கவனமாக இருக்கிறோம் தாயே. பெரியம்மை சில நேரம் எய்ட்ஸ் ஆக மாறிவிடலாம் என்ற விடயத்தை தெரிந்து கொண்ட குட்டி அனோபிளஸ் கூட்டுக்கே வந்துட்டு தாயே. அது உண்மையிலேயே அனோபிளஸ் இல்லை தாயே. யாரோ ஒரு குடுகுடுப்பைக்காறன் தான் 84களுல கூட்டிட்டுப் போயுள்ளான். வந்த பின்தான் தெரியும் தான் ஒரு மயில்குஞ்சு என்று. குஞ்சுதானே தாயே. கொஞ்சம் தடுமாறுது. அந்த ஒத்தக் குஞ்சு இப்ப ரெண்டாயிடுச்சு. ஓரு குஞ்சு எங்களை வேப்பிலை குடிக்கச் சொல்லுது. மற்றொன்று மரமஞ்சள் குடிக்கச் சொல்லுது. ரெண்டும் கசப்புத்தானே தாயே. ஆனால் ஆரோக்கியத்துக்கு நல்லதல்லவா.

வேறு வழியில்லை தாயே. 25 வருஷமா ஊர்பட்ட நோயோட இருந்த எங்களுக்கு இந்த மயிலெறகு வருடல் ரொம்ப சுகமாக இருக்கு தாயே. மயிலெறகை பிச்சிடுவாங்க, கொழும்பு பருந்துகள் வந்து தூக்கி சாப்பிட்டு விடும் என நீ யோசிப்பது புரியுது தாயே. நாங்கள் மயிலாகவே இனி இருக்கப் போகின்றோம் தாயே. வான்கோழி ஆக அல்ல தாயே.தோகை விரித்து ஆடப் போகின்றோம். நீங்கள் பார்த்து ரசிக்கலாம். உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்கு புத்தகத்துக்குள் வைக்க இறகு தேவைப்பட்டால் வாருங்கள் மெதுவாக ஒன்றிரண்டை களட்டித் தருகின்றோம்.அது குட்டி போடும்.மயிலெண்ணை முறிவுக்கும் நல்லது தாயே.

அது மயில் அல்ல வான்கோழி என்று பல கழுகுகள் ஆந்தையாக நோக்குகிறதாம். குஞ்சு மயில் பார்ப்பதற்கு கோழி போல்தான் தெரியும்.நாலு றெக்கைமுளைத்தால் வான்கோழி. அப்புறம்தான் முருகனுடைய வாகனம் தாயே. நாங்கள் இப்போ குஞ்சு மயில்.எங்களை கொஞ்சம் கொத்தி தின்ன விடுங்கள். நீங்கள் இந்த ரெட்டை குஞ்சுகளை மிதிக்க முற்படுவது புரிகிறது தாயே. கோழி மிதித்தால் குஞ்சுகளுக்கு பயமில்லை தாயே. பருந்துகளிடமிருந்தும், அனோபிளஸ்ஸிடமிருந்தும்தான் பயமாக இருக்கிறது.

இப்போதுதான் தெரிகிறது எங்களிடமும் நிறைய வெடைக் கோழிகளும், மயில்களுமிருப்பது. நாங்களும் கொஞ்சம் புல்லுகளையும், நாக்கிலிப் புளுக்களையும் எங்களுடைய அலகால் கொத்தி தின்னப் போகின்றோம். எங்கட கூடுகளெல்லாம் கலைந்து போய் கிடக்கிறது.கண்ட நிண்ட குரங்கெல்லாம் வந்து அதைக் கலைத்து விட்டது. அந்த கூடுகளை கட்டி,அதற்குள்ள காக்கை குஞ்சுகளில்லாம குயில் குஞ்சுகளாகவே வளர்க்க எங்களுக்கு ரொம்ப ஆசை. இப்பவும் கொரங்குச் சேட்டைகள் தொடருது. தொடரட்டும் தாயே. எங்களுக்கும் ரெண்டு றெக்கை முளைக்கட்டும். நாலு றெக்கை முளைக்கட்டும். முளைச்சத்துப் பொறகு கூவுகின்றோம் தாயே.

நீங்க எங்களுக்கு குட்டுங்க தாயே.மோதிரக்கையால குட்டுப் பட இந்த குஞ்சுகளுக்கு ரொம்ப ஆசை.ஆனால் துப்பாக்கி சோங்கால (துப்பாக்கியின் பின்புறம்) குட்டாதீங்க தாயே. இதை அனோபிளஸின்ட குஞ்சுகளுக்கு சொல்லிடுங்க தாயே. ஜெயவர்த்தன புரத்தில பள்ளிகொண்டி ருக்கின்ற தாய்ப் பருந்து மொத்தமாக எங்களை கவ்வப் போகுதென்று அரசல் புரசலாக ஆந்தைகளெல்லாம் வட்டமிடுகின்றன. வாஸ்தவம்தான் தாயே.அவன் "பெத்தடின்" "இன்சுலின்" எல்லாம் வைத்திருக்கான.; அடித்தொடையில ஏத்தப்போறான் என்றும் பெரியம்மைக்காறர் சொல்றாங்களாம். நீங்க சொட்டு மருந்து தருவயள் எண்டு போட்டுத்தான் உங்களுக்கிட்ட வந்தோம்.

ஆனால் "ஹெரோயின்"அல்லவா தந்து போட்டயள். அது மூக்குக்குள்ளால போய், மூளையை ஒரு உலுக்கு உலுக்கி, இதயத்தை திமிற வைத்து, உடம்புல உள்ள மொத்த கசியிளையத்தையும் பிறாண்டி பதற வைத்து விட்டது. இதற்கு இன்சுலினும் இல்லாம,பெத்தடினும் போடாம எங்களுடைய கழுவாஞ்சி குடி முறிவு வைத்தியர், கழுதாவளை நாட்டு வைத்தியர்,அக்கரைப்பற்று (கோளாவில்) பாம்பு வைத்தியர், வாழைச்சேனை பரிகாரியார் போன்றோர்களிடம் கசாயம் குடித்து ஒரு தெம்பெடுப்போம். இப்ப இங்க குஞ்சுகளெல்லாம் கூட்டை விட்டு வெளியே வரத் தொடங்கிவிட்டது. களர் களரான குஞ்சுகள். ஒன்று தண்ணிக்கிழுக்கிது. மற்றொன்று தவிட்டுகிழுக்கிது, இன்னும் பல மொத்தமா இழுக்கிது. எப்படி இழுத்தாலும் எல்லாம் எங்க வயலுக்குத்தான் வந்து சேரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இந்த தோட்டக் காறர்களுக்கு இருக்கு தாயே. நாங்கள் இலவ மரத்துல கூடுகட்டாம ஒவ்வொரு முற்றத்திலும் கூடு கட்டப் போறம். அப்படி கட்டினால்தான் ரொம்ப பாதுகாப்பு தாயே. அயல் வீட்டாருடன் பேசலாம், ஆசுவாசமாக சுவாசிக்கலாம், பாம்புகள் வந்தால் தெறித்து ஓடலாம,;; முட்டையிடலாம்.ஒரு தவம் இருக்கப்போறோம் தாயே.

ஒவ்வொரு வீட்டு கொல்லையிலும்,அழுகிய சுரட்டையிலும், நீர் நிரம்பிய பன வடலியிலும் கூடு கட்டியதால் தான் அனோபிளசுக்கு இந்தக் கதி.நாங்க கூவிக் கூவி, கூப்பாடு போட்டு போட்டு கூடுகள் கட்டப் போறம். பருந்தோட சொல்லப் போறம். நீ வஞ்சம் தீர்க்கின்ற பாம்பல்ல, சுர்ரென்று தூக்கிற்று போற கழுகு மல்ல. நீ பசு வாக இரு. நாங்கள் மயிலாக இருக்கிறோம். நீ சொல்கின்ற மாதிரி எல்லாம் நாங்கள் தோகை விரிக்கின்றோம். அது போல் எங்களது பிரதான உணவான பால் (உரிமை.தமிழன் என்ற பிறப்புரிமை) டெய்லி எங்களுக்கு வாற மாதிரி ஏற்பாடு செய்யணும். மாட்டை பிடித்து பட்டியில கட்டின உடனே பால் கிடைக்காது. தடவணும்.பால் மடிய தடவணும். தண்ணிய வாழியில எடுத்து பால் மடிய கழுவி,கழுவி "ப்பா" "ப்பா"என்று தடவணும். தடவுவோம். நிட்சயமாகத் தடவி ஆடுற மாட்ட பாடிக்கறப்போம்.

அப்போது உட்கார்ந்து தாயும் பிள்ளையும் ஒன்றா,வாயும் வயிறும் ரெண்டா என்ற முழு முதற் பிரச்சனைக்கு வருவோம். சேவல்கள் யுரோப் மாட்டுச் சந்தையில "கொக்கொரக்கோ"போடுதுகள .சேவல் கூவி பொழுது விடியாதெண்டு நீதானேம்மா சொல்லித் தந்தாய்.நாங்க கொஞ்ச காலம் ஆமையாகத்தான் இருக்கப் போறோம். நிறைய முட்டை.நோ சவுண்ட். எங்கள் முட்டை மூல வியாதிக்கு நல்லதெண்டு கை கட்டி பரிகாரி சொன்னார். தேவை ஏற்பட்டால் அத்துடன் காஞ்சிரங் கொட்டையையும் அரைத்து கடுக்காய் வைத்தியருக்கு கொடுப்போம். கைகட்டிப் பரியாரியார் எங்கட அடுத்த ஊடு தான். வேர்க்கொம்பு, பச்சை மஞ்சள், அசமதாகம், திப்பிலி ஒரு கையளவு எடுத்து அம்மில வைத்து அரைத்து நல்ல கொம்புத் தேனுல அதைக் கரைத்து பனங்கல்கண்டு,பேரீச்சம்பழம், இத்தனூண்டு தாய்ப்பாலும் சேர்த்து குடித்தா பெரியம்மைக்கு நல்லதாம். இந்த குட்டிச் செய்தியை ஆவது சேவல்களுக்கு சொல்லிடுங்க.

வடக்குக்கு யூனானி வைத்தியர்களெல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு வரப்போகின்றார்களாம் என்று கேள்விப்பட்டேன். நல்ல செய்தி தாயே. நல்ல செய்தி அது. அந்த குறுப்புக்குள்ள நல்ல வைத்தியர்களெல்லாம் இருக்கிறார்கள். முன்னரைப் போல் எல்லா நோய்க்கும் பச்சத் தண்ணில சிவப்ப கலந்து போட்டு கொடுக்காமல் நல்லமருந்தாக கொடுக்க சொல்லுங்க. பல்லுவலிக்கு படிகாரத்தை அரைத்து பல்லிடுக்கில வைக்கவேண்டும், தடுமலுக்கு கருஞ்சீரகத்தை வெள்ளைத் துணியில எடுத்து ஒரு முடிச்சுப் போட்டு உள்ளங்கையில் வைத்து உரசி விட்டு மூக்குல வைத்து உறிஞ்ச வேண்டும், கண் வியாதிக்கு கற்றாளையை இரண்டாகப் பிளந்து உள்ளே இருக்கும் ஜெலி போன்ற பொருளை கண்ணுக்குள் வைத்து இரண்டு நிமிடம் அண்ணாந்து கொண்டு இருக்க வேண்டும், தலை வலிக்கு நல்ல காய்ந்த வேர்க் கொம்பை (சுக்கு) அம்மியில் வைத்து பாகாக அரைத்து நெற்றியில் பூச வேண்டும், கால் வீக்கத்துக்கு நல்ல முற்றிய மஞ்சளை (பச்சை மஞ்சள் குட் சொய்ஸ்) எடுத்து உரலில்போட்டு குதறி விட்டு வீங்கிய இடத்தில் துணியினால் சுற்றி கட்டி விடவேண்டும், நகச் சுத்திக்கு எலுமிச்சை பழத்தின் மேல் பகுதியை வெட்டி குடைந்து சிறிது மஞ்சள்,சிறிது உப்பு போட்டு கைவிரலில் சொருகி விட வேண்டும்.

இதை விட்டு விட்டு அதே பழைய பச்சத் தண்ணி வைத்தியந்தான்; விற்கப் போகின்றோம் என அடம் பிடித்தால் எங்களிடம் வாருங்கள். தண்ணி மந்திரிச்சி தருகின்றோம். தாய் கண்ணூறு, தகப்பன் கண்ணூறு, பேய் கண்ணூறு, பிசாசு கண்ணூறு என எல்லா வைத்தியனையும் ஏறக் கட்டிவிட்டு வெங்கடாஜல பதிக்கிட்ட போய் மக்கள் மேல் அன்பு கொண்ட ஒரு கூட்டத்தை எங்களிடம் அனுப்புடா கடவுளே என உயிர்ப்பிச்சை கேட்போம். அகதிக்கு தெய்வம் தொண எண்டு சும்மாவா
சொன்னார்கள்.

இப்படிக்கு
என்றும் உன்மேல் அன்புள்ள
பேராண்டி.

( சாமி இப்போது ரெண்டாவது மலையில நிற்கிறது. இது 20 பாகை ஏற்றம்.அதனால்தான் அம்மா தாயே. மூன்றாவது மலை குத்தென்று 67பாகை சரிவாக இருக்கும். கொஞ்சம் கடுப்பாத்தான இருக்கும்…)

19-03-2009

No comments: