Sunday 1 March 2009

புலிகளின் தாகம் புதுக்குடியிருப்பு?

-    சதாசிவம். ஜீ.

கமல் - நாசர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தேவர் மகன்' இருவரும் இறுதியில் சண்டையிட்டுக்கொள்வார்கள். அப்போது கமல் நாசரிடம் "ஆயுதத்தைக் கீழே போடு சமாதானமாகப் போய்விடுவோம்" என்பார். அதற்கு நாசர் "நீ எனக்கு உயிர்பிச்சை போடுவதா?" என்று சண்டையிட்டு இறுதியில் தலை துண்டிக்கப்பட்டு இறந்துபோகிறார். ஏன்ரா சண்டை?, ஏன்ரா ரத்தம்? என்று கமல் புலம்பிக்கொண்டிருக்க, "ஐயோ நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமாய் ஓடுதே" என்று நாசரின் தாய், கமலின் பெரியதாய் கத்திப் புலம்புவார்.

இதேபோல புலிகளின் விடயத்தில் யாரும் புலம்பப்போவதில்லை. அவ்வளவு இரத்தத்தை எதிரிகளினுடையது மட்டுமல்ல, தமது சொந்த மக்களின் இரத்தத்தை குடித்திருக்கிறார்கள். இருந்தும் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் எவ்வளவு விட்டுக்கொடுப்புக்கள்?

புலிகளின் கொலைவெறியில் ஒரு கண்ணை இழந்து உயிர் தப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா புலிகளுடன் பேசுவதற்கு இணங்கினார். இந்தியாவின் கவர்ச்சிகர அரசியல் தலைவரான ராஜீவ்காந்தி புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். இருந்தும் இலங்கை அரசாங்கம் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள, இந்தியா அரசாங்கம் எந்தவொரு அதிருப்தியையும் வெளியிடவில்லை.

இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) போன்ற புலிகளின் வைரிகளான அமைப்புக்கள் கூட விட்டுக்கொடுப்புக்கு தயாராக இருந்தன. ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா 'பிரபாகரன் முதலமைச்சராக போட்டியிட்டால் தான் போட்டி போடப்போவதில்லை' என்று அறிவித்திருந்தார். அதேபோல ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகம் சிறிதரன் 'புலிகள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்' என்று கூறியிருந்தார்.

இது இவர்களின் மேன்மையைத்தான் காட்டுகிறது. எப்படியாவது தமிழ் மக்களின் அவலமான வாழ்வை மாற்றியமைத்து அவர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதே மேற்படி இருதலைவர்களின் நப்பாசையாகும். ஆனால் 'அட்டைய பிடித்து மெத்தேல வைச்சாலும் அது செத்தேக்கதான் போகும்' என்பது போல புலிகள் யுத்தத்தையே நாடினார்கள். புலிகள் செய்த கொலைகளையோ அவர்கள் இழைத்த வரலாற்றுக் குற்றங்களையோ யாரும் மன்னிக்கவோ மறக்கவோ தயாராக இல்லை. ஆனால் அவர்களுக்கு பல சாதகமான சந்தர்ப்பங்களை வழங்கினார்கள். அரசாங்கம் மற்றும் புலிகளுக்கு போட்டியாக உள்ள அரசியல் கட்சிகள் எல்லாமே விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தன. இந்தியா உட்பட சர்வதேசம் வழமைபோலவே சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு பொறுமையுடன் காத்திருந்தன.

புலித் தலைவரின் தீர்க்கதரிசனம் பொய்த்து புலிகளின் மாயை சுக்குநூறாக உடைத்தெறியப்பட்டது. பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசியல் தலைவர்களில் ஒருவராகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புலித் தலைவர் கணிப்பிட்டார். எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அன்றைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் ரணில் ஜனாதிபதி ஆகியிருப்பார். 'ஆடடா ஆடு என்று ஆசையை தூண்டிவைப்பேன்' என்று ரணில் வடகிழக்கை புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு, தென்னிலங்கையில் தனது ஆட்டத்தை ஆடியிருப்பார்!

நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைத்த கதையாக பிரபாகரனின் கதையும் ரணிலின் கதையும் ஒரே மாதிரியாக அமைந்துவிட்டது. இருவருக்கும் உள்ள வேற்றுமைகளிலும் பார்க்க ஒற்றுமைகளே அதிகம்.

'அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும்' என்பதுபோல இவர்கள் இருவரும் அன்று கொன்றதற்கு இன்று அதன் பலன் கிட்டியிருக்கிறது. ரணிலின் சர்வதிகாரம் கொண்ட ஜனாதிபதி கனவும், பிரபாகரனின் சர்வாதிகரம் கொண்ட தனியரசு கனவும் கலைந்துபோனது. யு.என்.பியின் தலைவராக தொடர்ந்து சில காலம் ரணில் தலைவராக இருக்கலாம். அதேபோல 'பறட்டை காட்டுக்குள்ள கரட்டி ஓணான்' விளையாட்ட காடுகளுக்குள் ஒளிந்திருந்து பிரபாகரனும் செய்யலாம் அவ்வளவே.

புதுக்குடியிருப்பு மட்டுமே தற்போது புலிகளிடம் எஞ்சியிருக்கிறது. புலிகளின் சாவிலும் அங்கு வாழும் மக்களின் வாழ்வும் புதுக்குடியிருப்பு என்னும் நூலில் ஆடிக்கொண்டிருக்கிறது. புலிகள் தற்போது யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் அதனை சாதகமாக பயன்படுத்தி புலிகளிடம் சிக்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கப்படவேண்டும் என்பது எல்லோரதும் எதிர்பார்ப்பு. முதன்முறையாக இந்தியாவும் இதனை உத்தியோகப+ர்வமாக வலியுறுதியுள்ளது. இதனையே ஐ.நா சபையின் மனித நேய செயற்பாடுகளுக்கான தலைவர் ஜோண் ஹோல்ம்ஸ், ஐ.நா பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கை அரசாங்கம் தற்காலிக யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு புதுக்குடியிருப்பில் சிக்குண்டுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் மீள்குடியமர்த்த வேண்டும். அவ்வாறு நடைபெற்றதன் பின்னர் பெரும்பாலான தமிழ் மக்கள் நினைப்பதை அரசாங்கம் இலகுவாகவும் விரைவாகவும் செய்து முடிக்கக்கூடியதாக இருக்கும்.

புலிகள் ஏற்படுத்தியுள்ள சூழல், அவர்கள் ஆயுதத்தை கீழே போட்டாலும் அதன் தலைமைக்கு மன்னிப்பே கிடையாது என்பதை பட்டவர்தனமாகியுள்ளது. பிரபாகரனும் புலித் தலைமையும் எவ்வளவு சுகபோகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் இப்போது புரிந்துகொள்ளக்கூயதாக உள்ளது. இராணுவம் மீட்டுவரும் நிலங்களில் அமைந்துள்ள புலிகளின் பங்களாக்களை இராணுவம் இணையங்களில் வெளியிட்டிருக்கிறது. இறுதியாக மிக ஆடம்பரமான நீச்சல் தடாகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனை எத்தனை அதிசயங்கள் எமக்கு காணக்கிடைக்குமோ தெரியவில்லை.

ஆனால் அரசாங்கம் ஏ-9 பாதையை திறப்பதற்கு முன்னர் சில அவசர அவசிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். முதலாவதாக புலிகளின் பங்களாக்களை அரச உடமையாகக்க வேண்டும். அவை சேதமடையாமல் பாதுகாப்பதுடன் அதனை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஸ்தானமாக மாற்றவேண்டும். இதனைப் பார்வையிடுவதற்கு உள்ளுர் மக்களுக்கு இலவசமாகவும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கட்டணமும் இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இரட்டிப்பு கட்டணமும் அறவிட்டப்பட வேண்டும்.

இவ்வாறு ஈட்டப்படும் வருமானம் புலிகளால் மிகவும் பாதிப்படைந்த வன்னிவாழ் மக்களின் வாழ்வாதாரங்ளை உயர்த்துவதற்கு பயன்படுத்தப்படவேண்டும். இதுவே தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் அவசரக் கோரிக்கை.

Source :
www.theneeweb.de

No comments: