Tuesday 10 March 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும். கிழக்கு மாகாண மக்களுக்கும். (பகுதி 2)

-யஹியா வாஸித்

நேற்று நண்பர் ஒருவர் கேட்டார். எல்லோரும் வன்னி நிலவரம் எழுதிக் கொண்டிருக்க நீர் மட்டும் பொருளாதார நிலவரம் எழுதிக் கொண்டிருக்கிறீர்.உமக்கென்ன லூசோ எனக் கேட்டார். ஆமாண்ணா சென்ற 23ம் திகதிவரை மென்டலாகத்தான் இருந்தோம்;. 23 பிற்பகல் ரியுப்தமிழ் டொட் கொம் பார்த்த பின்னர் தோன்றிய பொறிதட்டல்தான் இது. அதில் நமது முன்னாள் வேங்கை ஒன்று "நாங்கள் இங்கு தண்ணீர் குடிக்க கூட வழியில்லாமல் இருக்கின்றோம்"என்று எவ்வித கவச குண்டலங்களுமின்றி, கழுத்தில் ஜோல்னாப் பையொன்றை போட்டுக் (சரி நிகர் சேரன் மன்னிப்பாராக. ஜோல்னாப் பை உங்களுடைய கருவி அல்லவா?) கொண்டு உலகத் தமிழர்களுக்கும், உலக உதவி நிறுவனங்களுக்கும் மன்றாட்டமாக வேண்டுகோள் விட்டுக் கொண்டிருந்தது. ஐயகோ! இறைவா!! இதைத்தான் தண்ணில கண்டம் என்பதோ!? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதும் இதுதானோ! கிளிநொச்சி தண்ணீர் தொட்டி குப்புற விழுந்து கிடந்ததைபார்த்த போது எத்தனை வாயும், வயிறும் எரிந்தது. யுத்த நாகரிகம் மொத்தமாக சவக்குழிக்குள் அல்லவா தள்ளப்பட்டது.

அழகிழந்து, அணியிழந்து, கதியிழந்து, கவலையுற்று, வாடி, வதங்கி, சோபையிழந்து இளம்பருதி அண்ணா மலங்க மலங்க விழித்துக் கொண்டு ரொம்ப நாட்களுக்கப்புறம் மக்களுடன் மக்களாக "வாக்கி டோக்கி" சகிதம் நின்று போஸ் கொடுத்து "கஞ்சி" வாங்கி குடித்ததைப் பார்த்த பின் யாருக்குத்தான் கவலை வராது. மக்கள் மேல் பாசம் வராது. உங்களிடம் நீச்சல் தடாகங்களும், "சோலார் பவரில்" இயங்கக்கூடிய ஜெனரேட்டர்களும், வோட்டர் பம்ப் களும் இருக்கின்றன. நாங்கள் ரொம்ப ஏழைகள், அழுதழுதும் பிள்ளைகளை நாங்கள்தான் பெற வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை இப்போதே தொடங்கி விடுவது நல்லதல்லவா. அதனால்தான் இச்சிறு முயற்சி என்றேன்.


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் அனைத்தும் விசா வழங்க மட்டும்தான் இருக்கின்றன என நம்மவர் பலர்தப்புக் கணக்கு போட்டுள்ளனர். ஒவ்வொரு தூதுவராலயங்களிலும் அரசியல் பிரிவு, வர்த்தக பிரிவு, உளவுப் பிரிவு, விஸாப் பிரிவு. செய்திப் பிரிவு என பல பிரிவுகள் இருக்கின்றது. இங்கு வர்த்தகப்பிரிவு (கொமர்ஷியல் டிவிஷன்)தான் மிக முக்கியமானதும் பெரிய இடவசதியைக் கொண்டதுமாக அமைந்திருக்கும். இதில் பல ஊழியர்கள் அவ்வவ் நாடுகளின் உற்பத்தி, முடிவுப்பொருட்கள், மூலப் பொருட்கள் போன்ற சகல விடயங்களையும் நமக்குத்தர தயாராக உள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த நாடுகள் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றன என்ற விபரங்களையும் இவர்களிடம் பெறலாம். எவ்வித கட்டணமும் கிடையாது. எவரும் போகலாம். எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. என்ன அடுத்த முறை கொழும்பு போகும் போது பிரிட்டிஷ் எம்பசி கொமர்சியல் டிவிஷனுக்கோ, பிரான்ஸ் எம்பசி கொமர்சியல் டிவிஷனுக்கோ ஒரு நடை போய்த்தான் பாருங்களேன்.

"மொரட்டுவ"யைச் சேர்ந்த மரவேலை (ஓடாவி, தச்சன்)செய்பவர் ஒருவர். சின்னச்சின்ன மரவேலைகள் செய்து பிழைப்பு நடாத்திக் கொண்டிருந்தவர்.மரத்தினால் என்ன என்ன வேலைகள் கள் செய்ய முடியாது என நாம் நினைப்போமோ இதை இவர் செய்து முடிக்க கூடிய திறமை படைத்தவர். இவருக்கு சொந்தமாக வீடு கிடையாது. கூலி வீடு, பல பிள்ளைகள். ஒரு முறை அவ்வழியால் காலிக்கு உல்லாசப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர். இவரது கைத்திறனை பார்த்துவிட்டு ஏன ;இதை வெளிநாட்டில் சந்தைப் படுத்தக்கூடாது எனக்கேட்டு "கொமர்ஷியல் டிவிஷன்களுக்கு"ஒரு விசிட்பண்ணும்படி ஆலோசனையும் கூறுகின்றார். ஆம் இவர் பல எம்பசிகளுக்கு படையெடுக்க ஜப்பான் எம்பஷி கொமர்ஷியல் டிவிஷன் இவரை கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றது. இப்போது ஜப்பானில் உள்ள பல "டகோபாக்கள்" இவரது கைவண்ணத்தி; உருவானவைதான். சிறிலங்காவிலும் இன்னும் பல வெளிநாடுகளிலும் உள்ள அரசியல்வாதிகளினதும், பணமுதலைகளினதும் வீடுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் முழுக்க முழுக்க தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆறடி உயர, ஒண்ணரை அடி அகலமான மணிக்கூடுகள் இவரது சொந்தக் கம்பனி தயாரிப்புகளே.

இந்த கொமர்ஷியல் டிவிஷனை டெலிபோனிலும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம். உதாரணமாக நீங்கள் ஒரு மொபைல் போன் வியாபாரியானால் நீங்கள் "பின்லான்ட்"எம்பஷியைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொண்டு பின்லான்டில்; உள்ள அத்தனை மொபைல் போன் கம்பனிகளினதும் விபரங்களைக் கேட்கலாம். மூன்று நாட்களில் அத்தனை கம்பனி விபரங்களும் உங்கள் கதவை தபாலில் வந்து தட்டும். உலகிலேயே தரமான உறுதியான மொபைல் போன் தயாரிக்கும் கம்பனிகள் பின்லான்டிலேயே இருக்கின்றது. கொழும்புக்குப் போய் "செக் பொயின்ட்டுகளில்" செக்குமாடுகள் போல் அலைந்து திரியவேண்டிய அவசியமுமில்லை.

"கடுகண்ணாவ"யில் இருந்து எட்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள "பொத்தப்பிட்டிய" கொட்டைப்பாக்குக்கு பெயர் போன ஊர். இங்கு விளையும் கொட்டைப் பாக்கு உலகப் பிரசித்தம். ஆனால் பழுதடைந்த கொட்டை பாக்கை யாருமே வாங்க மாட்டார்கள். ஓட்டை விழுந்து உழுத்துப்போன கொட்டைபாக்கு அங்கு மலையாக குவிந்து கிடந்தது. இதில் சிறிததளவை கையில் அள்ளிக் கொண்டு புத்திசாலித்தனமான இளைஞர் ஒருவர் ஒவ்வொரு கொமர்ஷியல் டிவிஷனாக ஏறி இறங்கினார்.ஆம்  இந்நிய கொமர்ஷியல் டிவிஷன் இவருக்கு பாதையை திறந்து கொடுத்தது. கேரளா எர்ணாகுளத்தில் உள்ள "நிஜாம் பாக்கு" "அஜந்தா பாக்கு"கம்பனிகள் அந்த பாக்குகளை மொத்தமாக வாங்கின. இளைஞர் இப்போது சிறிலங்காவில் விரல் விட்டு எண்ணக்கூடிய வியாபாரிகளில் ஒருவர்.

நீங்கள் உங்கள் கிராமங்களில் உள்ள வர்த்தக சங்கங்கள், சேம்பர் ஒப் கொமர்ஷ் ஊடாக இவர்களை நேரடியாக உங்கள் கிராமங்களுக்கே அழைக்கலாம். நிறைய ஆலோசனைகள் வழங்குவார்கள். உங்கள் காலடியிலேயே கொழும்பு வர்த்தகர்களை கட்டிப் போடக் கூடிய பிரபல வர்த்தகர்கள் இருக்கின்றார்கள். உதாரணமாக நமது மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவின் மாமனார் (மனைவியின் தந்தை), அக்கரைப்பற்றைச் சேர்ந்த அப்துல் கையும் ஹாஜியார்,  கொழும்பைச் சேர்ந்த ஜனாப்.மஹ்றுப் போன்றவர்களைச் சொல்லலாம். முழு சிறிலங்காவுக்குமான "மெரைன் சீமந்து" வியாபாரம் 2000களில் இவர்களின்; கையிலேயே இருந்தது. இப்போது பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். வியாபாரத்தில் இவர்கள் மேதைகள். இவர்களை கிராமம் கிராமமாக அழையுங்கள். இவர்களிடம் இவர்களது அனுபவங்களை கேளுங்கள். இவர்கள் வாழ்க்கையுடன் போராடி ஜெயித்தவர்கள். நிச்சயம் ஆலோசனை சொல்வார்கள்.

உங்களால் முடியாவிட்டால் ஜனாப்.ஹிஸ்புல்லாவிடமும், திரு.முரளிதரனிடமும் கோரிக்கை வையுங்கள். வடகிழக்கில் உள்ள அவ்வளவு அனுபவசாலிகளையும் கிராமம் கிராமமாக அழைத்து வரச் சொல்லுங்கள்.கொமர்ஷியல் டிவிஷன்களை தொடர்பு கொண்டு வந்தாறுமூலையிலும், மூதூரிலும் இலவசமாக "வேர்க்ஷொப்" நடாத்தச் சொல்லுங்கள். 2001ல் யாழ்.வேம்படி மகளிர் மகா வித்தியாலயத்தில் ஒரு கைத்தொழில் பொருட்காட்சி நடந்தது. ஒரு சின்னஞ்சிறுவன் வீட்டில் இருந்து கொண்டு எவ்வாறு சீனி உற்பத்தி செய்யலாம் என பல பண்டிதர்களுக்கு பாடம் நடாத்திக் கொண்டிருந்தான். குட்டி இயந்திரமொன்றை (அவரது சொந்த தயாரிப்பு) வைத்துக் அரைக்கிலோ கறும்புச் சாற்றைப்போட்டு 200கிராம் சீனி தயாரித்தான். உலகில் எங்குமே இப்படி ஒரு இயந்திரம் கிடையாது. இயந்திர உலகின்தாத்தா என்கின்ற சைனாவிடமே அதிகுறைந்தது 1000கிலோ சீனி உற்பத்தி பண்ணக்கூடிய இயந்திரம்தான் உண்டு. அந்த குட்டி ஜீனியஸை தேடிப்பிடியுங்கள். அவரைப் பட்டை தீட்டி சீனி உற்பத்தியை குடிசைக் கைத்தொழிலாக்குங்கள். இந்தப்பொருட்காட்சிக்கு நான் நிருபரும், சினேகிதனுமான நிமலராஜனுடன் சென்றிருந்தேன். அவர் சில புகைப்படம் எடுத்தார். அப்புகைப்படம் எனது கைக்கு கிடைக்கவில்லை.

சீனி உற்பத்தியில் கொள்ளுத்தாத்தா எனச் சொல்லப்படுகின்ற பிரேசிலில் ஒரு மெட்டிக் தொன் சீனியின் விலை 115யு.எஸ்.டொலர் (கிட்டத் தட்ட கிலோ 14ரூபா) மட்டுமே. ஆனால் அது டுபாய் போய் அங்கிருந்து இந்தியா வந்து, அங்கிருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்து, கொழும்பு 4ம் குறுக்குத்தெரு வந்து ஓந்தாச்சிமடம் வரும் போது விலை மூச்சை முட்டும். அட சீனி பிரேசிலில் 14 ரூபாத்தானா! உடனே பிரேஷில் எம்பஷி போய், கொமர்ஸியல் டிவிஷன் கதவைத்தட்ட ஒரு கன்டய்னர் (20 தொன், 20.000கிலோ) சீனி வாங்குவோமே என நடையைக்கட்டி விடாதீர்கள். சீனி வியாபாரம் ஒரு மாயா பஜார். அங்குள்ள ஒவ்வொரு சீனி பெக்டரியுமே வானைத்தொடும். அதிகுறைந்தது. 12.500 மெட்டிக் தொன்தான் (ஒரு கோடி இருபத்தைந்து லட்சம் கிலோ) தருவார்கள். குறைந்தது நம்மிடம் 3.1 மில்லியன் யு.எஸ்.டொலர் தேவை. சிறிலங்காவில் இந்தளவு "தில்" யாருக்குமே இல்;லை. சீனி சண்முகம் என்கின்ற ஒருவருக்கு தில் இருந்தது. பிரேமதாஸ ஆட்சி காலத்தில் அவரையும் சுவாகா……..!

முழுக்க முழுக்க கொழும்பு வர்த்தகத்தில் கோலோச்சிய யாழ்த் தமிழர்களும், மலையகத் தமிழர்களும்; "ரிட்டயர்ட்"என்ற போர்வையில் பிள்ளைகளிடமும், பேரப்பிள்ளைகளிடமும், நண்பர்களிடமும் வியாபாரங்களை ஒப்படைத்து விட்டு டெய்லி நியுஸ் பேப்பர் படித்துக் கொண்டு நாட்டு நடப்புக்களை வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்போதைய தா.பி.சொக்லால் ராம்சேட் பீடி முதல் இப்போது நாம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யும் "வோட்டர் பில்டர்"வரை கஸ்டம்ஸ் டியுட்டி, கிளியரன்ஸ், லெட்டர் ஒப் கிறடிட் (எல்.சி), பேங் கன்போர்மேஷன் லெட்டர் (பி.சி.எல்)  என ஒவ்வொரு விடயத்திலும் பழம் தின்று கொட்டை போட் டுள்ள இவர்களை அணுகுங்கள். குருநாகலையில் நம்மவர் தூக்கி வீசிய தும்பு, கிண்ணியாவில் நாம் வெட்டி வீசிய தென்னோலை, கல்முனைக்குடியிலும், திருகோணமலையிலும் சீவி எறிந்த மீன் செட்டை, கடற்கரை ஓரங்களில் நாம் உதைத்து விளையாடிய கணைஓடு என்பவற்றை உலகநாடுகளுக்கு விற்று கரியை காசாக்கிய தங்க மூளைகள் இவை.

நாம் ஏஜென்சிக்காறனுக்கு பத்தாயிரம் டொலர் கொடுத்து ஆறுமாதம் விழித்திருந்து, பல போடர் கடந்து, வெளிநாடு வந்து, அசைலம் நிராகரிக்கப்பட்டு, சிக்கன் சொப்பில் நெருப்பில் வெந்து, வெளியே அதிகாலை உறைபனியில் பஸ்ஸில் அல்லாடி, வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி 500 யுரோ சேர்த்து வந்த கடனை அடைக்க நாய்படாத பாடு பட்டுக் கொண்டிருப்போம். ஆனால் இவர்களுக்கு எதுவுமே கிடையாது. காலையில் எழும்பி டெய்லி நியுஸ் பத்திரிகையை ஆற அமர உட்கார்ந்து படித்துவிட்டு 6.30 நியூஸும் கேட்டு விட்டு 11 மணிக்கு பெட்டா மார்கட்டுக்கு புறப்படுவார்கள். ஒரு 5000 டொலர்  தேடிக்கொண்டு 4மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.

1999ம் ஆண்டு டெய்லி நியுஸ் பத்திரிகையில் பிஸ்னஸ் பக்கத்தில் இரண்டு மூன்று அங்குல நீள அகலத்தில் ஒரு குட்டிச் செய்தி இருந்தது. பிரேஸிலில் நேற்று பாரிய சூறாவழியுடன் பெரு வெள்ளம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். சகல மரம் செடி கொடிகளும் அழிந்தன. நாம் எவருமே அச்செய்தியை படிக்கவில்லை.ஆனால் இவர்களினது மூளை அப்போது வேலை செய்தது. பிரேஸில் கோப்பி உற்பத்தியாகும் நாடு. மொத்த உலகுக்குத் தேவையான கோப்பியில் மூன்றில் ஒருபங்கை உற்பத்தி செய்யும் நாடு பிரேஸில்.கோப்பி. மரங்கள் அழிந்தால் அடுத்த மூன்று வருடத்துக்கு பிரேசிலில் இருந்து கோப்பியை எதிர்பார்க்க முடியாது. நிச்சயமாக அடுத்த ஒரு வருடத்தில் கோப்பிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும். கோப்பி விலை உச்சத்தில் நிற்கும்.  உடனடியாக தமது நண்பர்கள், வாடிக்கையாளர்களுக்கெல்லாம் போன் செய்து பணமிருந்தால் கோப்பி வாங்கி வையுங்கள். இன்னும் ஒரு வருடத்தில் 100ரூபாவுக்கு மேல் விற்கலாம் என்கின்றனர். அப்போது கோப்பி விலை கிலோ 24ரூபா. வறக்காப்பொல தொடக்கம் மகியங்கனை வரை, பிபிளை தொடக்கம் பதுளை பண்டாரவளை வரையுள்ள அனைத்துக்கிராமங்களிலும் உள்ள கோப்பி வாங்கி குவிக்கப்பட்டது. (அப்போது நம்மவர்கள் ஆயுதம் வாங்கி குவிப்பதில் ரொம்ப அக்கறையாகவிருந்தனர்) ஆம். 2001 இல் கோப்பி கிலோ 400 ரூபா விலை போனது.

நீ பெற்றுள்ள பட்டங்களையும், பதக்கங்களையும், டிப்ளோமாக்களையும் கடவுள் கண்ணெடுத்தும் பார்க்கப் போவதில்லை. அவர் உன்னிடம் எதிர்பார்ப்பதெல்லாம் மக்களுக்காக, உனது சமூகத்துக்காக என்ன செய்துள்ளாய் என்ற தழும்புகளைத்தான் உன்னிடம் எதிர்பார்ப்பார். அடுத்த முறை சுவிசில் ஊர்வலத்துக்கு தயாராகும் அண்ணாவுக்கோ அல்லது அத்தானுக்கோ போன் பண்ணி ஒரு நடை "யுரோப்பியன் சோம்பர்ஒப் கொமர்ஷ்"  ஹெட் ஆபிசுக்குள் போய் அந்த நாட்டுக்கு என்ன தேவை எனக் கேட்டு தகவலை அனுப்பச் சொல்லுங்கள். ஊர்காவல்துறை கடலட்டைக்கும், வேலணை "ஒட்டி"க்கும் சுவிசில் ரொம்ப கிராக்கி. இங்கிலாந்து லிவர்பூலில் இருக்கும் (காரைதீவு, பெரியகல்லாறு, பட்டிருப்பு, முனைத்தீவு, காத்தான்குடி, கல்லடி, ஏறாவூர் நண்பர்கள் கவனிப்பார்களாக ) நண்பர்களுக்கு ,உடன்பிறப்புகளுக்கு இப்போதே பேர்மிங்ஹாம் சேம்பர் ஒப் கொமர்ஷ_க்கும், மான்செஸ்டர் சேம்பர் ஒப் கொமர்ஷ_க்கும் ஒரு விசிட் பண்ணி தகவல்களை திரட்டச் சொல்லுங்கள். அடுத்த முறை ஊருக்கு வரும் போது அல்பா மொபைல் போனோ! வோர்க் மேனோ வேண்டாம் 200யுரோ முதலீட்டுடன் வருடத்துக்கு பல லட்ச ரூபா வருமானம் தரக்கூடிய "தீக்கோழி"(ஒஸ்றிச்) வளர்ப்பதெப்படி என்ற புத்தகத்தையும், செயல் முறை டி.வி.டி.யும் வாங்கிவரச்சொல்லுங்கள்.

இங்கு உலகமே கெட்டுக்கிடக்கின்றது. அமெரிக்காவில் இரண்டரை லட்சம் பேர் சொந்த வீடுகளின்றி கார்களை வீதியில் நிறுத்தி அதற்குள்ளேயே வாழ்கின்றனர். திடீரென எமது வேலைளும் பறிபோகலாம். காய்க்கும், பூக்கும் கல கலக்கும் காக்காய் நிற்க கொப்பில்ல என்ற கதையாகிவிடக்கூடாது.

குறிப்பு : இத்தொடரை வாசித்துவிட்டு சிலர் இவர் பிரதேசவாதியோ என கருதலாம். யாம் பெற்ற இனபம் பெறுக இவ்வையகம் என்ற ஒரு நப்பாசைதான். இப்போதைக்கு வடக்கு பொருளாதார நிலை பற்றி எழுதவோ தலையிடவோ முடியாது. கிளிங்கர் கல்லில் தொடங்கி சுருட்டுக்குப்பூசுகின்ற "கோடா"வரை யார் முதலிடுவது என சைனாவுக்கும், இந்தியாவுக்கும் ஒரு கில்லி விளையாட்டு தொடங்கி முடியும் போது நான் முப்பாட்டன் ஆகிவிடுவேன். அதனால்தான் கிழக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துகின்றேன்.


நன்றி :தேனீ

No comments: