Sunday 15 March 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும், கிழக்கு மாகாண மக்களுக்கும் (பகுதி 4)

-யஹியா வாஸித்-

சிறிலங்காவில் நடக்கும் போர் தமிழீழத்துக்கான, எமது உரிமையைப் பெறுவதற்கான போர் என்று சொல்லிப் புறப்பட்டவர்கள் எல்லாம் சொத்துப் பத்து சேர்த்து, சுவீமிங்பூல் கட்டி ஆர்ப்பரிக்கும் போது எல்லாவற்றையும் இழந்து விட்ட நாம் ஏன் சிறிது முயற்சிக்கக் கூடாது. அது வரும். இல்லை இல்லை இது வரும் என எவ்வளவு காலம் தான் பொறுப்பது. இனி நமது வயிற்றை நாமே பார்த்துக் கொள்வோம். பொறுத்தார் அரசாள்வார், பொங்கினார் புக்கை தின்பார் என்று திருக்கோயில் தீர்த்தக்களரியில் நண்பர்கள் சொல்வார்கள். அம்மாக்களும், அக்காக்களும் புது பானைக்குள் பச்சரிசி போட்டு பொங்க "அக்கோ கெதியா தாக்கா பசிக்கிது" என நண்பர்கள் கெஞ்ச "பொறுடா மச்சான் பொறுடா"என்று அமைதிப்படுத்தி எல்லோரும் ஒன்றாக இருந்து தீமிதித்த காலமது. ஆயுதம் அற்ற அற்புதமான அந்தக் காலம்.

நாகமணியர்ர வீட்டுக் கோழியைத் திருடி "பள்ளிக்கு கொண்டு போய் அறுத்து" நாகமணியர்ர மகனையும் கூப்பிட்டு கோழிக்கறி சாப்பிட்ட பொற்காலம். அடுத்த நாள் காலையில் கூட்டுக்குள்ள கோழிய காணாம ஊர்பட்ட சாமியெல்லாம் கூப்பிட்டு நாகமணியர்ர பொண்டாட்டி திட்டும் போது அவருடைய இளைய மகள் எங்களுக்கு நன்னாரி பிளேன் ரீ குசினிக்குள்ள பரிமாறுவார். நாங்கள் கொடுப்புக்குள்ளால சிரிப்பம். நண்பருக்கு விடயம் விளங்கி விடும் .நேற்றய கோழிக்கறி நம்ம கோழிதான் என்ற விடயம். இரண்டு நாளில் அக்காவிடம் விடயத்தை நாசுக்காக சொல்லி, அப்புறம் அக்கா அம்மாவிடம் சொல்லி விடயம். பூசி மெழுகப்படும். ஒரு பதினைந்து நாட்களுக்கு அந்தப் பக்கமே போக மாட்டோம். அப்புறம் நாகமணியர்ர பொண்டாட்டி எங்கள ரோட்டுல தற்செயலாக கண்டு என்ன வீட்டுப் பக்கம் காணல. மூத்த மகளுடைய புருஷன் கோமாரியில இருந்து நல்ல கறுத்த கொழும்பான் மாம்பழம் கொண்டு வந்திருக்கார் போய் சாப்பிடுங்கோ என்ற பிறகுதான் அந்தப் பக்கமே போவோம். இப்படி ஒரு அன்னியோன்ய ஆயுதமற்ற உலகு.

ஆயுதச் சனியனை களைந்த அந்த தெய்வங்களுக்கு முதலில் ஒரு சல்யூட் அடிப்போம். தெய்வங்களா இன்னும் எங்காவது தலைமைக்குத் தெரியாமல் அல்லது தவறுதலாக ஆங்காங்கே கிடந்தால் பழைய இரும்புக் கடைக் காறர்களுக்கு கொடுத்து விடுங்கள். பெரும் தலையே அந்தசனியனைக் கை விட்டு விட்டு உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி என புறப்பட்டு விட்டது. வத்தளை (கொழும்பு ரோட்)யிலும், சீதுவையிலும் நிறைய பழைய இரும்பை வாங்கி உருக்கும் கம்பனிகள் இருக்கின்றன. பிளீஸ். விற்றுவிட்டு செட்டியர்தெரு தொங்கலில், கோயிலையும் தாண்டியவுடன் பூபாலசிங்கம் புத்தக சாலை இருக்கிறது. அங்குபோய் நிறைய முன்னேறுவதற்கான புத்தகங்களை வாங்குங்கள். ஆனந்த விகடன் இப்போதைக்கு வேண்டாம். விரைவில் குருநாகலையில் நமது அமைச்சர் ஒருவரின் மச்சான் இரும்பாலை ஒன்று திறக்க இருக்கின்றார். அவருக்காவது அந்த இரும்புகளை விற்று விடுங்கள்.

உல்லை, பொத்துவில், திருக்கோயில், தம்பிலுவில், சின்னமுகத்துவாரம், பாலமுனை, ஒலுவில் தொடங்கி மூதுர்,திருகோணமலை வரை கடலை எல்லையாக வைத்துக் கொண்டு தாய்லாந்திலிருந்து வரும் டின் மீன் (செமன்  டின்)ஐத்தான் சாப்பிடுவோம் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. நீர்கொழும்பு (மீகமுவ) மீனுக்குப் பெயர் போன ஊர். கொழும்பில் உள்ள புதுப் பணக்காரர்களெல்லாம் காலையில் ஐந்து மணிக்கு பஜிரோவை எடுத்துக்கொண்டு நீர்கொழும்பு போய் கடற்கரையில் கியுவில் நின்று சுடச்சுட (இப்போதுதான் பிடித்து வந்தது ) மீன் வாங்கி வந்து காலையில் ஒரு மீன் சொதி, பகலுக்கு ஒரு மீன் டெவல், இரவுக்கு நாலு நண்பரையும் கூட்டி வந்து மீன் பொரியலுடன் ஒரு தண்ணிப் பார்ட்டியும் வைப்பர். நாங்களெல்லாம் மாழுகடையில் மீன் வாங்குவதில்லை. அங்கு பழைய மீன்தான் விற்கின்றார்கள். 65 அடி நீளம் 21 அடி அகலமான "ரோளர்" (பாரிய போட்)ஐ நேற்றிரவு கடலுக்குள் தள்ளி இப்போது அதிகாலையில் அள்ளி வந்த மீன்களா இவை. இல்லை.

இந்த ரோலர்களின் விலை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா. இது ஒரு குட்டிக்கப்பல். இதற்குள் டி.வி,சற்லைட ;(வழிகாட்டி), எட்டுப்பேர் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டு போகக் கூடிய வசதியுடன்,15 தொன் மீன், 1000கிலோ ஐஸ், 15 பரல் டீசல் என்பவற்றையும் சுமக்கக்கூடிய பலமும் உண்டு. நீர்கொழும்பில் இவ்வாறு பல ரோலர்கள் உண்டு. இந்த ரோலரை எடுத்துக்கொண்டு அந்திசாயும் வேளைகளில் கடலுக்குப் புறப்படுவர். ஒரு மைல் இரு மைல் அல்ல 1000 அல்லது 1200 மைல் புறப்படுவர். 14 நாட்கள் பிரயாணம். குட்டிக்குட்டி தீவுகள்.தெரியும். இந்த தீவுகளை அமெரிக்கன் தூபத் (அமெரிக்க தீவுகள்) என்று இவர்கள் சொல்வார்கள்.அங்கு ரோலரை நிறுத்தி ஏழு நாட்கள் மீன்பிடிப்பார்கள். அறுக்குளா, கெலவல்லு, கட்டாப்பாறை என இங்கு கிடைக்கும். அப்புறம் 14 நாட்களில் நீர் கொழும்பு திரும்புவார்கள். மொத்தம் 35 நாட்கள் பயணம். மீன் பிடித்து 21 நாட்கள். இதைத்தான் நம்மவர் சுடச்சுட மீன் என சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ரோலரை 10 அல்லது 15 பேர் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து வங்கியில் கடனாகப் பெறலாம். ஒரு வருடத்தில் ரோலர் கடனை அடைத்து விடலாம். தாய்லாந்துக்கு நாம் செமன் டின் வழங்கலாம். குட்டிக் கடல்பரப்பைக் கொண்ட குருநகரில் மீன் பிடிவலை பெக்டரி அமைக்க முடியுமானால் பாரிய கடல் பரப்பைக் கொண்ட, இனி தொடர்ந்து அமைதியாக இருக்கப் போகின்ற கிழக்கில் ஏன் ஒரு மீன் பிடி வலை பெக்டரி அமைக்கக் கூடாது என யோசிக்கலாம். கல்முனை, திருகோணமலை பகுதி கடலட்டைகளுக்கும் ,களப்புகளில் பிடிக்கப்படும் விலாங்கு மீனுக்கும் சிங்கப்பூரிலும், சைனாவிலும் ஏக கிராக்கி. சிங்கப்பூர்வாசி ஒருவர் அனுராதபுர குளங்களிலிருந்து குட்டி விலாங்கு மீன்களை வாங்கி வந்து, வத்தளையில் நீர் தொட்டிகளில் வளர்த்து மொத்தமாக இலாபம் உழைத்துக் கொண்டிருக்கின்றார் .நாம் வாழை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் விபரம் தெரியாமல் இவ்வளவு காலமும் காலத்தை கடத்திவிட்டோம்.

நம்ம பகுதிகளில் விலாங்கு மீன் கிடைப்பது கொஞ்சம் கடினம். அனுராதபுரத்துக்கு அருகில் முன்னாள் ராஜாக்கள் கட்டிய குட்டிக் குட்டிக்குளங்கள் இருக்கின்றன. இங்கு சென்று குட்டி விலாங்கு மீன்களை தண்ணீர் குடங்களில் கொண்டு வரலாம். ஓரு குடத்தில் ஒரு அடி நீளமான ஆறு விலாங்கு மீன்களை கொண்டு வரலாம். நாலடி அகல ஆறடி நீள ஐந்தடி உயர நீர்த் தொட்டிகளில் 100 விலாங்கு மீன்கள் வளர்க்கலாம். சிங்கப்பூர்,மலேசியாவுக்கு வீட்டில் இருந்து கொண்டே இதை எப்படி எக்ஸ் போர்ட் பண்ணுவதென எக்ஸ் போர்ட் டெவலெப்மென்ட் போர்ட் இல் ஆலோசனையும் பெறலாம். சில சமயம் கொழும்பில் கோள் றோட்டில் கடை பரப்பியுள்ள சைனீஸ் ரெஸ்ட்ரூரன்ட் காறர்களும் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுவார்கள்.

தொண்டமான் தொண்டமான் என்று ஒரு அமைச்சர் மலையகத்தில் இருந்தார். இப்போதைய ஆறுமுகம் தொண்டமானின் பெரியப்பா.அந்த மனிதர் மலையக மக்களுக்கு சில நல்ல வேலைகளும் செய்திருந்தார். இவர் கால் நடை அபிவருத்தி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து நல்ல கொழுத்த மாடுகளை இறக்குமதி செய்து தோட்டத்து தொரமாருக்கும், கங்காணிமாருக்கும், சுப்ரீன்டன்களுக்கும் ஆளுக்கு இரண்டு, நான்கு மாடு என வழங்கி இருந்தார். இந்த மாடுகள் காலையில் இருபது லிட்டர், மாலையில் இருபது லிட்டர் பால் கறக்கும். காலையில் எட்டு மணிக்கும், மாலையில் ஐந்து மணிக்கும் பால் சேகரிக்கும் லொறி டாண் என வந்து ஒவ்வொரு சந்தியிலும் நிற்கும். சுத்தமான பால். கலப்படம் கிடையாது. மீட்டர் போட்டு பார்ப்பார்கள். ஒரு சொட்டு தண்ணி கூட அந்த மலையக சகோதரர்கள் கலக்க மாட்டார்கள். மலையக மக்கள் இப்போது ரொம்பவிபரமாக இருக்கின்றார்கள். நுவரேலியாவுக்கு காணிவேல் பார்க்க போறதையும், ஹக்கலயில் கேளிக்கை செய்வதையும் விட்டு விட்டு அப்படியே ஒரு நடை தலவாக்கொல்லக்கும், நாணு ஓயாவுக்கும் போய் விரிந்து பரந்த பச்சை தேயிலைகளுக்கிடையே ஆங்காங்கே கொழுக்.மொழுக் எனத் தென்படும் இந்த மாடுகளைப் பற்றி விபரங்கள் சேகரியுங்கள். போக முடியவில்லையா. அக்ரிகல்ச்சர் படிப்பிக்கற வாத்திமார்களைப் பிடியுங்கோ, (சில சமயம் ஏட்டுச் சுரக்காயும் கறிக்குதவும்)அவர்களுடாக விடயங்களைக் கறந்து, மிருக வைத்தியரிடம் ஆலோசனை பெற்று பிறகு 80 ஆயிரம் ரூபா கொடுத்து இரண்டு மாடுகளை வாங்கி பால் கறவுங்கோ. அது சரி புல்லுக்கு என்ன செய்வது ?

இரண்டு மாடு வளர்ப்;பதென்றால் சமாளித்து விடலாம். ஒரு முப்பது மாட்டை வாங்கி வளர்ப்பவர்களுக்குத்தான் அந்தப் பிரச்சனை வரும். அதையும் சமாளிக்கலாம்.எப்படி? இந்த மாடுகள் காடுகரை எல்லாம் உலாவி புல் மேயும் மாடுகள் அல்ல. நின்ற இடத்திலேயே ஆறுமாதம் உசும்பாமல் நிற்கும். நேரத்துக்கு புல் போட்டால் போதும். ஒரு நாற்பது அடி நீள 20 அடி அகல ரூமில் 20 மாடுகளை நிறுத்தலாம். புல் விதைகளும், புல் வளர்க்கும் கன்டய்னர்களும்  20 அடி நீளம் 10 அடி அகலம் 12 அடி உயரம ) விலையாக வாங்கலாம். இந்த புல் வளர்க்கும் கன்டய்னர்களுக்குள் 8 அடி நீள 4 அடி அகல 5 அங்குல உயரமான 24 தட்டுக்களை 10 அங்குல இடைவெளியில் பொருத்தக் கூடிய வசதி உண்டு. தலையை சற்றுகின்றதா ? (ஒரு தரம் வீட்டுக்குள்ள போய் பிறிஜ்ஜை திறந்து பாருங்க எல்லாம் விபரமாகப் புரியும்) புல் விதையை தூவி விட்டு நீரையும் விட்டு கன்டய்னரை மூடி விட்டு சில நாட்களில் திறந்தால் ஓன்பது அங்குல புல் ரெடி.

இங்க நாங்க ஆறுமாதத்துக்கு முன் செத்த கோழி, ஒண்ணரை வருஷத்துக்கு முன் இறந்த ஆடு, நாறிப் புளுத்த மீன்களைத்தான் "புதுசு மச்சான் புதுசு. இன்னும் எக்ஸ்பயறி ஆகல" என்று சொல்லி எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம். நீங்களாவது பிரஷ் ஆக சாப்பிட்டு ஊரையும் கொஞ்சம் முன்னேற்றுங்கோ. உருப்படியாக ஏதாவது செய்த மாதிரி இருக்கும். யாருடா இவன் முன்னர் இடைக்காட்டில பழைய இரும்பு வாங்கின கதை சொன்னார். இப்போ கோமாரியில்; தீமிதித்த கதை சொல்லுகின்றார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்குமோ என தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். பட்டுருப்புல வாப்பாட கடையில வாப்பாவுக்குத் தெரியாம மூன்று ரூபா களவெடுத்துக்கு வந்து போரதீவு கட்டுறும்பூச்சி மரத்தடியில் தமிழ் நண்பர்களுடன் ஓன்றாக பஸ் ஏறி களுவாங்சிக்குடி சாரதாவில் நீரும்நெருப்பும் படம் மெட்னி ஷோ பாhத்த அனுபவமும் உண்டு. எனவே ஓந்தாச்சிமடம், சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, களுவாஞ்சிகுடி, முனைத்தீவு, பெரிய போரதீவு, கோயில் போரதீவு நண்பர்களே இந்த மாடுவளர்ப்பு பற்றி கொஞ்சம் ஆளமாக யோசியுங்கள். உங்களது இடது கைப் பக்கம் மகா ஓயா சந்திவரை (தம்பலா வட்டை,கொக்கொட்டிச்சோலை, பெரியபுல்லுமலை, பாவக்கொடிச்சேனை, உன்னிச்சை, கோப்பாவெளி) பரந்து விரிந்துள்ள அந்த காணி நிலங்களை தரிசாக விடாதீர்கள்.

ஓன்றுமே விளையுதில்லையே என யோசிக்காதீர்கள். ஒன்றுமே விளையாத நிலத்தில் கொத்தமல்லி நன்றாக விளையும். இப்போதே ஒரு பிடி கொத்த மல்லியை எடுத்து உரலில் போட்டு இரண்டாக உடைத்துவிட்டு வீட்டு முற்றத்தில் போட்டு மண்வெட்டியால் கொத்தி விடுங்கள் மூன்று மாதத்தில் நிச்சயாக 400 கிராம் கொத்த மல்லி கிடைக்கும். அப்புறம் என்னவளம் இல்லை இந்த திரு நாட்டில் என்று பாட்டுப் பாடலாம்.

எனது இக்கட்டுரைகளை வாசித்துவிட்டு இணையத்தளங்களுக்கு நன்றி தெரிவித்து நகல் அனுப்பிய
அனைவருக்கும் நன்றி. ( தொடருவேன்…)

14-03-2009

1 comment:

Narada said...

Sahasamvada, Can you also publish neither sinhala or english translation of your posts to get more options?

Thanks!