Sunday, 22 March 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும் கிழக்குமாகாண மக்களுக்கும். (பகுதி 5)

- யஹியா வாஸித் -

மட்டக்களப்பு ராஜேஸ்வரா தியேட்டருக்கு முன்னால் அல்லது காந்தி சிலைக்கு அருகில் பிற்பகல் ஐந்து மணிக்கு அண்ணாக்கள் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், ஈழ வேந்தன், ஐயா ராசதுரை அக்கா மங்கையர்க்கரசி என மேடை ஏறுவார்கள். எங்களுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். நீங்களெல்லாம் தெகிவளை சூ (மிருகக்காட்சி hலை )க்கு போயிருப்பீர்கள். இஸட் டபள்ஓ சூ. இங்க மிருகங்களை கூண்டுல அடைச்சிருப்பாங்க. சிங்கத்துக்கு ஒரு கூடிருக்கும். அதற்குள்ள பாராங்கல் மாதிரி ஒன்று செய்திருப்பார்கள். இது சிமெந்தால் செய்யப்பட்டிருக்கும். இது உண்மையான பாறாங்கல் அல்ல.அது மாதிரி.ஆனால் சிங்கம் இது உண்மையான பாறாங்கல் என நினைத்;து அதில் தூங்கிக் கொண்டிருக்கும். அது போல் புலிக்கு ஒரு குகை சிமெந்தால் செய்திருப்பார்கள். ஆனால் புலியும் இது உண்மையான குகைதான் என நினைத்துக்கொண்டு அந்த குகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த மாதிரி சூ தந்திரம் எங்களுக்கு தேவையில்லை.அதாவது மாதிரி சுதந்திரம் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்குத்தேவை சுதந்திரம். காசிஆனந்தன் அண்ணா மீசையை லேசா நீவி விட்டுக் கொண்டு சொல்ல மங்கையர்க்கரசி அக்கா ஒரு சிரிப்பு சிரிப்பா. பிறகென்ன மொத்த வோட்டும் தமிழர் விடுதலைக்கூட்டணிக்குத்தான். இப்படி உசுப்பேத்தி மொத்த தமிழனையும் கூண்டுக்குள்ள அடைத்துவிட்டு காசிஆனந்தன் அண்ணா இந்தியாவிலயும், அக்கா மூத்த மகனோட லண்டனிலயும் ரொம்ப ரொம்ப சுதந்திரமா இருக்கறாங்க. இப்ப காசி அண்ணா புதுசா அறிக்கை விடறார். நீங்க மொத்தமாக சாவுங்க. நாங்க உலகுக்கு அறிக்கை விடுறோம் என்று.

ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்.

நாங்க இங்க வியர்வை சிந்தி நாற்றுநட்டு பயிர் செய்வோம். அது விளைந்தவுடன் பிரிட்டிஷ் தொரமார், நாங்கள் சொல்லும் விலைக்குத்தான் நீங்கள் விற்க வேண்டும் என அந்தக்காலத்தில் சேதி அனுப்புவார்கள். அதுமாதிரி இருக்குது கதை. வெள்ளரிக்கா என்றதும் காரைதீவு புட்டு வெள்ளரிப் பழம்தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. இந்த வகை வெள்ளரிப்பழம் உலகில் எங்கும் கிடையாது. இல்லையே கண்டிக்குப் போகின்ற வழியில உன்னஸ்கிரியவிலும், மொனறாகலையிலும் கிடைக்குதே என்கின்றீர்களா. நம்ம காரைதீவுப் பொருள் குருத்து.அது முத்தின களட்டித் தேங்காய். இதன் விதைகளை கனடா மற்றும் அரபு நாடுகளுக்கு அனுப்பலாம். அரேபிய மண்ணில் இது நன்கு வளரும்.

மாதிரிப் பாறாங்கல்லை விட உண்மையான பாறாங்கற்களும், மலைகளும் நிறைந்த பகுதி கிழக்கு மாகாணம். குடு;மிமலையில் தொடங்கி அப்படியே பாணமைக்குள்ளால வந்து உல்லையில ஒரு தயிர்வடையும் இஞ்சி பிளேன்டியும் அடித்துவிட்டு பொத்துவில் ஊடாக சியம்பலாந்தொட்ட போய், அங்கு சுடச்சுட சோளம் வாங்கி தின்றுவிட்டு அப்படியே வலதுகைப்பக்கம் பார்த்துக்கொண்டு வரும் போது மகாஓயா சந்தி வந்து முட்டும். அங்க செக்பொயின்ட்டுல இறங்கி செக் பண்ணுவதற்கிடையில் அப்படியே முன்;னுக்குப் பார்த்தாற்போல் நற்பிட்டிமுனையை ஊடறுக்குற மாதிரி ஒரு நோட்டமிடுங்கள். இப்ப செக்பண்ணி முடித்திரிப்பீர்கள். முன்னுக்கு நிற்கின்ற மாம்பழ வியாபாரியிடம் ஒரு மாம்பழத்தை வாங்கி வெட்டி உப்பும் மிளகாய்த்துளும் போட்டு தின்று கொண்டு அப்படியே வண்டியை உன்னிச்சை நோக்கி விடுங்கள். இடையில அந்த வாய்க்கல் இந்த வாய்க்கால், துருசுகள். குட்டிக்குட்டி சிங்கள கிராமங்கள், சேத்துத் தண்ணியில சுதந்திரமாக குளிக்கும் குட்டிப் பையன்கள் என பசுமை கொஞ்சும்.அவை எல்லாம் தூக்கி வீசிவிட்டு வந்த வேலையை மட்டும் கவனிக்க வேண்டும். இப்போது உன்னிச்சை சந்தியில நிக்கிறீர்கள். இருட்டாகிவிட்டது. வீட்டுக்கு போயிடுங்கோ.அப்புறம் வெருகல்,கிண்ணியா.மூதூர் எனச் சென்று திருகோணமலையானைத் தரிசிக்கலாம்.

இப்ப வீட்டுல உட்கார்ந்த கொண்டு கற்பனைக்குதிரையைத் தட்டி விடுங்கோ. எத்தனை வானுயர்ந்த மலைகள். அவ்வளவு மலைகளையும் உடைத்து கருங்கல் எடுத்தால் முழு ஆசியாவுக்குமே கருங்கல் விற்கலாம். கிழக்கில் உருவாகப் போகும் அனைத்து கட்டிடங்களுக்கும் கருங்கல் விற்கின்ற ஐடியா இருந்தால் ஜேர்மனியில் இருக்கும் ஓட்டமாவடி நண்பர்கள் மட்டுமல்ல அனைவரும் அரச அனுமதியுடன் மலைகளை 99 வருட குத்தகைக்கு எடுக்கலாம். அது மட்டுமல்ல பல மலைகளில் கிறனேட் கற்கள் வெட்டக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. இன்று உலகிலுள்ள அனைத்து பாரிய கட்டிடங்களும் இந்த இந்திய கிறனேட் கற்களால் ஜொலிக்கின்றன. சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் கதையெல்லாம் இங்கு கிடையாது. சுமை கூலி கால் பணம் சுண்டைக்காய் பலாப்பழம் கதைதான்.

இதை மஸ்கட் மாதிரி வெட்டுவதற்குரிய இயந்திரங்கள் இந்தியாவில் "கும்மிடிப்பூண்டி இன்டஸ்ரியல் சோன்"இலும் .பஞ்சாப் லுதியானாவிலும் குறைந்த விலையில் பெறலாம். இல்லை இந்தியப் பொருட்கள் வலுவாக இருக்காதே என யோசிக்கின்றீர்களா ! கொழும்பு ஹில்டன் ஹோட்டல் இரண்டாம் மாடியில் பல வருடமாக சேவை செய்துகொண்டிருக்கும் "யுரோப்பியன் சேம்பர் ஒப் கொமர்ஸ்"போய் எந்த நாட்டுல "சீப் அண்ட் பெஸ்ட் புறடக்கட்"கிடைக்கும் என தைரியமாக கேளுங்கள். அவர்கள் பெல்ஜியத்தையும், ஸ்பெயினையும் கைகாட்டுவார்கள் என நினைக்கின்றேன். அதற்குமுதல் ஒரு விடயத்தை மறந்து விட்டேன். மலைகளை குத்தகைக்கு எடுக்க  வேண்டுமானால் இப்போது ரொம்ப பிஸியாக இருக்கும் உங்கள் மந்திரிகள். எம்பிக்கள், உறுப்பினர்களை விரட்டிப் பிடித்து உரிமைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நேற்று நீங்கள் சியம்பலாந்தொட்ட இருந்து மகா ஓயா சந்தி வரும்போது நிறைய இடங்களில் சோளம் விற்றுக் கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். நீங்கள் பிஞ்சு சோளத்தைத்தான் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள்.முற்றிய சோளனை என்னசெய்வார்கள். அந்த முற்றிய சோளனை கொழும்பு வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றார்கள். மொறோக்கோ காறனுக்கு அது பகல் உணவு. அதற்கப்புறம் பழுதடைந்த, எதற்குமே லாயக்கில்லாத சோளனை என்ன செய்வார்கள். குருநாகலையைச் சேர்ந்தவரும் பொலன்னறுவவில் கோழித்தீன் தயாரிக்கும் பெக்டரி வைத்துள்ளவருமான ஒருவர் வாரத்துக்கொருதரம் வந்து அவைகளை பணம் கொடுத்து வாங்கிச் செல்வார்.

இந்தியாவில் மெட்ராசில் உள்ள அண்ணா நகரில் கோழித்தீன். மாட்டுத்தீவனம்,  ஆட்டுத் தீவனம் தயாரிக்கக் கூடிய இயந்திரங்களை தயாரிக்கும் பல நுறு கம்பனிகள் உண்டு. 20 ஆயிரம் இருந்து 40 ஆயிரம் இந்திய ரூபா பெறுமதியான சிறிய இயந்திரத்தில் இருந்து 20 லட்ச ரூபா பெறுமதியான பாரிய இயந்திரங்கள்வரை இங்கு உண்டு. பழைய சோளம், மீன் கழிவு, குறிப்பாக நெத்தலி,  போன்றவைகளைக் கொண்டு இத்தீவனங்களை தயாரிக்கலாம். நமது அயல் வீட்டுக்காறர்கள் வாங்கிவரும் புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு என்பன இவரது பெக்டரியில் தயாரிக்கப்படுபவையே. ஒரு இயந்திரத்தின் மூலமே மூன்றுவகையான தீவனங்களையும் தயாரிக்கலாம்.

நாட்டு வைத்தியத்துக்கு பெயர்போன கிராமங்கள் கிழக்கு மாகாணத்திலேயே இருக்கின்றன. ஆனால் கடந்த கால யுத்தத்தினால் அனைத்துமே குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன.ஆனால் இப்போதும் காலம் கடந்து விடவில்லை. குப்பைகளைக் கிளறலாம் .நிறைய குண்டுமணிகள் கிடைக்கும். உகந்தை முருகன் கோயில் முதல் பாணமை குடும்பிமலை வரை மூலிகைத் காடுகள் செறிந்த பகுதி அது.கொழும்பில் இருந்து 30 மைல் தொலைவில் ஹொரணையில் இருக்கும் குட்டிக்குட்டி யூனானி. ஆயுர்வேத மருந்துக் கம்பனிக்காறர்கள் எல்லாம் ஒரு காலத்தில் குடும்பிமலைக்கு வாரத்துக்கொரு முறை வண்டில் கட்டிக் கொண்டுவந்து மூலிகை வேர்களை கொண்டு சென்றார்கள். இங்கிருந்து கொண்டு சென்ற மூலிகைகள்தான் கேகல்லவிற்கும், மாவனல்லையிற்கும் இடையில் ஆறு ஏக்கர் மூலிகைத்தோட்டமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கின்றது.

1985 இற்கு முன் குடும்பிமலை பகுதியில் காட்டுக்குள் நுழையும் போது வேப்பிலை வாசமும். கற்றாளை வாசனையும்தான் வரும். குடும்பிமலை ஒரு குட்டி ஹிமாச்சலா (இமயமலைப் பிரதேசம்) போல் இருக்கும். குட்டிக் குட்டி ஹாமுதுறுக்கள் (புத்த பிட்சுகள்). சமஸ்கிரதம், திருக்குர் ஆன், ஆரியம், சமணம், பௌத்தம் என படித்த முற்றும் துறந்த சிங்கள முனிவர்கள் என சாந்த பூமியாக இருந்தது. சின்னச் சின்ன குகைகள். மன்னர் காலத்து யானைத்தந்தங்கள், பழைய ஞானிகளின் எலும்புக் கூடுகள்,மூலிகை மருந்துகள் தயாரிக்கக் கூடிய மர இயந்திரங்கள், விளாம்பழம், பாலைப் பழம், மாம்பழம், மாதுளம் பழச்சோலை என ஒரு குட்டிப் பழமுதிர்ச்சோலை. வேண்டாம் அழுகை வருகின்றது. எங்களுக்கு பல நாள் சுத்தமான தேனில் விளாம்பழத்தை பிசைந்து தந்த குட்டிப் பிட்சு தலை வேறு முண்டம் வேறாக…வேண்டாம்… வேண்டாம். இனி நல்லதை நினைப்போம்.

இங்கு உள்ள பாரிய காடுகளில் வானுயர்ந்த எதற்குமே உதவாத மரங்கள் இருக்கின்றன. இந்தமரங்களை விட்டு விட்டு மற்ற மரங்களை எல்லாம் மர வியாபாரிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஒன்றுக்குமுதவாத மரத்தை அப்பகுதி மக்கள் வெட்டிவந்து விறகுக்கு பயன்படுத்துவார்கள். இதனால் இதை இவர்கள் விறகுமரம் என்பர். ஆனால் இது சாதாரண மரமல்ல. உலகிகேயே விலை மதிக்க முடியாத "ஒஊத்"என்று அரபியர்களால் சொல்லப்படுகின்ற ஒரு வகை மூலிகை மரம். இந்த மரம் கிட்டத்தட்ட 12அடி சுற்று வட்டம் கொண்ட 40 அல்லது 60 அடி உயரமானது. .இந்த மரத்தை வெட்டிப் பிளந்தால் (சிறு சிறு துண்டாக வெட்ட வேண்டும்) ஆங்காங்கே ஒரு அங்குல நீளம் தொடக்கம் 12 அங்குல நீளம் வரை கன்னம் கறுப்பாகத் தென்படும். அதை கொத்தி எடுக்க வேண்டும்.ஒரு மரத்தில் கிட்டத்தட்ட 10 கிலோ ஒஊத் எடுக்கலாம். சவூதி அரேபியாவில் இதன் விலை கிலோ 12ஆயிரம் ரியால் முதல் 70 ஆயிரம் ரியால் (ஒரு ரியால் 25 ரூபா).இதை எரித்தால் உருகி எரியும்.வாசனை பத்துப்பட்டிக்கு மணக்கும். அதனால் இதை விபரம் புரியாத சிங்கள் மக்கள் சாம்புறாணி மரம் (சாம்பறாணி கஸ்)என்பர். குடும்பிமலைக் காட்டுக்குள்ள அப்போ ஒரு காலத்தில ஆயுதம் பிடித்த அன்பர்களே. புறப்படுங்கள்.நமது மொத்த பொருளாதாரமும் அங்கிருக்கிறது.

குடும்பிமலையைச் சுற்றி பாரிய மூலிகைத் தோட்டங்கள் அமைக்கலாமா என சிந்திப்போம்.என்ன சிந்திப்பது. இப்போதே அரசியல்,அபிவிருத்தி சம்பந்தமாக பேசுபவர்களின் கதவுகளைத் தட்டுங்கள்.ஒரு வருடத்தில் 5000 பேருக்கு வேலை வழங்கக் கூடிய சக்தி உகந்தை முருகனுக்கும், குடும்பிமலையானுக்கும் உண்டு. இல்லை நாங்கள் பிட்ஷா கடையும், சிப்சுக்கடையும் தான் திறக்கிற திட்டம் வைத்திருக்கிறோம் என்றால் இப்பொழுதே சுகசெவன, அப்பலோ ஹொஸ்பிற்றல் காறர்களுக்கு எக்ஸ்ட்றா சேவிங்குல கொத்தாக பணம் போட்டு வையுங்கோ. நம்மிடம் திருடிய மூலிகையைத்தான் அவன் சேலைன் போத்தலுக்குள்ள போட்டு குத்துவான்.

( அடுத்த வாரம் சந்திப்போம். தொடர்ந்து எழுதுமாறு இணையத்தளங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ள அனைத்து உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றிகள். )

21-03-2009

No comments: