Monday, 9 March 2009

மாதனமுத்தா : சர்வதேசத்தின் மௌனம்

-    சதாசிவம். ஜீ

மாதனமுத்தா

ஒரு ஊரில் மாதன முத்தா என்ற பெரியவர் இருந்தார். அவர் ஊரிலுள்ளவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதுடன், அவ்வூரில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிவந்தார். ஒரு நாள் குடியானவன் ஒருவனின் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாதன முத்தா சென்றார். மாதன முத்தா யானையில்தான் செல்வார். யானை குடியானவனின் வீட்டு வளவுக்குள் போக முடியாதபடி சுற்றிவர கட்டிய மதில், ஒரு சிறிய கேற். சிறய கேற் வழியாக யானை போகமுடியவில்லை. மாதனமுத்தாவோ யானையிலிருந்து இறங்கி தீர்ப்புச் சொன்னதில்லை. எனவே மதிலை உடைத்து யானையுடன் மாதன முத்தா குடியானவனின் வீட்டு வளவுக்குள் சென்றார். குடியானவனின் மனைவி "புதுப்பானை, புதுப்பானை கவனம் கவனம்" என்று அலறிக்கொண்டிருந்தாள்.

அவள் வளர்த்த கன்றுக்குட்டி அன்று வேண்டிய புதிய பானைக்குள் தலையை உள்ளுடுத்தி வெளியில் எடுக்க முடியாமல் திண்டாடியது. ஊரவர்கள் எல்லோரும் முயன்றும் முடியாமல் போனது. எனவே மாதன முத்தா வரவழைக்கப்பட்டார். மாதன முத்தாவின் முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே மாதன முத்தா ஒரு முடிவுக்கு வந்தார். கன்றுக்குட்டியின் தலையை துண்டிப்பது. அதன்படி கன்றுக்குட்டியின் தலையும் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் பானையிலிருந்து கன்றுக்குட்டியின் தலையை எடுக்க முடியவில்லை. மாதனமுத்தா வந்தவழியே வெளியேற "பானையும் போச்சு கன்றுக்குட்டியும் போச்சே" என்று குடியானவனும் மனைவியும் தலையிலும் வயிற்றிலும் அடித்து அழுதார்கள்.

80களில், 3ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் படித்த ஞாபகம்.

சர்வதேசத்தின் மௌனம்

புலிகள், தமிழ் மக்களின் உயிர்களைப் பற்றி அக்கறைப்பட்டதில்லை என்பதிலும் பார்க்க அவர்களின் உயிரை எடுப்பதும் போராட்டத்தின் இன்றியமையாததது என்பதின் அடிப்படையில் செயற்பட்டவர்கள். தொடக்க காலத்திலிருந்தே புலிகள், சனம் நெருக்கமான இடங்களைத் தெரிவுசெய்துதான் இராணுவத்தின் மீது தாக்குதலை நடத்தினார்கள். அதனை தொடர்ந்தும் கடைப்பிடித்தார்கள்.

மீண்டுமொரு 83 ஜூலை கலவரம் போன்றதொன்றை தோற்றுவிக்க சாதாரண சிங்கள மக்களை குறிவைத்து பலமுறை குண்டுத்தாக்குதல் செய்திருக்கிறார்கள். சிங்கள எல்லைக் கிராமங்களுக்குள் புகுந்து சிறியவர்கள், பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் கர்பிணித் தாய்மாரையும் வெட்டிக் கொலைசெய்திருக்கிறார்கள்.

முஸ்லீம்களை வகைதொகையின்றி கொன்றிருக்கிறார்கள். தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில்கூட ஈவிரக்கமின்றி கொன்று குவித்தவர்கள். மனித நாகரீகமோ, இரக்கமோ இல்லாதவர்களிடம் நாம் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

40 சதுர கிலோ மீற்றருக்குள் முடக்கப்பட்ட பின்னரும் இராணுவத்துடன் சண்டையிடுவதனால் எதை சாதிக்கப்போகிறார்கள்? அப்பாவி பொதுமக்களும் 'விடுதலை' என்று நம்பி புலிகளுடன் இணைந்து கொண்டவர்களும் பலவந்தமாக புலிகளால் பிடிக்கப்பட்டவர்களையும் சாகடித்துத்தான் புலித் தலைமை ஓயும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

புலியை நம்பி வயித்தைக் கழுபுவர்கள், இந்த நூற்றாண்டிலும் 'பிணத்துடன் குடும்பம் நடத்துவது'தையே தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள குட்டி அரசியல் கட்சிகள் இதில் முன்னிலைவகித்தாலும், பெரும் கட்சிகளுக்கு அந்தப் பிரச்சினையில்லை. இருப்பினும் அவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும். தமிழ் நாட்டு மக்களை இலகுவாக உணர்ச்சிவசப்படுத்த, பிரச்சார மேடைகளில் முழங்க இலங்கைப் பிரச்சினை ஒரு இலகுவான வடிகால்.

இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே ஜெயலலிதா முந்திக்கொண்டு உண்ணாவிரதத்தை அறிவித்திருக்கிறார். ஜெயலலிதாவின் இந்நடவடிக்கையை மேவும் வகையில் கலைஞரின் அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும். இலங்கைத் தமிழருக்கு ஆதரவு என்ற போர்வையில் வன்முறை அரங்கேறப்போகிறது. இவ்வாறான அரசியல் சித்த விளையாட்டு தேர்தல்வரை தொடர்ந்து நடைபெறத்தான் போகிறது.

மேலும், இலங்கையிலுள்ள சில தமிழ் தேசிய வெறியர்களும் புலிகளாலேயே இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறிய இன்னும் சில தமிழ் தேசியவாதிகளும் புலிகளின் அழிவின்பின் தமிழ் மக்கள் நிர்க்கதியாகிவிடுவார்கள் என்று மனம் கலங்குகிறார்கள். புலிகள் அரைகுறை அதிகாரத்துடனேயே தமிழ் மக்களை உண்டு இல்லை என்றாக்கியவர்கள். ஒரு பாசிச அமைப்புக்குரிய கட்டுமானங்களை கொண்டிருந்த புலிகள் எப்படி தமிழ் மக்களின் காவலராக இருக்க முடியும்? இன்றைய களநிலவரங்கள் இதற்கு தக்க சான்றுகள். ஆனால் இந்த மெத்தப் படித்தவர்களுக்கு தமிழ் மக்களின் பாதுகாவராக புலிகள் திகழ்கிறார்கள்! புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஜனநாயக அரசியலுக்கூட வரத்தேவையில்லை. அவர்கள் முற்று முழுதாக அழிக்கப்ட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாடு.

புலி எடுபிடிகள்தான் அப்படியென்றால், இலங்கையிலுள்ள தமிழ் தேசிய ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளுபவையின் அரசியல் சிறுபிள்ளைத் தனங்களை சொல்லிமாளாது. அவளவு கேவலமானதாக இருக்கும். உதாரணமாக, இலங்கை இராணுவத்தின் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளும் அனுசரணையாக இருந்துவருகின்றன. ஏதோ இரண்டு நபர்களுக்கிடையே சண்டையை மூட்டிவிடுவது போல, இந்த நாடுகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தினால் இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்துவிடலாம் மாதன முத்தாவை காப்பாற்றிவிடலாம் என்ற மனப்பால் குடிப்பார்கள். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானில் தாக்கப்பட்டதை சாட்டாகவைத்து முடிந்தவரை இந்தியாவையும் பாகிஸ்தானையும் முடிந்துவிட படாதபாடு படுகிறார்கள். இந்தியாவின் உண்மையான நண்பர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று புலிகள்விடும் றீலுக்கும் இதற்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை.

புலன்பெயர் நாடுகளில் நெருக்குதலான வாழ்வுமுறைக்குள்ளும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இது யுத்தத்தில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களின் நிமித்தம் நடைபெற்றாலும் உள்நோக்கம் என்னவோ மாதன முத்தாவை காப்பாற்றுவதுதான். 'கவனயீர்ப்பு, தொடர் உண்ணாவிரதம், உயிர்காக்கும் சிறு துளிகள், இசை, தியானம், மருத்துவ கருத்தரங்கு' என்று இன்னும் என்னென்னவோ பெயர்களில் போராட்டங்கள் இடைவிடாது தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் பலனென்ன, சுயஇன்பம் காண்பதுபோல புலன்பெயர் தமிழ் ஊடகங்களே புகழாங்கிதம் அடைந்துகொள்ளவேண்டியதுதான் மிச்சம்.

இந்த ஊடகங்கள் 'சர்வதேசம் கைகட்டி மௌனமாக இருக்கிறது' என்று தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். இவர்கள் மனப்பால் குடிக்கும்போது கண்ணை மூடுவதுபோல சர்வதேசமும் கண்ணை மூடிக்கொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போலும். சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் மற்றும் யுத்த களத்திலிருந்து தப்பிவரும் பொது மக்களிடம் இருந்தும் போதுமான உண்மை தகவல்களை சர்வதேசம் பெற்றுவருவதன் காரணம் தான் சர்வதேசத்தின் மௌனம். புலிகள் பயங்கரவாதிகள்தான் என்பதின் வெளிப்பாடுதான் சர்வதேசத்தின் மௌனம்.

நாம் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிவது போன்று தமிழ் மக்களின் அவசியமான, உடனடித் தேவை ஜனநாயக சூழல். அந்த சூழமைவு புலிகளை அழிப்பதின் மூலம் தான் அடையமுடியும்.

No comments: